வெளியிடப்பட்ட நேரம்: 13:12 (13/12/2017)

கடைசி தொடர்பு:14:22 (13/12/2017)

‘கட்சி அறிவிப்பு எதிர்பார்த்தா ‘காலா’ போஸ்டர் வருது!’ - அப்செட்டான ரஜினி ரசிகர்கள்!

ரஜினிகாந்த்

டிகர் ரஜினிகாந்த்தின் 67 வது பிறந்த நாளில், தமிழக அரசியல் களம் அதகளப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுபோன்ற அறிவிப்பு எதையும் ரஜினி வெளியிடவில்லை.

தமிழகத்துக்கு 2016-ம் ஆண்டில் யார் கண்பட்டதோ தெரியவில்லை. அந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி, முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்தார். அவரின் மரணம் குறித்த சர்ச்சை இன்னமும் முடிந்தபாடில்லை. ஜெயலலிதா மரணம் அடைந்த ஓரிரு மாதங்களிலேயே தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் கோபாலபுரம் வீட்டிலேயே முடங்கிப் போயுள்ளார்.

எம்.ஜி.ஆர் - கருணாநிதி என்ற இருபெரும் அரசியல் தலைவர்களுக்கு இடையேயான போட்டிக்குப் பின்னர், ஜெயலலிதா - கருணாநிதி இடையே கடுமையான போட்டி அரசியலில் நிலவியது.

தற்போது கருணாநிதியும் ஆக்டிவாக அரசியலில் இல்லாத நிலையில், ஜெயலலிதா மறைந்து, இந்த ஓராண்டில் தமிழக அரசியல் களத்தில் என்னவெல்லாமோ நடந்து முடிந்துவிட்டது. 

சசிகலாவால் முதல்வராக நியமிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க-விலிருந்து பிரிந்து சென்ற ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் இணைந்து, சசிகலா மற்றும் அவரின் குடும்பத்தினரை ஓரங்கட்டிவிட்டு ஆட்சி செய்து வருகிறார். 

இந்தச் சூழ்நிலையில்தான், தன் அரசியல் பிரவேசம் குறித்து சூசகமாக உறுதிப்படுத்திய ரஜினிகாந்த், ரசிகர்களிடம் "இப்போதைக்கு நீங்கள் உங்கள் கடமையைச் செய்யுங்கள்; போர் வரும்போது களத்தில் இறங்கத் தயாராக இருப்போம்" என்று கூறி உசுப்பேற்றினார்.

ரஜினி 

தமிழகம் முழுவதிலுமிருந்த வந்து ரஜினியைச் சந்தித்துவிட்டுச் சென்ற ரசிகர்களும் வெகுவிரைவில் தங்களின் ஹீரோ ஓர் அரசியல் தலைவராகி, அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்வை வெளியிடுவார் என எதிர்நோக்கி இருந்தனர். இந்த ஆண்டு பிறந்த நாளில் அரசியல் கட்சியின் பெயர், சின்னம், கொடி உள்ளிட்டவற்றை அறிவிப்பார் என்று ரஜினியின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். 

ஆனால், சென்னை போயஸ் கார்டனில் ரஜினியின் வீடு அமைந்துள்ள பகுதியில் நடந்ததென்னவோ வேறாக இருந்தது. "எப்படியும் தன் வீட்டிலிருந்து வெளியே வந்து தங்களுக்குத் தரிசனம் தருவார், அரசியல் கட்சி அறிவிப்பு இல்லாவிட்டாலும் தங்கள் மத்தியில் உரையாற்றுவார்" என்ற எதிர்பார்ப்போடு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பல்வேறு இடங்களிலும் இருந்து முண்டியடித்துக் கொண்டு குவிந்தனர். ஆனால், "ரஜினி சென்னையிலேயே இல்லை" என்று தகவல் தெரிவிக்கப்பட்டதால் வந்திருந்த ரசிகர்கள் வெகுநேரம் காத்திருந்துவிட்டுத் திரும்பினர். 

போயஸ்கார்டனில் குவிந்த அவர்களைப் போலீஸார் திருப்பி அனுப்பினர். பலர் அங்கிருந்து செல்ல மறுத்ததால், போலீஸார் அவர்களை விரட்டியடிக்க நேரிட்டது.

பிறந்தநாளையொட்டி, அவர் வெளியூர் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. ரசிகர்களுக்காக ஓர் அறிக்கையாவது வெளியிட்டிருக்கலாம். அல்லது அரசியல் பிரவேசம் உண்டு; இல்லை என்பதையாவது ரஜினி தன் ரசிகர்களுக்குத் தெளிவுபடுத்தலாம். 

"ஆற்றில் வெள்ளம் ஓடுகிறது என்று கருதி, கரையிலேயே நின்றுகொண்டிருந்தால் எப்படிக் குளிப்பது. நீச்சல் தெரிந்தவர்கள், எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டார்கள். எந்தவொரு வெள்ளத்தையும் நீந்திக் கடந்துவிடுவோம் அல்லது அது போறபோக்கிலாவது நம்மை அடித்துச் செல்லட்டும்" என்று கருதி குதித்துவிடுவர். 

"அரசியல் என்று முடிவெடுத்துவிட்டால், உடனடியாக அதற்கான ஆயத்த பணிகளை முடித்து, முடிவாக அறிவித்துவிட வேண்டியதுதானே?" என்கின்றனர் ரஜினி விசுவாசிகள் சிலர். 

கமலுடன் ரஜினிமற்றொருபுறம் நடிகர் கமல்ஹாசன், அரசியல் களத்தில் மிரட்டிக் கொண்டிருக்கிறார். அரசியல் தொடர்பாகச் சமூக வலைதளம் ஒன்றைத் தொடங்கியதுடன், டுவிட்டரில் பதிவிடுவதை மட்டும் வாடிக்கையாகக் கொண்டுள்ளார். ரஜினிக்கு அவர் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார். 

தவிர, பல்வேறு தலைவர்களும் ரஜினிகாந்துக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். என்றாலும் ரஜினியோ நேற்றிரவு வரை, எந்தவொரு அரசியல் அறிவிப்பையும் வெளியிடவில்லை. 

அவரின் பிறந்த நாளுக்கு ரசிகர்களுக்கு கிடைத்த பரிசு என்னவென்றால், அவர் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் 'காலா' படத்தில் புதிய போஸ்டர், புகைப்படம் மட்டுமே. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்கள் மிகவும் சோர்வடைந்துள்ளனர். 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பரபரப்புக்கு மத்தியில், ரஜினி அரசியல் பிரவேச அறிவிப்பு இருக்கும் என்ற தகவல்களும் அவ்வப்போது எழுந்ததை மறுக்க முடியாது. தமிழ் தொலைக்காட்சி ஊடகங்கள் அனைத்திலும் ரஜினி நடித்த படங்களும் அவர் படத்திலிருந்து காட்சிகளும் ஒளிபரப்பப்பட்டதோடு, இந்த பிறந்த நாள் எண்டிங்கானது. 

"இந்த ஆண்டில், ரஜினி தன் 67 வது பிறந்த நாளின்போது அரசியல் கட்சித் தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிடுவார்" என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்து, தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் சென்றனர். 

ரஜினி திரைப்படத்தில் பேசும் வசனத்தைப் போலவே, "எப்போ வருவார் எப்படி வருவார்னு யாருக்கும் தெரியாது; ஆனா வர வேண்டிய நேரத்தில் கரெக்டா வருவார்னு" பார்த்தால் அரசியலுக்கு வர வேண்டிய காலம் கனிந்து வெகுநாள்களாகியும் இன்னும் வரவே இல்லை என்பதுதான் ரசிகர்களின் ஏமாற்றமாக உள்ளது. 

இனி என்ன?... ரஜினியின் அடுத்த பிறந்தநாளைக்குப் பார்த்துக்கலாம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க