ஆர்.கே.நகர் வேட்பாளர் அறிவிப்பில் இழுபறி நீடிப்பு மது-ஜெயக்குமார் மோதல் காரணமா? | Who will get rk nagar by election seat from admk, faction emerged delays of candidate announcements

வெளியிடப்பட்ட நேரம்: 17:18 (29/11/2017)

கடைசி தொடர்பு:19:05 (29/11/2017)

ஆர்.கே.நகர் வேட்பாளர் அறிவிப்பில் இழுபறி நீடிப்பு மது-ஜெயக்குமார் மோதல் காரணமா?

ஆர்.கே.நகர்
 

ர்.கே.நகர் இடைத்தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பதை விட அ.தி.மு.க-வில் சீட் கேட்டு முட்டி மோதும் மதுசூதனனுக்கும், அதைத் தடுக்க நினைக்கும் அமைச்சர் ஜெயக்குமாருக்கும் இடையே நடக்கும் பனிப்போரில் வெல்லப்போவது யார் என்பதுதான் அ.தி.மு.க வட்டாரத்தின் தற்போதைய செய்தியாக இருக்கிறது.

காங்கிரஸ் பாணி

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் வரும் 4-ம் தேதி முடிவடைய இருக்கிறது. ஜெயலலிதா இருந்த வரை இடைத்தேர்தல் ஆனாலும், பொதுத்தேர்தல் ஆனாலும் வேட்பாளர் பட்டியல் முதலில் வெளியாகும். காங்கிரஸ் கட்சிதான் கடைசி வரை வேட்பாளரை அறிவிக்காமல் தாமதம் செய்வார்கள். அந்த அளவுக்கு கோஷ்டிகள் இருக்கும். இப்போது அ.தி.மு.க-விலும் கோஷ்டிகள் இருப்பதால், யாருக்கு ஆர்.கே.நகர் சீட் என்று முடிவு செய்வதில் இழுபறி நீடிக்கிறது.
ஆர்.கே.நகர் தொகுதியைப் பொறுத்தவரை ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரான மதுசூதனன் சென்ற முறை புரட்சித் தலைவி அம்மா  அணியில் போட்டியிட்டார். ஈ.பி.எஸ் அணியுடன் ஒன்றிணைந்த போதிலிருந்தே, ஆர்.கே.நகருக்கு எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் மதுவுக்குத்தான் சீட் தர வேண்டும் என்பதில் ஓ.பன்னீர் செல்வம் உறுதியோடு இருக்கிறார்.

ஜெயக்குமார் தூண்டுதல்?

யாருக்கு சீட் என்பதை முடிவு செய்வதற்காக கூட இருந்த அ.தி.மு.க பார்லிமென்ட் குழு கூட்டம் தள்ளிப்போடப்பட்டிருக்கிறது. ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட 20 பேர் வரை விருப்பம் தெரிவித்துள்ளதுதான் அதற்குக் காரணம். முன்னாள் எம்.பி-யும், வடசென்னை மாவட்டத்தின் முன்னாள் செயலாளருமான பாலகங்கா, லோக்கல் அ.தி.மு.க நிர்வாகி கார்த்திகேயன் ஆகியோரை அழைத்த அமைச்சர் ஜெயக்குமார் அவர்களை விருப்ப மனுத்தாக்கல் செய்யும்படி கூறியிருக்கிறார்.

ஜெயக்குமார் ஆர்.கே.நகர்

 

அதனால்தான் அவர்களும் விருப்ப மனுவைப் போட்டுயிருக்கின்றனர். இது தவிர கடந்த பொதுத்தேர்தலில் தோற்றுப்போன கோகுல இந்திரா, ஆர்.கே.நகரில் போட்டியிட்டு வென்று அமைச்சர் ஆகி விடலாம் என்று கருதுகிறார். இவர்கள் தவிர தென் சென்னை முன்னாள் மாவட்டச் செயலாளர் ஆதிராஜாராமும் ஆர்.கே.நகர் தொகுதியைக் குறிவைக்கிறார்.

மதுவின் ஆதரவாளர்

இரு அணிகளும் இணைந்துவிட்ட போதிலும், ஆர்.கே.நகர் தொகுதி விஷயத்தில் யாருக்குச் சீட் கொடுப்பது என்பது பற்றி ஓ.பி.எஸ்., ஆதரவாளர்களும், ஈ.பி.எஸ் ஆதரவாளர்களும் இடையே கடந்த சில நாள்களாக தனித்தனியே ஆலோசனைகள் நடந்து வருகின்றன. ஒரு கட்டத்தில் மதுசூதனனே, "எனக்கு சீட் தராவிட்டாலும் பரவாயில்லை. எனது ஆதரவாளர் ராஜேஷூக்குச் சீட் கொடுங்கள்" என்று பன்னீரிடம் சொல்லியிருக்கிறார். அவரிடம் பன்னீர், "என்னிடம் விட்டுடுங்க. நான் பார்த்துக்கிறேன்" என்று மதுவுக்கு ஆறுதல் சொல்லியிருக்கிறாராம். அந்த நம்பிக்கையில்தான் மது காத்திருக்கிறார்.

மதுசூதனனுக்கோ அல்லது அவரது ஆதரவாளருக்கோ சீட் கிடைக்காவிட்டால், ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் பணியாற்ற ஆள் இல்லை என்று சொல்கிறார்கள். அதே நேரத்தில் ஜெயக்குமாரும் தன் தரப்பு கோரிக்கையை எளிதில் விட்டுக்கொடுப்பதாக இல்லை. அ.தி.மு.க-வின் கோஷ்டி கச்சேரிகள் காரணமாக நான்காம் தேதி மதியம்தான் அ.தி.மு.க வேட்பாளர் யார் என்பதை அறிவிப்பார்கள் போல் தெரிகிறது. இரண்டு அணிகளும் ஒன்றாக ஆனபின்னர் நடக்கும் முதல் இடைத்தேர்தல் என்பது இரண்டு அணிகளுக்குமே ஆர்.கே.நகர் தொகுதி என்பது ஒரு அக்னி பரிட்சைதான். முதலில் ஓ.பி.எஸ்., அப்புறம் ஈ.பி.எஸ் எனத் தமிழகத்தை ஆட்சி செய்ததற்கான மக்களின் ரிசல்ட் ஆகவும் தேர்தல் முடிவு இருக்கும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்