Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தேன்கனிக்கோட்டை பாலியல் வன்கொடுமை.. பொய் அறிக்கை தயாரித்ததா சி.பி.சி.ஐ.டி?

சிறுமி பாலியல் வன்கொடுமை   தேனிக்கனிகோட்டை

டிசம்பர் 3-ம் தேதி, 'சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்' நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது.இதுபோன்ற கொண்டாட்டங்கள் மகிழ்ச்சி அளித்தாலும், மாற்றுத்திறளாளிகள் பாதிப்புக்குள்ளாகும் போது, அவர்களுக்கான நீதி கிடைக்கிறதா என்பதுதான் இங்கு கேள்விக்குறி...

அதுபோன்றதொரு பாதிப்பு தேன்கனிக்கோட்டையில் மாற்றுத்திறளாளி சிறுமி ஒருவருக்கு ஏற்பட்டு, இதுவரை அச்சிறுமிக்கு எந்த நீதியும் கிடைக்கவில்லை. பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்த வாய்பேச முடியாத சிறுமிக்கு ஆளும் வர்க்கம் நீதி வழங்குவதற்குப் பதிலாக, பொய்யான தகவல்களைப் பரப்பி, அதுதொடர்பான வழக்கில் இருந்து சம்பந்தப்பட்டவர்களைத் தப்பிக்க அரசே வழிவகுத்துக் கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

வழக்குப்பதிவு செய்ய மறுப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம் கோடகரை கிராமத்தைச் சேர்ந்த காதுகேளாத - வாய்பேசாத சிறுமி, மிகவும் ஏழ்மையானக் குடும்பத்தைச் சேர்ந்தவள். மாற்றுத்திறனாளியான இச்சிறுமியை, 2014-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று நான்குபேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து, அப்பகுதியில் சாலையோர முள்புதரில் வீசிச் சென்றது. சுயநினைவின்றி, உடலில் காயங்களுடன் கிடந்த சிறுமியை அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்ப்பதற்காக அவரின் தந்தை தூக்கிச் சென்றார். ஆனால், 'காவல்துறையில் வழக்குப்பதிவு செய்யாமல், சிகிச்சை அளிக்க மாட்டோம்' என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதன் பின்னர் கிருஷ்ணகிரி மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தபோது போலீஸார் புகாரை வாங்க மறுத்துள்ளனர்.

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைச் சங்கம் இப்பிரச்னையில் தலையிட்டு போராட்டம் நடத்திய பிறகே, வழக்கைப் பதிவு செய்துள்ளனர். சிறுமியைச் சீரழித்தவர்கள், அப்பகுதியைச் சேர்ந்த முக்கியப் புள்ளிகளின் மகன்கள் என்பதால் விசாரணையை அப்படியே கிடப்பில் போட்டது போலீஸ். சிறுமியின் தந்தை வீரபத்ரா, தன் மகளுக்கு நேர்ந்த கொடுமை குறித்தும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு அனைத்து மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைச் சங்கத்தின் உறுதுணையோடு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்.அதேபோன்று வழக்குப்பதிவு செய்ய மறுத்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்' என உத்தரவிட்டனர்.இதனைத் தொடர்ந்து நடவடிக்கைகள் தீவிரமடைந்தன. ஆனால், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு போதுமான நிவாரணமோ அல்லது இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்குத் தண்டனையோ கிடைக்கவில்லை. இதுகுறித்து, உயர் நீதிமன்றத்தில் புகார் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிறுமி தொடர்பான வழக்கு தமிழக அரசின் சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது.

நீதி கிடைக்காதா?

இந்த வழக்கில் விசாரணை அறிக்கையை சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் தாக்கல் செய்துள்ளனர். அதில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு எதிரான தகவல்களை போலீஸ் அதிகாரிகள் பதிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறுமியின் வழக்கு மற்றும் அதுதொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைச் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர்  நம்பிராஜனிடம் பேசினோம்.

"தேன்கனிக்கோட்டை ஐயூர் பகுதியில் இருந்து செல்லும் கீழ்கொட்டாவூர் என்ற மலைகிராமத்திற்கு வாகனங்கள்கூட செல்வது கிடையாது. அதிக எண்ணிக்கையில் சமூக விரோதிகள் நடமாட்டம் உள்ள பகுதியாக இந்தக் கிராமம் உள்ளது.பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், கல்வியறிவு இல்லாதவர்கள். இதனால், சிறுமிக்கு நடந்த கொடுமையை மறைக்கவும், அவர்களை முற்றிலுமாக புறக்கணிப்பு செய்யயும் முயற்சிகள் நடந்துள்ளன. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக, அந்தப் பகுதியான கொடகரை ஊராட்சி வார்டு அ.தி.மு.க. நம்பிராஜன்  மாற்றுத்திறனாளிகள்  சங்கம்உறுப்பினர் சித்தலிங்கப்பா செயல்படுகிறார். இதனால், இந்த வழக்கில் உண்மையை முற்றிலுமாகத் திரித்து பொய்யான தகவல்களே கூறப்பட்டுள்ளன. சிறுமியின் தந்தை மற்றும் அவரின் உறவினர்கள், பொருளாதார ரீதியிலும், கல்வியறிவிலும் பின்தங்கியவர்கள், கேட்க நாதியற்றவர்கள் என்பதால் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள், இந்த வழக்கில் சிறுமிக்கு எதிராக பொய்யான தகவல்களைப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குத் தொடர்பாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்கள் சங்கம் சார்பில் பல்வேறு முயற்சிகள் செய்தும், எந்தத் தகவலையும் சி.பி.சி.ஐ.டி-யினர் தர மறுத்து வந்தனர்.

இந்நிலையில், சமூகவிரோதச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கில் ஒரு மோசடியான விசாரணை அறிக்கையை அதிகாரிகள்  தயாரித்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணை நடைபெறும்போது, சிறுமியின் தரப்பில் இருந்து முழுமையாக விசாரணை நடத்தப்படவில்லை. அந்த ஊர் மக்கள் சொல்லும் தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் அறிக்கை தயாரித்துள்ளனர். ஊர்த் தலைவர் மற்றும் குற்றம்சாட்டப்பட்ட நபர்களிடம் இருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு, பொய்யான தகவல்களுடன் கூடிய அறிக்கையை அதிகாரிகள் தயாரித்துள்ளனர் என்றே தெரிகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவம் நடைபெற்ற தருணத்தில், வழக்குப்பதிவு செய்ய மறுத்ததாக காவல்துறை தரப்பில் இருந்தே நீதிமன்றத்தில் சொல்லப்பட்டது. பாலியல் வன்கொடுமை நடந்துள்ளதை மருத்துவ அறிக்கையும் உறுதிசெய்துள்ளது. அப்படி இருக்கும்போது, சி.பி.சி.ஐ.டி. தாக்கல் செய்துள்ள அறிக்கையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கும், குற்றம்சாட்டபட்டுள்ள  நபர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்த காரணத்தால். பொய்யான முறையில் இந்தப் புகாரை தெரிவித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.சி.பி.சி.ஐ.டி-யின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து, எங்கள் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில்  வரும் 24-ம் தேதி போராட்டம் நடத்த  உள்ளோம்" என்றார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான இத்தகைய கொடுஞ்செயல்களை தடுத்து நிறுத்தாமலும், பாதிக்கப்பட்ட தேன்கனிக்கோட்டை சிறுமிக்கு நீதி கிடைக்கச் செய்யாமல் பொய்யான அறிக்கை தயாரித்து நீதிமன்றத்தில் அளிக்கும் நிலையிலும், 'சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின' கொண்டாட்டங்கள் தேவையற்றது. அதையும் மீறிக் கொண்டாடுவது என்பது உயிரற்ற மனிதர்களுக்கு வண்ணமுலாம் பூசுவதற்குச் சமம் என்பதை ஆளும் வர்க்கம் உணர வேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?
Advertisement

MUST READ