‘எடப்பாடி பழனிசாமி அவர்களே... நாங்கள் கேரளாவுடன் இணைய விரும்புகிறோம்!’ குமரி மக்களின் குமுறல் | 'Dear Mr.Edappadi Palanisamy, We would like to join with Kerala' - Kumari people started hating Tamilnadu

வெளியிடப்பட்ட நேரம்: 19:11 (07/12/2017)

கடைசி தொடர்பு:15:28 (20/12/2017)

‘எடப்பாடி பழனிசாமி அவர்களே... நாங்கள் கேரளாவுடன் இணைய விரும்புகிறோம்!’ குமரி மக்களின் குமுறல்

திசயமான போராட்டம் கன்னியாகுமரியில் நடந்து வருகிறது. மீனவர்கள் மீட்பு மற்றும் சேத சீரமைப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு உச்சபட்ச அலட்சியத்தைக்  கையாண்டு வருவதாகச் சொல்லி போராடி வரும் குமரி மக்கள், "தமிழக அரசின் செயல்பாடுகளில் எங்களுக்குத் திருப்தியில்லை. கேரளாவுடன் மீண்டும் இணையவே விரும்புகிறோம்"  என அறிவிக்க, பெரும் பரபரப்புக்குள்ளாகியிருக்கிறது பிரச்னை. 'கேரளாவுடன் இணைய விரும்புகிறோம்' என்ற கோரிக்கை முதன்மையான கோரிக்கையாகும் அளவுக்குத் தமிழகத்தை வெறுக்கத் தொடங்கியிருக்கிறார்கள் குமரி மக்கள்.

குமரி போராட்டம்

ஒகி புயலின் கோரத்தாக்குதல், அரபிக் கடலோரத்தில் வாழ்ந்து வந்த மீனவர்களின் வாழ்வை துடைத்து அழித்து விட்டுச் சென்றிருக்கிறது. புயல் குறித்த முன்னெச்சரிக்கை எதுவும் விடுக்கப்படாததால், கடலுக்குச் சென்று புயலில் சிக்கிய மீனவர்களில் பலர் என்ன ஆனார்கள் என்பது இதுவரை தெரியவில்லை. ஒருபுறம் விவசாயிகள், புயலால் பெரும் இழப்பைச் சந்தித்திருக்கிறார்கள். மறுபுறம் கடலுக்குச் சென்ற மீனவர்கள் கதி என்ன என்பது தெரியவில்லை. அரசிடம் முறையிட்டும் எந்த பதிலும் கிடைக்காத நிலையில், இன்று தங்களின் போராட்டத்தை தீவிரப்படுத்தியிருக்கிறார்கள் குமரி மக்கள்.

எங்களை கேரளாவுடன் இணைத்து விடுங்கள் என்பது அவர்களின் மிக முக்கியக் கோரிக்கையாக இப்போது மாறியிருக்கிறது. இது தமிழக அரசின் மீதுள்ள வெறுப்பு என்பதோடு, கேரள அரசின் நடவடிக்கை, குமரி மக்களைப் பெரிதும் ஈர்த்து இருக்கிறது என்பதை உணர்த்துவதாகவே இருக்கிறது. ஒகி புயலில் கேரள அரசு மேற்கொண்ட நடவடிக்கை இதற்கு முக்கியக் காரணமாக இருப்பதை மறுக்க முடியாது.

கேரளாவில் மீட்பு

கேரளாவும்... தமிழகமும்...

ஒகி புயல் கேரளக் கரையோரத்தில் பெரும் சேதங்களை ஏற்படுத்திய போது, கேரளா அரசு மிக விரைவாகச் செயல்படத் தொடங்கியது. மத்திய பாதுகாப்புத்துறையையும், கடலோரக் காவல்படையையும் தொடர்பு கொண்ட கேரள அரசு, உடனடியாக மீனவர் மீட்புப் பணிகளைத் தொடங்கியது. அடுத்த ஓரிரு தினங்களில் ஏராளமான மீனவர்களை கேரளா அரசு மீட்டது. ஒகி புயலை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் கேரள முதல்வர் பினராயி விஜயன். 

கேரள அரசின் மீட்புப் பணிகள் உச்சத்தை எட்டியிருந்த போதுதான், தமிழக முதல்வர் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சருக்குக் கடிதமே எழுதினார். "கடலுக்குச் சென்ற மீனவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியாமல் குமரி மக்கள் தவித்து வந்தபோது, தமிழக அரசிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. ஆனால் அந்த நேரத்தில் மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியிருந்தது கேரளா. அம்மாநில மீனவர்களை மட்டுமல்லாது, பல தமிழக மீனவர்களையும் கூட கேரள அரசு மீட்டிருந்தது.

பினராயி விஜயன் vs எடப்பாடி பழனிசாமி

பினராயி விஜயன் vs எடப்பாடி பழனிசாமி

ஒகி புயலின் பாதிப்பையடுத்து, கேரளாவின் கடலோரத்தில் முகாமிட்ட கேரள முதல்வர் பினராயி விஜயன், மீனவர் மீட்புப் பணிகளை நேரடியாகப் பார்வையிட்டு தீவிரப்படுத்தினார். ஆனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று வரை புயலால் கடும் சேதத்தைச் சந்தித்த கன்னியாகுமரிக்குச் செல்லவில்லை. மீனவர்களைச் சந்திக்கவோ, மீட்புப் பணிகளைப் பார்வையிட்டு வேகப்படுத்தவோ இல்லை. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக்களுக்காக தமிழகம் முழுவதும் சுற்றிவரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இவ்வளவு பெரிய பேரிடரின் போது, அங்கு வராதது, குமரி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. மீட்புப் பணிகளை வேகப்படுத்தி மக்கள் போராடிக்கொண்டிருக்கும் போது, ஆர்.கே.நகரில் முதல்வர்  எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தது அலட்சியத்தின் உச்சம்.

குமரி போராட்டமும், இடைத்தேர்தல் பிரசாரமும்

அங்கே அடுத்த கட்ட ஆலோசனை... இங்கே இடைத்தேர்தல் பிரசாரம்...

கேரளாவில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணிகளையும், மீனவர்கள் மீட்புப் பணிகளையும் தீவிரமாக மேற்கொண்டதோடு, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்  கேரள முதல்வர் பினராயி விஜயன். ஆனால் தமிழகத்தில் முதல்வர் ஆய்வு செய்யாதது மட்டுமின்றி, மக்கள் பிரச்னைகளைப் பற்றி எந்தக் கவலையும் கொள்ளாமல் ஆர்.கே.நகர் தேர்தல் பிரசார வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். இது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

"ஆர்.கே.நகர் வேட்பு மனு பரிசீலனை முடிவடையாத நிலையில், இன்று பிரசாரத்தைத் தொடங்க வேண்டிய அவசியம் என்பது இல்லை. பேரிடர் மீட்புப் பணிகளை மேற்கொள்ள கையாலாகாத அரசாக தமிழக அரசு இருக்கிறது. எத்தனை மீனவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், எத்தனை மீனவர்கள் மீட்கப்பட்டிருக்கிறார்கள் என எந்தப் புள்ளிவிவரமும் தமிழக அரசு தெரிவிக்கவில்லை. மிக மோசமான செயல்பாட்டை தமிழக அரசு வெளிப்படுத்தி வருகிறது," என்ற விமர்சனமும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் முன்வைக்கிறார்கள்.

தேர்தல் பிரசாரம்

எதைப்பற்றியும் கவலை கொள்ளாத 'தமிழகம்'

புயலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு குறித்து முதலில் அறிவிப்பு வெளியிட்ட கேரளா அரசு, உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு, படகுகளை இழந்தவர்களுக்குப் படகு வழங்கப்படும்; உயிரிழந்தவர்களின் குடும்பங்களில் ஒருவருக்கு அரசு வேலை பரிந்துரைக்கப்படும் என அறிவித்தது. பாதிப்பின் தன்மையைப் பார்த்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குக் கொடுக்கும் இழப்பீட்டுத் தொகையை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தி அறிவித்தது. 

ஆனால் மீட்புப் பணிகளில் மிகுந்த அலட்சியம் காட்டிய தமிழக அரசு, இழப்பீடு குறித்த அறிவிப்பிலும் அலட்சியம் காட்டியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு என அறிவித்த அரசு, கடலில் சிக்கிய மீனவர்களை மீட்க வேகம் காட்டாதது  மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மீனவர்கள் மீது அரசின் அக்கறை என்பது இவ்வளவுதானா என்ற கேள்வியையும் மக்கள் முன்வைக்கிறார்கள்.

ஒகி புயல் பற்றிய உரிய முன்னறிவிப்புகள் இல்லாததால் கடலுக்குச் சென்று புயலில் சிக்கிய குமரி மீனவர்களையும் கேரள அரசு காப்பாற்றியிருக்கிறது. இன்னும் பல நூறு மீனவர்கள் கரை திரும்பாத நிலையில், இந்தியா முழுக்க நூற்றுக்கணக்கான மீனவர்கள் கரை ஒதுங்கியும் வருகிறார்கள். இந்நிலையில், "ஒகி புயல் குறித்து முன்கூட்டியே மத்திய அரசு எச்சரிக்கை விடுக்கவில்லை; அதனால்தான் இவ்வளவு மோசமான விளைவுகள் ஏற்பட்டிருக்கிறது" என மத்திய அரசு மீது புகார் தெரிவித்திருக்கிறது கேரள அரசு.

ஆனால் தமிழக அரசு இது குறித்து எந்தக் கருத்தையும் வெளிப்படுத்தவில்லை. ஏன் நடந்தது, என்ன பிழை என எதையும் கண்டுகொள்ளவில்லை. மாறாக ஆளுநர் கன்னியாகுமரி சென்று பார்வையிட அனுமதித்து விட்டு, தமிழக முதல்வரும், துணை முதல்வரும், அமைச்சர்களும் ஆர்.கே.நகர் தேர்தல் வேலைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். 

"தமிழக அரசு எதையும் செய்யவில்லை. தமிழக மீனவர்கள் ஒருவரைக்கூட மீட்கவில்லை. கேரள அரசு பல தமிழக மீனவர்களை மீட்டிருக்கிறது. கேரள மருத்துவமனையில் பல தமிழக மீனவர்கள் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஆனால் தமிழக அரசு இதை வேடிக்கைப் பார்த்து வருகிறது. நாங்கள் இவ்வளவு பெரிய போராட்டம் நடத்தியும் அவர்கள் எங்களை கண்டுகொள்ளவில்லை. நாங்கள் 1956-க்கு முன்னர் கேரளாவோடு இருந்தோம். போராடிதான் தமிழகத்தோடு சேர்ந்தோம். அது எவ்வளவு தவறான முடிவு என்பதை இப்போது நாங்கள் உணர்கிறோம். இப்போது நாங்கள் கேரளாவோடு சேர விரும்புகிறோம். தமிழக அரசு கையாலாகாத அரசாக இருக்கிறது. எங்களுக்கு இந்த அரசு தேவையில்லை," எனப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ஆவேசமாகப் பேசுகிறார்கள்.

தமிழக அரசு, வெட்கித்தலை குனிய வேண்டிய நேரம் இது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close