ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு 89 கோடி ரூபாய் கொடுக்கப்பட்ட வழக்கு என்ன ஆனது?

ஆர்.கே.நகர்

மீண்டும் ஒரு தேர்தல் கொண்டாட்டத்துக்கு  தயாராகி விட்டது ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதி. கடந்த மூன்று ஆண்டுகளாகவே தமிழகம் முழுவதும் கவனிக்கும் தொகுதியாகவே இது இருக்கிறது. இந்த தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருந்த முதல்வர் ஜெயலலிதா, 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்தார். அதன் பின்னர்தான் கடந்த ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 

ஆவணத்தில் அமைச்சர்கள் பெயர்

அ.தி.மு.க ஓ.பி.எஸ் அணி சார்பில் மதுசூதனனும்,  அ.தி.மு.க தினகரன் அணியின் சார்பில் தினகரனே போட்டியிட்டார். எப்படியும் தினகரனை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, தினகரன் அணி சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல் அனைத்து அமைச்சர்களும் ஆர்.கே.நகரில் முற்றுகையிட்டு தேர்தல் பணியாற்றினர். ஒரு வாக்காளருக்கு 4 ஆயிரம் ரூபாய் வரை கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. 

அந்த சமயத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித்துறை நடத்திய சோதனையில் ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்குத் தரப்பட்ட பணத்தின் பட்டியலின் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல் திண்டுக்கல் சீனிவாசன் வரை அமைச்சர்கள் பெயர்கள் அதில் இருந்தன. 

இந்த ஆவணம், தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பப்பட்டது. இதன் அடிப்படையில் தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.  வாக்காளர்களை விலை கொடுத்து வாங்கும் சூழலில் இடைத்தேர்தலை நடத்த முடியாது என்றும் தேர்தல் ஆணையம் கூறியது. 

 

 

ஆர்,கே.நகர்

மீண்டும் இடைத்தேர்தல்

இப்போது வரும் டிசம்பர் 21-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவித்த நொடியில் இருந்து, அந்த தொகுதி வாக்காளர்களிடம் இருக்கும் கேள்வி. 89 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாக தேர்தலை ரத்து செய்தீர்களே அதற்கு காரணமானவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்பதுதான். வாக்காளர்களை விலை கொடுத்து வாங்கியவர்கள் மீது என்ன நடவடிக்கைதான் எடுக்கப்பட்டிருக்கிறது. 

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வைரக்கண்ணன் என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பினார். அதில், ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு 89 கோடி தரப்பட்ட விவகாரத்தில் யார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று கேட்டிருந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட பதிலில், தேர்தல் ஆணையம் தரப்பில் போலீசாரிடம் புகார் தரப்பட்டதாகக் கூறப்பட்டது.

இதன் அடிப்படையில், உரிய நடவடிக்கை எடுக்கும்படி போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வைரக் கண்ணன் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.

விசாரணைக்கு வரும்

இந்த வழக்கின் நிலை குறித்து வைரக்கண்ணனிடம் கேட்டோம். “இன்னும் விசாரணைக்கு வரவில்லை. தேர்தல் சட்டப்பிரிவில் வருவதால் வழக்கு விசாரணைக்கு வருவதில் தாமதம் ஆகிறது. சி.டி. செல்வம் அல்லது முரளிதரன் பெஞ்சில் விசாரணைக்கு வரும் என்று நினைக்கிறேன். இது குறித்து பதிவாளரிடம் கூறி இருக்கிறோம். அநேகமாக வரும் வாரம் விசாரணைக்கு வரும் என்று நினைக்கிறேன்.

ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்கு 89 கோடி ரூபாய் பணம் கொடுத்துள்ளனர். அதற்கான ஆதாரத்தை தேர்தல் ஆணையம் போலீசில் கொடுத்திருக்கிறது.  ஆனால், போலீஸில் வெறுமனே ஒரு பார்மாலிட்டிக்காக எஃப்.ஐ.ஆர் போட்டிருக்கின்றனர். பெயர்கள் எதுவும் குறிப்பிடவில்லை. அடையாளம் தெரியாத நபர்கள் என்று போட்டிருக்கின்றனர். இப்போது எஃப்.ஐ.ஆர் போலீஸ் ஸ்டேஷனில் தூங்கிக் கொண்டிருக்கிறது. நீதிமன்றத்தில் கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்படும் பட்சத்தில்தான் போலீஸார் நடவடிக்கை இருக்கும்” என்றார்.

ஜனநாயகத்தின் வழக்கமான நிகழ்வு

இந்திய தண்டனை சட்டம் 171பி-(வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல்) என்ற பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த பிரிவின் கீழ் தொடரப்படும் வழக்கை நீதிமன்றத்தின் விசாரணையின் போது நிரூபிக்கப்பட வேண்டும். அதன் பின்னர்தான் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். எனவே, இப்போதைக்கு இந்த வழக்கில் எந்த நடவடிக்கையும் இருக்காது என்றே தெரிகிறது. நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட லட்சக்கணக்கான தேர்தல் வழக்குகளில் இதுவும் ஒன்றுதான். இந்த சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டால் கடுமையான தண்டனை வழங்கும் வகையில் தேர்தல் ஆணையம் தரப்பில் மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. அதில் இன்னும் உரிய முடிவு எடுக்கப்படவில்லை. இந்த சட்டப்பிரிவால் ஒன்றும் செய்யமுடியாது என்று தெரிந்து இருப்பதால்தான் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதை தைரியமாக மீண்டும், மீண்டும் செய்கின்றனர். 

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!