குஜராத் கள நிலவரம் - 13 வருட மோடி ஆட்சியில் வளர்ந்தது பா.ஜ.க-வா குஜராத்தா? #GujaratElections2017 | Gujarat Election 2017 - Is Gujarat really a vibrant state #GujaratElections2017

வெளியிடப்பட்ட நேரம்: 10:27 (04/12/2017)

கடைசி தொடர்பு:11:38 (04/12/2017)

குஜராத் கள நிலவரம் - 13 வருட மோடி ஆட்சியில் வளர்ந்தது பா.ஜ.க-வா குஜராத்தா? #GujaratElections2017

 

குஜராத்

இந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

1990-ம் ஆண்டு 67 சீட்டுகளைப் பிடித்து குஜராத்தில் ஆட்சி மாற்றம் கொண்டு வந்தது பா.ஜ.க. அதேபோல் 2002-ம் ஆண்டு நரேந்திர மோடி குஜராத்தின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது அதிகபட்சமாக ஒரே தேர்தலில் 127 இடங்களை வென்று ஆட்சியைப் பிடித்தது. குஜராத்தை 90க்குப் பிறகு யாருக்கும் விட்டுத்தரவில்லை பா.ஜ.க. எப்படியெல்லாம் இந்தத் தேர்தலிகளில் பா.ஜ.க-வின் வாக்கு சதவிகிதம் மாறியுள்ளது. ராகுல் காந்தியைப் பார்த்து நான் குஜராத்தின் மகன் என பெருமையாகச் சொல்லும் நரேந்திர மோடியின் வாக்கு வங்கி வளர்ந்துள்ளதா.. என்பதைக் கடந்த 15 வருட தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்க்க வேண்டியது அவசியமாகிறது.

1998-ம் ஆண்டு பா.ஜ.க-வின் வெற்றி சதவிகிதம் என்பது குஜராத்தில் 44.8 சதவிகிதம்தான். 2002-ம் ஆண்டு மோடி முதல் முதலாக முதல்வராகும்போது இந்த விகிதம் 49.9 சதவிகிதமாக மாறுகிறது. இந்த 5 சதவிகித அதிகரிப்புதான் பா.ஜ.கவை குஜராத்தின் அசைக்க முடியாத கட்சியாக பா.ஜ.க-வை வளர்த்தெடுக்கிறது. அதன்பின் தனது ஓட்டு வாரியான வெற்றி விகிதத்தை 49 சதவிகிதத்துக்கு மேலாகவே வைத்திருக்கிறது பா.ஜ.க. 

2012-ம் ஆண்டு மோடி முதல்வரானபோது பெற்ற வாக்குகளைவிட 2014-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் 15 சதவிகித வாக்குகளை பெற்றது பா.ஜ.க. 2012-ம் ஆண்டு பா.ஜ.க-வின் வாக்குவங்கி 91 லட்சம் ஆனால், 2014-ம் ஆண்டோ வாக்குவங்கி 1 கோடியே 5 லட்சம். இந்த புள்ளிவிவரங்கள் குஜராத்தில் பா.ஜ.க. வளர்ந்துள்ளதையே காட்டுகிறது. இதெல்லாம் ஒரு கட்சியின் வளர்ச்சி. ஆனால், மாநிலத்தின் நிலை என்ன உண்மையாலுமே மாநிலம் வளர்ந்துள்ளதா என்றால் அது பதில் தெரியாத கேள்வியாகதான் உள்ளது. 

குஜராத் தேர்தல்

வைப்ரன்ட் குஜராத் என தேடித்தேடி எந்த விஷயங்களில் உயர் தரவரிசையில் இருக்கிறது என்று மார்தட்டிக் கொள்கிறதோ, இந்த விஷயங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். 27 ஆண்டுகள் குஜராத்தை ஆள்பவர்கள். 

கடந்த அக்டோபர் மாதம் 3 நாள்களில் 18 குழந்தைகள் குஜராத் மருத்துவமனைகளில் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்துள்ளனர். இந்தியாவில் உள்ள எடைகுறைவு கொண்ட சரியான ஊட்டச்சத்து கிடைக்காத மாநிலங்களில் மொத்தமுள்ள 29 மாநிலங்களில் 25-வது இடம் குஜராத்துக்குதான். 

எடை குறைவான குழந்தைகளின் தேசிய சராசரியே 35 சதவிகிதம்தான். குஜராத்தின் சதவிகிதமோ 39. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறும் இந்திய நகரங்களில் டாப் 10 இடங்களில் குஜராத்தின் நகரங்களும் உள்ளன. ஆள் கடத்தலில் தேசிய அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது குஜராத். ஆசிட் வீச்சு குற்றங்களில் தேசிய தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ளது. 

வடக்கு கோட்புரா பகுதியில் தான் நானோ தொழிற்சாலை நிறுவப்பட்டு இந்தியாவின் விலைகுறைந்த கார்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் அங்குள்ள மக்கள் தினசரி தண்ணீர் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டை பிரதான குற்றச்சாட்டாக முன் வைக்கிறார்கள். அடிப்படைத் தேவைகள் கிடைப்பதில்லை என்கிறார்கள். 100 ஆண்டு பழைமையான பகுதி இது. ஆனால், இன்று குஜராத் வரைபடத்தில் இருந்து புறக்கணிக்கப்பட்ட பகுதியாகவே இது உள்ளது.

மோடி

இந்தியாவின் சொகுசுப் பயணத்தை உறுதி செய்யும் இந்தப் பகுதியின் அடிப்படைத் தகுதி கேள்விக்குறி. மொத்தத்தில் குஜராத்தின் வளர்ச்சி என்பது குஜராத் மக்களின் வளர்ச்சியாக இல்லை. முதலாளிகளின் வளர்ச்சியாக இருக்கிறது என்பதுதான் உண்மை. 

இந்தியாவில் குறைந்த வேலைவாய்ப்பின்மை கொண்ட மாநிலம் என்று குஜராத்தை முன்னிலைப்படுத்துபவர்கள். நானோ தொழிற்சாலை அமைந்துள்ள அதிக பேருக்கு வேலைகிடைக்கும் என்று கூறப்பட்ட இடத்தில் 2ல் ஒரு இளைஞன் வேலைவாய்ப்பின்றி இருப்பது சோகம். கள்ளச்சந்தையில் மது விற்பனை தலைவிரித்தாடுகிறது. 

இதுவரை முதல்கட்டத் தேர்தலில் போட்டியிடும் 977 வேட்பாளர்களில் 198 பேர் 5 கோடிக்கும் அதிகமாக சொத்து உள்ள கோடீஸ்வரர்கள். இதில் அதிகப்பட்சமாக 72 பேர் பா.ஜ.க-வினர். 60 பேர் காங்கிரஸ்காரர்கள். குஜராத்தில் பா.ஜ.க வளர்கிறது. மக்கள் வளர்கிறார்களா, மோடி குஜராத்தைக் காட்டி இந்தியாவின் பிரதமராகிறார். அவரை பிரதமராக்கிய மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவில்லையே என்ற விஷயங்கள் தொடர்ந்து தீராத பிரச்னையாக உள்ளன. அமித் ஷா, மோடி என குஜராத்தை பா.ஜ.க-வின் தேசிய முகங்கள் ஆக்கிரமித்து வருகின்றன. 

குஜராத் மாடல்தான் இந்தியாவுக்கு பிரதமரை தந்தது என்றால், குஜராத்தான் இப்போது இந்தியாவின் பிரதமரை தீர்மானிக்குமா.. காங்கிரஸ் - பா.ஜ.க-வின் பலம் - பலவீனம் என்ன என்பதை அடுத்து பார்ப்போம்.

(களம் விரியும்..)

குஜராத் கள நிலவரம் - பகுதி 1

குஜராத் கள நிலவரம் - பகுதி 2

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்