இனி மணலுக்குப் பதில் எம் சாண்ட் தான்... மாற்று மணலின் சாதகமும் பாதகமும்! #Msand

எம் சாண்ட் மணல்

தமிழகத்தில் உள்ள மணல்குவாரிகள் அனைத்தையும் ஆறு மாதத்துக்குள் மூட வேண்டுமென மதுரை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தமிழகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. "ஆற்று மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சி இந்த தீர்ப்பு. இது வரவேற்கத்தக்கது," என அரசியல் தலைவர்கள் பலர் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளனர். பொதுச்சொத்தை சூறையாடும் இந்த வேலைக்கு ஆதரவாக அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது என்றும் அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 20 ஆண்டுகளாக போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாக விவசாயிகளும், சூழலியாளர்கள் கருதுகிறார்கள்.

மறுபுறம், நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் கட்டுமானத்தொழில் முழுமையாக முடங்கும் என்றும், கட்டுமானத் தொழிலாளர்கள், மணல் லாரி ஓட்டுநர்கள் என 2 கோடி பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்படும் என்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் மணல் லாரி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். 

ஆற்று மணல் எடுக்க முடியாது என்ற சூழல் உருவானால், அதற்காக கட்டுமானங்களைக் குறைக்கவோ அல்லது நிறுத்தவோ முடியாது. கட்டுமானம் உருவாக மணல் என்பது இன்றியாமையாதப் பொருள்.எனவே மணலுக்கான மாற்று ஒன்றைத் தேர்வு செய்வது தான் இதற்குத் தீர்வாக இருக்கும். அதன்படி மணலுக்கு இப்போது உள்ள ஒரே மாற்று  M-Sand எனப்படும் Manufactured Sand.

கருங்கல் ஜல்லிகளை உடைத்துத் தயாரிக்கப்படும் இந்த மணல், எம் சாண்ட் என அழைக்கப்பட்டாலும், CS Sand (Crushed Stone Sand) என்ற பெயரில் தான் அரசால் அனுமதிக்கப்பட்டு வருகிறது. "ஆற்று மணலை விட செயற்கை மணல் தரமானது. இதனுடன் சிமென்ட் சேரும் போது நிற வித்தியாசம் இருக்காது. உறுதியானது இல்லை என்ற அச்சம் தேவையற்றது." என்றே எம் சாண்ட் குறித்து சொல்கிறார்கள் அதன் உற்பத்தியாளர்கள். உண்மையில் எம் சாண்ட் என்பது பாதுகாப்பானது தானா என்பது தொடர்பாக விசாரித்தோம்.

எம் சாண்ட்

எம் சாண்ட் தயாராவது இப்படித்தான்... 

கருங்கல் ஜல்லியை உடைத்து நொறுக்கி அதில் இருந்து தயாரிக்கப்படுவது தான் எம் சாண்ட் எனப்படுகிறது. ஜல்லி கற்களை மண் போல நொறுக்கி எடுப்பது தான் எம் சாண்ட். தயாரிப்பின் போது பவுடர் போன்ற கழிவுகள் எல்லாம் தண்ணீரில் கழிவுகளாக வெளியேற்றப்பட்டு எம் சாண்ட் தயாரிக்கப்படுகிறது. ஆற்று மணலை விட வேகமாக செட் ஆகும் என்றும், ஆற்று மணலைவிட உறுதியானதும் என்றும் சொல்லப்படுகிறது.   

தமிழகத்தில் எம் சாண்ட் பயன்படுத்த அரசு அனுமதி அளித்துள்ளது. எம் சாண்ட் தயாரிக்கும் ஆலைகள், அண்ணா பல்கலைக்கழகத்தில் அதை ஆய்வுக்குட்படுத்தி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியிருக்கிறது. தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி, 100க்கும் அதிகமான ஆலைகளில் எம் சாண்ட் தயாரிக்கப்பட்டு வருகிறது.

எம் சாண்டின் 'ப்ளஸ்'கள்

ஆற்று மணலை விட சக்தி மிக்கது, தரமிக்கது; கட்டுமானத்துறையின் தர நிர்ணயத்தின் தரத்தில் இருக்கிறது. ஆற்று மணல் தட்டுப்பாட்டைப் போக்க சரியான மாற்று; சிமென்ட் உடன் சேரும் போது வித்தியாசம் இருக்காது; ஆற்று மணலை விட 30 முதல் 40 சதவீதம் வரை விலை குறைவு என எம் சாண்ட்க்கு பல ப்ளஸ்கள் உள்ளது.

இது தொடர்பாக எம் சாண்ட் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் திருச்சியைச் சேர்ந்த பாலமுருகனிடம் பேசினோம். "ஆற்று மணலோடு ஒப்பிட்டு எம் சாண்ட் தரமற்றது என அஞ்ச வேண்டிய அவசியமில்லை. எம் சாண்ட் காவிரி மணலை விட சீக்கிரம் செட் ஆகும். க்ரிப்பும் நன்றாக இருக்கும். ஆனால் எம் சாண்ட் பயன்படுத்தும் போது கலவை சரியாக இருக்க வேண்டியது அவசியம். எம் சாண்ட்டில் கல்குவாரி துகள்கள் கலக்கக் கூடாது. நாங்கள் அரசு சொல்லும் விதிகளின் அடிப்படையில் நாங்கள் எம் சாண்ட் தயாரித்து வருகிறோம்," என்றவர், "எம் சாண்ட் சக்தி மிகுந்தது. ஆனால் இதன் நிலைப்புத்தன்மை எப்படி இருக்கும் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை" என்றும் நம்மிடம் சொன்னார்.

எம் சாண்ட் மணல்

இவையெல்லாம் தான் 'மைனஸ்'

ஆற்று மணல் தடை விதிக்கப்பட்டால் எம் சாண்ட் தவிர நமக்கு வேறு வாய்ப்புகள் இல்லை. அதே சமயம் எம் சாண்டில் சில சிக்கல்களும் இருக்கவே செய்கிறது. இந்தியாவில் எம் சாண்ட் அதிகளவில் பயன்படுத்தும் மாநிலமாக கேரளா இருக்கிறது. கேரளாவில் ஒவ்வொரு முறை எம் சாண்ட் விற்கப்படும் போது ஐ.ஐ.டி பொறியாளர்கள் அதை ஆய்வு செய்து அனுமதித்த பின்னரே அதை விற்க வேண்டும் என்ற நடைமுறை இருக்கிறது. தர பரிசோதனை நடக்காமல் அதை விற்பனை செய்ய முடியாது.

காரணம் எம் சாண்டில் கல்குவாரி துகள்கள் கலந்திருந்தால், கட்டுமானத்தில் விரிசல் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக எம் சாண்ட் குவாரி உரிமையாளர்களே ஒப்புக்கொள்கின்றனர். தமிழகத்தில் பல எம் சாண்ட் குவாரிகளில் கல்குவாரி துகள் கலந்து விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் உள்ளன. கல்குவாரி துகள்களின் அளவு கூட கூட... கட்டடங்களின் ஆயுள் என்பது வெகுவாக குறையும். 50 சதவீதம் அளவுக்கு மேல் கல்குவாரி துகள் கலந்திருந்தால் கட்டடத்தின் ஆயுள் காலம் சில ஆண்டுகள் தான்"  என்கிறார்கள் கட்டுமான தொழிலில் உள்ளவர்கள். அதேபோன்று எம் சாண்ட் பயன்படுத்தும் போது கலவை நன்றாக கலக்க வேண்டியது அவசியம். கலவை சரியாக இல்லை என்றாலும் கட்டுமானங்களில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்கிறார்கள்.

தரத்தைக் கடந்து கேரளாவுக்கும், தமிழகத்துக்கும் கால நிலை சிக்கலும் இருக்கிறது. கேரளா குளிர்ச்சியான பகுதியாக இருக்கிறது. இதனால் நிலைப்புத் தன்மையில் சிக்கல் இருக்க வாய்ப்புகள் குறைவு. ஆனால் தமிழகம் சூடு மிக்க பகுதியாக இருப்பதால் நிலைப்புத் தன்மை எப்படி இருக்கும் என்பது இன்னும் உறுதி செய்யப்படாமலே இருக்கிறது. இதை எம் சாண்ட் குவாரி உரிமையாளர்களும் ஒப்புக்கொள்ளவே செய்கிறார்கள்.

எம் சாண்ட் மணல்

கலப்படம் நடந்தால் பேராபத்து

எம் சாண்ட் கொண்டு கட்டடங்கள் கட்டுவது என்பது ஆபத்தான முயற்சி என்கிறார் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.முனிரத்தினம், "தமிழகத்தில் எம் சாண்ட் தயாரிப்பு குவாரிகளில் எந்த சோதனையும் நடப்பதில்லை. யாரும் ஆய்வு செய்து சான்றிதழும் கொடுப்பதில்லை. தண்ணீரை கலந்து எம் சாண்ட் என விற்கிறார்கள். இதில் கல்குவாரி துகள்கள் நிறைந்து இருக்கிறது. இதை வைத்து கட்டடம் கட்டினால் கட்டடம் மெளலிவாக்கம் அடுக்குமாடி குடியிருப்பு போல இடிந்து விழும். தமிழக தேவைக்கு மட்டும் ஆற்று மணல் எடுத்திருந்தால் இத்தனை சிக்கல் வந்திருக்காது. ஆற்று மணல் வெளிமாநிலங்களுக்கு கடத்தப்பட்டதால் தான் இத்தனைச் சிக்கலும் ஏற்பட்டது. ஆற்று மணலுக்கு எம் சாண்ட் என்பது மாற்றாக இருக்காது. தமிழக தேவைகளுக்கு மட்டும் விதிகளுக்கு உட்பட்டு மணல் எடுக்க அனுமதிக்க வேண்டும்," என்றார் அவர்.

இந்த புகாரை அதிகாரிகளின் ஆய்வும் கிட்டத்தட்ட உறுதி செய்கிறது. தமிழகத்தில் பல ஆலைகளில் தரமற்ற எம் சாண்ட் தயாரிப்பதாகவும், 50க்கும் மேற்பட்ட ஆலைகளில் திடீர் சோதனை நடத்தவும் உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. உரிய ஆய்வுக்குட்படுத்தி எம் சாண்ட் விற்கப்பட வேண்டும் என்ற நடைமுறையை பல குவாரிகள் செய்வதில்லை என்கிறார்கள். முறையாக கண்காணித்து, உரிய ஆய்வுகளை மேற்கொண்டால் தரமான எம் சாண்ட் தயாரிப்பை உறுதி செய்ய முடியும். 

மூன்று அடிக்கு மேல் மணல் எடுக்கக் கூடாது; இத்தனை இடங்களில், இந்த அளவு மணல் மட்டுமே எடுக்க வேண்டும் என பல விதிமுறைகளுடன் தான் ஆற்று மணல் எடுப்பது துவங்கியது. ஆனால், 3 அடிக்குப் பதில், 60 அடிகளில் மணல் அள்ளப்பட்டது. நாளொன்றுக்கு சில ஆயிரம் லோடுகள் என்பதற்கு பதில், கிட்டத்தட்ட ஒரு லட்சம் லோடுகள் மணல் அள்ளப்பட்டன என அத்தனை விதிமுறை மீறல்களும் பகிரங்கமாகவே நடந்தன. எம் சாண்ட் விஷயத்தில் அப்படியான விதிமீறல் நடந்து தரமற்ற எம் சாண்ட் தயாரிப்பை கண்டுகொள்ளாமல் போனால் விபரீதமான விளைவுகள் ஏற்படக்கூடும்.

மணல் அள்ளுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என்பதற்கான மாற்றாக எம் சாண்ட்டை பார்க்க முடியாது. மலைகளை உடைத்து துகள்களாக்குவதால், வேறு விதமான சூழலியல் பாதிப்புகள் ஏற்படும். இனியும் மணல் எடுக்க இயலாத அளவுக்கு தமிழக ஆறுகள் தத்தளிக்கின்றன என்பதாலும், மணலுக்கு இது தான் மாற்று என்பதாலும் இப்போதைக்கு நமக்கு வேறு வழியில்லை. அதற்காக ஒரு சிக்கலில் இருந்து அதை விட பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்ளக்கூடாது. எனவே இதில் அரசு மிகுந்த கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!