Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

”மனம் விரும்பிய பெண்ணை எரித்துக்கொல்லத் தூண்டுவது எது?’’ - ஓர் உளவியல் பார்வை

எரித்துக்கொலை

திருமண உறவுக்குள் நுழையும் முன்னரும் பின்னரும் ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் நடக்கும் சச்சரவுகள், திடீரெனப் பொங்கி, பெண்ணை ஆண் கொலைசெய்யும் அளவுக்கு மிகமோசமான உறவாக அமைந்துவிடுகிறது. இதில், அமிலம் வீசுவது, உயிரோடு எரிப்பது, எரித்துக்கொல்வது எனும் இடத்துக்குப் போகும்போது, பொதுச் சமூகத்துக்கு அது பெரும் அதிர்ச்சியாகிவிடுகிறது. 

கடுமையான பகைமை கொண்டவர்கள்கூட இவ்வளவு வன்மமாகப் பழிதீர்த்துக்கொள்வார்களா என்பது சந்தேகம்தான்; நேற்றுவரை ஒரு கூட்டுக் குயிலாகப் பாடிக்கொண்டிருப்பவர்களுக்குள், விருப்பமும் அன்பும் மறைந்து, பயங்கரம் கொப்பளித்து கொடூரங்கள் நிகழ்ந்துவிடுகின்றன. 

சில நாள்களுக்கு முன்னர், சென்னை ஆதம்பாக்கத்தில், திருமணம் செய்துகொள்ள மறுத்த தன் பள்ளி நண்பர் இந்துஜாவை, பெட்ரோலை ஊற்றி எரித்துக் கொன்றிருக்கிறான், ஆகாஷ் என்பவன். சிறிது நேரத்திலேயே அந்தப் பெண் இறந்துவிட, அவரைக் காப்பாற்றமுயன்ற தாயும் தங்கையும் கொடுமையான தீக்காயத்துடன் உயிருக்குப் போராடிவருகிறார்கள். 

இதைப் போன்ற நிகழ்வுகள் தமிழகத்துக்கோ இந்தியாவுக்கோ புதியவை அல்ல. காதலிக்க மறுத்த இளம்பெண்களை அமிலத்தை வீசி தோற்றத்தைச் சிதைப்பது, வாழும்காலம்வரை ஊனத்தோடு இருக்கும்படி செய்வது என அவ்வப்போது நெஞ்சைப் பதறவைக்கும் கொடுமைகள் நடந்துவருகின்றன. இதில் ஈடுபடும் குற்றவாளிகள், திடீரென ஏதோ ஒரு கணநேரத்தில் இப்படிச் செய்துவிட்டு, பிறகு அப்பாவிப் பூனையைப் போல காணப்படுவதைப் பார்க்கமுடிகிறது. எந்தப் பெண் தனக்கு அருகிலேயே வாழ்க்கை முழுவதும் வைத்துக்கொள்ள வேண்டும் என விரும்பும் ஒருவன், அதே பெண்ணை மிகவும் கொடூரமாகக் கொலைசெய்யவும் துணிகிறான்; அதிலும் உறுதியாக இருக்கிறான் என்பது முரண்!

இந்தக் கொடூரத்தைச் செய்தவன் சட்டப்படி தண்டிக்கப்படவேண்டும்; அத்துடன் இது போன்ற நிகழ்வுகள் நிகழாமல் தடுப்பது முக்கியமானது. 

படுபாதகத்தைச் செய்த அவனுக்கு உண்டான ”மனநோய்தான், இப்படி அவனை ஆக்கியுள்ளது; பெற்றவர்கள் அவனைச் சரியாக வளர்த்திருந்தால், அவன் இந்த நிலைக்குப் போயிருக்கமாட்டான்” என ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ”இல்லை; தனிப்பட்ட ஒருவனின் நோயாக இதைப் பார்க்கமுடியாது; இது சமூகநோய்; இந்த அடிப்படையில் அணுகினால்தான் மீண்டும் மீண்டும் இந்தக் கொடுமை நிகழாமல் தடுக்கமுடியும்” என்பது இன்னொரு கருத்து. 


எந்த ஒன்றுக்கும் அடிப்படைக் காரணம் ஒன்று இருக்கும்தானே; இதில் பெண்ணுடைய இருத்தலை மறுப்பதே பிரச்னையாக உள்ளது என்கிறார், எழுத்தாளரும் தமிழ்நாடு அரசின் சமூகநல வாரிய முன்னாள் தலைவருமான சல்மா. 

எரித்துக்கொலை சல்மா” பெண் என்பவள் உயிருள்ள ஒரு ஆள்; அவளுக்கென தனிப்பட்ட ஆசாபாசம் இருக்கிறது என்பதை மறுக்கும் சிந்தனையின் விளைவுதான் இந்தப் படுகொலை. பிடித்தமான ஒரு பொருளை கடையில் வாங்கிக்கொள்ளமுடியும் என்பதைப் போல, தனக்குப் பிடித்த பெண் தன்னை விரும்பாவிட்டாலும் அவளை வலுக்கட்டாயமாக திருமணம்செய்துகொள்வது சரி என ஆணின் சிந்தனையைக் கட்டமைத்துள்ளனர். மேலை நாடுகளில் இப்படியான ஒன்றைப் பார்க்கமுடியாது. ஆணோ பெண்ணோ விருப்பம் இல்லை என்றால் விட்டுவிட்டுப் போய்விடுவார்கள். ஆனால் இங்கு இந்த 21ஆம் நூற்றாண்டிலும் பெண்களை எரித்துக்கொல்வதெல்லாம் நடக்கிறது. இந்த அளவுக்கு தைரியத்தைக் கொடுக்கும் சமூகக் கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டும். பெண் பாதிக்கப்பட்ட பிறகு பாதிப்பு உண்டாக்கியவனைத் தண்டிப்பதால் என்ன பயன். அவனுக்குப் பிடிக்காத உணவைக் கொடுக்கமுயன்றால் அவனுக்கு என்ன உணர்வு ஏற்படுகிறதோ அதைப்போலவே பெண்ணுக்கும் உணர்வு உண்டு என்பதை உணரவைக்க வேண்டும். பெண்ணுக்கான சமத்துவத்தை அவனுடைய சிந்தனையில் ஏற்கவைக்கும்படி செய்ய வேண்டும். குழந்தைப் பருவத்திலிருந்தே மனவளர்ப்பில் முக்கியப் பங்காற்றும் குடும்பமும் கல்வி நிறுவனங்களும் இதைச் செய்யவேண்டும். சாதியப்பாகுபாடு காட்டப்படும் பள்ளி, கல்லூரிகளிலேதான் இதைச் செய்துகாட்டவேண்டும். சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் இதில் சேர்ந்து செயல்படவேண்டும். பெரிய அளவுக்கு கலாசாரப் புரட்சியைப் போல இதைச் செய்ய வேண்டும். நீண்டகாலம் எடுக்கும் பணி என்றாலும் இதைச் செய்துதான் ஆகவேண்டும்” என அழுத்தமாகச் சொல்கிறார் எழுத்தாளர் சல்மா. 

” அந்த இளைஞனைப் பற்றிய குறிப்பான தகவல்கள் இல்லாமல் மனநோயாளி எனக் கூறுவோமேயானால் அது சரியான புரிதலை அளிக்காது. அது, சமூகத்துக்கும் நல்லதல்ல” என்கிறார், அரசு மருத்துவக் கல்லூரியின் மனநலத் துறை உதவிப் பேராசிரியர் குருமூர்த்தி. 

எரித்துக்கொலை.. மருத்துவர் குருமூர்த்தி “ அமெரிக்காவில் நூறு பேரைச் சுட்டுக்கொல்லும் ஒருவனுக்கு மனநோய் என மட்டும் கூறுவதைப் போன்றதுதான் இது. ஒருவகையில் அவனைக் குற்றத்தின் தன்மையிலிருந்து தப்பவைக்கவும் இது பயன்படும். அதை அவனுடைய தனிப்பட்ட பிரச்னையாக மட்டும் பார்ப்பதானது, சிக்கலுக்கான உண்மையான காரணிகளைப் பார்க்கவிடாமல் திசைதிருப்புகிறது. இந்த நிகழ்வைப் பொறுத்தவரை, அந்த இளைஞனின் தனிப்பட்ட குணாம்சங்கள், சூழல் ஆகியவற்றைக் கருத்தில்கொள்வதைப்போல, அவனுடைய சகவயதினரின் குணாம்சங்கள், சமூகம் அவர்களை எப்படி வைத்திருக்கிறது என்பவற்றையும் கணக்கில்கொள்ள வேண்டும். பொதுவாகவே வளர் இளம்பருவத்தில் உள்ள ஆண்பிள்ளைகள், தங்கள் பெண் நண்பர்களை, உறவுகளை எப்படி அணுகுவது என்பதில் சரியான புரிதலின்றி இருக்கிறார்கள். குறிப்பாக, தான் காதலிக்கும் பெண்ணை, தன் சொத்தாக, தன்னுடைய பொருளாக, தனக்கே உரித்தவள் என ஒரு உடமைச்சிந்தனை பரவலாக இருக்கிறது. 

இளைஞர்களிடம் சமூக முன்மாதிரியாகக் காட்டப்படுகின்ற பலவும் மோசமாக இருக்கின்றன. குறிப்பாக, கடந்த 20 ஆண்டுகளுக்குள் வந்துள்ள குறிப்பிட்ட திரைப்படங்கள் காட்டும் மாதிரி (model)களைப் பற்றி கட்டாயம் பேசியாக வேண்டும். அவற்றில் வரும் ஆண் நாயகப் பாத்திரங்கள், பெண்களைப் பற்றி என்னவிதமான கருத்தை விதைத்திருக்கின்றன என்பது இங்கு முக்கியமானது.  ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவினை பாலுறவு சிக்கலாக மட்டுமே பார்ப்பது, பெண்கள் குறித்த கொச்சையான சித்தரிப்புகள், அவர்கள்மீதான கருத்தியல் வன்முறைகளை நியாயப்படுத்தம் போக்கு போன்றவை ஏற்படுத்தும் தாக்கங்கள் முக்கியமானவை இந்தவகைப் படங்களைப் பார்க்கும் ஒரு இளைஞன், பெண்களை எப்படி பார்க்கிறான் என்பதை அலட்சியமாக ஒதுக்கிவிடமுடியுமா. இப்படியான நிலைமையில் ஆண்- பெண் உறவில் ஜனநாயகத்தன்மை எப்படி இருக்கும், இருக்கமுடியும். அதன் வெளிப்பாடுதான் இது போன்ற குரூர நிகழ்வுகள்! தன்னுடைய விருப்பத்தை ஏற்காததால், சக பெண்ணை எரித்துக்கொன்ற அந்த இளைஞனுக்குத் தண்டனை அளிக்கவேண்டும். அத்துடன் அவனை இந்த இடத்துக்குத் தள்ளிய மற்ற காரணிகளை என்ன செய்யப்போகிறோம் என்பதையும் யோசிக்கவேண்டும்” என்கிறார் மருத்துவர் குருமூர்த்தி. 

தனிநபர்களின் பிரச்னை என்றாலும், சமூகமயமாகும் எதையும் ஒட்டுமொத்தமாகப் பார்ப்பதுதானே உரிய தீர்வைத் தரும்! 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?
Advertisement

MUST READ

Advertisement