`அன்று ஜெயலலிதாவுக்கு மகள் பிறந்தாள்!' லலிதா சொல்வது உண்மைதானா? | Jayalalithaa gave birth to a girl-child, her cousin Lalitha asserts

வெளியிடப்பட்ட நேரம்: 19:50 (30/11/2017)

கடைசி தொடர்பு:11:07 (01/12/2017)

`அன்று ஜெயலலிதாவுக்கு மகள் பிறந்தாள்!' லலிதா சொல்வது உண்மைதானா?

ஜெயலலிதா

ஜெயலலிதாவைப் பற்றிய ஒரு கட்டுரையில், முதல் முறையாக அவர் பெயரை 'ஜெ' எனக்குறிப்பிட்டிருந்தார் அந்தப் பத்திரிகையாளர். அந்தக் கட்டுரை வெளியானபோது, தன் பெயருக்கு இழுக்கு ஏற்படுத்தியதாக அந்தப் பத்திரிகையாளருக்கு நோட்டீஸ் அனுப்பினார் ஜெயலலிதா. பொதுவாக தலைவர்களை அவர்களது பெயரின் முன்னெழுத்தைக் குறிப்பிட்டு சொல்லும் வழக்கத்தை அந்தப் பத்திரிகையாளர் சுட்டிக்காட்டிய பின்னரே ஜெயலலிதா அமைதியானார்.

இது ஓர் உதாரணம்தான். தன்னைப்பற்றிய விமர்சனங்களை ஜெயலலிதா இப்படித்தான் எதிர்கொண்டார். அப்படி ஜெயலலிதா மீது எழுந்த மிகப்பெரிய சர்ச்சை, அவருக்கு மகள் உண்டு என்ற சர்ச்சை. இந்த சர்ச்சை எழுந்த போதெல்லாம் அதீதமாகவே கோபப்பட்டார் ஜெயலலிதா. தனக்கு மகள் இருப்பதாக பேட்டிகொடுத்தவர்கள் மீதும், நான்தான் மகள் என்றவர்கள் மீதும், அதைப் பிரசுரித்த பத்திரிகைகள் மீதும் வழக்கு தொடரவும் செய்தார். ஆனால் இதைக்கடந்து இந்த விவகாரம் குறித்து அவர் எதையும் பேசியதில்லை. 

பல ஆண்டுகளுக்கு முன்னர் எழுந்த இந்தப் பிரச்னை, அவர் மறைவுக்குப் பின்னர் இப்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது கூட இதைப்பற்றி யாரும் பேசவில்லை. அவர் இறந்து ஓராண்டான நிலையில், இப்போது பரபரக்கிறது விவகாரம்.

ஜெயலலிதா உறவினர் லதா

'ஜெயலலிதாவின் மகள் நான் தான்' என அம்ருதா என்ற பெண் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததில் தொடங்கிய பரபரப்பு, ஜெயலலிதாவின் உறவினர் லலிதா சொன்ன தகவல்களால் இப்போது உச்சம் பெற்றிருக்கிறது. "ஜெயலலிதாவுக்கு 1980-ல் பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையின் தந்தை நடிகர் சோபன் பாபு" எனத் திட்டவட்டமாகச் சொல்கிறார் லலிதா.

"என் அம்மாவின் உடன்பிறந்தவர்தான் ஜெயலலிதாவின் அப்பா. ஜெயலலிதா எனது தாய் மாமனின் மகள்.ஜெயலலிதாவை நான் இரண்டு முறை சந்தித்துப் பேசியது எனக்கு  நினைவிருக்கிறது. சினிமாவிலிருந்து ஜெயலலிதா அரசியலுக்குச் சென்ற பிறகு, சசிகலா தரப்பினர் எங்களை நெருங்க விடவில்லை. ஜெயலலிதாவின் அப்பா ஜெயராமன் மறைவுக்குப் பின்னர் நாங்கள் ஜெயலலிதா குடும்பத்தோடு உறவைத் தொடரவில்லை. அப்போது ஜெயலலிதா மயிலாப்பூரில்தான் தங்கியிருந்தார். 

ஒரு முறை அவர் எனது பெரியம்மாவை போனில் அழைத்து சென்னை வரச்சொன்னார். என் பெரியம்மாவும் சென்னை சென்று வந்தார். ஜெயலலிதா குடும்பத்தோடு நாங்கள் உறவைத் தொடராத நிலையில், ஜெயலலிதாவை பெரியம்மா சந்தித்தது எங்கள் குடும்பத்தில் சர்ச்சையானது. அப்போது, ஜெயலலிதா பிரசவ வலியில் இருந்ததாகவும், பிரசவம் பார்க்கச் சென்றதாகவும் பெரியம்மா சொன்னார். அம்மா இல்லாமல் தனித்திருக்கும் ஜெயலலிதாவை இதுபோன்ற நேரத்தில் எப்படிச் சந்திக்காமல் இருப்பது என்றும், இதை வெளியில் சொல்லக் கூடாது என்றும் எங்களிடம் சத்தியம் வாங்கிக் கொண்டார். 

ஜெயலலிதா

சோபன் பாபுவுடன் ஜெயலலிதா ஒன்றாக வாழ்ந்தது எல்லோருக்கும் தெரியும். ஜெயலலிதாவுக்கு மகள் பிறந்தது உண்மை. ஆனால் அது அம்ருதாவா என்று தெரியாது. அதை நீதிமன்றம்தான் சொல்ல வேண்டும். இதை ஏன் இப்போது சொல்ல வேண்டும் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். ஜெயலலிதா எங்கள் உறவினர். அவர் மறைந்துவிட்டார். எங்கள் முறைப்படி அவருக்கு இறுதிச் சடங்கு செய்யவேண்டும் அதை அவரது மகள் செய்ய வேண்டும் என்பது மட்டுமே என் விருப்பம்," என்றார் அழுத்தமாக.

இந்தப் பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிற சூழலில், இது குறித்து கருத்துத் தெரிவித்திருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி. இதைப்பற்றி தான் எதுவும் அறிந்திருக்கவில்லை. ஆனால் இதுப்பற்றி ஜெயலலிதாவிடம் தான் கேள்வி எழுப்பியதாக அவர் தெரிவித்திருக்கிறார். "1991ல் நான் அமைச்சராக இருந்தேன். அப்போது சென்னை வந்தபோது, ஜெயலலிதா விருந்து கொடுத்தார். ஜெயலலிதாவிடம் தனியாகப் பேசிக்கொண்டிருந்த போது, உங்களுக்கு மகள் இருப்பதாகச் சொல்கிறார்களே எனக்கேட்டேன். அவர் மிகவும் கோபப்பட்டார். இது 'கருணாநிதியின் பொய் பிரசாரம்' என்றார். அவர் சொன்னதை நான் நம்பினேன். அதன் பின்னர் இப்படியான எந்தத் தகவலையும் நான் கேட்கவில்லை," என்றார். 

Reporter Facebook post

"ஜெயலலிதாவுக்குக் குழந்தை பிறந்ததாகச் சொல்லப்படும் 1980 முதல் 81ம் ஆண்டு வரையிலான காலகட்டங்களில் பத்திரிகையாளர்கள் பலர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து வந்தோம். இதழ்களுக்குத் தொடர் பெறுவதற்காக அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது," என மூத்த பத்திரிகையாளர்கள் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள்.

ஜெயலலிதா பல பிரச்னைகளில் வீம்பாகவே இருந்திருக்கிறார். அதற்கான காரணங்களை அவர் கூறாமல் மெளனம் சாதிக்கவும் செய்திருக்கிறார். சில பிரச்னைகளில், யார் என்ன எரிச்சலூட்டினாலும் அதைப்பற்றி அவர் விளக்கமாகப் பேசியதில்லை. இது அவருக்கு மிகப்பெரிய பலமாக இருந்திருக்கிறது. ஆனால் இதுவே இப்போது மிகப்பெரிய பிரச்னையாக மாறியிருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்