தமிழக அரசின் அவுட்சோர்சிங் நியமனங்கள்.... வேலையின்றி காத்திருப்போர் அதிர்ச்சி! | Employees union opposes government's decision to outsource employees

வெளியிடப்பட்ட நேரம்: 16:41 (30/11/2017)

கடைசி தொடர்பு:16:41 (30/11/2017)

தமிழக அரசின் அவுட்சோர்சிங் நியமனங்கள்.... வேலையின்றி காத்திருப்போர் அதிர்ச்சி!

ரசு வேலைவாய்ப்பில் அவுட் சோர்சிங் முறையை அமல்படுத்தி தமிழக அரசு எண்ணற்ற தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவுகளைக் கருகிப் போகச் செய்கிறது. குறிப்பாக மின்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட  சில துறைகளில் பெரும்பாலான பணிகளை இப்போது அவுட் சோர்சிங் முறையில் செய்கின்றனர்.

ஏன் இந்த நடவடிக்கை

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு பல லட்சம் இளைஞர்கள் காத்திருக்கின்றனர். இதுதவிர டி.என்.பி.எஸ்.சி போட்டித்தேர்வுகள் எழுதி அரசு வேலையில் சேரும் கனவுகளுடன் எண்ணற்றோர் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் அரசின் பல்வேறு துறைகளில் அவுட்சோர்சிங் முறையில் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. நிரந்தர வேலை கிடைக்குமா என்று பல ஆண்டுகளாகக் காத்திருக்கும்  தமிழக இளைஞர்களிடையே இது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அரசு, நிதிச்சிக்கலில் தவிப்பதால்  தமிழகஅரசு இந்த நடவடிக்கையில் இறங்கியிருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. ஏனெனில், அவுட் சோர்சிங் என்பது மூன்றாம் நபர் நிறுவனத்திற்குதான் லாபமாக இருக்கும். அவுட் சோர்சிங் முறையில் பணிகளைச் செய்யும் நிறுவனங்கள் அரசிடமிருந்து பெரும் தொகையைப் பெறும். ஆனால், அதில் ஒரு சிறிய தொகையைத்தான் தம்மிடம் வேலை செய்யும் நபர்களுக்குத் தருவார்கள். இப்படி யாரோ ஒருவருக்கு லாபம் கிடைக்கும் வகையில்தான் தமிழக அரசு ஈடுபடுகிறது.

மூன்றாம் தரப்புக்கு லாபம்

தமிழக அரசின் நடவடிக்கைக்கு என்ன காரணம் என்று அரசு ஊழியர்கள் சங்கத்தலைவர் சுப்பிரமணியனிடம் கேட்டோம். "தமிழக அரசு இப்போது, பெரும்பாலான பணிகளை அவுட் சோர்சிங் முறையில்தான் செய்கிறது. அனைத்துத் துறையிலும் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணிகளுக்குத் தொகுப்பூதிய ஊதியத்தின் அடிப்படையில் ஊழியர்களை நியமிக்கின்றனர். அவர்களை நிரந்தரம் செய்வது இல்லை. ஊரக வளர்ச்சித்துறையில் மட்டும் 1700 தொகுப்பு ஊதியப் பணியாளர்கள் இருக்கின்றனர். மாநில மகளிர் நலத்திட்டத்தில் அவுட் சோர்சிங் அடிப்படையில் ஆட்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

ஊதிய குழு சார்பில் அரசிடம் அளிக்கப்பட்ட பரிந்துரைகளில், நிரந்தரப் பணியிடங்களுக்கு பதிலாக, அவுட்சோர்சிங் முறையில் பணியிடங்கள் உருவாக்க வேண்டும் என்று சொல்லியிருக்கின்றனர். ஒப்பந்த ஊதியம், அவுட் சோர்சிங் முறைகளைக் கைவிட வேண்டும் என்று நாங்கள் தொடர்ச்சியாகக் கோரிக்கைகள் வைத்து வருகிறோம். எங்கள் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்கவில்லை. தொகுப்பூதிய நியமனங்கள், அவுட் சோர்சிங் முறை நியமனம் என்று இதுவரை மூன்று லட்சம் பேர் அரசுப் பணிகளில் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

மத்திய அரசு உத்தரவா?

வருவாய்த்துறை, வேளாண்மைத் துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட துறைகளில் அவுட் சோர்சிங் பணியாளர்கள் இருக்கின்றனர். சுகாதாரத்துறையில்தான் அதிக அளவுக்கு அவுட் சோர்சிங் முறையில் நியமிக்கப்பட்டுள்ளனர். சுகாதாரத்துறைக்கு மத்திய அரசிடமிருந்து நிதி கிடைக்கிறது. அவுட் சோர்சிங் முறையில் ஆட்கள் நியமனம் செய்ய வேண்டும் என்றே மத்திய அரசு, தமிழக அரசுக்கு உத்தரவிடுகிறது” என்றார்.

உயிரோடு விளையாடுகிறார்கள்

மின் துறையிலும் அவுட் சோர்சிங் முறையில்தான் ஆட்கள் நியமிக்கப்படுகிறார்கள். இது குறித்து மின் ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த சுப்பிரமணியனிடம் பேசினோம். “அவுட்சோர்சிங் என்று பேச்சுத் தொடங்கியபோதே, அவுட் சோர்சிங் விட முயற்சி எடுத்தனர். சென்னை கண்ணப்பர் திடலில் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டது. அதை நிர்வகிக்க அவுட் சோர்சிங் விட முயற்சி செய்தனர். நீதிமன்றம் சென்று தடை வாங்கினோம். மூன்று வருடம் கழித்து இப்போது புற்றீசல் போல அவுட்சோர்சிங் முறையில் ஆட்களை நியமிக்க மின்துறை திட்டமிடுகிறது. பல்லடம் துணை மின் நிலையத்தை நிர்வகிக்கும் பணியில் ஓய்வு பெற்ற மின் ஊழியர்களை அவுட்சோர்சிங் முறையில் நியமிக்க திட்டமிட்டுள்ளனர்.

அவுட் சோர்சிங் முறையில் நியமிக்கப்படுபவர்கள் தினமும் ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டு சென்று விடுவார்கள். நேரடியாக மின்வாரியத்தால் அவர்களைக் கண்காணிக்க முடியாது. துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதச் செயல்கள் நடக்கக்கூடும். இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தை அணுக உள்ளோம். எங்களுக்குத் தெரியாமல் மேலும் சில துணைமின் நிலையங்களை நிர்வகிக்கும் பணிகளையும் அவுட்சோர்சிங் விட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

துணைமின் நிலையத்தில் லைன் கிளியரன்ஸ் கொடுக்கும் முறை உள்ளது. மின்சாரக் கோளாறுகள் சரி செய்த பின், குறிப்பிட்ட மின் லைனுக்கு கிளியரன்ஸ் தருவதுக்குத்தான் லைன் கிளியரன்ஸ் முறை என்று பெயர். புதிதாக அவுட்சோர்சிங் நிர்ணயிக்கப்படுபவர்கள், லைன் கிளியரன்ஸ் கொடுப்பதில் முன் அனுபவம் இல்லாதவர்களாக இருந்தால், மின்வாரிய ஊழியர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடும். எனவே, இந்த அவுட்சோர்சிங் முறையைக் கைவிட வேண்டும்”  என்றார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்