கஞ்சா வழக்கு கலாசாரம் ஆரம்பம்! சசிகலா வீழ்ந்த கதை - அத்தியாயம் 2

சசிகலா

‘அ.தி.மு.க-வின் சட்ட மூளை’ என ஒரு காலத்தில் வர்ணிக்கப்பட்டவர் கே.சுப்பிரமணியம். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க இரண்டாக உடைந்து, பிறகு இனைந்த நேரத்தில் இரட்டை இலைச் சின்னத்தை மீட்டுக் கொடுத்ததில் கே.சுப்பிரமணியத்துக்கு பெரிய ரோல் இருந்தது. ஜெயலலிதா, 1991-ம் ஆண்டு ஆட்சியைப் பிடித்தபோது கே.சுப்பிரமணியம், அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். தினரனுக்கும் அவருக்கும் ஏற்பட்ட மோதலில் கே.சுப்பிரமணியதைச் சசிகலா குடும்பம் விரட்டியடித்தது.

ஜெயக்குமார் திருமணம் (புகைப்படத்தின் இடது பக்கம் ஜெயலலிதா)


கே.சுப்பிரமணியத்துக்கு நேர்ந்த கொடுமைதான் வழக்கறிஞர் ஜோதிக்கும் ஏற்பட்டது. ஜெயலலிதாவின் வழக்கறிஞராக இருந்த அவரது வழக்குகள் பலவற்றில் வெற்றியைத் தேடிக் கொடுத்தவர் ஜோதி. குறிப்பாக டான்சி வழக்கில் ஜோதியின் வாதம்தான் ஜெயலலிதாவின் விடுதலைக்கு முக்கிய காரணமாக இருந்தது. ஜோதியிடமும் தினகரன் மோதினார். இதற்கு காரணம் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கையும் தினகரன் சம்பந்தப்பட்ட லண்டன் ஹோட்டல் வழக்கையும் ஒன்றாக சேர்த்ததுதான்.

இந்த இரண்டு வழக்கையும் சேர்த்தால் வழக்கு இன்னும் கொஞ்ச காலத்துக்கு இழுத்தடிக்கப்படும் என நினைத்தார் ஜோதி. ஆனால், இது தினகரனுக்குப் பிடிக்கவில்லை. ஜோதியை அசிங்கமான வார்த்தைகளில் தினகரன் திட்ட... ‘‘என்னைக் கொலை செய்துவிடுவேன் என தினகரன் மிரட்டினார். மிகவும் அசிங்கமான வார்த்தைகளில் திட்டித் தீர்த்தார். என் பெற்றோரைக் கேவலமாக விமர்சித்தார்’’ எனக் கொதித்தார் ஜோதி. அவர் கொளுத்திய தீ தினகரனின் பொருளாளர் பதவியைக் காவு வாங்கியது. தினகரனின் உண்மை முகத்தை ஜெயலலிதாவிடம் அம்பலப்படுத்தியதற்காக, ஜோதியைப் பழிதீர்க்க சசிகலா நடத்திய சித்து விளையாட்டில், ஜோதி கட்டம் கட்டப்பட்டார். 

உதவியாளர்கள், உறவுகள், நண்பர்கள், நம்பிக்கையாளர்கள் என ஜெயலலிதாவின் உள்ளத்தில் இருந்தவர்கள் சசிகலாவின் ‘சதி’ராட்டத்தில் ஒவ்வொருவராகச் சாய்ந்துகொண்டிருந்தார்கள். அதில் மேகநாதனும் ஒருவர். ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாருக்கு உதவியாக இருந்தவர்தான் மேகநாதன். சசிகலா வரவால் போயஸ் கார்டனிலிருந்து தி.நகர் சிவஞானம் தெருவுக்குக் குடும்பத்துடன் குடிபெயர்ந்திருந்தார் ஜெயக்குமார். மேகநாதனுக்குத் திருமணமாகி குழந்தையும் இருந்தது. உடல்நலம் சரியில்லாமல் இருந்த ஜெயக்குமாருக்குச் சகல பணிவிடைகளையும் மேகநாதன்தான் செய்து வந்தார். அதனால் அவர்மீது ஜெயக்குமாருக்குப் பற்றுதல் அதிகம். தான் கார்டனுக்குப் போக முடியாத சூழலில் மேகநாதன் மூலமாகத்தான் ஜெயலலிதாவைத் தொடர்புகொள்வார் ஜெயக்குமார்.

ஜெயக்குமார் குடும்பத்தினர் ஜெயலலிதாவுடன் நெருக்கமாவதையும் செல்வாக்குப் பெறுவதையும் சசிகலா குடும்பம் ரசிக்கவில்லை. ஜெயக்குமார் குடும்பத்துக்கும் ஜெயலலிதாவுக்கும் மீடியேட்டராகச் செயல்பட்ட மேகநாதன்மீது கஞ்சா வழக்குப் பாய்ந்தது. மேகநாதன் மனைவி ரேணுகாதேவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘ஹேபியஸ் கார்பஸ்’ மனு போட்டார். அதில் இருந்த வாசகங்கள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவை. ‘ஜெயக்குமார் குடும்பத்துக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் நெருக்கம் உண்டாக்க என் கணவர் முயன்றார். அது முதல்வரின் தோழி சசிகலாவுக்குப் பிடிக்கவில்லை. அவர் உத்தரவின் பேரில்தான் போலீஸ் அதிகாரிகள், என் கணவர்மீது கஞ்சா வைத்திருப்பதாகப் பொய் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள்’ என மனுவில் சொல்லியிருந்தார்.

மேகநாதனை மீட்கும் முயற்சிகள் எடுத்தார் ஜெயக்குமார். முதல்வர் வீட்டுக்குப் பலமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டும் ஜெயலலிதாவுடன் பேச முடியவில்லை. அப்போது ஜெயலலிதா முதல்வராக இருந்த நேரம். கார்டனுக்குத் தொடர்ந்து தொலைபேசியில் பேச ஜெயக்குமார் முயன்றுகொண்டிருந்ததால், அவர் வீட்டு டெலிபோன் இணைப்பே துண்டிக்கப்பட்டது. மேகநாதன் கைதுக்குப் பிறகு இப்படி அடுத்தடுத்து சம்பவங்கள் அரங்கேறிக்கொண்டிருந்தன. தன்னை சிறையில் வந்து பார்த்த பத்திரிகையாளர் ஒருவரிடம், ‘‘சசிகலாவுக்கு என்னைப் பிடிக்காது. போயஸ் கார்டனுக்கு நான் வருவதையும் அவர் விரும்பவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடராசனுடன் நான் போயஸ் கார்டனுக்குள் போனேன். உடனே ‘மேகநாதனையெல்லாம் ஏன் உள்ளே அழைத்து வருகிறீர்கள்’ என நடராசனிடம் சசிகலா சத்தம்போட்டார். சசிகலாவுக்கும் எனக்கும் எந்தப் பிரச்னையும் கிடையாது. அவரைப் பார்க்கும்போதெல்லாம் பணிவாகத்தான் பேசுவேன். ஆனாலும், என்மீது அவருக்கு என்ன கோபம் என்று தெரியவில்லை. நான் ஏதாவது பாவம் செஞ்சிருந்தா... என்னைக் கடவுள் தண்டிக்கட்டும்’’ எனப் புலம்பினார் மேகநாதன்.

போயஸ் கார்டனுக்கு ஜெயக்குமார் நேரில் போனபோதுகூட தங்கையைச் சந்திக்க முடியவில்லை. கடைசியில் தங்கைக்குக் கடிதம் எழுதினார். ‘ஜெ.ஜெயக்குமார் BA, சந்தியா இல்லம், 9 சிவஞானம் ரோடு, தியாகராய நகர், சென்னை - 17’ என்ற முகவரியுடன்கூடிய தனது லெட்டர் பேடில் ஜெயக்குமார் விரிவாகக் கடிதம் ஒன்றை எழுதி அதை கார்டனுக்கு பேக்ஸ் அனுப்பினார். ஜெயலலிதாவை ‘அம்மு’ என்று ஜெயக்குமாரும் ஜெயக்குமாரை ‘பாப்பு’ என்று ஜெயலலிதாவும் அழைப்பார்கள். 1993-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதியிட்டு ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது என்ன?

பிரியமுள்ள அம்மு! 

நீ நலமாய் இருப்பாய் என நம்புகிறேன். நானும் என் குடும்பமும் பெரிய சிக்கலில் இருக்கிறோம். உன்னுடன் தொலைபேசியில் பேசுவதற்காக மூன்று வாரங்களாக முயற்சி செய்கிறேன். நடந்தவை எதுவுமே எங்களுக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்தவரையில் மேகநாதன் குற்றவாளி கிடையாது. அவன் அப்பாவி. அடுத்து என்ன நடக்கும் எனப் புரியாமல் பீதியில் நாங்கள் உள்ளோம். என்னுடைய இந்த வேண்டுகோளுக்கு நீ செவிசாய்த்து, மேகநாதனை விடுவிப்பாய் என நம்புகிறேன். எதற்கும் நான் மேகநாதனையே சார்ந்திருக்கிறேன். எனக்கு மேனேஜர், உதவியாளர், டிரைவர் எல்லாமே அவன் ஒருவன்தான். கடந்த மூன்று வாரங்களாக எனக்கு உதவ யாருமின்றி தவித்து வருகிறேன். உன்னைச் சந்திக்கும் எல்லா வழிகளும் அடைபட்டுவிட்டன. வேறு வழில்லாமல்தான் கடைசி முயற்சியாக இந்தக் கடிதத்தை உனக்கு ஃபேக்ஸ் செய்கிறேன். என் வேண்டுகோளை நீ மதிப்பாய் என நம்புகிறேன். நன்றி!

உன் அன்புள்ள பாப்பு (ஜெயக்குமார்)

தொடரும்...

இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!