Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

ஜனநாயகம் என்பது தொழில்நுட்பம் இல்லையே! - குஜராத் தேர்தல் முடிவுகள் குறித்து முன்னாள் ஐ.ஏ.எஸ்!

ஈ.வி.எம்

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் 99 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் அம்மாநிலத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது பி.ஜே.பி... முக்கியக் கட்சியாக எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் 77 இடங்களைக் கைப்பற்றி தோல்வியடைந்துள்ளது. காங்கிரஸ் கட்சி இந்தத் தேர்தலில் தோல்வியடைந்துள்ள போதிலும், முந்தைய தேர்தலை விடவும் வெற்றிபெற்றுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது, குஜராத்தில் அக்கட்சியின் முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுவதாகக் கருத்துத் தெரிவிக்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள்.

எனவே, ‘குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பி.ஜே.பி. மீண்டும் வெற்றிக்கனியைப் பறித்துள்ளது’ எனச் சொல்லப்பட்டாலும், கடந்த காலத்தில் அந்த மாநிலத்தில் நடந்த தேர்தல்களுடன் ஒப்பிட்டு, ஆய்வுசெய்தால் பி.ஜே.பி-க்கு இந்த தேர்தல் உண்மையில் பின்னடைவு என்றே சொல்கின்றனர் அவர்கள். அதற்குக் காரணம், பி.ஜே.பி. தலைமையிலான மத்திய அரசு, பணமதிப்பிழப்பு நீக்க நடவடிக்கை, ஜி.எஸ்.டி நடைமுறைப்படுத்தியது போன்ற காரணங்களினால் பி.ஜே.பி. மீது மக்கள் வெறுப்புடனேயே இருந்தனர். அதனால் இந்தத் தேர்தல் பி.ஜே.பி-க்கு மிகவும் சவாலான தேர்தல் என்றே பலரும் கருத்துத் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், அந்தக் கட்சி குஜராத்தில் 99 இடங்களுடன் மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது. இந்த வெற்றிகுறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. 'மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நடைபெற்ற முறைகேடு காரணமாகவே குஜராத் தேர்தலில் பி.ஜே.பி. வெற்றிபெற்றுள்ளது' எனச் சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பலரும் பதிவிட்டுள்ளனர். அதுமட்டுமன்றி இந்த இயந்திரங்கள் பாகிஸ்தானிலிருந்து வந்தவை என பலரும் கருத்துகளைத் தொடர்ந்து தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில் “வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் செய்ய வாய்ப்புள்ளதா? அது சாத்தியமா?” என்ற கேள்விகளைத் தேர்தல் ஆணையத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரிகளிடம் பேசினோம்.

“பழுதுபார்க்க வேண்டியது தேர்தல் அலுவலர்கள்தான்..!”

தமிழக முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவிடம் பேசியபோது, “தேர்தல் ஆணையம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இரண்டு நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்கிறது. பெங்களூரில் உள்ள 'பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்' மற்றும் 'இனவோன் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட்' என்ற இரு நிறுவனங்களிடமிருந்துதான் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன.

தேர்தலுக்காகப் பயன்படுத்தப்படும் இயந்திரங்களைக் கொள்முதல் செய்யும்போது அவை 'எந்த மாநிலத்துக்குக் கொண்டுசெல்லப்படுகிறது?' என்ற விவரம் யாருக்கும் தெரியாது. அதேபோன்று வேட்பாளர்களின் பெயர்கள், கட்சி, சின்னம் போன்றவை எந்த இடத்தில் ஒதுக்கப்படுகின்றன என்ற விவரமும் தெரியவருவதில்லை. ஒரு மாநிலத்தில் குறிப்பிட்ட தொகுதியில், வாக்குப்பதிவுக்கு முன்பாக ஒரு டம்மி போன்று அவற்றை பதிவிடும் பணிகள் நடைபெறும். தேர்தல் அலுவலர்கள் முன்னிலையில், சம்பந்தப்பட்ட அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த ஏஜென்டுகள் அப்போது பங்கேற்பார்கள். அவ்வாறு பதிவு செய்யப்படும் டம்மி வாக்குப்பதிவு சரியாக நடப்பதை, கட்சிகளின் பிரதிநிதிகள் உறுதிசெய்து, அது சரியான முறையில் இருப்பின், அதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட கட்சிகளின் சின்னம், வேட்பாளர்களின் பெயர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களில் சரிவரப் பதிவிடப்படும். இதுபோன்ற சூழ்நிலையில் வாக்குப்பதிவு நடக்கும்போது தவறுகள் நடைபெற வாய்ப்பில்லை. ஆனால், சில நேரங்களில் இயந்திரக் கோளாறுகள் ஏற்படக்கூடும். தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் இயந்திரங்களைச் சரிவரக் கையாளத் தெரியாத சூழல் போன்ற சில காரணங்களினால் மட்டுமே அதற்கு வாய்ப்புண்டு. 

 ஜனநாயகத்துக்கு எதிரானது மின்னணு வாக்குப்பதிவு  இயந்திரம்

வாக்குப்பதிவு நடைபெறும் மையங்களை அரசியல் கட்சிகள் சிறைபிடித்தால், அங்கு தவறுகள் நடைபெற வாய்ப்புண்டு. தேவசகாயம் அதேபோன்று வாக்குப்பதிவு மையத்தில் உள்ள தேர்தல் அலுவலர்கள் குறிப்பிட்ட கட்சிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டால் அங்கும் தவறுகள் நடைபெற வாய்ப்புள்ளது. எந்த மின்னணு இயந்திரமும் தானாக ஒரு கட்சிக்கு மட்டுமே வாக்குகளைப் பதிவு செய்ய முடியாது. அதற்கு வாய்ப்பில்லை. மனிதர்களின் தலையீடு இருந்தால் மட்டுமே வாக்குப்பதிவில் தவறுகளோ, குளறுபடிகளோ நடக்க வாய்ப்புள்ளது” என்றார். 

இதுகுறித்து முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான தேவசகாயத்திடம் பேசியபோது, “வாக்குப்பதிவு  இயந்திரத்தில் தவறுகள் நடைபெற வாய்ப்புள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள சிப் கார்டை மாற்றியமைக்க வாய்ப்புள்ளதாகவும் பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, தொழில்நுட்பம் மற்றும் ஐனநாயகத்தை இதில் ஆராய வேண்டியுள்ளது. ஜனநாயகம் என்பது இங்கு தொழில்நுட்பம் அல்ல... எனவே, அந்த இயந்திரங்கள் குறித்த புரிதல் இருந்தால் மட்டுமே, அது ஜனநாயகத்துக்குள் அடங்கும். ஆனால், மின்னணு  வாக்குப்பதிவு  இயந்திரத்தில்  வாக்குப்பதிவு செய்யும்போது சத்தம் மட்டுமே வருகிறது. அதில் விழும் ஓட்டு, எந்த வேட்பாளருக்கு விழுந்தது என்பது யாருக்காவது தெரியுமா? அதைப்பற்றிப் புரிதல் இல்லாத  நிலையிலேயே மக்கள்  வாக்களிக்கிறார்கள். இதுதான் ஜனநாயகமா? எனவே, இது ஜனநாயகத்துக்கு எதிரானது” என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement