இது முழுமை இல்லாத மசோதா...ஏன்? -மாற்றுப்பாலினத்தவர் உரிமையை மசோதா மீட்குமா - பகுதி 6

திருநங்கைகள்

முன்னுதாரணமாக தமிழக திருநங்கைகளும் மசோதாவின் மொத்த மதிப்பீடும் :

இந்தியாவில் தற்போது பல துறைகளில் திருநங்கைகள் சாதித்துக்கொண்டிருக்கிறார்கள். எட்டாத உயரத்தையும் எட்டிப் பிடித்திருக்கிறார்கள். அவர்களில் சிலரை இப்போது பார்க்கலாம். நர்த்தகி நடராஜன் – சங்கீத நாடக அகாடமியின் விருது பெற்ற இந்தியாவின் முதல் திருநங்கை. ஏ.ரேவதி – தன் வரலாறு (வெள்ளை மொழி)  எழுதிய ஆசியாவின் முதல் திருநங்கை. கல்கி சுப்பிரமணியன் – இந்தியாவின் முதல் தொழில்முனைவோர் மற்றும் சகோதரி பவுண்டேஷன் என்ற திருநங்கைகளுக்கான அமைப்பை நிறுவிய திருநங்கை. சுதா தாய் – முனைவர் பட்டம் பெற்ற இந்தியாவின் முதல் திருநங்கை. கற்பகம்  - முதல் திருநங்கை நடிகை. பாதிரியார் பாரதி – முதல் திருநங்கை பாதிரியார். ஸ்வப்னா – யூ.பி.எஸ்.சி தேர்வு எழுதிய இந்தியாவின் முதல் திருநங்கை. தேவி – தேர்தலில் போட்டியிட்ட முதல் திருநங்கை. ரோஸ் வெங்கடேசன் – இந்தியாவின் முதல் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி திருநங்கை. காயத்ரி – இந்தியாவின் முதல் செவிலியர் திருநங்கை. பிரித்திகா யாசினி – இந்தியாவின் முதல் காவல்துறை உதவி ஆய்வாளர் திருநங்கை.

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இந்தியா மட்டுமல்ல... உலகத்துக்கே பல உதாரணங்களைச் சொல்லியது தமிழக திருநங்கைகள்தாம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. திருநங்கைகள் தொடர்பான ஆக்கபூர்வமான கருத்துகள் முதலில் எழுந்ததும் தமிழகத்தில்தான். அப்போதைய தி.மு.க அரசு, 2008 இல் ‘அரவாணிகள் நல வாரியம்’ என்று ஓர் அமைப்பை உருவாக்கியது. அதன் கட்டமைப்பு சிறப்பானது என்றாலும் நலவாரியத்தின் நிலை ஆட்சி மாற்றத்தால் பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகியிருக்கிறது என்பதே உண்மை.

அரசாணையோடு நின்றுவிட்டது :

அரவாணிகள் நல வாரியமானது நேர்த்தியான கட்டமைப்பைக் கொண்டது. சமூக நலத்துறை அமைச்சர், வாரியத்தின் தலைவராக இருப்பார். துணைத்தலைவராக சமூகநலத்துறை அமைச்சகத்தின் செயலர் இருப்பார். வாரியத்தின் செயலாளராக சமூகநலத்துறை அமைச்சகத்தின் இயக்குநர் இருப்பார். பல்வேறு அரசு துறை உயர் அதிகாரிகள், வாரியத்தின் உறுப்பினர்களாக இருப்பர். மேலும் திருநங்கைகள் பிரதிநிதிகள் பலரும் வாரியத்தில் உறுப்பினர்களாக இருப்பர். இவர்கள்தாம் முக்கிய முடிவுகளை எடுத்து அதனை வாரிய தலைவரின் பார்வைக்குக் கொண்டு செல்வார்கள். இப்படியான ஒரு நேர்த்தியானக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில், ‘அரவாணிகள் நலவாரியம்’ மூலமாக 1211 திருநங்கைகளுக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. 335 திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டிருக்கின்றன. 2 பேர் இலவசக் கல்வி பெற்றிருக்கிறார்கள். 100 பேருக்கு இலவச தையல் இயந்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. 320 பேருக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் தொழில் நிதிகொடுக்கப்பட்டிருக்கிறது. 49 பேர் இலவசமாக பால் மாற்று அறுவைச் சிகிச்சை செய்துகொண்டிருக்கிறார்கள் (தகவல் : Transgenders Resource Centre – Madurai). இப்படி ஆக்கபூர்வமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்த அரவாணிகள் நலவாரியமானது பின்னாளில் அதன் செயல்பாடுகளைக் குறைத்துக்கொண்டதாக திருநங்கைகள் பலரும் குற்றம் சாட்டுகிறார்கள். அரசியல் காரணமாக இருக்கலாம் என்றும் அவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். எது எப்படியோ, வாரியத்தின் செயல்பாடுகளை மீண்டும் வேகப்படுத்த ஒரே ஒரு காரியம்தான் மீதம் இருப்பதாகத் திருநங்கைகள் செயல்பாட்டாளர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள். அது, 2008 ஆம் ஆண்டு தி.மு.க அரசு வெளியிட்ட அரசாணையின் அடிப்படையிலேயே நல வாரியம் அமைத்து, அந்த அரசாணையையும் ஒரு சட்டமாக இயற்றினால் மட்டுமே இதுபோன்ற அரசியல் பிரச்னைகளிலிருந்து தப்ப முடியும் என்பதுதான். மேலும், வாரியத்தின் பெயரை மாற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கிறார்கள். 

இது ஒரு புறம் என்றால், நல வாரியத்தைத் தொடர்ந்து மாற்றுப் பாலினத்தவர்களுக்கு எனத் தனி ஆணையம் ஒன்று அமைப்பது குறித்தும் கருத்துகள் ஏற்கெனவே முன்வைக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில்தான் திருச்சி சிவாவின் மசோதாவில், மாற்றுப் பாலினத்தவர்களுக்கான ஆணையம் அமைப்பது குறித்துச் சொல்லப்பட்டது. அதையும் தாண்டி மாற்றுப் பாலினத்தவர்களின் உரிமைகள் தொடர்பாகச் செய்யப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் சமூக நலத்துறையின் கீழ் கொண்டுவருவது மட்டுமல்லாமல், பெண்கள் - குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழும் கொண்டுவர வேண்டும் என்பதும் இவர்களது கோரிக்கையாக இருக்கிறது. மேலும், இந்தியாவில் பெண்களுக்கு இருக்கும் அனைத்து உரிமைகளையும் பெற திருநங்கைகளும் தகுதியானவர்கள் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்பதும் அனைவரது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் பாராட்டைப் பெற்ற தமிழ்நாடு :

2012 ஆம் ஆண்டு, திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில், தமிழக அரசின் முயற்சியால் உருவான `அரவாணிகள் நலச்சங்கம்` தொடர்பாக மேற்கோள் காட்டப்பட்டது. குறிப்பாக நலவாரியத்தின் அமைப்பு மற்றும் செயல்பாடுகள், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஏற்றது என்று பாராட்டியது. மேலும், தனது தீர்ப்பில் நல வாரியத்தின் அனைத்து அம்சங்களையும் குறிப்பிட்டு தீர்ப்பெழுதியதும் குறிப்பிடத்தக்கது. அதனை ஏற்றுக்கொண்டது திருச்சி சிவாவின் மசோதா. ஆனால், தற்போதைய மத்திய அரசின் மசோதாவில் நல வாரியம் தொடர்பாகவோ, ஆணையம் தொடர்பாகவோ எந்த ஷரத்துகளும் தெளிவாக இடம்பெறவில்லை என்றக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. 

மசோதாவின் மொத்த மதிப்பீடு :

மாற்றுப் பாலினத்தவர்களின் (உரிமைப் பாதுகாப்பு) மசோதா – 2016 பற்றிய மொத்த மதீப்பீடு என்று பார்த்தால், ஆளும் பி.ஜே.பி அரசின் முயற்சி வரவேற்கத்தக்க ஒன்று. இத்தனை ஆண்டுகாலம் பல்வேறு போராட்டங்களைச் சந்தித்த திருநங்கைகள் சமூகமானது தற்போது அதன் பலனைப் பறிக்கவிருக்கிறார்கள். மசோதாவானது, திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்து அதற்கு சட்ட அங்கீகாரம் கொடுக்கும். அனைத்து அமைப்புகளிலும் திருநங்கைகளின் புறக்கணிப்புகள் இல்லாது போகும் என்று சொல்ல முடியாவிட்டாலும், புறக்கணிப்புகள் குறைய மசோதா, பேருதவி செய்யும். கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு பற்றி விரிவாக பேசாததும், மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கைத் தரத்தை உறுதிபடுத்தக்கூடிய அம்சங்கள் மசோதாவில் இல்லாததும் மிகப்பெரிய ஏமாற்றம். சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகாலத்துக்குப் பிறகு அரசே மாற்றுப் பாலினத்தவர்களின் உரிமைப் பாதுகாப்புக்குச் சட்டமியற்ற முன்வருவது வரவேற்க வேண்டிய ஒன்று. 

மசோதாவில் உள்ள குறைகள் அனைத்துக்கும் பெரிய எதிர்ப்புகள் இல்லை.... அடிப்படையான சில தேவைகள்தாம்.! அவற்றைக் கவனிக்கத் தவறியதை உணர்த்துவதற்குத்தான் பல தன்னார்வ அமைப்புகள் நிலைக்குழுவின் முன் ஆஜராகி கருத்துகளை எடுத்துவைத்தன. ஆனால் அவையும் ஏற்கப்படாததற்கு என்ன காரணம் என்றுதான் புரியவில்லை. தற்போது மத்திய அரசின் ஆசைப்படியே லோக்சபாவில் மசோதா தாக்கல் செய்யப்படவிருக்கிறது. மத்திய சட்ட ஆணையத்தின் அனுமதியோடுதான் மசோதா முடிவு செய்யப்பட்டு தாக்கல் செய்யப்படவிருக்கிறது. இனி மசோதாவில் மாற்றம் செய்வது என்பது சாத்தியமில்லாத ஒன்று. அப்படியே மாற்றம் வேண்டும் என்று சொல்லி நீதிமன்றம் சென்றாலும், நாடாளுமன்ற விவகாரங்களில் தலையிடும் உரிமை நீதிமன்றத்துக்கு இருந்தாலும், மத்திய அரசு மசோதாவை நிறுத்தும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு இல்லை. மசோதா நிறைவேறி சட்ட உருமாற்றம் பெறும்போது மட்டுமே அதனை கேள்வி கேட்கவோ, நிறுத்தி வைக்கவோ நீதிமன்றத்துக்கு அதிகாரம் உண்டு. இந்தச் சூழலில், மசோதாவை நிறுத்தும் ஒரே அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உண்டு. அவர் தலையிட்டு, 'மசோதாவில் மாற்றம் செய்து பிறகு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யுங்கள்' என்று சொல்ல முடியும். ஆனால், இதுபோன்ற முன் உதாரணங்கள் இதுவரை இல்லை என்றே அறிய முடிகிறது. எனவே, மசோதா நிச்சயம் தாக்கல் செய்யப்படும். 

அடுத்ததாக ராஜ்யசபாவுக்கு மசோதா செல்லும். அதற்கு முன் அதில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு, தயாராக இருக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். முழுமை இல்லாத இந்த மசோதாவை திருநங்கைகள் யாரும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்பதைக் கடந்த காலப் போராட்டங்களின் மூலம் நம்மால் அறிய முடிகிறது. 

``மத்திய அரசு நினைக்கும் பாணியில் மசோதா சட்டமானால் என்ன செய்வீர்கள்?`` என்று பத்துக்கும் மேற்பட்ட திருநங்கைகளிடம் நாம் கேட்டபோது, அவர்களின் ஒரே பதிலாக இருப்பது, ``எங்கள் போராட்டம் என்றுமே ஓயாது போல... மசோதா சட்டமானால், அதற்கு எதிராக எங்களின் சட்டப்போராட்டம் தொடரும்`` என்றனர்!

...முற்றும்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!