ஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்!

vikatan-logo

குஜராத்தில் பி.ஜே.பி-யைக் காப்பாற்றிய 9,981 வாக்குகள்..!

குஜராத்

ராகுல் இந்து இல்லை என்றனர், தேர்தலில் முறைகேடு செய்ய பாகிஸ்தான் உதவுகிறது என்றனர், நான் டீ விற்றவன், நாட்டை விற்க மாட்டேன் என்றார் மோடி... அழுதார்... ராகுலை விமர்சித்தார்... உங்களில் நானும் ஒருவன் என்றார்... வென்றார்... குஜராத்தில் பி.ஜே.பி வென்றது என்பதைவிட மோடி பி.ஜே.பி.யை வெல்ல வைத்தார் என்றுதான் சொல்ல வேண்டும். மக்களுக்கு பி.ஜே.பி மீது இருந்த நம்பிக்கையைவிட மோடிமீதுதான் அதிக நம்பிக்கை அதுதான் பி.ஜே.பிக்கு 99 இடங்களைப் பெற்று தந்துள்ளது. ஆட்சியை அமைக்கப்போவது என்னவோ பி.ஜே.பிதான. ஆனால், சென்ற முறை இருந்த பலம் இந்த முறை பி.ஜே.பியிடம் இல்லாமல் போய்விட்டது. குஜராத்தைக் காட்டி பிரதமரானார் மோடி என்றவர்களுக்கு மீண்டும் பிரதமர் பரீட்சையின் முன்தேர்வாக இருக்கும் என்று பார்க்கப்பட்ட குஜராத் தேர்தலில் பி.ஜே.பியின் பலம் தராசில் இறங்குமுகமாகியுள்ளது. தேர்தல் முடிவுகளில் பி.ஜே.பியின் சாதக, பாதகங்கள் இதோ....


அது என்ன 9,981 வாக்குகள்?

9,981 வாக்குகள் இல்லையென்றால் குஜராத்தில் பி.ஜே.பி எதிர்க்கட்சியாகதான் இருந்திருக்க நேரிடும். 2,000 வாக்குகளுக்கு குறைவான வித்தியாசத்தில் 8 தொகுதிகளில் பி.ஜே.பி வென்றுள்ளது. இவற்றில் மூன்று தொகுதிகள் 1,000-க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்றவை. இவற்றின் கூட்டுத்தொகை 9,981 வாக்குகள் இந்த வாக்குகள்தான் பி.ஜே.பியை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியுள்ளது. அதேபோல் காங்கிரஸ் கட்சியும் இதே 2000 வாக்குகளுக்கு குறைவான வாக்கு வித்தியாசத்தில் 8 தொகுதிகளை வென்றுள்ளது.

காங்கிரஸ் 33 : பி.ஜே.பி 16

2012-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலோடு ஒப்பிடுகையில் பி.ஜே.பி 16 இடங்களை இழந்திருந்தது. அதே சமயம் காங்கிரஸ் சென்ற தேர்தலைவிட இந்தமுறை 16 இடங்களை வென்றுள்ளது. இதையும் தாண்டி சென்ற முறை காங்கிரஸ் வென்ற 16 தொகுதிகளை பி.ஜே.பி கைப்பற்றியது. ஆனால், காங்கிரஸோ சென்ற முறை பி.ஜே.பி வென்ற 33 தொகுதிகளை தன் வசப்படுத்தியுள்ளது. காங்கிரஸ் வசம் இருந்த மூன்று தொகுதிகளை சுயேச்சைகள் கைப்பற்றி அசத்தியுள்ளனர். 

மாற்றத்தை விரும்பாத 123 தொகுதிகள்:

காங்கிரஸ் - பி.ஜே.பி தொகுதிகளுக்கு அனல் பறக்கும் பிரசாரம் செய்து, மோடி, ராகுல், அமித்ஷா என டெல்லிவாலாக்கள் தெருவில் வந்து பிரசாரம் செய்தபோதும் 123 தொகுதி மக்கள் சென்ற முறை வந்தவர்களே இந்த முறையும் வரட்டும் என்று முடிவெடுத்துள்ளனர். பி.ஜே.பியின் 81 தொகுதிகள் மீண்டும் பி.ஜே.பிக்கே கிடைத்தன. காங்கிரஸின் 42 தொகுதிகள் மீண்டும் காங்கிரஸ் வசமே வந்தன. முடிவுகளை 58 தொகுதிகள்தான் தீர்மானித்தன. 

குஜராத்

வாக்கு வங்கி நிலவரம்:

2012-ம் ஆண்டு 47.9 சதவிகிதமாக இருந்த பி.ஜே.பி-யின் வாக்கு வங்கி இந்த முறை 49.1 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 38.9 சதவிகிதமாக இருந்த காங்கிரஸின் வாக்கு வங்கி 41.4 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. பி.ஜே.பி வளர்ந்ததைவிட காங்கிரஸ் இரட்டிப்பாக வளர்ந்துள்ளது என்பதைத்தான் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. 

மோடி, ராகுலுக்கு ''நோ'' :

ஒரு தொகுதியில் நிற்கும் எந்த ஒரு வேட்பாளரையும் பிடிக்கவில்லை அல்லது தகுதியானவராக இல்லை என்று நினைத்தால் ''நோட்டா'' என்றும் யாருக்கும் வாக்களிக்கவில்லை என்ற பட்டனை அழுத்தி வாக்களிக்கலாம். இந்த முறையில் குஜராத்தில் வாக்களித்தவர்கள் 5 லட்சத்து 51 ஆயிரத்து 615 பேர் இது ஒட்டுமொத்த வாக்குப்பதிவில் 1.8 சதவிகிதம். இந்த வாக்குகள் பி.ஜே.பிக்கு கிடைத்திருந்தால் காங்கிரஸின் 55 தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கலாம். நேர்மாறாக இந்த வாக்குகள் காங்கிரஸ் வசம் வந்திருந்தால் பி.ஜே.பியின் 50 தொகுதிகள் காங்கிரஸுக்கு கிடைத்திருக்கும். 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்குப் பின் அதிக சதவிகித நோட்டா ஓட்டுகள் பதிவானதில் குஜராத் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. மக்களின் அதிருப்தி பட்டியலில் முதலிடம் பீகார் மாநிலத்துக்கு கிடைத்துள்ளது. 

குஜராத்

கிராமம் vs நகரம்:

மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 73 தொகுதிகள் நகர்ப்புற தொகுதிகள். அவற்றில் 56 தொகுதிகளை பி.ஜே.பியும், 17 தொகுதிகளை காங்கிரஸும் கைப்பற்றின. அதேசமயம் 109 கிராமப்புறத் தொகுதிகளில் 43 தொகுதிகளை பி.ஜே.பியும் 62 தொகுதிகளை காங்கிரஸும், பிற கட்சிகள் 4 தொகுதிகளையும் கைப்பற்றின. கிராமத்தில் காங்கிரஸும் நகரத்தில் பி.ஜே.பியும் தங்கள் பலம் வாய்ந்தவர்களாக நிலைப்படுத்திக்கொண்டன.

பி.ஜே.பி-க்கு இது வெற்றி முகம், காங்கிரஸுக்கு இது வளர்ச்சி முகம், மக்களும் தங்களின் அதிருப்தி முகத்தைக் காட்டியுள்ளனர். இந்த தேர்தல் மோடிக்குப் பலத்தைக் காட்டியிருக்கிறது. ராகுலுக்கு நம்பிக்கையை வர வைத்திருத்திருக்கிறது. 2019-ம் ஆண்டின் இந்தியப் பிரதமர் யார் என்பதற்கான கடுமையான போட்டியின் முதல் படியில் பி.ஜே.பி 99 : காங்கிரஸ் 77 என்ற நிதான தொடக்கத்தோடு ஆரம்பித்துள்ளது இந்த ஆட்டம். குஜராத் மீண்டும் இந்தியாவின் பிரதமர் தேடலுக்குத் தொடக்கப்புள்ளியாகியுள்ளது. 

Source: Election Commission of India 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!