ஜெயலலிதாவின் வாரிசு என்று சொன்னவர்கள் யார்? ஒரு பரபர பயோடேட்டா | biodata of three people who claims to be the children of jayalalitha

வெளியிடப்பட்ட நேரம்: 09:52 (30/11/2017)

கடைசி தொடர்பு:09:52 (30/11/2017)

ஜெயலலிதாவின் வாரிசு என்று சொன்னவர்கள் யார்? ஒரு பரபர பயோடேட்டா

ஜெயலலிதா

'வின்னர்' திரைப்படத்தில் ஒரு வசனம் வரும். "வாரிசு இல்லாத சொத்துன்னு ஆட்டயப்போடலாம்னு பார்த்தா. இவன் வந்துட்டானே" என்று வடிவேல் புலம்புவதாக ஒரு நகைச்சுவை காட்சி இடம் பெற்றிருக்கும். இது நாள் வரை நேரடி வாரிசு யாரும் இல்லை என்று கருதப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, வாரிசாக சிலர் வரிசை கட்டி நிற்கின்றனர். ஜெயலலிதா இறந்து ஒரு வருடம் ஆன பின்னரும், அவரைச் சுற்றியே இன்னும் சர்ச்சைகள் தொடர்ந்துகொண்டிருக்கிறது. என்னதான் நடக்குது..

முதல் வாட்ஸ்அப் வைரல் 


2016-ம் ஆண்டு ஜெயலலிதா மரணம் அடைந்த பின்னர், அதே டிசம்பர் மாதத்திலேயே இவர் ஜெயலலிதா மகள் என்று சொல்லி வாட்ஸ்அப், முகநூல்களில் ஒரு பெண்ணின் படம் வைரல் ஆனது. அந்தப் பெண்குறித்து பாடகி சின்மயி தன் முகநூலில் ஒரு விளக்கம் கொடுத்திருந்தார். அவர் கேரளத்தைச் சேர்ந்தவர் என்றும், அவருக்கும் தமிழகத்துக்கும் சம்பந்தம் இல்லை என்றும், உலகத்தில் ஒரே முக ஜாடையில் ஏழு பேர் இருப்பதாகச் சொல்வார்கள். அதேபோல இவர் ஜெயலலிதா முகஜாடையில் இருக்கிறார் என்று சொன்னார். அதோடு இந்த விவகாரம் முடிவுக்கு வந்தது.

இரண்டாவதாக வந்த கிருஷ்ணமூர்த்தி 

"நான் ஜெயலலிதாவின் மகன். என் பெயர் கிருஷ்ண மூர்த்தி" என்று உயர் நீதிமன்றத்தின் கதவை தட்டினார் ஒருவர். "நான் ஜெயலலிதாவுக்கும், சோபன்பாபுவுக்கும் பிறந்தவன். 1985-ம் ஆண்டு பிப்ரவரி 15-ல் பிறந்தேன். ஜெயலலிதா இறப்பதற்கு முன்பு 2016-ம் ஆண்டு செப்டம்பரில் போயஸ்கார்டனில் அவரை சந்தித்தேன். அந்த சமயத்தில், என்னை பொதுவெளியில் மகன் என்று அறிமுகம் செய்வதாக ஜெயலலிதா கூறினார். ஆனால்,  அப்படிச் செய்யக் கூடாது என்று ஜெயலலிதா உடன் இருந்த சசிகலா தடுத்துவிட்டார்" என்று ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்தார்.

சோபன்பாபுவும், ஜெயலலிதாவும் பிரிந்துவிட்டதால் தான் ஈரோட்டில் ஒரு குடும்பத்துக்குத் தத்துக் கொடுக்கப்பட்டதாகவும், அதில் எம்.ஜி.ஆர் சாட்சி கையெழுத்துப் போட்டிருந்ததாகவும் கூறினார். ஆனால், அவர் சொன்ன தேதியில் எம்.ஜி.ஆர் உடல் நலம் இல்லாமல் இருந்தார். மேலும், அவர் கொடுத்த ஆவணங்கள் எல்லாம் போலி எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரை சிறையில் அடைக்கும்படி  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அம்ருதா மூன்றாவதாக வந்த அம்ருதா 

இப்போது பெங்களூரைச் சேர்ந்த அம்ருதா என்பவர், நான்தான் ஜெயலலிதாவின் மகள் என்று சொல்லி உச்ச நீதிமன்றத்தில் மனுசெய்தார். அவரை பெங்களூர் உயர்  நீதிமன்றத்தில் மனு செய்யும்படி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தி மனுவைத் தள்ளுபடி செய்தனர். அம்ருதா சில ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், "நான் 1980-ம் ஆண்டு ஜெயலலிதாவுக்குப் பிறந்தேன். நான்தான் அவருடைய உண்மையான மகள். என்னை டி.என்.ஏ சோதனை செய்வதற்கும் நான் உடன்படுகிறேன். இந்த ஆண்டு மார்ச் மாதம்தான், நான் ஜெயலலிதாவின் மகள் என்பது எனக்குத் தெரியவந்தது" என்று சொல்லி இருக்கிறார். இது ஒருபுறம் இருக்க ஜெயலலிதாவின் உறவினர் என்று சொல்லும் லலிதா என்பவர், "ஜெயலலிதாவுக்கு குழந்தை பிறந்தது உண்மைதான். எனது பெரியம்மாதான் அவருக்குப் பிரசவம் பார்த்தார். 1980-ல் அவருக்கு குழந்தை பிறந்தது. யாரிடமும் இதைச் சொல்லக் கூடாது என்று ஜெயலலிதா சத்தியம் வாங்கிவிட்டார்"  என்று சொல்லி இருக்கிறார்.
இப்படி ஜெயலலிதாவின் வாரி யார் என்று நடக்கும் குழப்பங்களுக்கு எப்போது முடிவு வரும் என்று தெரியவில்லை. இன்னொரு புறம் நாங்கள்தான் ஜெயலலிதாவின் வாரிசு என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா, மகன் தீபக் ஆகியோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த சர்ச்சையில் சட்டம்தான் தன் கடமையைச் செய்ய வேண்டும். அதுவரை நமக்கு குழப்பமாகத்தான் இருக்கும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்