தேர்தல் வெற்றி இருக்கட்டும். இந்தப் புள்ளிவிவரங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள் யோகி அவர்களே! #DataStory | UP tops in india's unsafe states list

வெளியிடப்பட்ட நேரம்: 18:29 (02/12/2017)

கடைசி தொடர்பு:18:29 (02/12/2017)

தேர்தல் வெற்றி இருக்கட்டும். இந்தப் புள்ளிவிவரங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள் யோகி அவர்களே! #DataStory

யோகி

உத்தரப் பிரதேசத்தில் 16 மேயர் பதவிகளில், 14 இடங்களைக் கைப்பற்றிய மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் இருக்கிறது பி.ஜேபி. இதை விடுங்கள்... தேசியக் குற்றப்பிரிவு ஆணையம் 2016-ம் ஆண்டு நடைபெற்ற குற்றங்கள் தொடர்பான புள்ளிவிவரங்களை வெளியிட்டது. இதில், உத்தரப்பிரதேசம்தான் தேசத்தில் நடக்கும் 14 சதவிகிதக் குற்றங்களுக்குக் காரணமாகவுள்ளது என்ற தகவல் அதிர்ச்சிகரமானதாக இருக்கிறது. 

இந்தியாவில் 2016-ம் ஆண்டில் மட்டும் 2.6 சதவிகித குற்றங்கள் அதிகரித்துள்ளன. அந்த ஆண்டு 48,31,515 குற்றங்கள் நாடு முழுவதும் நடந்துள்ளன. இது, 2015-ம் ஆண்டைவிட 21,000 அதிகம். 

குற்றங்களில், கடத்தல் குற்றங்கள்தான் முதலிடத்தில் உள்ளன. 2015-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது கடத்தல் குற்றங்கள் 6 சதவிகிதம் அதிகரித்துள்ளன. கொள்ளைக் குற்றங்கள் 11.85 சதவிகிதம் குறைந்துள்ளன. இந்தியாவில் 2016-ம் ஆண்டு மட்டும் 30,450 பேர் கொலை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் அதிக சொத்துக் குவிப்பு குற்றங்கள் நடைபெறும் நகரமாக டெல்லி உள்ளது. ஆள் கடத்தல் குற்றங்களில் மேற்கு வங்கம் முதலிடத்தில் உள்ளது. சிறப்பு வழக்குகள் சென்னையில் அதிகம் பதிவாகியுள்ளன. 

உத்தரப்பிரதேசம் இந்தியாவின் பாதுகாப்பற்ற மாநிலம்:

உத்தரப்பிரதேசம்தான் இந்தியாவில் நடக்கும் குற்றங்களில் அதிக பங்கை வைத்துள்ளது. பின்வரும் குற்றங்களில் டாப் இடம் உத்தரப்பிரதேசத்துக்குத்தான்.

1. இந்தியாவில் சைபர் க்ரைம் குற்றங்கள் அதிக அளவில் நடைபெறும் மாநிலம் - 2,639 வழக்குகள்

2. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் அதிகம் உள்ள மாநிலம் - 4,954 வழக்குகள்

3. குழந்தைகள் அதிக அளவில் கடத்தப்படும் மாநிலம் - 9,657 வழக்குகள்

4. பெண்கள், கணவன் மற்றும் உறவினர்களால் பாதிப்புக்குள்ளாகும் மாநிலங்களில் 3-வது இடம் - 11,156 வழக்குகள்

5. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் இந்திய அளவில் 2-வது இடம் - 4,816 வழக்குகள்

6. இந்தியாவில் அதிக அளவில் பெண்கள் கடத்தப்படும் மாநிலம் - 12,994 வழக்குகள்

7. பொதுவெளியில் பெண்கள் பாதிப்புக்குள்ளாகும் மாநிலங்களில் 2-வது இடம் - 11,335 வழக்குகள்

குற்றங்கள்

இப்படிப் பல குற்றங்களில் முதல் மூன்று இடங்களுக்குள் உத்தரப்பிரதேசம் உள்ளது. அதேபோல், இந்தியாவில் அதிக மதக்கலவரங்கள் உத்தரப்பிரதேசத்தில் நடைபெறுகின்றன. 2017-ம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம்வரை மட்டும் மதக்கலவரங்கள் சிறியதும், பெரியதுமாய் 60 சம்பவங்கள் உ.பி-ல் நடைபெற்றுள்ளன. இதில், 16 பேர் இறந்துள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தில்தான் சில மாதங்களுக்கு முன்பு ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 63 குழந்தைகள் மருத்துவமனையில் இறந்தன. இந்தியாவில் நிறைய ஆழ்துளைக் கிணறு மரணங்கள் நடக்கும் மாநிலங்களிலும் உத்தரப்பிரதேசமே முதலிடம் வகிக்கிறது.

இந்தியாவின் பாதுகாப்பற்ற மாநிலமாக உத்தரப்பிரதேசம் மாறியுள்ளது. பி.ஜே.பி-யின் முக்கியத் தலைவராகவும், அம்மாநில முதல்வராகவும் இருக்கும் யோகி ஆதித்யநாத்தும், இந்தியப் பிரதமரும் அந்த மாநிலத்தில் இவ்வளவு குற்றங்கள் நடைபெறுவதை எப்படிக் கட்டுப்படுத்தப்போகிறார்கள்? இவ்வளவு மரணங்களுக்கு அவர்கள் வைத்திருக்கும் பதில் என்ன என்பதுதான் இங்கு பதிலே கிடைக்காத கேள்வியாக இருக்கிறது. மெளனம் கலைப்பார்களா யோகியும், மோடியும்...


டிரெண்டிங் @ விகடன்