Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

"மீனவர்களைப் படகிலேயே விட்டுட்டு வந்துட்டாங்க கடலோரக் காவல் படை!" - கரைக்குத் திரும்பியவர்களின் வாக்குமூலம் #SaveFishermen

Chennai: 

நாகை மாவட்டத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்று ஒகி புயலில் காணமால் போன மீனவர்களை மீட்கக் கோரி ( 11.12.2017 ) அன்று நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடத்தி ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. அக்கரை பேட்டையிலிருந்து நாகை ரயில் நிலையம் வரை மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் அணி திரண்டு சென்றனர். போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்நாடு மீனவர் பெண் தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் காளியம்மாள் கூறியதாவது, “ஆழ்கடல் மீன்பிடிப்பை வங்கிக் கடன் கொடுத்து ஊக்குவிக்கும் அரசு, ஆழ் கடலில் மீன் பிடிக்கும் மீனவர்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறி ஆக்குவது ஏன்? பேரிடர் காலங்களில் மீனவர்களுக்கு உதவ ஒவ்வொரு மீன்பிடி மாவட்டத்திலும் ஹெலிகாப்டருடன் கூடிய ஹெலிபேடு அமைக்க வேண்டும். இறந்த மீனவர்களை எடுத்துவர எதற்கு கடலோர காவற்படை? கடல் அன்னையே அவர்களை கரையொதுக்கிவிடுவாளே” என்றார். 

மீனவர்கள் குடும்பம்

நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள  சந்திரபாடியிலிருந்து 26-ம் தேதி கொச்சி துறைமுகம் சென்று அங்கியிருந்து மீன் பிடிக்கச் சென்ற 5 மீனவர்களில் கரைக்கு திரும்பிய அறிவழகன், சுகன் கூறியதாவது, “போன மாசம் 26-ம் தேதி  நாங்க 5 பேர் கடலுக்குப் போனோம் கடலுக்கு உள்ள போயிட்டா எங்களுக்கு தொலைதொடர்பே கிடையாது. அதனால் புயல் அறிவிப்பு எங்களுக்குத் தெரியாது. 30-ம் தேதி காத்தும் அலையும் வேகமாக அடிக்கிறதைப் பார்த்துதான் நாங்கள் ஓரளவு சுதாரித்துக்கொண்டோம். எங்க போறது என்ன செய்யறதுன்னு தெரியாம தான் 2 நாள் படகுலயே இருந்தோம். அப்போ என்கூட வந்த சுகன்னுக்கு உடம்பு சரியில்லாம போயிடுச்சு.அந்தசமயம் அங்க  கடற்படை கப்பலில் வந்தாங்க அவங்களைப் பார்த்த பிறகுதான் எங்களுக்கு நிம்மதியா இருந்தது. நாங்க எல்லாரும் அவுங்களோட போயிடலாம்னு நினைச்சோம். ஆனால், அவுங்க  உடம்பு சரியில்லாத சுகனை மட்டும்தான் ஏத்திகிட்டாங்க, பிறகு கெஞ்சி கேட்டதுனால என்னையும் ஏத்திக்கிட்டாங்க. மிச்சம் 3 பேரை எவ்வளவு கெஞ்சியும் கப்பல்ல ஏத்திக்கவே இல்லை. இப்ப அந்த மூணு பேரும் எங்க இருக்காங்கனு தெரியவே இல்லை. கடல்ல உயிரோட இருக்குற மீனவர்களைக் கண்டுபிடிக்கறதே அரிதா இருக்குற இந்த நேரத்துல நம்ம கடற்படை கிடைத்தவர்களையும் விட்டுட்டாங்க” என்று சோகத்துடன் பகிர்ந்தார்கள். 

மேலும் தொடர்ந்த அவர்கள், “அவுங்க கூடவே நாங்க கொச்சி துறைமுகத்துக்கு வந்தோம். அங்கே கேரள மக்கள் வரவேற்று மற்ற வசதியெல்லாம் செய்துகொடுத்து எங்களைப் பாத்துக்கிட்டாங்க அவுங்க ஏற்பாட்டுலதான் எங்க ஊருக்கு வந்துசேர்ந்தோம். ஒரு வாரமா வேலை இல்லாம வீட்டுலதான் இருக்கோம். பேருக்கு 2 அதிகாரிங்க தொலைபேசியில தொடர்புகொண்டு விசாரித்தாங்க. மற்றபடி அவங்க வேற எதுவும் செய்யலை தரங்கம்பாடி தாலுக்கா குட்டியாண்டியூர் கிராமத்தில் இருந்து குமரிக்கு மீன் பிடிக்கச் சென்ற சஞ்சீவ்கண்ணு மனைவியைப் பார்க்கச் சென்றபொழுது வீடே அமைதியாக இருந்தது. சஞ்சீவ்கண்ணுவின் இளையமகன் கலைச்செல்வன், அப்பா எப்போ வீட்டுக்கு வருவார் என்ற ஏக்கத்தோடு சாலையையே பார்த்துக் கொண்டிருந்தான். தலைவிரிகோலத்தில் அழுது கொண்டிருந்த சஞ்சீவ்கண்ணுவின் மனைவி நம்மிடம் பேசியபோது... 

மீனவர்கள்

”எனக்கு வெளியுலகம் எதுவுமே தெரியாதுங்க வேலைக்குகூட நான் போனது இல்லை. அவர்தான் எல்லாத்தையும் பார்த்துப்பாரு. எங்க ஊரு பக்கம் தொழில் ரொம்பவே குறைஞ்சிடுச்சு. அதனால்தான் இந்தமுறை கன்னியாகுமரி போனாரு. கடைசியா 26-ம் தேதி கன்னியாகுமரியில் இருக்கேன்னு போன் பண்ணுனாங்க. அதுக்கு அப்புறம் அவர்கிட்ட நான் பேசவே இல்லை. ரொம்பநாளைக்குப் பிறகும் தொடர்பே இல்லாததால நாங்க ரொம்ப பயந்துட்டோம். எங்க உறவுக்கார பையன்தான் கன்னியாகுமரி வரைக்கும் போயி 5 நாள் தங்கி அதிகாரிகளைப் பார்த்தான். அவங்க சரியான தகவலே சொல்லமாட்றாங்க. நான் இந்த பிள்ளைகளை வச்சிக்கிட்டு என்ன பண்ண போறேன்னு தெரியல” என்று கதறினார். 

அப்போது அவருடைய உறவினரான யசுகன் கூறியபொழுது ”தாலுக்கா ஆபிஸ்ல இறப்பு சான்றிதழ் வாங்க விண்ணப்பிச்சா கூட ஊரு வி.ஏ.ஓ. அக்கம் பக்கத்துல உள்ள மக்களிடம் கேட்டுவிட்டு இறப்பு சான்றிதழ் கொடுத்துடுவாங்க. கடல்ல எங்க கண்ணு முன்னாடியே ஒருத்தவங்க மூழ்கி இறந்துட்டாங்கனு சொன்னாலும்  இறப்பு சான்றிதழ் தரமாட்டாங்க. ஏழு வருஷம் கழிச்சுதான் இறப்பு சான்றிதழ் கிடைக்கும். அதுவரைக்கும் அந்தக் குடும்பத்துக்கு எந்த அரசு உதவியும் கிடைக்காதுங்க. வெறும் 100 நாட்டிகல் மட்டும் தேடும் கடற்படை 500 நாட்டிகல் வரை சென்று தேடினால் இன்னும் பல மீனவர்களை மீட்கலாமே” என்றார் ஆதங்கமாக. 

மீனவர்கள்

காரைக்காலில் மீன் பிடி பொருள்கள் வியாபாரம் செய்யும் தரங்கம்பாடி மாரியப்பன் கூறியதாவது, 

”இந்தியாவில மொத்தம் 13 மாநிலங்களில் மீன் பிடி தொழில் நடைபெறுகிறது. அந்தந்த மாநிலங்களில் மட்டுமே மீன்வளத்துறை இருக்கிறது. ஆனால், மத்தியில் இதற்காகத் தனி அமைச்சகம் இல்லை. பலகோடி ரூபாய் அன்னியச்செலாவணி ஈட்டித் தரும் மீனவர் தொழிலுக்கு தனி அமைச்சகம் அமைக்காதது ஏன்?. தொழில்துறை வேலைவாய்ப்பில் முன்னணியில் இருப்பதாகக் கூறிக்கொள்ளும் தமிழக அரசு பேரிடர் காலங்களில் விரைந்து செயல்படவில்லையே. கடலில் திசைக்காட்டும் கருவி, பாதுகாப்பாக பயணிக்க உதவும் சிலிண்டர் போன்ற உபகரணங்களை அதிக விலையில் வாங்க வேண்டி உள்ளது. இதை அரசே மாநிலத்தில் விற்பனை செய்தால் நன்றாக இருக்கும். கடற்படைக் காவலர்கள், தமிழர்கள் என்றாலே மதிப்பதில்லை. கடலோரக் காவற்படையில் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த அல்லது தமிழக அரசு அதிகாரிகளாக நியமித்தால் எங்களுக்கு இந்த நிலைமை வராது. ஏனெனில் அவர்களுக்குதான் எந்ததெந்த காலச்சூழ்நிலைகளில் மீனவர்கள் எந்தப் பகுதிக்கு செல்வார்கள் என்று நன்கு தெரியும். அது ஆபத்து காலங்களில் மீனவர்களை மீட்க அழைத்து வருவதற்கு உதவியாக இருக்கும். பெரும்பாலும் மீன்வளத்துறை அமைச்சராக மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவரை நியமிக்கும் அரசு மீன்வள அதிகாரிகளை அவ்வாறு நியமிப்பதில்லை. அதனால் அவர்களுக்கு எங்கள் துன்பம் புரியவில்லை. மீனவர் நலவாரியம் பல ஆண்டுகளாக செயல்படாமலேயே  உள்ளது. ஆனால், ஆண்டுதோறும் அந்த வாரியத்துக்குப் பெரும்தொகை ஒதுக்கப்படுகிறது.  ஆனால், அந்தப் பணம் எப்படி செலவழிக்கப்படுகிறது என்பது மீனவளத்துறை அமைச்சர் ஜெயக்குமாருக்கே வெளிச்சம்.

தனது மீன்பிடி தொழில் பற்றி மீனவர் பெரியவர் ஒருவர் கூறும்போது,”எங்க நிலைமையை பற்றி என்னத்த சொல்றது அந்தக் காலத்திலேயே எம்.ஜி.ஆர்., படகோட்டி படத்துல “தரைமேல் பிழைக்க வைத்தான் எங்களை தண்ணீரில் மிதக்க வைத்தான்” என்று பாட்டாவே பாடிட்டாரு” என்று கூறி கண்ணீர் சிந்தி நகர்ந்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?
Advertisement

MUST READ