“ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகிறது”ராஜேஷ் லக்கானி பேட்டி...

ஆர்.கே.நகர்

ர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்து ஏறக்குறைய ஒரு ஆண்டு முடிய உள்ளது. தொகுதியில் எம்.எல்.ஏ-வாக இருக்கும் ஒருவர் இறந்துவிட்டால், ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்படி கடந்த ஏப்ரல் 12-ம் தேதி ஆர்.கே.நகர் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தேர்தல் பிரசாரத்தின்போது, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் வீடுகளில் வருமான வரிச் சோதனை நடத்தப்பட்டது. அப்போது ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு 89 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதற்கான ஆவணம் சிக்கியது. இதன் அடிப்படையில் ஆர்.கே.நகர் தேர்தலை ரத்துசெய்வதாக தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்தது. தேர்தல் நடத்தும் சூழல் வந்தபின் தேர்தல் நடத்துவதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

எம்.எல்.ஏ. இல்லாமல் முழுமையாக 300-க்கும் அதிகமான நாள்களை கடந்திருக்கிறது ஆர்.கே.நகர். இந்தச் சூழலில் டிசம்பர் 31-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதவிர அ.தி.மு.க-வின் பெயருக்கும், கட்சி சின்னத்துக்கும் அ.தி.மு.க-வின் தினகரன் அணி, ஓ.பி.எஸ்- அணி, தீபா  அணி ஆகியவை உரிமை கோரின.

பின்னர் ஓ.பி.எஸ் அணி எடப்பாடி அணியுடன் இணைந்துவிட்டது. அதுகுறித்து தேர்தல் ஆணையத்திலும் அவர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பல்வேறு கட்ட விசாரணைகளுக்குப் பின்னர் முடிவு எடுப்பதை தேர்தல் ஆணையம் தள்ளிப்போட்டபடி இருந்தது. இந்தச் சூழலில் 23-ம் தேதி அன்று, இரட்டை இலைச் சின்னமும், அ.தி.மு.க என்ற பெயரையும், முதல்வர் எடப்பாடி அணியினர் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.இது ஒருபுறம் இருக்க உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்.

ராஜேஷ் லக்கானி

"தேர்தல் நடத்தை விதிமுறைகள் எப்போது முதல் அமலுக்கு வரும்?"

"நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருகிறது. தேர்தல் நடத்தை விதிகள் கடுமையாக அமல்படுத்தப்படும்."

"ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்களா?"

"ஆர்.கே.நகர் தொகுதியில் 45 ஆயிரம் பேரை நீக்கி இருக்கிறோம். இதுதவிர பெயர் சேர்க்கவும் மனுக்கள் வந்திருக்கின்றன. இதுகுறித்து சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியான கார்ப்பரேஷன் கமிஷனர் முடிவு எடுப்பார். அதன்பின்னர் இரண்டு நாள்களில் வாக்காளர் பட்டியல் வெளியாகும்."

"கடந்த முறை ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக வருமான வரித்துறை ஆவணம் கைப்பற்றி, தேர்தல் ஆணையத்துக்கு அளிப்பப்படதன் அடிப்படையில் நடவடிக்கை இருக்குமா?"

"வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விவகாரம்குறித்து ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரியான, கார்ப்பரேஷன் கமிஷனர் போலீஸில் புகார் செய்திருக்கிறார். போலீஸில் விசாரணைசெய்து, இதில் என்ன முன்னேற்றம் இருக்கிறது என்று தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளிப்பார்கள்."

"ஆர்.கே.நகரில் இப்போது இடைத் தேர்தல் நடத்தும் சூழல் இருக்கிறதா?"

"தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் செய்வதில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. தேர்தல் நடத்தச் சொல்லி நீதிமன்றத்தில் உத்தரவிட்டிருக்கின்றனர். அதன்படி  தலைமைத் தேர்தல் ஆணையத்தில் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!