Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆளுநருக்கு வீடு தேடிய கதை தெரியுமா?...- சென்னை பிறந்த கதை - பகுதி 3

ப்போதெல்லாம் காலை பேப்பரைத் திறந்தால் நிச்சயம் ஆளுநர் மாளிகையைப் பற்றி ஒரு செய்தியாவது கண்ணில்பட்டுவிடுகிறது. இந்தளவுக்குப் பரபரப்பாக இருக்கும் ஆளுநர் மாளிகையை யார் கட்டியது? யாருக்காக கட்டினார்கள்? எப்போது கட்டினார்கள்? இந்த கேள்விகளுக்கு விடை தேடிப் போனால் நிறைய சுவாரஸ்யமான தகவல்கள் எதிரில் வந்து நிற்கின்றன.

ஆளுநர் மாளிகை

கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் சென்னையில் கோட்டை கட்டி குடியேறிய ஆரம்ப நாள்களில், ஆளுநர் தொடங்கி கடைநிலை ஊழியர் வரை அனைவரும் கோட்டைக்குள்தான் தங்கியிருந்தார்கள். அனைவரும் கோட்டைக்குள் இருந்த மெஸ்ஸில்தான் உணவு உண்பார்கள். காலப்போக்கில் கம்பெனி ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது. மூத்த ஊழியர்கள் இங்கிலாந்தில் இருந்த தங்கள் குடும்பங்களை சென்னைக்கு இடம்மாற்றினர். இளம் ஊழியர்கள் பலருக்கு திருமணமாகி குழந்தைகள் பிறந்தன. எனவே மூத்த அந்தஸ்தில் உள்ள குடும்பஸ்தர்கள் தங்குவதற்கு தனித்தனி வீடுகள் கட்ட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஒரே இடத்தில் உணவு அருந்தும் பழக்கம் மெல்ல மறைய ஆரம்பித்தது.

கொஞ்சம் காசு வைத்திருந்த கம்பெனி ஊழியர்கள் தங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள நிலத்தை வாங்கி வேலி போட்டு, சிறிய தோட்டம் உருவாக்கிக்கொண்டனர். இதைப் பார்த்த மற்றவர்களும் பாரதி மாதிரி ’காணி நிலம் வேண்டும் பராசக்தி’ என்று ஆசைப்பட ஆரம்பித்து விட்டார்கள். முதல்கட்டமாக, கம்பெனி ஊழியர்கள் பொழுதுபோக்கவும், ஓய்வு நேரத்தில் விளையாடவும் ஒரு தோட்டத்தை உருவாக்குவதென முடிவானது. அதன்படி வெள்ளையர் நகரத்து மதில் சுவரையொட்டி, சுமார் 8 ஏக்கர் நிலப்பரப்பில், தற்போது சட்டக் கல்லூரி இருக்கும் இடத்தை, தோட்டமாக மாற்றி அதற்கு ’கம்பெனி தோட்டம்’ எனப் பெயரிட்டனர்.

சில ஆண்டுகளுக்கு இந்த கம்பெனி தோட்டம் நல்ல பொழுதுபோக்கு இடமாகவும், விளையாட்டுத் திடலாகவும் விளங்கியது. ஆனால், சீக்கிரமே பல்வேறு காரணங்களால் இந்தத் தோட்டம் அழியத் தொடங்கியது. கருப்பர் நகரத்துக்கு வடமேற்கில் அமைந்திருந்த இந்த தோட்டத்தை ஐரோப்பியர்கள் கல்லறைத் தோட்டமாக மாற்ற ஆரம்பித்ததும் இதற்கு மிக முக்கிய காரணம். எனவே, வேறொரு புதிய தோட்டம் அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.

இதனையடுத்து, மெட்ராசுக்கு வரும் சிற்றரசர்களையும், முக்கிய பிரமுகர்களையும் வரவேற்று உபசரிக்க, விருந்தளிக்க சரியான இடம் கோட்டைக்குள் இல்லை என்பதை சுட்டிக்காட்டி லண்டன் நிர்வாகிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நிர்வாகம், பெரிய செலவு வைக்காமல் ஏதாவது செய்துகொள்ளுங்கள் என்று ஒப்புதல் அளித்தது.

லண்டனின் ஒப்புதல் கிடைத்ததும் புதிய தோட்ட வீடு அமைக்கும் பணி வேகம் பிடித்தது. கூவம் நதிக்கரை ஓரத்தில் தற்போது அரசு பொது மருத்துவமனை அமைந்திருக்கும் இடத்தில் ஒரு புதிய தோட்ட வீடு கட்டப்பட்டது. பழவேற்காட்டில் இருந்த டச்சு ஆளுநர் 1688-ம் ஆண்டு ஜூலை 28-ம் தேதி படகு மூலம் இந்த தோட்ட வீட்டுக்கு வருகை தந்ததாகக் குறிப்புகள் இருக்கின்றன.

1686-ம் ஆண்டு முதல் அப்போதைய மெட்ராஸ் ஆளுநர் வில்லியம் கைஃபோர்ட் இந்த தோட்ட வீட்டில் தங்க ஆரம்பித்தார். அவரது உடல்நிலை குன்றி இருந்ததால், இயற்கையான சூழலில் அமைந்திருந்த இந்த தோட்ட வீட்டில் தங்க அவருக்கு அனுமதி கிடைத்தது. இப்படித்தான் கோட்டைக்குள் இருந்த ஆளுநர் முதல்முறையாக வெளியில் தங்கும் வைபவம் தொடங்கியது.

ஆளுநர் மாளிகை

அதற்கு பிறகு ஆளுநர்கள் கோட்டையிலோ தோட்ட வீட்டிலோ விருப்பப்படி தங்கிக் கொள்வது வழக்கமாகிவிட்டது. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளுக்கு பின்னர், இப்படி சந்தோஷமாக தோட்டத்தில் உலவிக் கொண்டிருந்த மெட்ராஸ் ஆளுநர்களுக்கு பிரெஞ்சுப் படைகள் மூலம் ஆபத்து வந்தது. 1746இல் மெட்ராசை பிரெஞ்சுப் படைகள் முற்றுகையிட்டபோது, கிழக்கிந்தியப் படைகள் கோட்டைக்குள் முடங்க வேண்டியதாகிவிட்டது.

குப்புறத்தள்ளிய குதிரை குழியும் பறித்த கதையாக, ஆளுநர்  ஓய்வெடுத்துக் கொண்டிருந்த தோட்ட வீட்டை ஆயுதக் கிடங்காக மாற்றிவிட்டது பிரெஞ்சுப்படை. இங்கிருந்தபடி கோட்டையைத் தாக்கி வெற்றிகரமாக கைப்பற்றிய அவர்கள், அழகான அந்த தோட்ட வீட்டை இடித்து தரைமட்டமாக்கிவிட்டனர். பின்னாளில் இதேபோல ஆங்கிலேயப் படை இந்த வீட்டை ஆயுதக் கிடங்காக பயன்படுத்திவிடக் கூடாது என்பதற்காக எடுக்கப்பட்ட முடிவு அது. இப்படியாக கம்பெனி ஊழியர்களின் இரண்டாவது தோட்டமும் இல்லாமல் போனதால், ஆளுநர் மீண்டும் கோட்டைக்குள் முடங்க வேண்டியதானது. எனவே, மீண்டும் ஆளுநருக்கு வீடு தேடும் படலம் தொடங்கியது.

 

இந்த தொடரின் முந்தைய பகுதிகளைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

அத்தியாயம் 1
அத்தியாயம் 2

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?
Advertisement

MUST READ