வெளியிடப்பட்ட நேரம்: 12:42 (19/12/2017)

கடைசி தொடர்பு:12:56 (19/12/2017)

ஜெயலலிதா வீட்டிலிருந்து தீபா வெளியேற்றப்பட்டது ஏன்? - சசிகலா வீழ்ந்த கதை - அத்தியாயம் 3

சசிகலா தொடர்

 

ஜெயலலிதாவோடு அவரது அண்ணன் ஜெயக்குமார் குடும்பத்தைச் சேர்க்க ஜெயக்குமாரின் உதவியாளர் மேகநாதன் போராடிக்கொண்டிருந்த நேரத்தில்தான் அவர்மீது கஞ்சா வழக்குப் பாய்ந்தது. மேகநாதனின் மனைவி ரேணுகாதேவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் போட்ட ஹேபியஸ் கார்பஸ் மனுவில்தான் சசிகலாவின் சதி அம்பலமானது. ‘தமிழக முதல்வரையும் அவரின் சகோதரர் குடும்பத்தையும் சேர்த்து வைக்கும் முயற்சியை என் கணவர் மேகநாதன் செய்துவந்தார். அதை சசிகலா தடுக்கிறார். அதனால்தான் என் கணவர்மீது கஞ்சா வழக்குப் போட்டிருக்கிறார்கள். சசிகலாவின் தூண்டுதலில்தான் இந்த வழக்கு போடப்பட்டிருக்கிறது’’ என ஹேபியஸ் கார்பஸ் மனுவில் குறிப்பிட்டிருந்தார் ரேணுகாதேவி. அந்த நேரத்தில்தான் எதிர்பாராத விதமாக ஜெயலலிதாவின் அண்ணி விஜயலட்சுமி மனு ஒன்றை நீதிமன்றத்தில் அளித்தார். ‘முதல்வருடன் என் குடும்பத்துக்கு நெருக்கத்தை ஏற்படுத்த மேகநாதன் போராடினார். இது பிடிக்காத சசிகலா, எங்கள் குடும்பத்தில் இருந்து மேகநாதனை வெளியேற்ற முயற்சிசெய்து வந்தார். அதன் ஒரு பகுதியாகத்தான், அப்பாவியான மேகநாதன்மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது’ என அந்த மனுவில் சொல்லியிருந்தார் விஜயலட்சுமி.

ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் குடும்பம் கார்டனிலிருந்து விரட்டியடிக்கப்பட்டதற்கும், ஜெயக்குமாரின் உதவியாளர் மேகநாதன் மீது கஞ்சா வழக்கு பாய்ந்தற்கும் மையப்புள்ளி தீபா. ஜெயக்குமார் குடும்பம் போயஸ் தோட்டத்தில் இருந்தபோது ‘செல்லப் பெண்’ணாக வலம் வந்தார் தீபா. அவரின் துடுக்குத்தனமும் குறும்பும் ஜெயலலிதாவுக்கு ரொம்பவே பிடிக்கும். ஜெயலலிதாவுடன் நெருக்கமாக இருந்ததால் சசிகலா ஆட்களால், தீபா தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டார். சசிகலா குடும்பத்தினரை தீபா சட்டை செய்யவில்லை. தீபாமீது ஜெயலலிதா அளவு கடந்த பாசம் வைத்திருந்ததும் சசிகலாவுக்கு எரிச்சலை உண்டாக்கியது. போயஸ் கார்டனில் புது வரவுகளாக சசிகலாவும் அவரின் உறவுகளும் தங்க ஆரம்பித்தனர். ஜெயக்குமாரின் குடும்பத்துக்கும் சசிகலா குடும்பத்துக்கும் சிறுசிறு உரசல்கள் ஏற்பட ஆரம்பித்தன. அதிகாரம் செலுத்திக்கொண்டிருந்த சசிகலா குடும்பத்துக்கு, ஜெயக்குமார் குடும்பத்தைச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. குறிப்பாக தீபாவை. காரணம், அவர் ஜெயலலிதா சாயலில் இருந்தது மட்டுமல்ல. இன்னும் வேறுவேறு காரணங்கள்.

தீபா

ஒரு நாள் போயஸ் கார்டன் வீட்டில் முதல்வர் ஜெயலலிதா அமரும் நாற்காலியில் தீபாவும் அமர்ந்தார். அது, முதல்வர் மட்டுமே அமரும் பிரத்யேக நாற்காலி. அதில் அமர்ந்த தீபா, ஜெயலலிதாவைப் போல போஸ் கொடுத்து அமர்ந்தார். விவரம் அறியாத சின்னப் பெண்ணாக தீபா நடந்துகொண்டதை ஜெயலலிதாவிடம் வேறுமாதிரியாகக் கொண்டு சேர்த்தார்கள்.  ‘‘உங்களைப் போலவே தீபா இமிடேட் செய்கிறாள்’’ என ஜெயலலிதாவிடம் ‘வத்தி’ வைத்தார்கள். விளைவு? ஜெயக்குமார் குடும்பம் வெளியேற்றப்பட்டது. ஜெயலலிதாவின் சாயலில் இருப்பதால், ஜெயலலிதாவைப் போலவே இமிடேட் செய்வதால், ‘தீபா, அடுத்த வாரிசு அவதாரம் எடுக்கலாம்’ என அச்சப்பட்டது சசிகலா குடும்பம்.

 

ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமார், அண்ணி விஜயலட்சுமி, இவர்களின் பிள்ளைகள் தீபா, தீபக், சித்தி ஜெயலட்சுமி என ரத்த உறவுகள் மீண்டும் உயிர் பெறுவதை விரும்பாத சசிகலா எடுத்த அஸ்திரம்தான், ‘வளர்ப்பு மகன்’! ஜெயக்குமார் குடும்பத்தினர், வாரிசாக வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காக, தன் அக்கா வனிதாமணியின் மகன் வி.என்.சுதாகரனை ஜெயலலிதாவின் தத்துப்பிள்ளையாகக் கொண்டுவந்தார் சசிகலா. தன் தத்துப்பிள்ளையாக சுதாகரனை ஏற்றுக்கொள்ளப்போவதாக அவர் அறிவித்தார். ஜெயலலிதாவுக்கு வாரிசாக வருபவர்கூட தன் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என நினைத்தார் சசிகலா.

 

வளர்ப்பு மகன் சுதாகரனின் தடபுடல் திருமணம், 1995-ம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்றது. வளர்ப்பு மகனாக அவரைத் தேர்வு செய்தபோது ஜெயக்குமார் குடும்பத்தின் ஒப்புதல் பெறப்படவில்லை. திருமணத்தை நடத்தியபோதும் அந்தக் குடும்பத்துக்கு அழைப்பு போகவில்லை. சுதாகரனை வளர்ப்பு மகனாக அறிவித்த பிறகு, ஜெயக்குமார் குடும்பம் நொறுங்கிப் போனது. `ஜெயலலிதாவோடு இனி எந்தக் காலத்திலும் சேர முடியாது’ என்பது தெரிந்து போனது. ஏற்கெனவே உடல்நலம் குன்றியிருந்த ஜெயக்குமார், வளர்ப்பு மகன் திருமணத்துக்குப் பிறகு மேலும் பாதிப்படைந்தார். அந்தத்  திருமணம் நடந்த அடுத்த மாதமே, ஜெயக்குமாரின் மரணச் செய்தி வந்து சேர்ந்தது.  அண்ணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் ஜெயலலிதா. ஜெயக்குமார் இறந்த 13 நாள்களுக்குள் தீபாவளி வந்தது. அண்ணன் மறைவால் தீபாவளியை ஜெயலலிதா கொண்டாடவில்லை. ‘‘முதல்வரின் அண்ணன் இறந்ததால் வளர்ப்புமகன் சுதாகரனுக்குத் தலைதீபாவளி வேண்டாம்’’ என குடும்ப புரோகிதர் சொல்ல, சசிகலாவுக்குக் கவலை தொற்றிக்கொண்டது. ஆனாலும் தலைதீபாவளியை சுதாகரன் கொண்டாட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் சசிகலா. ‘‘சுதாகரன், அவன் மாமனார் வீட்டில்தானே தலைதீபாவளி கொண்டாடப் போகிறான். அதை எதற்குத் தடுக்க வேண்டும்’’ என வாதாடினார் சசிகலா.இந்த தொடரின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் 
அத்தியாயம் 1
அத்தியாயம் 2

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்