அரசியல்வாதிகள் - அதிகாரிகளின் கூட்டு ஊழல், தடதடக்கும் அரசுப் போக்குவரத்துத் துறை!

''இந்திய அளவில் அதிக விபத்துகள் நடக்கும் மாநிலங்களில் தமிழகம் முக்கிய இடத்தில் இருக்கிறது. ஆண்டுக்காண்டு விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தமிழக சாலைகளில் நடக்கும் விபத்துகளில் பெரும்பாலானவை அரசுப் பேருந்துகளால் ஏற்படுபவை. சாலையில் இயக்கத் தகுதியே இல்லாத பேருந்துகளை, அரசு இயக்கிக்கொண்டுள்ளது. ஓட்டுநர் உரிமம் இல்லாமல், வாகனத்தை இயக்கியதால் ஏற்படும் விபத்துகளில் யாரேனும் பலியாகியிருந்தால், அந்த மரணமானது கொலை வழக்காகக் கருதப்படுகிறது. ஆனால், தரமில்லாதப் பேருந்துகளை இயக்கி, அனுதினமும் சாலைகளில் பலி வாங்கிக்கொண்டிருக்கும் அரசுப் போக்குவரத்துக் கழகம் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என்பதுதான் வேதனை. குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் இயங்கும் பேருந்துகளில் 60 விழுக்காடு தகுதியில்லாதப் பேருந்துகள்'' என்று சொல்லி அதிர்ச்சிக் கிளப்புகிறார்கள் அரசுப் போக்குவரத்துத்துறை ஊழியர்கள். 

''சில மாதங்களுக்கு முன்பாக, திண்டுக்கல் பஸ்ஸ்டாண்டில் நிறுத்தியிருந்த பேருந்து ஒன்று பிரேக் இல்லாமல் தானாகவே இயங்கி செருப்புத் தைக்கும் தொழிலாளி மீது மோதி உயிரிழப்பை ஏற்படுத்தியது. அதேபோல, கொடைரோடு அருகே நடந்த விபத்தில் ஏழு பேர் பலியானார்கள். வத்தலக்குண்டு பைபாஸில் நடந்த விபத்தில், இரண்டு மாணவர்கள் பலியாகியிருக்கிறார்கள். இது தொடர்கதையாக இருக்கிறது. இந்தப் பிரச்னைக்கு யார் மணிகட்டப்போகிறார்களோ தெரியவில்லை'' என்கிறார்கள். 


ஊழல் 

அரசுப் போக்குவரத்துக்கழகம் நேற்று (27-12-2017) மாலை 4.30 மணிக்கு வத்தலகுண்டுவிலிருந்து திண்டுக்கல் நோக்கி பைபாஸ் அருகே ஒரு கார் சென்றுகொண்டிருந்தது. அதற்கு முன்பாக வைக்கோல் ஏற்றிய லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. பைபாஸ் அருகே நின்றிருந்த போலீஸார், வைக்கோல் லாரியை ஓரம் கட்டவும், சடன் பிரேக் பிடித்து லாரியை நிறுத்தியுள்ளார் அதன் ஓட்டுநர். இதனால் பின்னால் வந்த கார் ஓட்டுநரும் சடன் பிரேக் பிடித்து நிறுத்தியுள்ளார். அதே நேரம் காருக்குப் பின்னால் வந்த அரசுப் பேருந்தில் பிரேக் பிடிக்கவில்லை. ஓட்டுநர் எவ்வளவோ முயற்சி செய்தும் பிரேக் பிடிக்காத நிலையில், பேருந்து...  கார் மீது மோதியது. அதே வேகத்தில் எதிரே வந்துகொண்டிருந்த ஆட்டோ மீதும் பஸ் மோதியது. இதில், ஆட்டோவில் பயணம் செய்த பத்தாம் வகுப்பு மாணவர்கள்,காளிதாஸ், சரண் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் பத்துப்பேர் படுகாயம் அடைந்தார்கள்.

இது தொடர்பாக பேசிய போக்குவரத்துத் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஒருவர், ‘‘அரசுப் போக்குவரத்துக் கழகங்களை முறையாக நிர்வாகம் செய்வதில்லை. இதில் அமைச்சர் முதல் அதிகாரிகள் வரை அனைவரும் தங்களுக்கு என்ன ஆதாயம் என்னவென்றுதான் பார்க்கிறார்கள். இதனால், பேருந்துகளை முறையாகப் பராமரிப்பதில்லை. தரமான உதிரி பாகங்கள் வாங்குவதில்லை. தரமில்லாத ஓட்டை உடைசல் பேருந்துகளை வைத்துக்கொண்டு, அதை இயக்குவதற்குள் ஓட்டுநர்கள் படாதபாடு படுகிறார்கள். எனக்குத் தெரிந்த வரையில், அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பலரும் பிரேக்கை நம்பி வண்டி ஓட்டுவதில்லை. தெய்வத்தை நம்பித்தான் வண்டி ஓட்டுகிறார்கள். 'பத்திரமா ஊர்போய் சேர்த்திரு சாமீ' என்ற பிரார்த்தனையோடுதான் வாகனத்தை இயக்குகிறார்கள். காரணம், பிரேக்கை நம்பி பிரயோசனம் இல்லை. ஏனென்றால், பல வண்டிகளில் பிரேக்கே இல்லை’’ என்று அதிர வைத்தவர், தொடர்ந்து... 

 

மரசு போக்குவரத்துக்கழகம்

''அனைத்திலும் ஊழல்தான். எந்த உதிரி பாகமாக இருந்தாலும் முதல் தரத்துக்கு கொட்டேசன் வாங்கிக்கொண்டு மூன்றாம் தரத்தை கொள்முதல் செய்கிறார்கள். பயணிகளின் உயிரைப்பற்றிய அக்கறை அதிகாரிகளுக்கு இல்லை. இந்திய அளவில், தமிழகத்தில் இயங்கும் அரசுப் பேருந்துகளுக்குத்தான் காப்பீடு இல்லை. காரணம் தரமில்லாத பேருந்துகளுக்கு காப்பீடு அளிக்க எந்த நிறுவனமும் முன்வருவதில்லை.  சாலைகளில் ஓடும் அத்தனை அரசுப்பேருந்துகளும் எங்களை பொருத்தவரை நடமாடும் எமன்கள்தான்’’ என்றார்.

 

தமிழக சாலைகளில் தினம் தினம் நடக்கும் இதுபோன்ற விபத்துகளை, சாதாரணமாக விபத்து என்பதாக முடித்து விடுகிறார்கள். ஆனால், அத்தனைக்கும் பின்னால், அரசு மற்றும் அதிகாரிகளின் அலட்சியமும் ஊழலும் கைகோத்துக் கோரப் பல் காட்டி சிரித்துக்கொண்டிருப்பதை வசதியாக மறைத்து விடுகிறார்கள். நீதிமன்றங்கள்தான் இதில் தலையிட்டு, தகுதி இல்லாதப் பேருந்துகளை இயக்கத் தடைவிதித்து மக்களின் உயிரைக் காப்பாற்ற  வேண்டும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!