வெளியிடப்பட்ட நேரம்: 12:13 (24/12/2017)

கடைசி தொடர்பு:10:46 (25/12/2017)

"தி.மு.க-வும் பி.ஜே.பி-யும் இணைந்துவிடும் என்ற பயம் காங்கிரஸுக்கு உள்ளது - தமிழிசை சவுந்தரராஜன் !

 

கனிமொழி  2 ஜி தீர்ப்பு

ரசியல்களத்தில் புயலைக் கிளப்பியவை 2 ஜி அலைக்கற்றை வழக்கு. அந்த வழக்கில், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. வழக்கில் தொடர்புடைய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உட்பட  அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். வழக்கின் தீர்ப்பை தி.மு.க  மற்றும்  அதன்கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் உள்ளிட்டகட்சிகள் வரவேற்றுள்ளன.ஆரம்பத்தில் இந்த வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்திய காங்கிரஸ் கட்சியே தற்போது தீர்ப்பைக் கொண்டாடி வருகிறது. இதற்கானப் பின்னணி என்ன? இந்த விவகாரத்தை எதிர்த்து வந்த பி.ஜே.பி-யின் நிலைப்பாடு என்ன?  உள்ளிட்ட கேள்விகளுடன் பி.ஜே.பி-யின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம்  பேசினோம். 

''2ஜி வழக்கின் தீர்ப்பு குறித்து உங்கள் கருத்து?"

''யதார்த்தமாக ஒரு தீர்ப்பு வந்துள்ளது. அந்தத் தீர்ப்பு நியாயமானதுதானா? என்பதை அறிய சி.பி.ஐ தரப்பில் மேல்முறையீடு இருக்கும் எனக் கருதுகிறேன். மேலும் சி.பி.ஐ மற்றும் நீதிமன்றங்களை பி.ஜே.பி இயக்குகிறது எனப் பேசியவர்களுக்கு இந்தத் தீர்ப்பின் மூலம் பதில் கிடைத்துள்ளது. இந்தத் தீர்ப்பின் வாயிலாக அந்த அமைப்புகள் எவ்வளவு சுதந்திரமாக செயல்படுகின்றன என்பது தெளிவாகியுள்ளது.மேலும் இந்தத் தீர்ப்பே முழுமையானது என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. தீர்ப்பு வழங்கிய நீதிபதி, இந்த வழக்கில், 'சாட்சிகள் நிறுத்தப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் செய்த தவறு உறுதி செய்யப்படவில்லை என்பதால் விடுவிக்கிறேன்' என்று கூறியுள்ளார். எனவே இந்த வழக்கில் மேல் முறையீடு இருக்கும் என நம்புகிறேன்." 

''உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து '2-ஜி வழக்கை' தீவிரப்படுத்தியதே காங்கிரஸ் கட்சிதான். அப்படி இருக்கும்போது, அந்தத் தீர்ப்பைக் காங்கிரஸ் கட்சி கொண்டாடி வருகிறது. இது குறித்து?''

''2ஜி வழக்கைத்  தீவிரப்படுத்தியதே காங்கிரஸ் தான். அதன் பின்னரே இவ்விவகாரம் குறித்து பேசியது பி.ஜே.பி .இப்படியான நிலையில், இந்தத் தீர்ப்பு வந்துள்ளது. இந்தத் தீர்ப்பை வைத்து  எதையாவது பலமாகப் பிடித்துக்கொள்ள வேண்டும் என எண்ணுகிறது காங்கிரஸ்.  அதை  வைத்தே  தற்போதைய சூழலை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும் எனவும் திட்டமிடுகிறது.

 நடந்து முடிந்த  குஜராத், இமாச்சல் பிரதேசத் தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளது காங்கிரஸ்.அதில் ,பி.ஜே.பி தட்டுத்தடுமாறி வெற்றி பெற்றுள்ளது என்று காங்கிரஸ் தனது கருத்தை வெளியிடுகிறது.எனவே காலத்துக்குத் தகுந்த மாதிரி தனது  நிலைப்பாட்டை மாற்றிக்கொள்கிற காங்கிரசின் நிலையைத் தி.மு.க-வும் உணரவேண்டும்."

தமிழிசை சவுந்திரராஜன்  bjp

 " தீர்ப்பால் காங்கிரஸ் கட்சிக்கு உள்ள பயம்  என்ன? இந்த தீர்ப்பை பெரிய அளவில் காங்கிரஸ்  கொண்டாடக் காரணம் என்ன?" 

"தி.மு.க-வும் பி.ஜே.பி-யும் கூட்டணி அமைத்துவிடும் என்ற பயம் அந்தக் கட்சிக்கு இருக்கலாம். அதன் காரணமாகவும் இப்படி 2ஜி வழக்கின் தீர்ப்பைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.அனைத்து வகையிலும் காங்கிரஸ் தங்களது சூழல்களை மாற்றிக்கொள்ள விரும்புகிறது.அதில் ஒரு பகுதியாகக்கூட இந்தக்  கொண்டாட்டம்  இருக்கலாம்.''

''2 -ஜி வழக்கை தவறான முறையில் பி.ஜே.பி பிரசாரம் செய்ததாகவும் எனவே அந்தக் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் காங்கிரஸ்  கட்சியில்  உள்ள  தலைவர்கள் கூறிவருகிறார்களே?''

''எதிர்த்து நிற்கிற ஒரு அரசியல் கட்சியின் மீது குற்றச்சாட்டு இருந்தால், அந்தக் குற்றச்சாட்டை எடுத்துப் பேசுவது இயல்பு. அப்படித்தான் இந்த 2 ஜி  விவகாரத்தையும் பி.ஜே.பி எடுத்துப் பேசியது. இதற்கு ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படியானால் குஜராத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக பல நிலைகளில் குற்றச்சாட்டை வைத்தார்கள் காங்கிரஸ்  கட்சியினர் . குஜராத்தில் நடந்த தேர்தலின்போது மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் குறித்து தவறானக் குற்றச்சாட்டை வைத்தனர். பின்னர் அந்த விவகாரத்தில், எந்திரங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தவறு நடைபெறவில்லை என உறுதி செய்யப்பட்ட பின்னரே தேர்தல் நடந்தது. அப்படி தவறான குற்றச்சாட்டுக்களை அள்ளிவீசும் காங்கிரஸ்தான் முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும். இப்படி தவறான அரசியல் செய்து கொண்டிருக்கிறது காங்கிரஸ். அந்தத் தவறான அரசியல் களத்தில் மக்கள் பலியாகிவிடக் கூடாது என்பதே பி.ஜே.பி-யின் எண்ணமாக உள்ளது."

 

''எதிர்க்கட்சி குறித்த வழக்குகளில் தீர்ப்பு வெளியாகும்போது, தீர்ப்பின் பின்னணியில் ஆளுங்கட்சி இருப்பதாகக் குற்றச்சாட்டு எழும். ஆனால், இந்தத் தீர்ப்பில் அப்படி எந்தக் குற்றச்சாட்டும் வைக்கப்படவில்லையே ஏன்?"

"மறைந்த முன்னாள்  முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்தபோது, பி.ஜே.பி இந்தத் தீர்ப்பை மாற்றி எழுத வைத்துவிட்டது என்றக் குற்றச்சாட்டை வைத்தனர். அந்த வகையில், தற்போது  2ஜி வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது. இந்தத் தீர்ப்பில், பி.ஜே.பியை இணைத்துப் பேசவில்லை...பேசமாட்டார்கள்...! ஏன் என்றால், அந்தக்  கட்சிக்கு சாதகமான தீர்ப்பாக வந்துள்ளது. மேலும் தி.மு.க-வின் தேவையும் அவசியமாகிறது. அதன் காரணமாகத் தீர்ப்பைக்  கொண்டாடி வருகிறது. எனவே காங்கிரஸ் கட்சி நம்பகத்தன்மையில்லாத அரசியலை செய்து வருகிறது. அதனை தி.மு.க-தான் புரிந்துகொள்ள வேண்டும்'" என்றார். தமிழிசை சவுந்தரராஜன் 


டிரெண்டிங் @ விகடன்