மூங்கில் இனி மரமில்லை... அரசின் அவசரச் சட்டத்தால் விவசாயிகளுக்கு என்ன நன்மை?

மூங்கில் விவசாயி 

மூங்கில் புல் வகையைச் சேர்ந்தது. இந்த வகையில் பெரிதாகவும், அதிக உயரமாகவும் வளரும் தாவரம் மூங்கிலாகும். பச்சைத் தங்கம், ஏழைகளின் மரம் என அழைக்கப்படும் மூங்கில், மரங்கள் பட்டியலில் இருக்கிறது. இதன் காரணமாக இந்திய வனச்சட்டம் 1927-ன் படி மூங்கிலை வெட்டவோ, ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு கொண்டு செல்லவோ அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. இந்நிலையில், விவசாயிகளின் வருமானத்தை 2020- ம் ஆண்டுக்குள் இருமடங்காக உயர்த்தும் வகையில் மத்திய அரசு சில திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதில் ஒருபகுதியாக மூங்கிலை மரங்கள் பட்டியலிலிருந்து நீக்கம் செய்ய முடிவு செய்தது. இதன்படி வனச்சட்டத்தில் திருத்தம் செய்து அவசரச் சட்டம் ஒன்றை கடந்த மாதம் 23- ம் தேதி உருவாக்கியது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்தச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தார். அதைத் தொடர்ந்து, இந்த அவசரச் சட்ட மசோதாவைப் பார்லிமென்டில் தாக்கல் செய்திருந்தார் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன். இந்நிலையில், நேற்று இந்த அவசரச் சட்டத்துக்கு உறுப்பினர்களின் ஒப்புதல் கிடைத்ததை அடுத்து, இந்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேறியது. 

இந்தச் சட்டம் நிறைவேறியதால் மூங்கில் வளர்ப்பு மற்றும் அது தொடர்பான பல்வேறு தொழில்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது தொடர்பாக முன்னாள் உதவி வனப்பாதுகாவலர் ராஜசேகரனிடம் பேசினோம். ‘‘ தாவரங்களில் அதிகளவில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யக்கூடியது மூங்கில். இதை மரங்களின் பட்டியலிலிருந்து நீக்கியதால் மூங்கில் வளர்ப்பில் விவசாயிகள் ஈடுபட வாய்ப்புள்ளது. மானாவாரி நிலங்கள், தரிசு நிலங்களில் மூங்கிலை உற்பத்தி செய்வதன் மூலமாகப் பொருளாதார முன்னேற்றம் அடைவதுடன், கரியமில வாயுவின் அடர்த்தியையும் குறைக்கலாம். மூங்கில் உற்பத்தியில் உலகளவில் சீனா முதலிடத்தில் உள்ளது. அதிக சத்து வாய்ந்த மூங்கில் அரிசி உணவு, மூங்கில் குருத்திலிருந்து செய்யப்படும் ஜுஸ் போன்றவை சீனாவில் பிரபலம். இனி, இந்தியாவிலும் மூங்கில் தொடர்பான தொழில்கள் அதிகளவில் வளர வாய்ப்புள்ளது.

மூங்கில் பேப்பர் உற்பத்தியில் மூங்கில் முதன்மையானது. தேவையான அளவு மூங்கில் கிடைக்காததால்தான் யூகலிப்டஸ், வாட்டில் போன்ற மரங்களை காகித ஆலைகள் பயன்படுத்தி வருகின்றன. இன்றைக்கும் ரூபாய் தாள் போன்ற தரமான காகிதம் மூங்கில் கூழிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது. மூங்கிலை நடவு செய்தால் மூன்று ஆண்டுகள் முதல் அறுவடை செய்யலாம். பக்கக் கிளைகளை அறுவடை செய்வதால் இது விவசாயிகளுக்குத் தொடர் வருமானம் கொடுக்கும். மத்திய அரசின் இந்த அவசரச் சட்டம் கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்தும். அதே வேளையில், வனப்பகுதிகளில் உள்ள மூங்கில் இன்னமும் மரங்கள் பட்டியல் இனத்தில்தான் உள்ளது. வனப்பகுதியில் உள்ள மூங்கிலுக்கு இந்த அவசரச் சட்டம் பொருந்தாது என்பதையும் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். மூங்கில் வளர்ப்பு, மூங்கில் பொருள்கள் தயாரிக்கும் முறைகள், மதிப்புக்கூட்டும் வழிமுறைகள் ஆகியவற்றை விவசாயிகளுக்குக் கற்றுக்கொடுக்கும் முயற்சியில் அரசு இறங்கினால் சீனாவைப் போல, ஏன் அதைவிட அதிகளவு மூங்கில் வியாபாரமிங்கு நடைபெற வாய்ப்புள்ளது.

தற்போது நிறைவேறியுள்ள இந்த அவசரச் சட்டம் வனப்பகுதிகளில் செல்லாது. வனப்பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதிகள் தவிர்த்து மற்ற பகுதிகளில் உள்ள விவசாயிகள் மூங்கில் வளர்ப்பில் ஆர்வம் காட்டலாம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!