வெளியிடப்பட்ட நேரம்: 17:55 (19/11/2017)

கடைசி தொடர்பு:15:50 (23/07/2018)

நவம்பர் இறுதியில் மீண்டும் கனமழை... இந்திய வானிலை மைய முன்கணிப்புகள்!

பருவமழை

மிழகத்தில் அதிக மழையைத் தரக்கூடிய வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் 27-ம் தேதி தொடங்கியது. நவம்பர் முதல்வாரம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மற்றும் தென் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. நாகபட்டினம், சென்னை மாவட்டங்களில் அதிக மழை பெய்தது.

வடகிழக்குப் பருவமழை காலத்தின் முதல் 30 நாள்களுக்குள், குறைவாகவும் இல்லாமல், அதிகமாகவும் அனைத்து மாவட்டங்களிலும் ஓரளவுக்கு மழை பெய்திருக்கிறது. இந்தச் சூழலில் கடந்த 16-ம் தேதி டெல்லியில் உள்ள இந்திய வானிலை மையம் வெளியிட்ட அடுத்த இரண்டு வாரங்களுக்கான வானிலை அறிக்கையில் வங்கக் கடலில் இரண்டு காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவாக வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

முதல் காற்றழுத்தம்

முதல் காற்றழுத்த தாழ்வு நிலை வரும் 21-ம் தேதியைப் போல வடக்கு அந்தமான் கடற்பகுதியில் உருவாகக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது வலுவானதாக இருக்கும் என்று சொல்ல முடியாது. இந்தக் காற்றழுத்த தாழ்வு நிலை எந்தப் பகுதியை நோக்கி நகரக் கூடும் என்பது 21-ம் தேதிக்குப் பின்னர்தான் தெரிய வரும்.

இரண்டாவது காற்றழுத்தம்

நவம்பர் 27-ம் தேதியன்று, வங்கக் கடலின் தென்கிழக்குப் பகுதியில் மேலும் ஒரு காற்றழுத் தாழ்வு நிலை உருவாகக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்தமான் நிகோபார் பகுதிகளில் கனமழை பெய்யக் கூடும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் காற்றழுத்தம் காரணமாக இலங்கை, தென் தமிழகத்தின் கடலோரப்பகுதிகளில் கனமழை பெய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படி அடுத்தடுத்து, இரண்டு காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவாவதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நவம்பர் முதல்வாரத்தில் பெய்த மழைக்குப் பின்னர் அவ்வளவாக மழை பெய்யவில்லை. தவிரவும், கடந்த இரண்டு நாள்களாக பகல் நேர வெப்பம் அதிகரித்திருக்கிறது.

மழை

அதிக மழை தரும் காற்றழுத்தம்

காற்றழுத்தம் காரணமாகவே ஒரு இடத்தில் அதிக மழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு நிலைகள் தோன்றின. அதுவும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்றன. ஆனால் கடந்த 2016-ல் காற்றழுத்த தாழ்வு நிலை பெரிதாக உருவாகவில்லை. வர்தா புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட  பகுதிகளில், எதிர்பார்க்கப்பட்டது போல அவ்வளவு அதிகமாக மழை பெய்யவில்லை. எனவேதான் இந்த முறை இரண்டு காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு என்று சொல்லப்படும் முன் கணிப்பு, ஆறுதலாக இருக்கிறது.

 

 

மழை அளவு

கடந்த மூன்று நாள்களாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யவில்லை. வறண்ட வானிலையே நிலவி வருகிறது. தமிழகம் முழுவதும் அக்டோபர் ஒன்று முதல் 18-ம் தேதி காலை 8.30 வரை 256.1 மி.மீ மழை பெய்திருக்கிறது. நாகை மாவட்டத்தில் 774.4 மி.மீ மழை பெய்திருக்கிறது. சென்னையில் இதே காலகட்டத்தில் 756.3 மி.மீ மழை பெய்திருக்கிறது. வடகிழக்குப் பருவமழை காலம், சராசரியாக இன்னும் 40 நாள்களுக்கு இருக்கிறது. அதற்குள் மேலும் சில நாள்கள் தமிழகத்துக்கு மழை தரும் நாள்களாக இருக்கும் என்று நம்பலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்