"ஆளுநரின் செயல் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது!'' - சொல்கிறார் சட்ட வல்லுநர்

பன்வாரிலால்  புரோகித் ஆளுநர்

சிகலா, தினகரன் அவர்களுடைய உறவினர்கள், நண்பர்களின் வீடுகளிலும், அலுவலகங்களிலும் வருமானவரித் துறை அதிகாரிகள் நடத்திய சோதனை தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியிருந்தது. அந்தப் புயல்புழுதியில் மிகச் சைலன்டாகக் கோவையில் ஆய்வை நடத்தி முடித்தார், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித். அவர் ஆய்வு நடத்திய அடுத்த நாள்தான் அவருடைய இந்தச் செயல்பாடு குறித்து சூடான விவாதங்கள் எழுந்தன. 

 ஆளுநரின் இந்த நடவடிக்கையை ஆதரித்த அமைச்சர் வேலுமணி, ''இந்த விவகாரத்தைத் தேவையில்லாமல் எதிர்க் கட்சிகள் விமர்சனம் செய்கின்றன'' எனக் குற்றம்சாட்டியிருந்தார். அதேபோன்று, பி.ஜே.பி-யின் மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன், ''ஆளுநர் ஆய்வு  செய்ததில் எந்த மரபும் மீறப்படவில்லை'' என்று தெரிவித்திருந்தார். அதேபோல், பி.ஜே.பி. தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவும் ஆதரவு  தெரிவித்திருந்தார். ஆளுநரின் இந்தச் செயலுக்குப் பி.ஜே.பி. ஆதரவு தெரிவித்திருந்தாலும், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இதுகுறித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்,''நிர்வாகத்தைச் சீர்படுத்த விரும்பினால், முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அரசை பெரும்பான்மையை நிரூபிக்க, ஆளுநர் உத்தரவிட வேண்டும்'' என்று தெரிவித்திருந்தார்.  

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்  தொல்.திருமாவளவன், ''ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில்கூட ஆளுநர்கள் மாகாண முதல்வர்களை மீறிச் செயல்பட்டதாகத் தெரியவில்லை'' எனக் குறிப்பிட்டுள்ளார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலச்  செயலாளர் இரா.முத்தரசன்,  மார்க்சிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பல தலைவர்களும் ஆளுநரின் இந்தச் செயல்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில், உண்மையில் ஒரு மாநிலத்தில் ஆளுநராக இருக்கக்கூடியவரின் அதிகாரம் என்ன... இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது என்பது குறித்து மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். ''ஒரு மாநிலத்தின் முதல் குடிமகன் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால், எந்தவித அதிகாரமும் இல்லாத முதல் குடிமகன். ஆளுநரின் நடவடிக்கை என்பது அமைச்சரவை என்ன பரிந்துரைக்கிறதோ, அதனைவைத்தே அவருடைய  நகர்வுகள் இருக்க வேண்டும். குறிப்பாக ஆளுநர் சட்டமன்றக் கூட்டத்தொடருக்கு அழைப்பு விடுக்கிறார் என்றால்கூட, அமைச்சரவையின் பரிந்துரை அடிப்படையில்தான் அழைப்பு விடுப்பார் என்பதே விதி. தூக்குத் தண்டனைக் கைதிகளுக்கு ஆளுநர் மன்னிப்பு  வழங்கினால்கூட, அதுவும் அமைச்சரவையின் பரிந்துரை அல்லது ஆலோசனையின் அடிப்படையில்தான் அந்த நடவடிக்கை அமைந்திருக்கும்.அதனால், ஆளுநருக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் எந்த அதிகாரமும் இல்லை. அரசைச் சார்ந்து வரக்கூடிய ஆணைகள்  அவருடைய  பெயரில் வரும். அதாவது, "by order of the governer" என்று வரும்.

பன்வாரிலால்  புரோகித் ஆளுநர் ஆய்வு

''அரசு ஆணைகளில் கையெழுத்துப் போட தகுதியுடையவர்!''

'ஆர்டர் ஆஃப் தி கவர்னர்' என்றால், அது கவர்னரின் ஆர்டர் அல்ல... அந்த ஆணை என்பது அரசமைப்புச் சட்டத்தின் அமைச்சரவை கொடுத்த ஆணை. அமைச்சரவை கொடுத்த ஆணை என்றால், அதனை கவர்னர் ஆணையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.இந்த ஆணையில் அவர் கையெழுத்துப்போடத் தகுதியுடையவர். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால், நிதித்துறை தொடர்பாக ஒரு பில் பாஸ் செய்து அனுப்புகிறார்கள் என்றால், ஆளுநர் அந்தப் பில்லில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டித் திருப்பி அனுப்பலாம். ஆனால், அதே பில் அவருக்கு இரண்டாவது முறையாக அனுப்பப்பட்டால், அதில் அவர் கையெழுத்துப் போட வேண்டும். ஆனால், சட்டத்தின் பேரில் ஆட்சேபனை, கருத்துகளைச் சொல்வதற்கு அவருக்கு உரிமை உள்ளது. ஆனால், அதனை ஏற்பதும் ஏற்காததும் அது அமைச்சரவையின் விருப்பம். அதேபோன்று, இரண்டாவதாக அனுப்பிய அந்தப் பில்லைக் காலதாமதம் செய்யலாமே தவிர, கட்டாயம் கையெழுத்திட்டே ஆக வேண்டும்.    

ராதாகிரஷ்ணன் வழக்கறிஞர் அப்படி ஆளுநர் எந்த இடத்தில் தனி அதிகாரத்துடன் செயல்படக்கூடிய உரிமை உள்ளது என்றால்,பெரும்பான்மை அரசு இல்லாத பட்சத்தில் அவரே முடிவு எடுக்கக்கூடிய அதிகாரம் உள்ளது. சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க அழைப்பு விடுக்கலாம்.இந்த அதிகாரம் மட்டுமே அவருக்கு உள்ளது. ஆளுநரே சென்று அரசு அதிகாரிகளைச் சந்திப்பது,பரிந்துரைகள் கொடுப்பது, ஒருகூட்டத்தில் கலந்துகொள்வது என்பது குடியரசுத் தலைவரின் ஆட்சியை நினைவுபடுத்துவதாக இருக்கும்.இப்படியான நடவடிக்கையால் தமிழகத்தில் ஜனநாயகம் இல்லை என்பதைத்தான் காட்டுகிறது. அந்தமாதிரியான தோற்றத்தை ஆளுநர் உருவாக்கக்கூடாது. அப்படி நடக்கிற ஆளுநர்மீது நடவடிக்கை எடுப்பதற்கு  இந்திய அரசமைப்புச் சட்டத்தில்  எதுவும் கூறப்படவில்லை. 

 ''அரசமைப்புச் சட்டத்தை  மதிக்க வேண்டிய முதல் மனிதர்!''

இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு மதிப்புத் தருகிற முதல் மனிதர் ஆளுநர். அதை உணர்ந்து அவர்தான் ஜனநாயகத்தை மதித்து நடக்க வேண்டும். இவ்வாறு தன்னிச்சையாகச் செயல்படுகிற போக்கை ஆளுநர்தான் மாற்றிக்கொள்ள வேண்டும். அதனால், அரசமைப்புச் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு அவர்தான் நடக்க வேண்டும். ஆளுநரின் இந்த நடவடிக்கை குறித்து அமைச்சர்கள், அதிகாரிகள் கேட்காமல் இருக்கலாம். ஆனால் மக்கள், 'நாங்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதி  இருக்கும்போது... நீங்கள் எப்படி ஆய்வு செய்யலாம்' என அவர்கள்  கேட்பதற்கு உரிமை உள்ளது.அதேபோன்று ஊடகங்கள் கேட்பதற்கும் உரிமை உள்ளது. அதனால், அவருடைய நடவடிக்கை என்பது அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானது.அதிகாரவரம்புக்கு அப்பாற்பட்டது. எதுவாக இருந்தாலும் அவர் முதலமைச்சரை அழைத்துத்தான் கேட்க வேண்டும்.அதுதான் பதவி முன்னுரிமையின் தகுதியும்கூட. அதுதான் ஓர் ஆளுநரின் அதிகாரமும்கூட. அதனால், முதலமைச்சர் ஆலோசனையின் பேரில்தான்  செயல்பட முடியும். அவர் 'ஆக்டிவிஸ்ட் கவர்னராக' எப்போதும் இருக்க முடியாது. கவர்னராக மட்டுமே இருக்க முடியும்'' என்றார். 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!