நிவாரண உதவிகளிலும் கொள்ளையடித்த அதிகாரிகள்..! சென்னை மழையின் மீள் நினைவுகள் பகுதி-11

வெள்ளக்காடு

பெருமழைக்குப் பின்னர் நடைபெற்ற நிவாரணப் பணிகளில் தனிநபர், தன்னார்வ நிறுவனங்கள் என்று பல்வேறு தரப்பினர் உதவிகள் செய்தனர்.  சென்னை புறநகர்ப் பகுதிதான் மோசமாகப் பாதிக்கப்பட்டது. அங்கு நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட அறப்போர் இயக்கத்தின் துணை ஒருங்கிணைப்பாளர், பாசித்திடம் பேசினோம். ``கிஷ்கிந்தா அருகே சமத்துவப் பெரியார் நகர் இருக்கிறது. 2015 நவம்பர் மாதம் பெய்த மழையிலேயே அந்தப் பகுதி மோசமாகப் பாதிக்கப்பட்டது. மழை காரணமாக அங்கு இருந்த மூன்று  பேர் வரை இறந்துவிட்டனர். பாதிக்கப்பட்ட மக்கள் சேவா சதன் என்ற பள்ளியில் தங்கி இருந்தனர்.

முதியவர்கள் திண்டாட்டம்  

மீண்டும் டிசம்பர் ஒன்றாம் தேதி மழை பெய்துகொண்டிருந்த நிலையில், அவர்கள் தங்கியிருந்த பள்ளிக்குச் சென்றேன். அங்கு இருந்த மக்கள் நிவாரணப் பொருள்கள் சரியானபடி கிடைக்காமல் திண்டாடினர். ஏற்கெனவே அங்கு நிவாரணப் பொருள்கள் கொடுத்த சிலர், மொத்தமாக தூக்கி  வீசிவிட்டுச் சென்றிருக்கின்றனர். அதை அவர்களில் சிலர் முண்டியடித்து எடுத்துக்கொண்டனர். பாதிப்பேருக்கு நிவாரணப் பொருள்கள் கிடைக்கவில்லை. குறிப்பாக முதியவர்களுக்கு நிவாரணப் பொருள்கள் கிடைக்கவில்லை. மேலும், அவர்களுக்கு என்ன தேவை என்று அறிந்து அதற்கேற்ற பொருள்கள் வழங்கப்படவில்லை. தேவையில்லாததை பொருள்கள் நிறையக் கொடுக்கப்பட்டும் அதை அவர்களால் பயன்படுத்த முடியவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்வதில் ஒரு விஷயத்தில் கவனமாக இருந்தோம். மக்களுக்கு உதவி செய்யும்போது அவர்களை கண்ணியக்குறைவாக நடத்திவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தோம்.

குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்று தனித்தனியாக அவர்களுக்கு என்னென்ன தேவைகள் என்று கணக்கு எடுத்துக்கொண்டோம். அந்த சமயத்தில் பெரும்பாலும் அவர்களுக்கு போர்வைகள் தேவைப்பட்டது. அதன்படி அவர்களுக்குத் தேவையான பொருள்களைக் கொடுத்தோம்.

 மழையால் பாதிக்கபட்ட பெரியார் நகர்

உயிரைக் காப்பாற்றிய டார்ச் லைட்

மழை, வெள்ளப் பாதிப்புகள் குறைந்த பின்னர், சமத்துவப் பெரியார் நகரில் இருந்தவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர். அப்போது மின்சார இணைப்புகள் பாதிக்கப்பட்டிருந்ததால், இருட்டில்தான் அவர்கள் தங்கள் வீடுகளில் தங்கி இருந்தனர். அப்போது அவர்களுக்கு டார்ச் லைட்கள் கொடுத்தோம். சில நாள்கள் கழித்து அவர்களைப் பார்க்கச் சென்றபோது ஒருவர் எங்களிடம், ‘தம்பி நல்ல சமயத்தில டார்ச் லைட் கொடுத்தீங்க. இல்லைன்னா அன்னைக்கு எங்க குழந்தையைப் பாம்பு தீண்டியிருக்கும். என் குழந்தையை உயிரோட பார்த்திருக்க முடியாது. ரொம்ப நன்றிப்பா’ என்றார்.

தாம்பரம் புறநகரில் மட்டுமின்றி சென்னையின் பல பகுதிகளிலும் நிவாரணப் பணிகள் மேற்கொண்டோம். அந்த சமயத்தில் தகவல் தொடர்புகளே இல்லை. ஆன்லைனில், உதவித் தேவைப்படுவோரின் தகவல்கள் பதிவுசெய்யப்பட்டன. அந்த தகவல்களை அமெரிக்காவில் இருக்கும் எங்கள்  நண்பர்கள் எங்களுக்கு அனுப்பினர். இப்படித்தான் பலருக்கு உதவினோம்.

புதிய உடைகள் கொண்டுவந்தவர்  

அதேபோல நிவாரணப் பொருள்கள் கொண்டு வந்தவர்கள்,  யாரிடம் அதைக்கொடுத்து விநியோகிப்பது என்று தெரியாமல் திண்டாடினர். தகவல் தொடர்பு இல்லாததால் பெரும் பிரச்னைகள் ஏற்பட்டன. திருப்பூரில் இருந்து ஒருவர் ஒரு லாரி நிறைய, புதிய துணிகளைக் கொண்டு வந்திருந்தார். யாரிடம் தருவது என்று அவருக்குத் தெரியவில்லை.  

எங்களுடைய ஒருங்கிணைந்த பணியைப் பற்றி தகவல் கிடைத்து, அதை எங்களிடம் அந்த நபர் ஒப்படைத்தார். அந்த சமயத்தில் வேளச்சேரியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் கொடுத்த துணிகளை வழங்கினோம்.

கண்ணகி நகரைச் சேர்ந்த பொதுமக்களும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டனர். அவர்கள் துரைப்பாக்கத்தில் உள்ள பள்ளியில் தங்க வைக்கப்படிருந்தனர். அவர்களுக்குத் தேவையான பொருள்களை வழங்குவதற்காகச் சென்றோம். அங்கு இருந்த அரசு அதிகாரி ஒருவர், எங்களிடம், `நிவாரணப் பொருள்களில்  இருபது பாக்கெட்டை எங்களுக்குக் கொடுங்கள்’ என்று கேட்டார். அவரிடம் `எதற்கு சார்’ என்று கேட்டேன். ‘யார் என்ன பொருள்கள் கொடுத்தாலும், அதில் 20-ஐ வாங்கி வைக்கச் சொல்லி இருக்கிறார்கள்’ என்றார். மக்கள் கஷ்டப்படும் சூழலிலும் கொள்ளை அடிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்று எங்களுக்குக் கஷ்டமாக இருந்தது.

 

மழை வெள்ளம்

மழை, வெள்ள நிவாரணப் பணிகள் முடிந்த பிறகு, சமத்துவ பெரியார் நகரை தத்தெடுத்து, அங்கிருந்த 360 குடும்பங்களுக்கும், அவர்களின் வாழ்வாதாரத்துக்காக உதவினோம். அங்கிருந்தவர்கள் பழ வியாபாரம், இளநீர் கடைகள், இட்லி வியாபாரம் செய்துவந்தனர். மழை, வெள்ளத்தில் அவர்களின் பொருள்கள் எல்லாம் அடித்துச் செல்லப்பட்டன.  எனவே, அவர்களுக்குத் தேவையான வண்டிகளை வாங்கிக் கொடுத்தோம். மழைக்குப் பின்னர் 7 மாதங்கள் அவர்களுக்காகப் பணியாற்றினோம். குடிசை வீடுகளை திரும்பவும் போட்டுக்கொடுத்தோம். சில வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றினோம். எங்கள் மூலம், தன்னார்வ நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் இந்த உதவிகளைச் செய்தனர்.  

நிரந்தரத் தீர்வு எப்போது?

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிரந்தரமான தீர்வு என்பது கிடைக்குமா என்பதுதான் பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. மழையால் அப்போது பாதிக்கப்பட்ட பகுதிகள், மீண்டும் பாதிக்கப்படுவது போலத்தான் இருக்கின்றன. அதற்குத் தீர்வு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை” என்று முடித்தார்.

2015-ம் ஆண்டு பெருமழையில் புறநகர்களில் இருந்த கல்லூரிகளில் படித்த மாணவர்களும் பாதிக்கப்பட்டனர். சிறுசேரி அருகே உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் இருந்த மாணவர்கள் வெள்ளநீர் சூழ்ந்ததால், வெளியேற முடியாமல் தவித்தனர். இதுகுறித்து சிறுசேரியில் இருந்த தீயைணைப்பு அலுவலகத்துக்குத் தகவல் கிடைத்தது. வேலுசாமி உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் மாணவர்களை மீட்டனர்.

படகு செல்ல முடியாத இடத்துக்கு வெள்ளநீரில் நீந்திச் சென்று வேலுசாமி டீம் பல மாணவர்களை மீட்டது. அங்கிருந்த மாணவர்களுக்கு நீச்சல் தெரியவில்லை என்பது குறித்து குறிப்பிடும் வேலுசாமி, “இளைஞர்கள் நீச்சல் பயிற்சி பெற்றிருப்பது அவசியம். இதுபோன்ற சூழல்களில் அவர்கள் தங்களையும் பாதுகாத்துக்கொள்ளலாம், பிறருக்கும் உதவலாம்” என்கிறார்.

இந்தத் தொடர் கட்டுரையை அடுத்த அத்தியாயத்துடன் நிறைவு செய்கிறோம். சென்னை பெருமழையின் பாதிப்புகள் குறித்து மத்திய அரசு ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கை குறித்தும், அந்த அறிக்கையின் மீது நிபுணர்கள் சொல்லும் கருத்துகளையும் நிறைவு அத்தியாயத்தில் பார்க்கலாம்.

இந்தத் தொடரின் முந்தைய பகுதிகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்....

சென்னை மழையின் மீள் நினைவுகள் 1

சென்னை மழையின் மீள் நினைவுகள் 2

சென்னை மழையின் மீள் நினைவுகள் 3

சென்னை மழையின் மீள் நினைவுகள் 4

சென்னை மழையின் மீள் நினைவுகள் 5

சென்னை மழையின் மீள் நினைவுகள் 6

சென்னை மழையின் மீள் நினைவுகள் 7

சென்னை மழையின் மீள் நினைவுகள் 8

சென்னை மழையின் மீள் நினைவுகள் 9

சென்னை மழையின் மீள் நினைவுகள் 10

Do you like the story?

Please Appreciate the Author by clapping!