வெளியிடப்பட்ட நேரம்: 13:19 (23/11/2017)

கடைசி தொடர்பு:15:26 (23/11/2017)

சசிகுமார், அன்புச்செழியன், அசோக்குமார் இடையே நடந்தது என்ன? - இறுகும் போலீஸ் விசாரணை #VikatanExclusive

சசிகுமார் கடந்த ஏழு ஆண்டுகளாகவே அவர் தயாரித்துவரும் படங்களுக்கு ஃபைனான்ஸியர் அன்புச்செழியனிடம் கடன் பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், அவர் தயாரித்த ‘தாரை தப்பட்டை’ படம் வசூல் ரீதியாக வெற்றிபெறவில்லை. இது, சசிகுமாருக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தியது. இதனால், தர்மசங்கடத்தில் சிக்கிய சசிகுமார், 'கொடிவீரன்' படத்தை வரும் 30-ம் தேதி வெளியிட்டு அதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாங்கிய கடனை அடைத்துவிடலாம் என்று திட்டமிட்டிருந்தார். ஆனால், அதற்கும் அன்புச்செழியன் தடை ஏற்படுத்தினார். அதனால் சசிகுமார் தரப்பு சோர்வடைந்திருக்கிறது. அன்புச்செழியனின் அடுத்தடுத்த மிரட்டலுக்கு பயந்த சசிகுமாரின் அத்தை மகன் அசோக்குமார், தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அசோக்குமார், எழுதிய கடிதத்தில் சினிமா ஃபைனான்ஸியர் அன்புச்செழியனின் கந்து வட்டிக் கொடுமையால் தற்கொலை செய்ததாகக் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, சசிகுமார் கொடுத்த புகாரின்பேரில் வளசரவாக்கம் போலீஸார், அன்புச்செழியன்மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரைத் தேடியும் வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், ''மதுரையைச் சேர்ந்த அன்புச்செழியன், கோலிவுட் வட்டாரத்தில் பிரபலமானவர். கோபுரம் ஃபிலிம்ஸ் நடத்திவரும் அவர், பெரியளவில் ஃபைனான்ஸும் செய்துவந்தார். அவரிடம் பிரபல நடிகர்கள், நடிகைகள், சினிமா தயாரிப்பாளர்கள் எனப் பலர் பணம் வாங்கியுள்ளனர். கோலிவுட் வட்டாரத்தில் அவரிடம் பணம் வாங்காதவர்கள் மிகச் சிலரே. இந்தச் சமயத்தில் நடிகர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார், கந்துவட்டிக் கொடுமையால் தற்கொலை செய்துள்ளார். அவர் எழுதிய கடிதத்தில் அன்புச்செழியன் மிரட்டல் குறித்துக் குறிப்பிட்டுள்ளார். மேலும், நடிகர் சசிகுமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் அன்புச்செழியன்மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம்.

வழக்குப் பதிவு செய்வதற்கு முன்பு நள்ளிரவில் பஞ்சாயத்து நடத்தப்பட்டது. அதாவது, அன்புச்செழியன்மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று சசிகுமார் தரப்பினர் தெரிவித்தனர். ஆனால், அன்புச்செழியனுக்கு ஆதரவாகப் பேசிய சில சினிமாத் தரப்பினர், வழக்குப் பதிவு செய்யக் கூடாது என்று பல தரப்பிலிருந்து பிரஷர் கொடுத்தனர். இத்தகவல் போலீஸ் உயரதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. உயரதிகாரிகள் அசோக்குமார் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் தற்கொலைக்குத் தூண்டியதாக அன்புச்செழியன்மீது வழக்குப்பதிவு செய்யச் சொல்லி வலியுறுத்தினார்கள். உடனே வழக்குப் பதிந்தோம். ஆனால், இப்போது இந்த நிமிடம்கூட அன்புச்செழியனைக் காப்பாற்ற பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.

Asokkumar

இந்த வழக்கு குறித்து அன்புச்செழியன் தரப்பினர் வேறுவிதமாக தகவல் பரப்புகின்றனர். ‘அசோக்குமார் யாரென்றே எங்களுக்குத் தெரியாது. ஏனெனில் எங்களிடம் பணம் வாங்கியது நடிகர் சசிகுமார்தான். அவருக்கும் எங்களுக்கும்தான் சில ஆண்டுகளாகக் கொடுக்கல் வாங்கல் இருந்துவந்தது. அசோக்குமார் தற்கொலை செய்ததையடுத்து சில தயாரிப்பாளர்களின் தூண்டுதலின் பேரில் அன்புச்செழியனை சிக்கவைக்க முயற்சிகள் நடக்கின்றன. அதோடு சசிகுமார் தரப்பினர், ‘கந்துவட்டிக் கொடுமையால் எங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்து தவிக்கிறோம். இந்தச் சமயத்தில் பஞ்சாயத்துப் பேசுவது சரியா’ என்று போலீஸாரிடம் காரசாரமாக வாதிட்டுள்ளனர். அதன்பிறகே அன்புச்செழியன் மீதான நடவடிக்கை உறுதி செய்யப்பட்டது. ஆனால், சசிகுமாருக்கும் அன்புச்செழியனுக்கும் இடையே நடந்த உரையாடல்களின் பதிவுகள், பணம் வாங்கும்போது செய்துகொண்ட ஒப்பந்தங்கள் ஆகியவை இருக்கின்றன. அதன்அடிப்படையில் விசாரணை நடந்தால் உண்மை தெரியவரும்!” என்றனர்.

தமிழ்சினிமா பிரபலங்கள் சிலரிடம் பேசினோம். அவர்கள் கூறுகையில், “அன்புச்செழியன், அவருடைய தம்பி அழகர் ஆகியோர் சினிமா ஃபைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர். ஜெயலலிதா, மதுரைக்கு வந்தபோது, அவரது முன்னிலையில் அ.தி.மு.க.வில் அன்புச்செழியன் இணைந்தார். அடுத்து, சசிகலா குடும்பத்தினருடன் மிகவும் நெருக்கமாக இருந்தார். அ.திமு.க. ஆட்சியிலிருந்தபோது அன்புச்செழியன் மீது புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்கப்படாத அளவுக்குச் செல்வாக்காக வலம் வந்தாகக் கூறப்படுகிறது. அடுத்து தி.மு.க.விலும் அன்புச்செழியனுக்குச் செல்வாக்கு இருந்தது. அப்போதைய மதுரை பவர் சென்டர் அன்புச்செழியனுக்கு நெருக்கம். இதனால் இரண்டு திராவிடக் கட்சிகளின் ஆட்சியிலும் செல்வாக்காகத் திகழ்ந்த அன்புச்செழியனின் கை கோலிவுட் வட்டாரத்தில் ஓங்கியே இருந்தது. பெரிய தயாரிப்பு நிறுவனங்களிடம் மட்டுமே ஃபைனான்ஸ் செய்யும் அன்புச்செழியன், அந்தப் பணத்தைத் திரும்ப வாங்கும் விதமே ஆளுக்கேற்றாற்போல வித்தியாசப்படும். அன்புச்செழியனிடம் பணம் வாங்கியவர்களில் பாதிக்கப்பட்டவர்களின் கதையைக் கேட்டால் பரிதாபமாக இருக்கும். குறிப்பாக நடிகைகள் அன்புச்செழியனிடம் பணம் வாங்கிவிட்டு அனுபவித்த துயரம் மற்றவர்களுக்கெல்லாம் ஒரு பாடம். அதிலும் கொடிகட்டிப்பறந்த நடிகையின் வீட்டுக்குள் புகுந்து அத்துமீறிய சம்பவங்களும் நடைபெற்றிருக்கின்றன. அன்புச்செழியனால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் பலர் இருந்தாலும் தைரியமாக யாரும் புகார் கொடுப்பதில்லை. கோலிவுட் வட்டாரத்தில் உள்ள பெரும் தலைகள் பஞ்சாயத்துப் பேசி முடித்துவிடும்” என்றனர்.

 

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நிகழ்ந்த தீக்குளிப்பு சம்பவம் முதல் திரைத்துறையில் கந்துவட்டி கொடுமையால் நிகழும் தற்கொலைகள் வரை, கந்துவட்டிகள் தமிழகத்தில் நிகழ்த்திய கொலைகள் ஏராளம். சன் டிவியில் ஞாயிறு மதியம் ஒளிபரப்பாகி வரும் வாங்க பேசலாம் நிகழ்ச்சியில் நடைபெற்ற கடன் வாங்குவது இயல்பா... இயலாமையா... என்னும் நிகழ்வில், தயாரிப்பாளர்  JSK சதீஷ், இயக்குநர் பிரவீன் காந்த் ஆகியோர் திரைத்துறையில் நீடித்து வரும் கந்துவட்டி கொடுமைகள் பற்றி பேசிய காணொளி இதோ... நிகழ்ச்சியின் ஆறாவது நிமிடத்தில் இருந்து இவர்கள் பேசுவதைக் காண முடியும்
 

 

 

 

 

அன்புச்செழியனால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலைத் தயாரிப்பாளர் சங்கத்தில் கொடுக்க முடிவு செய்துள்ளனர் சில கோலிவுட் புள்ளிகள். ஆனால், அன்புச்செழியனுக்கு நெருங்கிய உறவினர் ஒருவர் கூறுகையில், “அசோக்குமார் தற்கொலைக்கு நாங்கள் காரணமல்ல. சட்டப்படி நாங்கள் சினிமாவில் ஃபைனான்ஸ் செய்துவருகிறோம். கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டால் அன்புச்செழியன்மீது கந்துவட்டி புகார் கொடுக்கிறார்கள். நடிகர் சசிகுமாருக்கும் அன்புச்செழியனுக்குத்தான் கொடுக்கல்வாங்கல் இருந்தது. அசோக்குமாரை நாங்கள் மிரட்டவில்லை. சட்டப்படி இந்த வழக்கை எதிர்கொள்வோம்!” என்கிறார்கள்.


டிரெண்டிங் @ விகடன்