ஆர்.கே. நகர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது குறித்து ஜெயலலிதா சொன்னது இதுதான்! | Jayalalithaa said these regarding providing money to voters

வெளியிடப்பட்ட நேரம்: 14:24 (21/12/2017)

கடைசி தொடர்பு:14:24 (21/12/2017)

ஆர்.கே. நகர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது குறித்து ஜெயலலிதா சொன்னது இதுதான்!

‘‘ ‘பணம் கொடுத்து ஜெயிக்க வேண்டிய நிலையில் நானும் இல்லை... கட்சியும் இல்லை’ என்று துணிச்சலோடு சொன்ன மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொகுதியில்தான் இன்று பணமழை பொழிகிறது. இது, ஜெயலலிதாவுக்கு அ.தி.மு.க-வினர் செய்யும் அவமானம் என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது’’ என்கின்றனர் அவருடைய உண்மையான விசுவாசிகள். அவர்களிடம் பேசினோம்... 

 

ஆர்.கே. நகர்

‘‘2015 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்… வெற்றிபெற்றால் மட்டுமே முதல்வர் பதவியில் நீடிக்க முடியும் என்ற இக்கட்டான சூழலில் இருந்தார் ஜெயலலிதா. ஆர்.கே.நகரில் ஜெயலலிதா போட்டியிடுகிறார் என்றதும் பிரதானக் கட்சிகள் அவருக்கு எதிராகப் போட்டியிடுவதைத் தவிர்த்துக்கொண்டன. கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மகேந்திரன் மட்டுமே அவர்களுக்குப் போட்டி. டிராஃபிக் ராமசாமி, சசிபெருமாளே பரபரப்பாக இயங்கினார்களே தவிர, சொல்லிக்கொள்ளக்கூடிய அளவில் வாக்கு வங்கி அவர்களுக்கில்லை. மற்றபடி சுயேச்சை வேட்பாளர்களும், சிறிய கட்சி வேட்பாளர்களும் ஜெயலலிதாவின் பெருத்த அலைகளுக்கெதிரே இருந்த இடமே தெரியவில்லை. 

வழக்கம்போல அ.தி.மு.க-வின் ஒவ்வோர் அமைச்சருக்கும் ஓர் ஏரியா எனத் தேர்தல் வேலையை பிரித்துக் கொடுத்திருந்தார்கள். அந்தந்த அமைச்சரின் ஏரியாவுக்காக ஒட்டுமொத்த தமிழகத்திலிருந்தும் அவரவர் ஆதரவாளர்கள் ஆர்.கே.நகரில் திரண்டிருந்தார்கள். இதனால் தினம்தினம் திருவிழாபோல காட்சி அளித்தது ஆர்.கே.நகர். அமைச்சர்கள், ஆடியவர்களோடு ஆடினார்கள்… பாடியவர்களோடு பாடினார்கள். அவர்கள் எல்லோருக்கும் ஜெயலலிதாவைச் சாதனை வெற்றிபெறவைக்க வேண்டும் என்பதே குறிக்கோள். அதற்காக அ.தி.மு.க தரப்பில் ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் 2,000 முதல் 2,500 வரை பணம் கொடுக்க முடிவு செய்திருந்தார்கள். இதற்காக ஜூனியர் அமைச்சர்களுக்கு ஒன்றரை கோடி ரூபாய் எனவும் சீனியர் அமைச்சர்களுக்கு இரண்டரை கோடி ரூபாய் எனவும் வசூல் செய்திருந்தார்கள். அந்தப் பணத்தை அமைச்சர்களுக்குக் கீழ் உள்ள பொறுப்பாளர்களிடம் கொடுத்து வாக்காளர்களுக்குக் கொடுக்கச் சொல்லிவிட்டார்கள். இந்தச் செய்தி ஜெயலலிதாவின் காதுக்குச் சென்றிருக்கிறது. 


ஜெயலலிதா, ஆர்.கே. நகர்

இந்த நிலையில், ஜெயலலிதா ஆர்.கே.நகரில் பிரசாரம் செய்வதற்கு முந்தைய நாள், 'முதல்வர் அழைக்கிறார்' என்ற தகவலை அடுத்து சீனியர் அமைச்சர்கள் கார்டனுக்கு ஓடியுள்ளனர். பிரசார ஏற்பாடுகளைப் பற்றிக் கேட்கத்தான் முதல்வர் தம்மை அழைத்திருக்கிறார் என ஆசை ஆசையாய் அவர்கள் உட்கார்ந்திருக்க... ‘வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தீர்களா’ என்று ஜெயலலிதா அவர்களிடம் கேட்டிருக்கிறார். அதற்கு, அம்மாவின் விசுவாசமான அமைச்சர் ஒருவர், ‘தொகுதிக்குப் பணத்தை அனுப்பிவைத்திருக்கிறோம். பிரசாரம் ஓய்ந்ததும் கொடுத்துவிடுகிறோம்’ என்று பதில் சொல்லியிருக்கிறார். அதற்கு ஜெயலலிதா,‘தேர்தலில் நான் நிற்கிறேன். பணத்தைக் கொடுத்து ஜெயிக்க வேண்டிய நிலையில் நானும் இல்லை... கட்சியும் இல்லை. இந்த நிமிடமே அந்தப் பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள். ஒரு வாக்காளருக்குக்கூடப் பணம் போகக் கூடாது. நான் என்ன செய்துள்ளேன் என்று மக்களுக்குத் தெரியும். மக்களைச் சந்தித்து நமது சாதனைகளைச் சொல்லி, தேர்தல் வாக்குக் கேட்கும் வேலையைத்தான் உங்களிடம் ஒப்படைத்தேன். அதைவிட்டுவிட்டுத் தேவையில்லாத வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறீர்களா’ எனக் கடுமையாகச் சாடியிருக்கிறார். இதனால் வௌவௌத்துப் போயினர் சீனியர் அமைச்சர்கள். விசுவாசமான அந்த அமைச்சர் மட்டும் உடனே தொகுதிப் பொறுப்பாளர்களுக்குப் போன் செய்து, 'யாரும் பணம் கொடுக்க வேண்டாம். பணத்தைத் திருப்பி கொண்டுவந்துவிடுங்கள்'' என்று சொல்லியிருக்கிறார்.

ஆர்.கே. நகர்

டெல்லியில் இருந்து இந்தத் தேர்தலைக் கூர்ந்து கவனிக்கிறார்கள். இதில் தன்னைச் சிக்கவைக்கத் திட்டம் இருக்கலாம் என ஜெயலலிதா நினைத்திருக்கிறார். அதே நேரத்தில், பணத்தால் மட்டுமே வெற்றிபெற்றோம் என்று எதிர்க்கட்சிகள் ஏளனம் செய்யும் நிலை தனக்கு வந்துவிடக்கூடாது என்றும் அவர் நினைத்திருக்கிறார். அவர் வெற்றியின் மீது அவருக்கு அதீத நம்பிக்கை இருந்திருக்கிறது. ஜெயலலிதாவின் இந்தக் கோபத்துக்குமுன், ஒரு சில பகுதிகளில் உள்ள தொண்டர்களுக்கு  வேட்டி, சேலை மட்டுமே கொடுத்திருந்தார்கள். இதனால் வெட்டவெளிச்சமாகப் பணம் கொடுக்கும் சம்பவங்கள் மிகவும் அரிதாகவே இருந்தது. பணம் கொடுப்பார்கள் என்ற நிலையில், அம்மா வெற்றிபெற்றால் உங்களுக்குத் தேவையானவற்றைச் செய்துகொடுப்பார்கள் என்று அ.தி.மு.க-வினர் வாக்காளர்களைச் சமாதானப்படுத்தும் நிலை வந்தது. பெரிய அளவில் எதிரிகள் இல்லாததால் அவரும் வெற்றிவாகை சூடினார். முதல்வர் தொகுதி என்பதால், அந்தத் தொகுதியும் பல முன்னேற்றங்களைக் கண்டது. 

இந்த நிலையில், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, மீண்டும் ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானது. ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் என தேர்தல் ஆணையம் நாள் குறித்திருந்தது. அ.தி.மு.க-வில் இருந்து வெளியேறிய பன்னீர்செல்வம் தனி அணியாகக் களம் இறங்கினார். இதனால் அ.தி.மு.க அம்மா அணியாகத் தினகரனும், அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா அணியில் மதுசூதனனும் எதிரெதிராக நின்றார்கள். அ.தி.மு.க-வின் சின்னமான ‘இரட்டை இலை’ தேர்தல் ஆணையத்தால் அப்போது முடக்கப்பட்டிருந்தது. தி.மு.க. தரப்பில் மருது கணேஷ் உள்ளிட்ட 62 பேர் அந்தத் தேர்தலில் போட்டியிட்டார்கள். தினகரன் தாராளத்தால் திக்குமுக்காடியது ஆர்.கே.நகர். தினகரனுக்கு ஆதரவாக நின்றால் காசு… நடந்தால் காசு. தினகரன் தரப்பில் ஓர் ஓட்டுக்கு 4,000 ரூபாய் வரை பணம் கொடுத்ததாகப் புகார் எழுந்தது. இந்த நிலையில் வருமானவரித் துறையினர் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகங்களில் கட்டுக்கட்டாய் பணத்தைக் கைப்பற்றினார்கள். இடைத்தேர்தலும் ரத்தானது. 

 

 

மத்திய அரசின் நெருக்கடியால் சசிகலா குடும்பத்தைக் கட்சியிலிருந்து வெளியேற்றினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. தர்ம யுத்தத்தை முடித்துக்கொண்டு எடப்பாடியோடு சமரசம் செய்துகொண்டார் பன்னீர்செல்வம். இந்த நிலையில் தேர்தல் கமிஷனால் முடக்கப்பட்டிருந்த இரட்டை இலைச் சின்னத்தை பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணி கைப்பற்றியது. அடுத்த நாளே ஆர்.கே.நகருக்கு மீண்டும் தேர்தல் அறிவிப்பு வெளியானது. ஓ.பி.எஸ் அணியில் போட்டியிட்ட வேட்பாளர் மதுசூதனன்தான் தினகரனுக்கு எதிரான வேட்பாளர். தினகரனுக்கு வாக்குச் சேகரித்தவர்கள் எல்லாம் இப்போது மதுசூதனனுக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்தார்கள். தினகரனுக்கு வாழ்வா, சாவா பிரச்னை. அதே நிலைதான் பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கும். வரலாறு காணாத அளவுக்கு இந்த முறையும் ஆர்.கே.நகரில் பணமழை பொழிகிறது. ஓட்டுக்கு 6,000 என்கிறார்கள் சிலர். 10,000 என்கிறார்கள் சிலர். இதனால் தேர்தல் நடக்குமா என்ற அச்சம் ஒருபக்கம் நிலவியது. மறுபக்கம், விசிலடிக்குமா குக்கர்... துளிருமா இலை... உதிக்குமா சூரியன்... என இந்த மூன்று கேள்விக்கும் ஒரே பதிலைத் தரப்போகிறது தேர்தல் முடிவுகள். தேர்தல் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், ‘பணம் கொடுத்து ஜெயிக்க வேண்டிய நிலையில் நான் இல்லை என்று சொன்ன ஜெயலலிதாவின் அமைச்சரவையில் அங்கம் வகித்தவர்கள்தான் இன்று பணமழையால் அந்தத் தொகுதியை விலைபேசிக் கொண்டிருக்கிறார்கள். இது, ஜெயலலிதாவுக்கு அ.தி.மு.க-வினர் செய்யும் அவமானம்'' என்றனர் வெறுப்பாய். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்