ஜெயலலிதா வீடியோ வெளியீடு.. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலைப் பாதிக்குமா? #Jayalalithaa

ஜெயலலிதா சிகிச்சை வீடியோ

ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் வியாழக்கிழமை (டிசம்பர் 21) நடைபெறவுள்ள நிலையில், டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல், ஜெயலலிதா சிகிச்சை பெற்றது தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ஜெயலலிதா, 2016 செப்டம்பர் 22-ம் தேதி இரவு உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்றும் முதலில் கூறப்பட்ட நிலையில், 75 நாள்களுக்குப் பின்னர் அதே ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான சர்ச்சை தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில், அவர் சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள், தங்களிடம் உள்ளதாக சசிகலா தரப்பில் கூறப்பட்டது. இதற்கிடையே தமிழக அரசு சார்பில் ஜெயலலிதா மரணம்குறித்து விசாரணை நடத்த, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு, அவர் தன் விசாரணையைத் தொடங்கி மேற்கொண்டுள்ளார். 

நீதிபதி முன்னிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உள்ளிட்ட பலரும் ஆஜராகி தகவல்களைத் தெரிவித்துவருகிறார்கள். 

இதற்கிடையே, ஜெயலலிதாவின் மறைவால் காலியான ஆர்.கே. நகர் தொகுதிக்கு, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெறுவதாக இருந்த இடைத்தேர்தல் பணப்பட்டுவாடாவைக் காரணம் காட்டி ஒத்திவைக்கப்பட்டது. தற்போது, ஆர்.கே. நகர் தொகுதிக்கு டிசம்பர் 21 (நாளை) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தொகுதியில் பிரசாரம் ஏற்கெனவே முடிவுக்கு வந்து, தேர்தலை நடத்துவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றுவருகின்றன.

ஜெயலலிதா சிகிச்சை வீடியோ

இதுபோன்ற சூழ்நிலையில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-வாக இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள வெற்றிவேல், சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது போன்ற வீடியோ காட்சிகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஜெயலலிதாகுறித்து, அன்றாடம் வெளியாகும் தவறான செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த வீடியோவை வெளியிட்டுள்ளதாகக் கூறினார். ஆர்.கே.நகர் தேர்லுக்காக இந்த வீடியோவை வெளியிடவில்லை என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த வீடியோ காட்சிகளின் தாக்கம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களிடையே எதிரொலிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், இந்த முறை இடைத்தேர்தலை ஒத்திவைக்கக் கூடாது என்று தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், தேர்தல் ஆணையம் இந்த வீடியோ காட்சிகளைக் கருத்தில்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஒருவேளை இடைத்தேர்தல் திட்டமிட்டபடி நடைபெற்றாலும், இந்த வீடியோ காட்சிகளால் வாக்குப்பதிவும், தேர்தல் முடிவும் பாதிக்குமா என்ற வினா எழுவதைத் தவிர்க்கவும் முடியாது. வெற்றிவேல் வெளியிட்டுள்ள வீடியோவால், ஆளும் எடப்பாடி - ஓ.பி.எஸ் தரப்பு சற்றே அதிர்ச்சி அடைந்திருப்பதாகவே கூறப்படுகிறது. 

ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் என்ன முடிவெடுக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!