Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜெயலலிதா இல்லாத ஓராண்டில் தமிழகத்தைப் பரபரக்க வைத்த 50 நிகழ்வுகள் ! பாகம் 1

ஜெ

ன்றோடு ஓராண்டு நிறைவடைந்து விட்டது... தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத அரசியல் ஆளுமையாக இருந்த, மிகப்பெரிய மக்கள் சக்தியைப் பெற்று விளங்கிய ஜெயலலிதா இம்மண்ணை விட்டுச் சென்ற இந்த ஓராண்டில் இத்தனை அரசியல் நிகழ்வுகளா என தலை சுற்ற வைக்கின்றன தமிழகத்தில் கடந்த ஓராண்டில் நிகழ்ந்த அரசியல் நிகழ்வுகள். அவற்றைத்தான் இங்கே பார்க்கப்போகிறோம்

டிசம்பர் 5 : முதல்வரானார் ஓ.பன்னீர்செல்வம்

ஜெயலலிதா மரணித்ததாக அறிவிக்கப்பட்ட அதே நாள் இரவு, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான புதிய அமைச்சரவை பொறுப்பேற்றுக்கொண்டது. நள்ளிரவில் முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். மறுநாள் ஜெயலலிதாவின் நல்லடக்கம் நடந்தது.

சசிகலா

டிசம்பர் 10 : தலைமை ஏற்க சசிகலாவுக்கு அழைப்பு !

அ.தி.மு.க. பொதுச்செயலாளராகப் பதவியேற்று, கட்சிக்குத் தலைமை தாங்க வருமாறு சசிகலாவுக்கு அ.தி.மு.க.வின் முன்னணியினரும், அமைச்சர்களும் வேண்டுகோள் விடுக்கத் தொடங்கினர். போயஸ் தோட்ட இல்லத்துக்குச் சென்ற கட்சியின் முன்னணியினர், 'நீங்கள் தலைமை ஏற்றால்தான் கட்சியைக் கட்டுக்கோப்பாக நடத்திச் செல்ல முடியும்' என முறையிட... செய்திகளில் இடம்பிடிக்கத் தொடங்கினார் சசிகலா.

டிசம்பர் 21 : தலைமைச் செயலகத்தில் நடந்த சோதனை

டிசம்பர் 21 : தமிழகத்தின் முதன்மையான அதிகாரியான தலைமைச் செயலர் ராமமோகனராவ்-ன் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 13 இடங்களில் சோதனை நடத்தியது வருமானவரித்துறை. இதுவரை இல்லாத வகையில் தலைமைச் செயலகத்துக்குள் துணை ராணுவப்படை அனுமதியில்லாமல் நுழைய... பரபரத்தது தமிழக அரசியல் களம். மாநில அரசின் முதன்மையான அதிகாரி வீட்டிலும், தலைமைச் செயலகத்திலும் நடந்த இந்தச் சோதனையில் உள்நோக்கம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் சொல்ல...  'இது சட்டரீதியான நடவடிக்கைதான்' என மறுத்தது பி.ஜே.பி.

மறுபுறம் சோதனை குறித்து முதல்வரோ, அமைச்சர்களோ எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. தலைமைச் செயலகம், தனது வீடு உள்ளிட்ட இடங்களில் நடந்த சோதனைக்கு எதிராகக் கொந்தளித்தார் தலைமைச் செயலர் ராமமோகனராவ். "தலைமைச் செயலகத்துக்குள் துணை ராணுவப்படை அனுமதியின்றி நுழைந்திருக்கிறது. ஜெயலலிதா இருந்திருந்தால் இவையெல்லாம் நடந்திருக்குமா?" என ஆவேசப்பட்டார்.

சசிகலா

டிசம்பர் 29 : 'பொதுச் செயலாளராக சசிகலா நியமனம்'

ஜெயலலிதாவுக்குப் பின்னர் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் யார் என்பதற்கான விடையைத் தேடக் கூடியது கட்சியின் பொதுக்குழுக் கூட்டம். ஜெயலலிதா மறைவுக்கு அஞ்சலி செலுத்திய கையோடு, அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலாவை நியமனம் செய்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தை போயஸ் தோட்டம் எடுத்துச்சென்று வழங்கினார் அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், கட்சியின் முன்னணி நிர்வாகிகளும்.

தொடர்ந்து டிசம்பர் 31ம் தேதி அ.தி.மு.க.வின் நியமனப் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றார் வி.கே.சசிகலா. இந்தக் கூட்டத்தில் பேசிய பேச்சுதான் சசிகலாவின் முதல் மேடைப்பேச்சு. "நம்மை இன்று விமர்சிப்பவர்கள் கூட மனமுவந்து நம்மைப் பின்தொடரும் அளவுக்கு, ஒரு புனிதமான பொதுவாழ்வை மேற்கொள்வோம். என் வாழ்வின் எஞ்சிய காலத்தை அர்ப்பணித்து உழைப்பேன்" என்றார் சசிகலா. 

ஜனவரி 4: செயல் தலைவரானார் ஸ்டாலின்

தி.மு.க.வில் கருணாநிதி இல்லாத முதல் பொதுக்குழு கூடியது. உடல்நலம் குன்றியிருப்பதால் தலைவர் பதவியிலிருந்து ஒதுங்கியிருக்க வேண்டிய நிலை கருணாநிதிக்கு. இதையடுத்து, தலைவரின் முழு அதிகாரத்தோடு செயல் தலைவரானார் மு.க.ஸ்டாலின். தி.மு.க. தலைவராக கருணாநிதி பொறுப்பேற்று 50 ஆண்டுகளான நிலையில், அவர் இல்லாமல் நடந்த முதல் பொதுக்கூட்டம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

பிப்ரவரி 4:  முதல்வர் பதவிக்கு சசிகலா?

கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலாவும், முதல்வராக ஓ.பன்னீர்செல்வமும் பதவி வகித்து வந்த நிலையில், கட்சியும், ஆட்சியும் ஒருவர் கையிலேயே இருப்பதுதான் நல்லது என்ற கருத்து அ.தி.மு.க. முன்னணியினரால் சொல்லப்பட்டது. இதையடுத்து, தமிழக அரசியலில் புதிய திருப்பமாக, பொதுச்செயலாளர் பதவியைத் தொடர்ந்து, அ.தி.மு.க.வின் சட்டமன்றக் கட்சித் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார் சசிகலா. 
சசிகலாவைச் சட்டமன்றக் கட்சித்தலைவராகத் தேர்வு செய்யும் தீர்மானத்தை ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிய, நிர்வாகிகள் வழிமொழிந்தனர். இதுவரை மக்களைச் சந்திக்காதவர், ஒரு பொதுக்கூட்டத்தில் கூட பேசாதவர், தேர்தலில் நிற்காதவர் முதல்வர் பதவிக்கு முன்மொழியபட்டது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. சசிகலாவுக்காக தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஓ.பன்னீர்செல்வம்.

doctor team pressmeet

பிப்ரவரி 6: ஜெ மரணத்தில் மர்மம் இல்லை

சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு ஒருவாரத்தில் வெளியாகும் என்ற உச்சநீதிமன்றத்தின் அறிவிப்பு ஒரு புறம், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாக சமூகம் மற்றும் பொதுமக்கள் தரப்பில் எழுந்த நெருக்கடி மறுபுறம் என மிகவும் நெருக்கடியான நேரத்தில் முதல்வர் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டிருந்தார் சசிகலா. இந்த நேரத்தில்தான், ஜெயலலிதா மரணத்தில் சந்தேகமோ, மர்மமோ ஏதுமில்லை எனச் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் கொடுத்தது ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவக்குழு. 'ஜெயலலிதா மரணத்தில் எந்த மர்மமும் இல்லை. உலகத்தரமான சிகிச்சை என்னவெல்லாம் தர வேண்டுமோ, அதை எல்லாம் தந்திருக்கிறோம்," என்றனர் அவர்கள். மரணம் பற்றி எழுப்பப்பட்டு வந்த பல சந்தேகங்களுக்குப் பதிலளிப்பதாக அந்தச் செய்தியாளர் சந்திப்பு இருந்தது.

பிப்ரவரி 7 : தர்மயுத்தத்துக்கு அழைப்பு விடுத்த ஓ.பி.எஸ்.

'சசிகலா தலைமையில்தான் இனி கட்சி. அவரே முதல்வர்' என எல்லோரும் உறுதி செய்திருந்த நேரத்தில், தனது முதல் எதிர்ப்பைப் பதிவு செய்தார் ஓ.பன்னீர்செல்வம். இரு தினங்களுக்கு முன்னர் முதல்வர் பதவிக்கு சசிகலாவை முன்மொழிந்த ஓ.பன்னீர்செல்வம், திடீரென சசிகலாவுக்கு எதிராகக் கிளம்பினார். யாரும் எதிர்பாராத பரபரப்பை ஏற்படுத்தியது பிப்ரவரி 7ம் தேதி இரவு. தமிழகத்தில் இன்று வரை நடக்கும் அத்தனை அரசியல் பரபரப்புகளுக்கும் அடித்தளமிட்ட தினம் இதுதான்.

யாரும் எதிர்பாராதவகையில் இரவு ஜெயலலிதா நினைவிடம் சென்று தியானத்தில் அமர்ந்த ஓ.பி.எஸ்., 'என்னைக் கட்டாயப்படுத்தியதால்தான் ராஜினாமா செய்யும் இக்கட்டான சூழலுக்கு ஆளாக்கப்பட்டேன். அதை நாட்டு மக்களுக்கும், தொண்டர்களுக்கும் தெரியப்படுத்த அம்மாவின் ஆன்மா சொன்னது," என விளக்கம் கொடுத்தார். 

செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிராத சசிகலாவை நள்ளிரவில் செய்தியாளர்களிடம் பேச வைத்தது ஓ.பி.எஸ்.-ன் எதிர்ப்பு.  "யாரையும் நிர்பந்தப்படுத்தி எதுவும் நடக்கவில்லை. ஓ.பன்னீர்செல்வத்தின் குற்றச்சாட்டுக்குப் பின்னால் தி.மு.க. இருக்கிறது. சட்டமன்றக் கூட்டத்தில் எதிர்கட்சித்தலைவரும், முதல்வரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டும், சிரித்துக்கொண்டும் இருந்தனர்," என ஆவேசப்பட்டார் சசிகலா.

பிப்ரவரி  8 : 'பதவியேற்க அழைக்கப்படாத சசிகலா'

பொதுமக்கள் மத்தியில் இருந்த நெகட்டிவ் இமேஜ், ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்ப்பு ஆகியவை சசிகலாவுக்கு நெருக்கடியை அளிக்க... மறுபுறம் ஆட்சியமைக்க உரிமை கோரியும், ஆளுநரால் அழைக்கப்படாமல் இருந்தார் சசிகலா. 'ஆளுநர் சென்னை வருவார். பதவியேற்று வைப்பார்' என சசிகலா தரப்பு எதிர்பார்த்திருக்க... ஊட்டி வந்த ஆளுநர் சென்னைப் பயணத்தை 'கேன்சல்' செய்து புறப்பட்டார். ஆளுநர் ஏன் வரவில்லை. எதற்காகத் தாமதப்படுத்துகிறார் என்பது பெரும் விமர்சனத்துக்குள்ளானது. ஓரிரு தினங்களுக்குப் பின்னர் சென்னை வந்தார் ஆளுநர். அப்போதும் சசிகலா ஆட்சி அமைக்க அழைக்கப்படவில்லை. 

சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், ஸ்டாலின் என அரசியல் தலைவர்கள் பலர் அடுத்தடுத்து ஆளுநரைச் சந்தித்துப் பரபரப்பைக் கிளப்பினர். ஆளுநர் நடவடிக்கை விமர்சனத்துக்குரியதாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டத் தொடங்கின. தமிழக அரசியல் களம் உச்சகட்டப் பரபரப்பை அடைந்தது.

ops team

வெடித்துக் கிளம்பிய தர்மயுத்த முழக்கங்கள்

சசிகலா ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க தாமதமாகிக்கொண்டிருக்க... மறுபுறம் ஓ.பன்னீர்செல்வம் வீடு முன்பு வெடித்துக்கிளம்பின தர்மயுத்த முழக்கங்கள். ஒரு அமைச்சர், சில எம்.எல்.ஏ-க்கள், சில எம்.பி-க்கள் பன்னீர்செல்வத்தைச் சந்தித்து ஆதரவு அளித்தனர். மறுபுறம் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர். எம்.எல்.ஏ-க்கள் அடைத்துவைக்கப்பட்டதாகச் சொன்னார் ஓ.பி.எஸ். அதை மறுத்தார் சசிகலா. மறுபுறம் ஆட்சியமைக்க சசிகலா உரிமை கோரி 8 நாள்கள் ஆன பின்னரும் அமைதி காத்தார் ஆளுநர். இந்தச் சூழலில்தான் மிக முக்கியத்துவம் வாய்ந்த சசிகலா

'ஆளுநர் அமைதி காத்த அந்த 8 நாள்கள்'

தமிழக முதல்வராக ஆட்சியமைக்க சசிகலா உரிமை கோரி 8 நாள்கள் ஆன பின்னரும் ஆளுநர் எந்தப் பதிலும் சொல்லவில்லை. எட்டு நாள்களாகப் பெரும்குழப்பத்தை சந்தித்திருந்தது தமிழக அரசியல் சூழல். இந்தச் சூழலில் மிக முக்கியத்துவம் வாய்ந்த சொத்துக்குவிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு அளிக்கப்படும் என அறிவித்தது உச்சநீதிமன்றம். 'ஆளுநரின் நடவடிக்கை சரியல்ல' என எதிர்க்கட்சிகள் குரலெழுப்ப... 'அ.தி.மு.க. சுதந்திரமாக இல்லை. ஆளுநர் அமைதி காப்பது சரியே' என விளக்கம் சொன்னது தமிழக பி.ஜே.பி.

sasikala

பிப்ரவரி 14: 'மீண்டும் சிறை சென்றார் சசிகலா'

பன்னீர்செல்வத்தின் எதிர்ப்பு பெரும் நெருக்கடியை அளித்திருந்த நேரத்தில், இன்னுமொரு மிகப்பெரிய நெருக்கடியாக வந்தது சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவருக்கு கீழமை நீதிமன்றம் கொடுத்திருந்த 4 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம். சிறைக்குச் செல்லும் முன்னர் சட்டமன்றக் குழுத்தலைவராக எடப்பாடிபழனிசாமியைத் தேர்வு செய்து அவர்தான் அடுத்த முதல்வர் என்ற உறுதியையும், கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரனை நியமனம் செய்து, அவர்தான் கட்சியைக் கவனிப்பார் என்ற செய்தியையும் சொல்லிச் சென்றார் சசிகலா.

பிப்ரவரி 16 : 'முதல்வரானார் எடப்பாடி பழனிசாமி'

தினகரனின் பக்கபலத்தோடு ஆட்சியமைக்க உரிமை கோரினார் எடப்பாடி பழனிசாமி. தனக்குப் பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு உள்ளதால் தன்னை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் எனக்கோரினார் எடப்பாடி பழனிசாமி. கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்களை திறந்து விட்டால் உண்மை தெரியும்' என்றது ஓ.பி.எஸ். தரப்பு. தமிழகத்தில் ஏதோ நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்தது. ஆனால் மறுநாளே எடப்பாடி பழனிசாமியை ஆட்சியமைக்க அழைத்தார் ஆளுநர். அதோடு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட தொடங்கியது அடுத்தகட்ட பரபரப்பு.

edappadi palanisamy

பிப்ரவரி 18 :  ஆதரித்த 122 எம்.எல்.ஏ-க்கள்; தப்பியது எடப்பாடி ஆட்சி

எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. 29 ஆண்டுகளுக்குப் பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பை தமிழக சட்டப்பேரவை சந்தித்தது. அதோடு, 29 ஆண்டுகளுக்குப் பின்னர், தமிழக சட்டப்பேரவை போர்க்களமாகவும் மாறியது. ரகசிய வாக்கெடுப்பு வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பும், தி.மு.க.வும் கோரிக்கை விடுத்தன. அதற்கு சபாநாயகர் மறுக்க... பெரும் அமளியைச் சந்தித்தது பேரவை. தி.மு.க. உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டு, நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இதில் 122 பேர் எடப்பாடி அரசுக்கு ஆதரவு தெரிவிக்க, நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்று அரசு தப்பியது.

பிப்ரவரி 24 : நானும் அ.தி.மு.க. தான் - முழுநேர அரசியலில் தீபா

ஜெயலலிதாவின் பிறந்த நாள். ஏற்கெனவே இரு பிரிவுகளாகப் பிரிந்திருந்த அ.தி.மு.க.வை மையப்படுத்தி புதியக் கட்சி ஒன்றைத் தொடங்கினார் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா. ஏற்கெனவே சசிகலா தரப்பு, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு எனக் கட்சி இரண்டாக உடைந்திருந்த நிலையில், 'நான்தான் உண்மையான அ.தி.மு.க.' என்று அறிவித்த தீபா, 'எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை' எனும் புதியக் கட்சியைத் தொடங்கினார். முழுநேர அரசியலில் ஈடுபடுவேன் என்றும் அவர் அறிவித்தார். சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் போலவே, இவரும் 'அம்மா வழியில் நடப்போம்' என அறிவித்தார்.

ops

மார்ச் 4 : 'ஜெ. மரணம்... மல்லுக்கட்டிய பன்னீர் அணி'

ஓ.பி.எஸ். எதிர்ப்பால் பெரிதாக எதுவும் நடக்காத நிலையில், அடுத்த திருப்பம். 'ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது. சிகிச்சையில் சந்தேகம் இருக்கிறது' எனச் சொல்லத் தொடங்கியது பன்னீர்செல்வம் அணி. நீதி விசாரணை நடத்த வேண்டும்; சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என ஓ.பி.எஸ். அணியில் ஒவ்வொருவர் ஒவ்வொன்றைச் சொல்ல... 'இது நியாயமற்றப் பேச்சு. சிகிச்சையில் எந்தச் சந்தேகமும் இல்லை' என பதிலடி கொடுத்தது சசிகலா தரப்பு. விசாரணைக்குத் தயார் என்றும் அவர்கள் அறிவிக்க அடுத்தகட்ட பரபரப்பு தொற்றிக்கொண்டது. அடுத்த இரு தினங்களில், ஜெயலலிதாவுக்குக் கொடுக்கப்பட்ட சிகிச்சை குறித்த அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டது. ஜெயலலிதா சிகிச்சையில் எழுந்துள்ள சந்தேகத்தைப் போக்க முழுவிவரங்களையும் வெளியிட்டுள்ளதாகச் சொன்னது அரசு.

மார்ச் 9 : அடுத்த பரபரப்பு... ஆர்.கே.நகர் தேர்தல்

இந்தச் சூழலில் அடுத்த கட்டப் பரபரப்புக்கு வித்திட்டது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிப்பு. அரசியல் ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக இது பார்க்கப்பட்டது. ஜெயலலிதா மறைவை அடுத்து நடக்கும் முதல் இடைத்தேர்தல். சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், தீபா என மூன்று அணியும் இந்தத் தேர்தலைச் சந்திப்பதாக அறிவித்தது. ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார் டி.டி.வி.தினகரன். வென்றால் தினகரன் முதல்வராவார் எனச்சொல்லப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் அணியில் அவைத்தலைவர் மதுசூதனன் களம் இறங்கினார். ஜெ.தீபாவும் போட்டியிட்டார். மூவரில் யார் பின்னால் அ.தி.மு.க. நிற்கப்போகிறது என்பதை தீர்மானிக்கும் தேர்தலாக இது பார்க்கப்பட்டது. ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுக்கும் தேர்தலாகக்கூட இது கவனிக்கப்பட்டது. 

two leaves

மார்ச் 23 : முடக்கப்பட்டது கட்சியும், சின்னமும்

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடும் இந்த ஆண்டில் அ.தி.மு.க., அடுத்தடுத்த நெருக்கடிகளைச் சந்தித்தது. இதன் உச்சகட்டமாக கட்சியின் பெயரையும், இரட்டை இலைச் சின்னத்தையும் இழந்து நின்றது அ.தி.மு.க. கட்சிக்கும், சின்னத்துக்கும் உரிமை கோரி பன்னீர்செல்வம் அணி தேர்தல் ஆணையத்தை அணுக... மறுபுறம் சசிகலா அணியினரும் உரிமை கோர... இரு அணியும் கட்சி சின்னத்தையும், பெயரையும் பயன்படுத்தும் உரிமையை இழந்தன. இது சசிகலா அணியின் சார்பில், ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் தினகரனுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்பட்டது. 'இது ஏமாற்றம் தருகிறது; அதிர்ச்சியளிக்கிறது' என ஓ.பி.எஸ். சொன்னாலும் கூட, கட்சியில் பிளவு என்பதை ஏற்க வைத்தது ஓ.பி.எஸ். தரப்புக்கு வெற்றியாகவே பார்க்கப்பட்டது. 

ஏப்ரல் 3 : துரோகம்  vs தர்மயுத்தம்

முதல்வர் யார் என்பதை தீர்மானிக்கும் தேர்தல்; யார் அ.தி.மு.க. என்பதை முடிவு செய்யும் தேர்தல் என்பதால் தினகரன், ஓ.பி.எஸ். அணியினர் தீவிரமாக இயங்கினர். பிரதான எதிர்க்கட்சியைக் கடந்து அ.தி.மு.க. இரு அணிகள் கடும் போட்டியைச் சந்தித்தன. கட்சி, சின்னத்தை இழந்து, தொப்பி சின்னத்தில் தினகரனும், மின் கம்பம் சின்னத்தில் மதுசூதனனும் களம் கண்டனர். 'கட்சிக்குத் துரோகம் செய்து விட்டார். இரட்டை இலையை இல்லாமல் ஆக்கிவிட்டனர்' ஓ.பி.எஸ். தரப்பு மீது புகார் கூறி பிரசாரம் செய்தது தினகரன் அணி.

மறுபுறம் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகச் சொல்லி, 'தர்மயுத்தம்' பிரசாரம் செய்தது பன்னீர்செல்வம் தரப்பு. ஜெயலலிதா சடலம் போன்ற சவப்பெட்டி எடுத்து வந்து, உணர்ச்சியைத் தூண்டி வாக்குகளைப் பெற முயன்றதுதான் இதன் உச்சம். அள்ளி இறைக்கப்பட்ட பணம், நாகரிகக்குறைவான பிரசாரம் என ஆர்.கே.நகர் பரபரத்தது.

raid

ஏப்ரல் 7 : அமைச்சர் வீட்டில் வருமான வரி சோதனை

ஆர்.கே.நகர் தேர்தல் விறுவிறுப்பான நிலையை எட்டியிருக்கும் நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, நடிகர் சரத்குமார் உள்ளிட்ட 55 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. இடைத்தேர்தல் சமயத்தில், அமைச்சர் பதவியில் இருக்கும் ஒருவர் வீட்டில் சோதனை நடந்தது என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 'அத்துமீறி நடந்துகொண்டார்கள். மிரட்டப்பார்க்கிறார்கள். அரசியல் நோக்கம் கொண்ட சோதனை' என இந்தச் சோதனைக்குக் காரணம் சொல்லப்பட்டது. இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் வரை வாக்காளர்களுக்கு வழங்க தினகரன் அணி திட்டமிட்டிருந்ததாகவும், அதற்கான ஆவணங்கள் வருமான வரி சோதனையில் கைப்பற்றப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.

ஏப்ரல் 9 : பண மழை புகார் ; ரத்தானது இடைத்தேர்தல்

பொதுத்தேர்தலில் காட்டாத முனைப்பை தேர்தல் ஆணையம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் காட்டியது. இருந்தும் பணப்பட்டுவாடா புகார்கள் அதிகரித்திருந்தன. அதிகாரிகள் மாற்றம், சிறப்பு அதிகாரி நியமனம், துணை ராணுவப்படை அணிவகுப்பு மரியாதை எனத் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டியும் பணப்பட்டுவாடாவை தடுக்க முடியவில்லை எனச்சொல்லப்பட்டது. இரவு நேரங்களில் பண மழை பொழிகிறது எனத் தகவல்கள் வெளியாக, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். பணம் கொடுக்க அனுமதித்து விட்டு தேர்தலை ரத்துசெய்வது என்பது ஜனநாயகப்படுகொலை என எதிர்கட்சிகள் விமர்சித்தன.

ஏப்ரல் 17 : இரட்டை இலைச் சின்னத்துக்கு லஞ்சம்?

அ.தி.மு.க.வுக்கு உரிய இரட்டை இலைச் சின்னத்தை வி.கே.சசிகலா அணிக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக இடைத்தரகர் ஒருவரை கைது செய்த டெல்லி போலீஸ், இதில் தொடர்புடையதாக தினகரன்மீது வழக்குப் பதிவு செய்தது. டெல்லியில் கைதான இடைத்தரகரிடம் 1.30 கோடி ரூபாயை போலீஸார் பறிமுதல் செய்தனர். "அ.தி.மு.க.வை அரசியல் ரீதியாக அழிக்கத் திட்டமிட்டு சிலர் செயல்படுகிறார்கள். நான் யாருக்கும் எதற்கும் லஞ்சம் கொடுக்கவில்லை. வழக்கை சட்டப்படி சந்திப்பேன்," என்றார் தினகரன். 

ministers meeting

ஏப்ரல் 18 : சசிகலா குடும்ப தலையீடு கூடாது

ஏற்கெனவே இருக்கும் பரபரப்பு தீருவதற்குள் அடுத்த பரபரப்பை விதைத்தனர் அமைச்சர்கள். சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் அமைச்சர்கள், கட்சியின் முன்னணி நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர். கூட்டத்துக்குப்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "கட்சியும் ஆட்சியும் ஒரு குடும்பத்தின் தலையீடு இன்றி நடக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமாக இருக்கிறது. கட்சியிலும், ஆட்சியிலும் டி.டி.வி. தினகரனை ஒதுக்கிவிட்டு, எந்தத் தலையீடும் இல்லாமல் கட்சியையும், ஆட்சியைவும் வழிநடத்துவோம்," என்றார். கட்சியை வழிநடத்தக் குழு அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஏப்ரல் 19 : ஒதுங்கினார் தினகரன்

தினகரன் கட்டுப்பாட்டிலிருந்து கட்சி விலகத் தொடங்கிய தினம். ஆட்சியை மட்டும் முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி, கட்சியையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். தினகரனை ஒதுக்கி வைப்பது என முடிவு செய்ய...  'அதுதான் நன்மை பயக்கும் என்றால் ஒதுங்கியிருக்கிறேன்' என அறிவித்தார் தினகரன். அ.தி.மு.க.விலிருந்து நான் ஒதுங்கி விட்டதாகவும், கட்சி பலவீனமடைய நான் காரணமாக இருக்க மாட்டேன் என்றும் அறிவித்தார் தினகரன். இது தர்மயுத்தத்துக்குக் கிடைத்த முதல் வெற்றி எனச்சொன்னார் ஓ.பன்னீர்செல்வம்.

ஏப்ரல் 20 : வீம்பு காட்டிய அணிகள்... இழுபறியாகும் இணைப்பு

தினகரனை ஒதுக்கிய பின்னர் அணிகள் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை தொடங்கியது. ஆனால் இணைப்பில் வீம்பு காட்டின இரு அணிகளும். எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் என தம்பிதுரை பேசியதும், சசிகலாவை நீக்கியதை ஓ.பி.எஸ். தன் வெற்றி எனச் சொல்லலாமா என ஜெயக்குமாரும் சொல்ல கொந்தளித்தது ஓ.பி.எஸ். தரப்பு. 'முதல்வர் பதவியை நாங்கள் கேட்கவில்லை. ஓ.பி.எஸ்.ஸை அவமானப்படுத்தலாமா?' என பதில் சொன்ன கே.பி.முனுசாமி, சசிகலா, தினகரனிடமிருந்து ராஜினாமா கடிதம் பெற வேண்டும்; ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், இந்த இரு கோரிக்கைகளை நிறைவேற்றினால் தான் பேச்சுவார்த்தை நடக்கும் எனத்தெரிவித்தார்.

dinakaran arrest

ஏப்ரல் 25 : கைதானார் டிடிவி தினகரன்

ஆட்சியையும், கட்சியையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார் எடப்பாடி பழனிசாமி. தன் ஆதரவாளர்களுடன் தினகரன் ஏதாவது எதிர்வினையாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் அரங்கேறியது தினகரன் கைது. இரட்டை இலைச் சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், தினகரனிடம் 4 நாள்களாக விசாரணை செய்த டெல்லி போலீஸ், ஏப்ரல் 25ம் தேதி கைது செய்தது. மறுநாளே அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திலிருந்த வி.கே.சசிகலாவின் படங்கள் அதிரடியாக அகற்றப்பட்டு, அங்கு ஜெயலலிதாவின் படங்கள் வைக்கப்பட்டன. இதையடுத்து பேச்சுவார்த்தைக்கான சூழல் கனிந்துள்ளது என வெளிப்படையாக அறிவித்தார் ஓ.பன்னீர்செல்வம்.

ஏப்ரல் 30 : அணிகள் இணைப்பில் சிக்கல்

சசிகலா பெங்களூரு சிறையில், தினகரன் திகார் சிறையில்... அடுத்து என்ன அணிகள் இணைப்புதானே என எண்ணியிருக்க... பேச்சுவார்த்தையைத் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இரு அணிகளும் கூடிப்பேசுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், 'முதல்வர் பதவியை விட்டுத்தர முடியாது' என எடப்பாடி பழனிசாமி தரப்பில் வெளிப்படையாக பேசப்பட... ஓ.பி.எஸ். முதல்வர் பதவியைக் கேட்கிறாரா என்ற சந்தேகம் எழுந்தது.  'நாங்கள் முதல்வர் பதவியைக் கேட்கவில்லை. ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை, சசிகலா குடும்பத்தினரை கட்சியிலிருந்து நீக்குவதுதான் எங்களின் நிபந்தனை. நிபந்தனையை ஏற்றால்தான் பேச்சுவார்த்தை' என்றது ஓ.பி.எஸ். தரப்பு. கட்சி இணைப்பில் வேண்டுமென்றே, திட்டமிட்டு முட்டுக்கட்டை போட்டு வருகிறார்கள். முதலில் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை என்றவர்கள், அந்தர் பல்டி அடித்து நிபந்தனை விதித்து வருகிறார்கள்," என வெளிப்படையாகவே வருத்தப்பட்டார் எடப்பாடி பழனிசாமி. விளைவு அணிகள் இணைப்பு தாமதமானது. மறுபுறம் சட்டமன்றத்துக்கு விரைவில் தேர்தல் வரும் என ஓ.பி.எஸ். பேச... இருதரப்பில் முட்டல்மோதல் அதிகரித்தது.

இதோடு முடிந்துவிடவில்லை. இன்னும் பல அரசியல் பரபரப்புகளைச் சந்தித்தது இந்த ஓராண்டு. இதன் தொடர்ச்சியைப் படிக்க இதைக் க்ளிக் செய்க... 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement