“வீடியோ வெளியிட்டதில் விதிகள் மீறப்பட்டுள்ளதா?” என்ன சொல்கிறார் சட்டவல்லுநர் #Jayalalithaa

  சிகிச்சை பெறும் ஜெயலலிதா

றைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க... ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் கமிஷன் அமைத்து உத்தரவிட்டது தமிழக அரசு. அந்தக் கமிஷனும் தற்போது விசாரணையைத் தொடங்கித் தீவிரமாக நடத்திவருகிறது. இதுவரை அந்தக் கமிஷனில் 26-க்கும் மேற்பட்டோர் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில், டி.டி.வி.தினகரன் ஆதரவாளரும், தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-வுமான வெற்றிவேல், இன்று காலை ஜெயலலிதா அப்போலோவில் தங்கி சிகிச்சை பெற்றுவந்த வீடியோவை வெளியிட்டு தமிழக அரசியல் களத்தை அதிரவைத்துள்ளார். 20 விநாடிகள் கொண்ட அந்த வீடியோவில் ஜெயலலிதா பழச்சாறு குடிப்பது போன்ற காட்சியும், தொலைக்காட்சி பார்ப்பது போன்ற காட்சியும் வெளியாகியுள்ளது.

அரசியல் களத்தில் புயலைக் கிளப்பியுள்ள அந்த வீடியோ, அரசின் விதிமுறைகளை மீறி வெளியிடப்பட்டுள்ளது என  தற்போது விவாதம் எழுந்துள்ளது. அதாவது, தமிழகத்தின் முதல்வராக இருந்தவர்; அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டவர். அப்படிப்பட்டவர் தங்கி சிகிச்சைபெற்ற  வீடியோவைத் தனிநபர் ஒருவர் வெளியிட முடியுமா... அதற்கு அரசின் விதிகளில் வழிவகை இருக்கிறதா என அந்த விவாதத்தில் கேள்விகள் பல எழுகின்றன. ஏற்கெனவே ஜெயலலிதா மரணம் குறித்து பலரும் சந்தேகத்தை எழுப்பிய நிலையில், அது சம்பந்தமான அறிக்கை ஒன்றைத் தமிழகச் சுகாதாரத் துறை வெளியிட்டது. அப்படியிருக்கும்போது, ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ தற்போது வெளியாகி இருப்பது பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.

“விசாரணை நடத்த அதிகாரம் உள்ளது!”

மேலும், ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை நடத்திவரும் நிலையில், அந்தக் கமிஷனிடம் வீடியோவை ஒப்படைக்காமல் வழக்கறிஞர் விஜயன் வெளியிடப்பட்டதில் விதிமீறல் நடந்துள்ளதா என்பது போன்ற கேள்விகளுடன் சட்ட வல்லுநர்களையும், சமூக ஆர்வலர்களையும் தொடர்புகொண்டு பேசினோம். அதில் மூத்த வழக்கறிஞர் விஜயனிடம் பேசியபோது, “ஜெயலலிதா மரணத்தை விசாரிக்கக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் கமிஷனிடம் வீடியோவை ஒப்படைத்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் வீடியோவை வெளியிட்டது தவறானது. அதன்படி, அந்த வீடியோ விவகாரம் தொடர்பாக ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை நடத்த அதிகாரம் உள்ளது. அதனால், கமிஷன் சம்மன் அனுப்பவும்  வாய்ப்புள்ளது. இது தொடர்பாக விசாரணையும் நடைபெறும்” என்றார். 

தேர்தலுக்காகவே வீடியோ வெளியீடு! 

இதுதொடர்பாக அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நக்கீரன் புகழேந்தியிடம் பேசியபோது, “ஆர்.கே.நகர் தேர்தலை மையமாகவைத்தே இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஆறுமுகசாமி கமிஷனிடம் அந்த வீடியோவை ஒப்படைக்காமல் அதனை வெளியிட்டதன் உண்மையான நோக்கம் ஆர்.கே.நகர் தேர்தலுக்காகத்தான் என்பது மிகவும் தெளிவாகிறது. ஒட்டுமொத்த ஆர்.கே.நகர் மக்களின் வாக்குவங்கியைப் பெறுவதற்காக இந்த வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. அப்படியே இந்த வீடியோ விவகாரம் குறித்து நக்கீரன் புகழேந்தி ஆறுமுகசாமி விசாரணைக் கமிஷன்  விசாரணையை நடத்தினாலும் எப்படியும் 15 நாள்களுக்கு மேல் ஆகும். அதற்குள் தேர்தல் முடிந்து முடிவே வந்துவிடும். அவற்றையெல்லாம்  திட்டமிட்டே இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற அரசியல் காய் நகர்த்தல்களைத் தடுக்க வேண்டும் என்றால், தேர்தல் ஆணையம் தனது விதிகளில் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும். குறிப்பாக ஒரு மாநிலத்தில் ஒரு தொகுதிக்குத் தேர்தல் நடந்தாலும் மாநிலம் முழுவதும் தேர்தல் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தவேண்டும். ஏனெனில், தற்போது எங்கே என்ன நடந்தாலும் அதனை வெளியிடக்கூடிய தொழில்நுட்ப வசதிகள் பெருகியுள்ளன. அதனால் தேர்தல் ஆணையமும் அதற்கேற்றவாறு தனது விதிகளை மேம்படுத்த வேண்டும்” என்றார்.  

முதலில், ஜெயலலிதா வீடியோ வெளியிடப்பட்டது குறித்து ராஜேஷ் லக்கானியிடம் பத்திரிகையாளர்கள் கருத்து கேட்டபோது, “அது தேர்தல் விதிகளுக்குள் வராது” என்று தெரிவித்திருந்தார். பின்னர், “126 பிரிவின்படி அந்த வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்” என ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி பிரவின் நாயருக்கு ராஜேஷ் லக்கானி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆர்.கே.நகர் தேர்தல், ஜெயலலிதா சிகிச்சை வீடியோ வெளியீடு எனத் தமிழக அரசியல் களம், அனல் வீசத் தொடங்கியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!