பாம்புபிடி இனம் கல்பேலியாவும் ரொக்ஸானா என்னும் குழந்தையும்..! - ராஜஸ்தான் கதைகள்

முடிவிலிருந்து தொடங்குகிறேன் இந்தப் பயணக் கதையை. பயணம் முடிந்த ஏழாவது நாள் சென்னை விமான நிலையத்துக்குள் நுழையும் போதே பெரும் மழை கொட்டத் தொடங்கியிருந்தது. சுற்றி ஒரே பரபரப்பு. எல்லோருக்கும் வீட்டுக்குத் திரும்பும் சந்தோஷம். எனக்கு அப்படி ஓர் உணர்வு இல்லை. என் மனம் இன்னும் "ரொக்ஸானா"வின் சிரிப்பிலேயே நிலைத்திருந்தது. முழு பற்கள் முளைத்திடாத அவள் பொக்கை வாயும், அந்தச் சிணுங்கலும், என்னை நோக்கி அவ்வப்போது அவள் நீட்டிய அந்த விரல்களின் மென்மையும், அவள் கண்களின் அழகைப் பெருமளவுக் கூட்டிய அந்த "மை"யும்,  நடனத்தின் இடையிடையே அவளின் அம்மா சில நிமிடங்கள் வந்து அவளுக்கு பாலூட்டியதும், அந்த வாழ்க்கையும், வலியும், மகிழ்ச்சியும், சிரிப்பும், அந்த மணலும், ஒட்டகமும், குளிரும், வெயிலும்... சென்னை மழையின் சத்தம் மறைத்தது. டோலக், புங்கி, கஞ்சாரியின் இசைச் சத்தங்கள் காதை நிரப்பின.

இது ஆறாவது நாளின் கதை.

எப்படியாவது மாலை சூரியன் மறைவதற்குள் அந்த மணற்மேடு பகுதியை அடைந்துவிட வேண்டும் என்ற தவிப்பு அனைவருக்குமே. சாலையின் இரு பக்கங்களும் வறண்டப் பாலைவனம். சுற்றிலும் யாருமில்லை. எதுவுமில்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெறும் மணல். வெயிலின் தாக்கம் சற்று குறைவாகவே இருந்தது. அதிவேகத்தில் எங்கள் வெள்ளை வண்டி சீறிப்பாய்ந்துப் போய்க் கொண்டிருந்தது. இந்த நொடிகளை எந்தன் எத்தனையோ கனவுகளில் நான் அனுபவித்துள்ளேன். இதை நான் "மணல் கடல்" என்றழைக்கிறேன். எங்கும் மணல். மணலைத் தவிர வேறொன்றும் இருந்திடாத நிலை. நான் மட்டும் தனியாக. அத்தனை மகிழ்ச்சி எனக்கு. மனம் மிகவும் லேசான நிலையிலிருந்தது. எங்கள் டிரைவர் சில குறுக்கு வழிகளை எடுத்து ஒருவழியாக அந்த மணற் மேட்டுப் பகுதிக்கு வந்துவிட்டார். இன்னும் சூரியன் அஸ்தமனம் ஆகவில்லை.

ராஜஸ்தான் பயணக் கதைகள்

ஜெய்சல்மர் நகரிலிருந்து சில மணி நேர பயணத்தில் இதை அடையலாம். "சாம் மணற்மேடு" என்று இதை அழைக்கிறார்கள் (Sam Sand Dune). ஒட்டகத்தில் ஏறி பாலைவனத்தின் நடுவே நின்று, சூரிய அஸ்தமனத்தைப் பார்ப்பது அலாதியானது என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இதோ இன்னும் சில நிமிடங்களில் நான் அதை அனுபவிக்கப் போகிறேன். வண்டி நின்ற நொடி, எங்களுக்கான ஒட்டகம் தயாராக இருந்தது.

மூன்று மடிப்புகளை மடித்து அந்த ஒட்டகம் கடைசியாகக் கீழே உட்கார்ந்தது. அதற்கு முன் 4 ஒட்டகங்கள் இருந்தன. அவை எல்லாம், சிகப்பு நிற அங்கியால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இந்த ஒட்டகத்தில் பெரிய அலங்கரிப்புகள் ஒன்றுமில்லை. சாதாரணமான மஞ்சள் நிற அங்கிதான் இருந்தது. சிவப்பைவிட எனக்கு மஞ்சள் ஒன்றும் அத்தனைப் பிடித்த நிறமல்ல தான். இருந்தும் அந்த நொடி எனக்கு அந்த மஞ்சளின் மீதுதான் ஈர்ப்பிருந்தது. அந்த ஒட்டகம் என்னை அழைப்பதாக எனக்குத் தோன்றியது. அதன் முதுகில் ஏறி உட்கார்ந்தேன். இதுவரை எத்தனையோ தடவைகள் குதிரைகளில் சென்றிருக்கிறேன். ஆனால், ஒட்டகத்தில் இதுதான் முதல் தடவை. ஏறியதுமே, அந்த ஒட்டகத்தோடு அத்தனை நெருக்கம் ஏற்பட்டது. 

ராஜஸ்தான் பயணம்

சில ஆண்டுகளுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஊர்சுற்றி "ராபின் டேவிட்சன்" (Robyn Davidson) எழுதிய "Tracks" நாவலைப் படித்திருந்தேன். 1970களில் ஆஸ்திரேலிய பாலைவனத்தில் தனியொரு பெண்ணாக  4 ஒட்டகங்கள் மற்றும் ஒரு நாயோடு ராபின் மேற்கொண்ட பயணத்தின் கதை அது. ஆஸ்திரேலிய பூர்வகுடிகளான "அபாரிஜின்"களின் வாழ்வை அத்தனை அழகாக அதில் பதிந்திருப்பார். நான் போகப்போவது என்னவோ சில கி.மீ ஒட்டகப் பயணம்தான். ஆனால், ஏனோ அத்தனை ஒரு பரவசம், கர்வம் அதில் ஏறியபோது. அதன் தலையைத் தடவிக் கொடுத்தபடியே மணற்மேட்டில் பயணம் தொடர்ந்தது. ஒரு மேட்டின் உச்சியில் போய் ஒட்டகம் நின்றது. அங்கிருந்து சூரிய அஸ்தமனத்தைப் பார்ப்பது திட்டம். அது அவ்வளவு அழகுதான். ஆனால், எனக்கு ஒட்டகத்தின் மீது இருந்தது தான் பெரும் மகிழ்ச்சியாயிருந்தது. அதனால் சூரிய அஸ்தமனத்தை நான் அவ்வளவாகக் கண்டுகொள்ளவில்லை. இந்த ஒட்டகத்தோடே பேசிக் கொண்டிருந்தேன். 

இருட்டும் நேரம் கூடாரத்துக்குத் திரும்பினோம். இந்தப் பகுதியில் ஓட்டல்கள் என்பது கட்டடங்கள் அல்ல. வெறும் கூடாரங்கள்தான். ராஜஸ்தான் முறைப்படி எங்களை வரவேற்க வேண்டும் என்பதற்காக கறுப்பு நிற அங்கியில், கண்ணாடி வேலைப்பாடுகள் நிறைந்து செய்யப்பட்டிருந்த அந்த உடையிலிருந்த இரண்டுப் பெண்கள் எங்களை வரவேற்கத் தயாராக இருந்தார்கள். ஒருவர் கையில் சந்தனம். ஒருவர் கையில் பூமாலை. பக்கத்தில் ஒரு சிறுவன் "டோலக்" எனும் இசைக் கருவியை வாசித்துக்கொண்டிருந்தான். நெற்றியில் சந்தனம் வைத்தபோது அது மிகவும் குளிர்ச்சியாக இருந்தது. சந்தனம் வைத்த அந்தப் பெண் சற்று உயரம் குறைவாக இருந்தார். உதடுகளில் லிப்ஸ்டிக் போட்டிருந்தாலும் கூட, அவரின் உதடுகள் வறண்டுக் கிடந்தன. அந்த இருவரில் அந்தப் பெண் என்னைப் பெருமளவு ஈர்த்தார். 
எனக்காக ஒதுக்கப்பட்டிருந்த கூடாரத்தினுள் சென்று சற்று நேரம் ஓய்வெடுத்தேன். அரை மணி நேரமாகியிருக்கும். பாடல் சத்தம் கேட்டது. வெளியே வந்துப் பார்த்தேன். இரு பக்கங்களும் கூடாரங்கள் வரிசையாக இருக்க, நடுவே வெட்ட வெளி நடன அரங்கம் இருந்தது. மேடையில் உட்கார்ந்து சிலர் வாத்தியங்கள் வாசித்துக் கொண்டிருந்தனர். ஒரு வயதானவர் ஹார்மோனியப் பெட்டியில். சிறுவன் ஒருவன் "கஞ்சாரி" எனும் இசைக் கருவியில். இன்னும் ஒருவர் "புங்கி"  எனும் இசைக் கருவியில். வயதான ஒருவர் மைக்கின் முன் அமர்ந்து பாடிக் கொண்டிருந்தார். அந்த மொழி எனக்குப் புரியவில்லை.

ராஜஸ்தான் பயணம்

எங்களை வரவேற்ற அந்த இரு பெண்களும் கூடத்தின் நடுவே நடனமாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களைச் சுற்றியிருந்த படுக்கைகளில் பலர் அமர்ந்திருந்தனர். பாம்பைப் போல வளைந்து, நெளிந்து அவர்கள் ஆடிக் கொண்டிருந்தனர். 

இவர்கள் "கல்பேலியா" (Kalbelia) எனும் பூர்வகுடிகள். அவர்கள்குறித்து சில மாதங்களுக்கு முன்னர் நான் பார்த்திருந்த ஆவணப்படம் என் நினைவுக்கு வந்தது. ராஜஸ்தானின் ஜிப்ஸி நாடோடி இனத்தில் இரண்டு முக்கியப் பிரிவுகள் போபா (Bopa) மற்றும் கல்பேலியா (Kalbelia). இந்த உடையும், நடனமும் இவர்கள் கல்பேலியா என்பதை உறுதிப்படுத்தியது. இவர்கள் பாலைவனப் பூர்வகுடிகள். பாம்புகளுக்கும், இவர்களுக்கும் இடையே ஒரு மிகப் பெரிய வரலாறு இருக்கிறது. காலங்காலமாக பாம்பு பிடிப்பது, வித்தைக் காட்டுவது, விஷம் எடுப்பது என பாம்பைச் சுற்றிதான் இவர்கள் வாழ்வு. இது அல்லாது, தேன் சேகரிப்பார்கள். கிட்டத்தட்ட நம்மூர் இருளர்கள் மாதிரி என்று சொல்லலாம். 

இவர்களின் நடனம் உலகப் பிரசித்தி. அவர்களின் கல்பேலியா எனும் இனப் பெயரேதான், அவர்களின் கலை வடிவத்துக்குமான பெயர். பாம்பின் அசைவுகளை ஒத்திருக்கும் இவர்களின் நடனம். அந்தக் காலங்களில் அரசவைகளில் இவர்கள் நடனமாடி வந்தக் குறிப்புகளும் இருக்கின்றன. நாடோடிகளாக நாடெங்கும் சுற்றுவது, ஆங்காங்கே கிடைக்கும் விஷயங்களைக் கொண்டு தங்களுக்கான வாழ்வை அமைத்துக்கொள்வது இவர்களின் வழக்கம். ஆனால், உலகமயமாக்கல் ஏற்படுத்திய தாக்கம் இவர்களின் இனத்தில் பல சிக்கல்களை ஏற்படுத்தியது. அரசர்கள் வீழ்த்தப்பட்டதும், நடனக் கலையில் இருந்தவர்களின் வாழ்க்கைப் பெரும் கேள்விக்குள்ளாகியது. 

ராஜஸ்தான் பயணம்

இதன் காரணமாக, கடந்த தலைமுறையில் பெண் பிள்ளைகள் பிறந்தாலே விஷம்வைத்துக் கொள்ளும் நிலை நிலவியது. அப்படித்தான் "குலாபோ சபேரா"வும் (Gulabo Sapera). பிறந்த ஒரு மணி நேரத்திலேயே உயிரோடு மண்ணில் புதைக்கப்பட்டார். ஆனால், அவளின் அத்தை அவளைக் காப்பாற்றினார். இப்படி, பிறப்பிலேயே போராட்டத்தைச் சந்தித்த குலாபோ, வாழ்வின் பல பிரச்னைகளைக் கடந்து தங்கள் நடன வடிவத்தை வெளி உலகுக்கு எடுத்துவந்தார். அந்த நடனத்துக்கு என தனி அடையாளமும், அங்கீகாரமும் கிடைக்கும் வழியைச் செய்தார். தன் இனப் பெண்களுக்கு இலவசமாக நடனப் பயிற்சிகளை அளித்தார். இன்று அந்த இனப் பெண்கள் ராஜஸ்தான் சுற்றுலாத் துறையில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். உலகின் பல இடங்களில் இருந்து வரும் ஊர்சுற்றிகள் இவர்களின் நடனத்தைப் பெருமளவு ரசிக்கிறார்கள். பல கலைஞர்கள் நடனம் கற்கிறார்கள். 

இந்த வரலாற்றைத் தெரிந்துகொண்டு அந்த நடனத்தைப் பார்த்தபோது அதன்மீது பெரும் ஈர்ப்பு ஏற்பட்டது. அதில் ஒரு பெண் தன் உடலை பலவாறாக வளைத்து நடனமாடி ஆச்சர்யப்படுத்தினார். ஒருவர் சற்று சோர்வாக காணப்பட்டார். அவர் தன் உடலை அதிகமாக வளைக்கவில்லை. அவர் சிரிக்கவும் கூட இல்லை. எப்போதாவது சிரிக்க மறந்துவிட்டோமே என்று நினைப்பு வந்தவர் போல், திடீரென சிறு புன்னகை செய்வார். சில நிமிடங்களுக்கு ஒருமுறை மேடைக்குப் பின்பக்கம் சென்று வருவார். அவருக்கு என்ன ஆனது? அவரின் அந்த சோகத்துக்கு, சோர்வுக்குப் பின்னிருக்கும் கதையை அறிந்துகொள்ள வேண்டும் என்ற உந்துதல் எனக்கிருந்தது...

எல்லோரும் மேடைக்கு முன் அவர்களின் நடனத்தை ரசித்துக் கொண்டிருக்க, நான் பின்புறம் சென்றேன். அங்கே அந்தக் குழந்தை, அத்தனை அழகான சின்னக் குழந்தை தனியாக உட்கார்ந்துகொண்டிருந்தது. இந்தப் பெண் அவ்வப்போது மேடைக்குப் பின் வருவார், சில நிமிடங்கள் உட்கார்ந்து அந்தக் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்துவிட்டு, மீண்டும் நடனமாட செல்வார். அத்தனை சோர்வு இருந்தாலும், தன் குழந்தையைப் பார்க்கும் அந்த நொடிகள் அத்தனை சந்தோஷமாய் இருப்பார் அந்தப் பெண். சில நொடிகள் தாமதமானால் கூட, அந்தப் பெண்ணுக்கு நடனமாட அழைப்பு வந்துவிடும். 

அங்கு ஆடிக்கொண்டிருந்த மற்றொரு பெண் மேடையிலிருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்துக்கொண்டு அரங்கத்தின் நடுப்பகுதிக்கு வந்தார். நான் ஏதோ வந்து எல்லோரிடமும் காசுக்காக கை நீட்டப் போகிறார் என்றுதான் எண்ணினேன். என் கையில் வேறு அப்போது காசில்லை. ஆனால், அவர் அப்படி ஒரு செயலை செய்யவில்லை. மாறாக, அந்தக் காசை கீழேவைத்தார். தன் இடுப்பிலிருந்து மேல் பகுதியை வில்லாக வளைத்து, பின் பக்கம் படுத்து தன் வாயால் அந்தக் காசை எடுத்து வித்தைக் காட்டினார். இந்தக் குழந்தையின் தாயும் அதைச் செய்ய முயற்சித்தார். நான் பதறிவிட்டேன். அந்தப் பெண் முதுகை வளைக்க முயற்சி செய்ய வலி தாங்காமல் அதை முடிக்காமலேயே எழுந்துவிட்டார். பின்னர், அடுத்தப் பெண் வந்து அதைச் செய்தார். அதேபோல், அந்த இருவரும் தாங்களாக வந்து பார்வையாளரிடம் கை நீட்டி காசு கேட்கவே இல்லை. சிலர் அவர்களாக கொடுத்தாலும், அதைக் கொணர்ந்து மேடையிலிருந்த பெரியவரிடம் கொடுத்துவிட்டுச் சென்றார்கள். 

நடனம் உச்சத்தை எட்டியது. பார்வையாளர்களும் நடனமாடத் தொடங்கினார்கள். இவருக்கு தன் குழந்தையைப் பார்க்க வர நேரமே கிடைக்கவில்லை. நடுவில் ஒருதடவை மட்டும் வந்தபோது, "நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று சைகையில் நான் சொன்னேன். "இவளின் பெயர் என்ன?" என்றும் கேட்டேன்.

"ரொக்ஸானா" என்று சொல்லிவிட்டு நடனமாடப் போய்விட்டார்.

விடுமுறையைக் கழிக்க சுற்றுலா வந்திருந்த பல குழந்தைகளும் அவரோடு சேர்ந்து நடனமாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களை எல்லாம், உற்சாகமாக சிரிக்க வைத்துக்கொண்டிருந்தார். நடனத்திடையே அவ்வப்போது, என்னிடமிருந்த ரொக்ஸானாவைப் பார்ப்பார். இவள் தன் பொக்கை வாயைத் திறந்து அழகாக சிரிப்பாள். அவர் கொஞ்சம் சமாதானம் ஆவார். 

இந்த நிகழ்ச்சி கிட்டத்த இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக நடந்துகொண்டிருந்தது. இந்தியாவின் மற்றப் பகுதிகளிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் சிலர், குடிபோதை அதிகமாகி நடனமாடிக் கொண்டிருந்த அந்தப் பெண்களைத் தொந்தரவும் செய்தார்கள். கண்டிப்பாக அவர்களுக்கு ரொக்ஸானாவைத் தெரிந்திருக்காது. ரொக்ஸானா எனும் பச்சைக் குழந்தையைப் பெற்றெடுத்த தாய் அது என்று சொன்னாலும் அவர்களுக்குப் புரியவும் போவதில்லை. 

குளிர் அதிகமாகத் தொடங்கியிருந்தது. ரொக்ஸானா தூங்கத் தொடங்கினாள். ஒருவழியாக நடன நிகழ்ச்சிகள் நடந்து முடிந்தன. அந்தப் பெண் அத்தனை வேகமாக ஓடிவந்து ரொக்ஸானாவை வாங்கிக்கொண்டார். அவ்வளவு மூச்சிறைப்புக்கும் நடுவே, தன் குழந்தையை முத்தமிட்டுக் கொஞ்சினார். 

ராஜஸ்தான் பயணம்

ஒரு மினி லாரி வந்து நின்றது. அந்தக் கலைஞர் கூட்டம், தங்கள் பொருள்களைக் கட்டிக்கொண்டு அதில் ஏறியது. நான் ரொக்ஸானாவையே பார்த்துக் கொண்டிருந்தேன். வண்டி நகரத் தொடங்கியது. போட்டிருந்த லிப்ஸ்டிக்கும், கண் மையும் கலைந்த நிலையில் அந்தப் பெண் என்னைப் பார்த்து கைகளில் கூப்பி நன்றி தெரிவித்தார்.

அந்த வண்டி அந்த "மணல் கடலுக்குள்" எங்கோ சென்று மறையும் வரை நின்றுகொண்டு அதையே பார்த்துக் கொண்டிருந்தேன்...

(இந்தப் பயணத்தின் இன்னும் சில நாள்களின் அனுபவங்கள், இனி வரும் நாள்களில்...)

பயண உதவி: Press Information Bureau, Chennai.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!