Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னை மழையின் மீள்நினைவுகள் - அத்தியாயம்-1 சென்னையை முடக்கிய நவம்பர் 23 இரவு!

2015 மழை

காலண்டரில் தேதியைக் கிழித்ததும் முந்தைய நாள் நினைவுகளையும் கிழித்துக் கசகிக்கிப் போட்டதுபோல நாள்கள் கடந்து கொண்டிருக்கின்றன. கடந்துவிடக்கூடிய நிகழ்வுகளாக இல்லாமல், வரலாற்றில் இடம்பிடிப்பது சில நாள்கள்தான். 2015-ம் ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த சென்னைப் பெரும் மழையும் அப்படியான ஒரு வரலாற்று நிகழ்வாக மாறிப்போனது. பெருமழை பெய்து இரண்டு ஆண்டுகள் ஆன பிறகும், அது ஏற்படுத்திச் சென்ற தாக்கம், நினைவுகள் என்றும் அழியாதவை.

சென்னையின் தெருக்கள் எல்லாவற்றிலும் வெள்ளநீர் புகுந்து புறப்பட்டபோதிலும், குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டனர். ஒரு வாரத்துக்கும் மேலாக மின்சாரமின்றித் தத்தளித்தனர். மொபைல் போன்கள் எல்லாம் டவர் இழந்து, சார்ஜர் இல்லாமல் செத்த போன்கள் ஆகின. வரலாறுகளின் இதற்கு முந்தைய பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால், இதற்குமுன்பு பெய்த மழை இதைவிடப் பெரும் மழையாக இருந்தாலும், மக்கள் தவித்தது என்னவோ இந்தப் பெருமழைக்குத்தான். சென்னை மக்களின் அன்றாட வாழ்க்கையை முழுவதுமாகப் புரட்டிப்போட்டது இந்த மழைதான். மழை, வெள்ளம் காரணமாக மின்சாரமின்றி, குடிநீரின்றி தவித்தபோதுதான், அதுவரை பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று தெரியாதவர்கள்கூடப் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் மனம்விட்டுப் பேச ஆரம்பித்தனர். வீடியோ கேம்களில், சுட்டி டி.வி-க்களின் ஷோக்களில் மூழ்கியிருந்த சிறுவர்கள், மறந்துவிட்ட விளையாட்டுகளை மொட்டை மாடிகளில் கூடி விளையாடினர். சென்னை மக்களிடம் மனிதநேயம் வெளிப்பட ஒரு பெரும் மழை காரணமாகி இருக்கிறது. சென்னை பெரும் மழை, நமக்குப் பல்வேறு அனுபவங்களைக் கொடுத்துச் சென்றிருக்கிறது. அந்த அனுபவங்களின் மீள்பார்வைதான் இந்தத் தொடர் கட்டுரை...

சென்னையை முடக்கிய மழை

இதே நாள் 2015-ம் ஆண்டு சென்னைவாசிகளால் மறக்க முடியாத மழை நாள் மட்டும் அல்ல. சென்னை நகரமே போக்குவரத்து நெரிசலில் முடங்கிய நாளும் இந்த நாள்தான்(நவம்பர் 23,2015) அந்த நாளில் சென்னையில் மாலை நான்கு மணிக்குப் பெய்யத் தொடங்கிய மழை, இரவு முழுவதும் நீடித்தது. ஒரு சில மணி நேரங்களில் கொட்டித் தீர்த்த மழை காரணமாக சென்னை நகர் முழுவதும் சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது. வாகனங்கள் நெரிசலில் சிக்கித் தவித்தன. மாலை நேரம் அலுவலகம் முடிந்து வீட்டுக்குக் கிளம்பியவர்கள், சாலைகளில் வாகனங்களில் முடங்கியிருந்தனர். பாரிமுனையில் மாலை 6 மணிக்குக் கிளம்பியவர்கள், விடியற்காலை 2 மணிக்குத்தான் வேளச்சேரி போக முடிந்தது. நோயாளிகளை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ்கள் நடுவழியில் தவித்தன. அந்த மழை நாள் கொடூர அனுபவத்தைக் கொடுத்தது.

நரகமான அனுபவம்

ஐ.டி. கம்பெனியில் பணியாற்றும் எழுத்தாளர் விநாயக முருகன் தமது அனுபவம் குறித்து ஃபேஸ்புக் பதிவில் எழுதியிருக்கும் கட்டுரை இது....

‘‘வாழ்க்கையில் ஒரு சில இரவு​களை மறக்க முடியாது. நவம்பர் 23,2015 இரவு நரகம்போல இருந்தது. விடியல் இல்லாத அந்த இரவு நீண்டுக்கொண்டே செல்வது​போல உணர்ந்தேன். எட்டு மணிக்கு அலுவலகப் பேருந்திலிருந்து கொட்டும் மழையில் கிளம்பினேன். நாங்கள் யாரும் இரவு உணவு சாப்​பிடவில்லை. பேருந்திலிருந்த ஒரு பெண், தனது கையில் வைத்திருந்த பிஸ்கட் பாக்கெட்டிலிருந்து ஆளுக்கு ஒரு பிஸ்கட் கொடுத்தார். பஸ்ஸிலிருந்து ஜன்னலுக்கு வெளியே பார்த்தால், எல்லா இடங்களிலும் மக்கள் வெளிறிய முகங்களுடன் நின்றார்கள். பெண்கள் மிகுந்த சிரமத்துடன் நடந்து சென்றார்கள். இயற்கை உபாதையைக்கூட அடக்கிக்​கொண்டு பெண்கள் பேருந்தில் இறுக்கமான முகத்துடன் உட்கார்ந்திருந்தார்கள். மிகுந்த போக்குவரத்து நெரிசலால் அலுவலகம் சென்ற எனது மனைவி அவரது தோழியின் வீட்டிலேயே தங்கினார். இயற்கைச் சீற்றங்களைப் பற்றிய ஹாலிவுட் படங்களில் வருவது​போல சென்னை நகரமெங்கும் ஒருவித பீதி படிந்திருந்தது. பேருந்தில் இருந்தபடியே ஒவ்வொருவரும் அவரவர்​ நண்பர்களிடம் அலைபேசியில் பேசினார்கள். ‘தில்லை கங்கா நகர் சப்வே மூடியாச்சு. வேளச்சேரியோ ரொம்ப மோசம். தயவுசெய்து கிண்டி வழியா போய்டுங்க, சென்னை பைபாஸ் பிடிங்க’ என ஆலோசனைகள், அக்கறை நிறைந்த விசாரிப்புகள் என்று பேருந்து முழுக்க உரையாடல்கள் நிறைந்திருந்தன. நடைபாதை​வாசிகள், குடிசைவாசிகள் நிலைமை எப்படியிருக்கும் என்று கற்பனை​கூடச் செய்​யமுடியவில்லை.

பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் இவ்வளவு கட்டடங்கள் கட்டியது மிகப் பெரிய பிழை. இந்தக் கட்டடங்களை எல்லாம் இடித்துவிட்டு ஏரியைப் பழையபடி கொண்டுவர முடியுமா. வளர்ச்சி என்பது 100-ல் 90 பேரை அழித்துவிட்டு 10 பேருக்கு மட்டும் இருக்கக் கூடாது. முறையான வடிகால் வசதி இல்லாத திட்டமிடாத மென்பொருள் நிறுவனங்கள் நிறைந்த சென்னை இன்று இல்லா​விட்டாலும் என்றாவது ஒருநாள் நீரால் அழிந்துபோகும் அபாயம் உள்ளது’’ என்று எழுதியிருந்தார்.

2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் இறுதியில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்ததால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியது. எந்தவித முன்னறிப்புமின்றி செம்பரம்பாக்கத்தில் திறக்கப்பட்ட தண்ணீர் அடையாறு ஆற்றில் பொங்கி வருகிறது. சைதாப்பேட்டையில் அடையாறு ஆற்றின் கரையோரம் மாற்றுத்திறனாளி - மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான பள்ளி இருக்கிறது. அங்கு, போலியோவால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ஆசிரியர், மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இருந்தனர். அடையாறு ஆற்றில் புரண்டுவந்த வெள்ளம், இந்தப் பள்ளிக்குள்ளும் புகுந்துவிட்டது. எங்கேபோவது, எப்படிப்போவது என்று திகைத்துப் போயினர் அங்கிருந்தவர்கள். எப்படி அவர்கள் காப்பாற்றப்பட்டனர். அதை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?
Advertisement

MUST READ