வெளியிடப்பட்ட நேரம்: 20:26 (08/12/2017)

கடைசி தொடர்பு:20:26 (08/12/2017)

”ஒரு புகைப்படக்காரரின் சாட்சியம்...!” - 2015 சென்னை மழையின் மீள்நினைவுகள்- தொடர் 6

பேரழிவுகளின்போது பாதிக்கப்படும் மக்களைப் பாதுகாக்காமல், அவர்களை படம் பிடிப்பதும், அவர்களைப் பற்றி செய்தி எழுதுவதில் மட்டுமே புகைப்படக்காரர்களும், செய்தியாளர்களும் கவனம் செலுத்துகின்றனர். செய்தியாளர்களுக்கும், புகைப்படக்காரர்களுக்கும் ஈரமே இல்லையா? என்று அவ்வப்போது சர்ச்சைகள் எழுவது வழக்கமாகி விட்டது. இது ஒருபுறம் இருக்க, 2015-ம் ஆண்டு சென்னைப் பெருமழையின் போது பாதிப்புகளைப் படம் பிடித்த புகைப்படக்காரர்கள், செய்தியாளர்கள் களத்தில் தங்களால் ஆன உதவிகளைச் செய்தனர். நம்மிடம் பேசிய பி.டி.ஐ செய்தி நிறுவனத்தின் புகைப்படக்காரர் செந்தில்குமார், சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

மக்களின் பரிதவிப்பு

"2015-ம் ஆண்டு டிசம்பர் ஒன்றாம் தேதி சென்னையின் மழை பாதிப்புகளைப் படம் எடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது கோட்டூர்புரம் பகுதிக்கும் போயிருந்தேன். நான் போன சமயத்தில் தெருக்களில் கணுக்கால் அளவுக்குத்தான் மழை நீர் தேங்கி இருந்தது. மறுநாளும் நகரை வலம் வந்து பாதிப்புகளை படம் பிடித்துக் கொண்டு இருந்தேன். கோட்டூர்புரம் சென்றபோது, அடையாறு ஆற்றின் வெள்ளப் பெருக்கு கரையோரம் இருந்த குடியிருப்புகளுக்குள் புகுந்தது. திரைப்படங்களில் வருவது போல,  என் கண்முன்னால் அடையாறு ஆற்றில் ஒவ்வொரு அடியாக தண்ணீர் மட்டம் அதிகரித்துக்குக் கொண்டே இருந்தது.  பாதுகாப்பான தூரத்தில் நான் நிறுத்தி வந்திருந்த என்னுடைய டூ வீலரும் வெள்ளத்தில் மூழ்கியது.

பெருமழை


கரையோரம் இருந்த குடியிருப்புகளில் எல்லாம் தரைத்தளம் வரை வெள்ள நீர் புகுந்து விட்டது. மக்கள் பரிதவிச்சுப் போய் கிடைத்தப் பொருட்களை மட்டும் எடுத்துக்கிட்டு மாடி வீடுகளுக்குச் சென்றனர். சிலர் வேறு இடங்களுக்குச் செல்ல முயற்சித்தனர். அப்போது சிலர் தண்ணீரில் நடக்க முடியாமல் விழுந்தனர். அவர்களில் வயதானவர்களை, பிறர் தூக்கிக் கொண்டு போனார்கள். அப்போது அங்கு இருந்த ஆங்கில நாளிதழின் நிருபர் ஒருவர் முதியவர்களை தூக்கிச் செல்வதற்கு உதவி செய்து கொண்டிருந்தார். குடியிருப்புகள் முன்னாடி நிறுத்தியிருந்த கார், பைக் அனைத்தும் மூழ்கிவிட்டன.
எங்களுடன் வந்த செய்தியாளர்கள், அந்த சூழலில் தேவைப்படுவோருக்கு உதவிகள் செய்து கொண்டிருந்தனர். நானும், என்னுடன் வந்திருந்த மேலும் சில புகைப்படக்காரர்களும், வெள்ளத்தின் பாதிப்பால் மக்கள் அவதியுறும் காட்சிகளைப் பதிவு செய்து கொண்டிருந்தோம்.

உலகுக்குச் சொன்ன படங்கள்

நான் இரண்டாயிரமாவது ஆண்டில் இருந்து ஊடகங்களில் பணியாற்றி வருகிறேன். என் அனுபவத்தில் இதுபோன்ற வெள்ளப்பாதிப்பைப் பார்த்ததில்லை. எனவே, நான் பதிவு செய்திருக்கும் இந்தப் படங்கள் உரிய முறையில் அனுப்பப்பட்டால் மட்டுமே வெளி உலகத்துக்குத் தெரிய வரும். என்னுடன் வந்தவர்களுக்கும் அதே தவிப்புகள் இருந்தன. ஆனால், யாரும் வெளியேற முடியாதபடி வெள்ளத்தின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே இருந்தது. வாகனங்களில் போக முடியாது என்று புரிந்து போயிற்று வேறு வழியில்லை. கேமரா பையை தலைக்கு மேல் தூக்கிக் கொண்டு, வெள்ளத்தில் நடக்க ஆரம்பித்தேன்.  

மழை வெள்ளம்


அலுவலகத்துக்குத் தகவல் சொல்வதற்கு, மொபைல் இணைப்பு கிடைக்கவில்லை.கோடம்பாக்கத்தில் இருக்கும் அலுவலகத்துக்குப் போய்விட்டால், அங்கிருந்து லேப்டாப்பில் அனுப்பி விட முடியும். கோட்டூர் புரத்தில் இருந்து கோடம்பாக்கம் போக வேண்டும். நடந்தே போய்விடலாம் என்று முடிவு செய்தேன். அண்ணாசாலை முழுவதும் இடுப்பளவு தண்ணீர். மெல்ல நடந்து தி.நகர் பாண்டிபஜார் வழியே சென்றேன். பாண்டிபஜார் முழுவதுமே வெள்ளநீர் நின்றது. பாண்டி பஜாரில் ஆங்காங்கே இருந்த மக்கள்,  வெள்ளத்தில் நடந்து வந்தவர்களை எச்சரித்தனர். 'அந்தப் பக்கம் போகாதிங்க பள்ளமா இருக்கு. இந்த வழியாப் போங்க' என்று எச்சரித்தபடி இருந்தனர். ஒரு வழியாக கோடம்பாக்கம் அலுவலகத்துக்குச் சென்று லேப்டாப் வழியே  படங்களை அனுப்பி விட்டேன்.
என்னோடு வந்த புகைப்படக்காரர்கள் படம் எடுத்தும் கூட அவர்கள் சிலர் அலுவலகத்துக்குச் செல்ல முடியவில்லை. சிலருக்கு கேமரா பேட்டரி போய்விட்டது. அலுவலகத்தில் வெள்ளம் புகுந்து விட்டது என இப்படியான பாதிப்புகளால், புகைப்படங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படவில்லை. நான் பி.டி.ஐ-யில் பதிவு செய்த பெரும்பாலான புகைப்படங்கள் மறுநாள் (2015 டிசம்பர் 3-ம் தேதி) ஆங்கில செய்தித்தாள்கள், தமிழ் செய்திதாள்களில் வெளியாகி இருந்தன.  ஒரு பேரழிவின் சோகங்களை, மக்களின் தவிப்புகளை, அந்தப் படங்கள்தான் வெளி உலகத்துக்குக் கூறின.

உடைந்த பால் பாக்கெட்கள்

டிசம்பர் 3-ம் தேதியும் தாம்பரம் புறநகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்குச் சென்றேன். குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உள்ளும் வெள்ளநீர் புகுந்திருந்தது. அங்கிருந்த நோயாளிகளின் தவிப்பை தவிப்பை எப்படிச் சொல்வது என்று புரியவில்லை. வெள்ள நீர் புகுந்த போது அவர்களால் உடனடியாக வெளியேற முடியவில்லை. ராணுவ வீரர்கள் சிலர் அங்கு சென்று மருத்துவமனையில் தவித்தவர்களை மீட்டனர். நோயாளிகளை வேறு மேடான இடத்துக்கு மாற்றிக் கொண்டிருந்தனர். இன்னும் சில நாட்களில் பிரசவம் ஆகிவிடும் என்ற நிலையில் இருந்த பெண்கள் பயத்தில் இருந்தனர். அங்கு வந்த மீட்புபடையினர் அவர்களுக்கு ஆறுதல் சொல்லி அழைத்துச் சென்றனர்.  
இதுதவிர, சென்னையில் தவித்து வந்த மக்களுக்கு ஹெலிகாப்டர் வழியே நிவாரணப்பொருட்கள் அளிக்க ராணுவத்தினர் சென்றனர். அவர்களுடன் ஹெலிகாப்டரில் நானும் சென்றேன்.
ஹெலிகாப்டரில் இருந்து பால்பாக்கெட்களை தூக்கிப் போட்டனர்.  அப்போது,மொட்டைமாடிகளில் நின்றிருந்த பலர் பால்பாக்கெட்களை பிடிக்கத் தவறி விட்டனர். பாக்கெட்கள், மொட்டை மாடிகளில் விழுந்து தெறித்தன. பால் வீணானது. இதைப் படம் எடுத்தேன். அப்போது, என்னிடம் ஒரு ராணுவ வீரர்,  'சார், நிவாரணப்பணிகளின்போது இது போன்று நடப்பதுதான். இந்த நேரத்தில் அதை எடுக்க வேண்டாம். தேவையில்லாத சர்ச்சை ஏற்படும்' என்று கூறினார். அவர்கள் பக்கம் இருந்த நியாயத்தை ஏற்றுக் கொண்டேன்.

மழை

வெள்ளநீர் சூழ்ந்திருந்த வீடுகளில் இருந்த பொதுமக்களை ராணுவத்தினர் காப்பாற்றிக் கூட்டி வந்தனர். அப்போது நாய் ஒன்று வெள்ளத்தில் நீத்திச் சென்று கொண்டிருந்தது. ஒரு ராணுவ வீரர் தம்மிடம் இருந்த பிஸ்கெட்களை அந்த நாய்க்கு கொடுத்தார். அது எவ்வளவு நேரம் பசியோடு இருந்ததோ தெரியவில்லை. உடனே அது அந்த பிஸ்கெட்களை ஆவலுடன் தின்றது. இதைத் தற்செயலாகப் பாரத்த நான், அந்தக் காட்சியைப் பதிவு செய்தேன். பத்திரிகைகளில் வெளியான இந்தப் படம் பெரும் அளவு பேசப்பட்டது. இந்தப் படத்தை தலைமைச் செயலகத்தில் உள்ள ராணுவ அலுவலகத்தின் முன்பு பெரிய பேனராகப் போட்டு வைத்திருக்கின்றனர்.  ஒவ்வொரு முறை அந்தப் பக்கம் செல்லும்போதும், நாம் எடுத்த புகைப்படம் என்று நினைத்துக் கொள்வேன்” என்றார்.

 இன்னொரு பி.டி.ஐ புகைப்படக்காரர்  ஞான சாஸ்தா. பெருமழையின் நிகழ்வுகளைப் படம்பிடித்தவர்களில் அவரும் ஒருவர். அடையாறு ஆற்றின் கரையில் இருந்த ராமபுரம் பகுதியும் வெள்ளநீரால் சூழப்பட்டிருந்து. எம்.ஜி.ஆரின் தோட்டத்தில் இருந்த காதுகேளாதோர் பள்ளியையும் வெள்ளம் சூழ்ந்திருந்தது. அங்கிருந்த மாணவர்கள் 12 மணி நேரத்துக்கும் மேலாக கீழே இறங்க முடியாமல், மீட்பதற்கு ஆட்களும் இல்லாமல் அங்கு இருந்த கட்டடத்தின் பிடியில் மாடியில் தவித்தனர். யாரும் அங்கு செல்ல முடியாத அளவுக்கு வெள்ளத்தின் சீற்றம் இருந்தது. அவர்களை மீட்க, படகில் மீட்புப் படையினர் சென்றனர். அதன்பிறகு என்ன நடந்தது என்பதைப் பற்றி அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்...

இந்தத் தொடரின் முந்தைய பகுதிகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்....

 

சென்னை மழையின் மீள் நினைவுகள் 1

சென்னை மழையின் மீள் நினைவுகள் 2

சென்னை மழையின் மீள் நினைவுகள் 3

சென்னை மழையின் மீள் நினைவுகள் 4

சென்னை மழையின் மீள் நினைவுகள் 5

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்