வெளியிடப்பட்ட நேரம்: 12:49 (12/12/2017)

கடைசி தொடர்பு:13:31 (12/12/2017)

காங்கிரஸ் உட்கட்சி நிலவரம் என்ன... அடுத்து வரிசையில் பிரியங்காவா?

ராகுல் காந்தி

எதிர்பார்த்தபடியே காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவராக ராகுல்காந்தி பதவியேற்கவிருக்கிறார்.

குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு முதல்கட்டத் தேர்தல் முடிவடைந்து, இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளில் டிசம்பர் 14-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுடன், இமாசலப் பிரதேச சட்டப்பேரவைக்கு நவம்பர் 9-ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளும் வரும் 18-ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அன்றே அறிவிக்கப்படவுள்ளன.

அதற்கு முன்னதாக, அதாவது டிசம்பர் 16-ம் அன்று, டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ராகுல்காந்தி, கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்கவிருக்கிறார். குஜராத்தில் பி.ஜே.பி-க்கு எதிராக தீவிரமாக களப்பணியாற்றி வாக்குசேகரித்த ராகுல்காந்தி, அந்த மாநிலத்தில் இந்தமுறை காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றும் என்று நம்பிக்கையுடன் எதிர்நோக்கியுள்ளார். இதேபோல் இமாசலப் பிரதேசத்திலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் என்பது ராகுலின் எதிர்பார்ப்பு. ஆனால், பி.ஜே.பி-யோ, குஜராத்தில் மீண்டும் தங்கள் ஆட்சியே தொடரும்; இமாசலப் பிரதேசத்தில் காங்கிரசிடம் இருந்து பி.ஜே.பி. ஆட்சியைக் கைப்பற்றும் என்று உறுதியுடன் தெரிவித்துள்ளது.

குஜராத், இமாசலத் தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும், ராகுலின் எதிர்கால இலக்கு, 2019-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று காங்கிரஸ் தலைமையில் மத்தியில் ஆட்சியமைக்க வேண்டும் என்பதே. அதைக் கருத்தில்கொண்டே ராகுல்காந்தியின் செயல்பாடு இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்றதும், முதல் கட்டமாக நாடு முழுவதும் உள்ள மாநில காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளை அதிரடியாக மாற்ற ராகுல் திட்டமிட்டுள்ளார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிப்பூசல்களை ஒழித்து, இளைஞர்களை அதிகளவில் உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும் என்று ஏற்கெனவே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உள்பட அனைத்து மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்களையும் ராகுல் கேட்டுக் கொண்டுள்ளார். 

காங்கிரஸ் கட்சித் தலைவர் பொறுப்பேற்ற கையோடு, அனைத்து மாநிலங்களிலும் ராகுல் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். 2018-ம் ஆண்டு தொடக்கத்திலேயே நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கி, அனைத்து மாநிலங்களிலும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று, பி.ஜே.பி. தலைமையிலான மத்திய அரசின் தோல்விகளை மக்களிடம் எடுத்துரைக்க அவர் முடிவு செய்திருப்பதாக மூத்தத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரியங்கா காந்தி

உடல்நலக்குறைவால் சோனியா காந்தி, பல்வேறு மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இயலாது என்பதால், 2019 பொதுத்தேர்தலில் தனக்கு உறுதுணையாக தன் சகோதரி பிரியங்கா வதேராவையும் களமிறக்க ராகுல் முடிவு செய்திருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். தற்போதுவரை, சோனியா, ராகுல் ஆகியோரின் தொகுதிகளில் மட்டும், அவர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டு வந்த பிரியங்கா, இனி காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தும் தன் சகோதரர் ராகுலின் முயற்சிக்கு உதவும் வகையில் அனைத்து மாநிலங்களிலும் சுற்றுப்பயணம் செய்ய ஒப்புதல் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, ராகுல் காந்தி தலைவர் பொறுப்பேற்றதும், பிரியங்காவுக்கு கட்சியில் முக்கியப் பொறுப்பு அளிக்கப்படும் என்று காங்கிரஸ் தலைமையக மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 

தவிர, "அகில இந்திய அளவிலும், மாநில அளவிலும் கட்சியின் நிர்வாகிகள் மட்டத்தில் அதிரடி மாற்றங்களை முன்னெடுக்கவும் ராகுல்காந்தி திட்டம் வைத்துள்ளார்" என்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பெயர் குறிப்பிட விரும்பாத நிர்வாகி ஒருவர். "காங்கிரஸ் கட்சி, இழந்துள்ள செல்வாக்கை ராகுல் காந்தி விரைவில் மீட்டெடுப்பார்" என்றார் அவர்.

காங்கிரஸ் கட்சியை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டுசெல்ல வேண்டிய கட்டாயம் ராகுல் காந்திக்கு ஏற்பட்டுள்ளது. அவர் தன்முன் உள்ள சவால்களை எதிர்கொண்டு சாதுர்யத்துடன் சமாளிக்க வேண்டிய தருணம் இது. 

எனவே, வெகுவிரைவில் ராகுல் காந்தியின் சுற்றுப்பயணத் திட்டம் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைக்கும் ராகுலின் எண்ணம் ஈடேறுமா?  அவரின் திட்டத்தை முறியடிக்க ஆளும் மத்திய பி.ஜே.பி. அரசு, என்னென்ன உத்திகளைக் கையாளப் போகிறது என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்