ஏகாம்பரநாதர் கோயிலின் எந்த சிலையிலும் தங்கம் இல்லை... திக் திக் காஞ்சிபுரம்! | Golden statues are missing in Ekambaranathar Temple, Kanchipuram.

வெளியிடப்பட்ட நேரம்: 07:50 (05/01/2018)

கடைசி தொடர்பு:07:59 (05/01/2018)

ஏகாம்பரநாதர் கோயிலின் எந்த சிலையிலும் தங்கம் இல்லை... திக் திக் காஞ்சிபுரம்!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் செய்யப்பட்ட புதிய உற்சவர் சிலையில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது சிலைதடுப்புப் பிரிவினர் செய்த ஆய்வில் தெரியவந்துள்ளது. சிலையில் மோசடி… தங்க - வைர நகைகளில் மோசடி… என அடுத்தடுத்து அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது பக்தர்களைக் கொந்தளிக்கச் செய்துள்ளது.

 

 

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள ‘சோமாஸ் கந்தர்’ என்றழைக்கப்படும் உற்சவர் சிலை பழுதடைந்த காரணத்தால், புதிய உற்சவர் சிலையைச் செய்யக் கடந்த 2015 இல் கோவில் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர்.  .

அதன்படி இந்து அறநிலையத்துறையின் உத்தரவின் பேரில், 50 கிலோ எடையில் சோமாஸ் கந்தர் சிலையும், 65 கிலோவில் ஏலவார்குழலி அம்மன் சிலையும் செய்ய முடிவு செய்யப்பட்டது. புதிய சோமாஸ் கந்தர் சிலை செய்யப்பட்டு  2016 டிசம்பரில் கும்பாபிஷேகமும் செய்யப்பட்டது. உள்ளூர் பக்தர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி புதிதாகச் செய்யப்பட்டது இந்தச் சிலை.

50 கிலோ சிலைக்கு 5 விழுக்காடு (2.5 கிலோ) தங்கம் சேர்க்கப்பட வேண்டும் என்றும், 65 கிலோ எடையில் செய்யப்பட்ட ஏலவார் குழலி சிலைக்கு 3.25 கிலோ தங்கம் சேர்க்கப்பட வேண்டும் என்றும் இந்து அறநிலையத்துறை உத்தரவில் தெரிவித்திருந்தார்கள். இந்து அறநிலையத்துறை கணக்குப்படி இரு சிலைகளிலும் சேர்த்து மொத்தம் 5.75 கிலோ தங்கம் இருக்க வேண்டும்.

ஆனால், புதிய சோமாஸ் கந்தர் சிலையை 50 கிலோவுக்குப் பதிலாக 111 கிலோ அளவில் செய்து வைத்துவிட்டார்கள். மேலும் சிலைகளில் எவ்வளவு தங்கம் சேர்க்கப்பட்டிருக்கிறது என்ற தகவலையும் தர மறுக்கிறார்கள் என இப்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

சோமாஸ் கந்தர் பழைய சிலை

சோமாஸ் கந்தர் சிலையானது அறநிலையத்துறை குறிப்பிட்டுள்ளபடி 5 விழுக்காடு தங்கம் கலந்து செய்யப்படவில்லை. மேலும், இந்தச் சிலை தயாரிப்புக்காக உபயதாரர்களிடமிருந்து நன்கொடையாக தங்கம் பெறப்பட்டுள்ளது. இப்படிப் பெறப்பட்ட தங்கத்திலும் முறைகேடுகள் பல நடந்திருப்பதாகக் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை மற்றும் அவரது மகன்கள் தினேஷ், பாபு ஆகியோர் கோவில் நிர்வாகத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். இந்த நிலையில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல், காஞ்சிபுரம் சிவகாஞ்சி காவல்நிலையத்துக்கு நேரடியாக வந்து இதுகுறித்து விசாரணை நடத்தினார். இதன் அடிப்படையில், தமிழக அரசின் தலைமை ஸ்தபதி முத்தையா, செயல் அலுவலர் முருகேசன், கோவில் அர்ச்சகர்கள் என 9 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. புதிய சோமாஸ் கந்தர் சிலை மற்றும் ஏற்கெனவே வழிபாட்டிலிருந்த பழைய சிலைகளில் எள்ளளவுகூட தங்கம் இல்லை என்று சிலையைப் பரிசோதனை செய்த சிலை தடுப்புக் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். மோசடி செய்யப்பட்டுள்ளது விசாரணையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், பக்தர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

 

கோயிலில் நடக்கும் முறைகேடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதற்காகத் தொடர்ந்து போராடிவரும் தினேஷ் மற்றும் பாபுவைக் கோயிலில் சந்தித்துப் பேசினோம். “2009 இல் மும்பையைச் சேர்ந்த ஸ்ரீதர் என்ற உபயதாரர் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதருக்கு ஒரு சிலை செய்து கொண்டுவந்தார். இதனால் ‘பழைய சிலை சேதமாகிவிட்டது. புதிதாக வந்த சிலையை வைக்க வேண்டும்’ என கோவில் அர்ச்சகர்கள் செயல் அலுவலருக்கு மனு கொடுத்தனர். இதற்கு பக்தர்கள் மற்றும் அறங்காவலர்களுடன் சேர்ந்து நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம்.

 

பாபுஇதனால் புதிய சிலை வைக்கும் முயற்சியைக் கைவிட்டார்கள். 2015 இல் பழைய சிலையைச் சேதப்படுத்திவிட்டு, மீண்டும் புதிய சிலை வைக்க வேண்டும் எனச் செயல் அலுவலரிடம் அர்ச்சகர்கள் மனு கொடுத்தனர். அப்போது ஏற்பட்ட பிரச்னை காரணமாக கோயிலுக்கு வந்த முத்தையா ஸ்தபதி, ‘இது அபூர்வமான சிலை. ராஜராஜன் காலத்தில் செய்தது. இதுபோன்ற உற்சவர் சிலை வேறெங்கும் கிடையாது. இன்னும் 1000 உற்சவத்துக்குக்கூட இந்தச் சாமியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மும்பையிலிருந்து வந்துள்ள பித்தளை சிலையைப் பயன்படுத்த வேண்டாம்’ என்று சொன்னார். அதன்பின்பு புதிய சிலையை குடோனில் போட்டுவிட்டார்கள். பழைய சிலையைச் சரிசெய்து விடலாம் என்று இந்து அறநிலையத்துறை ஆணையர் வீரசண்முகமணி உத்தரவிட்டார். அடுத்த சிலதினங்களில், இங்குள்ள அர்ச்சகர்கள் சேர்ந்து ஆணையர் வீரசண்முகமணியிடம் அழுத்தம் கொடுத்து புதிய சிலை செய்ய அனுமதி வாங்கிவந்துவிட்டனர்.

 

புதிய சோமாஸ் கந்தர் சிலை

 

ஆரம்பகாலத்தில், 'புதிய சிலை செய்ய வேண்டாம்' என சொன்ன முத்தையா ஸ்தபதியும் புதிய சிலை செய்ய அனுமதி கொடுத்துவிட்டார். இதைத் தொடர்ந்து சிலை செய்ய உபயதாரர் மூலம் தங்கம் பெறுவது தொடர்பாக அறிவிப்பு வெளியானது. எந்த முகவரியில், யாரிடம் தங்கம் கொடுக்க வேண்டும் என்ற விவரங்கள் அதில் தெரிவிக்கப்படவில்லை. எனவே, ஆளாளுக்குப் பலரும் பக்தர்களிடம் தங்கத்தை நன்கொடையாக வாங்கி முறைகேடு செய்திருக்கலாம் என நாங்கள் சந்தேகிக்கிறோம். செயல்அலுவலர் அனுமதியின் பெயரில் பழைய சிலைக்கு அச்சு எடுத்தார்கள். அதன் வீடியோவை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டபோது, சி.சி.டி.வி கேமராவை உடைத்துவிட்டு, 'மூன்று வருடமாக கேமரா வேலை செய்யவில்லை' எனக் கோவில் தரப்பில் பதில் அளித்திருக்கிறார்கள். இதற்கிடையில் புதிய சிலையையும் கோயிலுக்குள் கொண்டுவந்து வைத்துவிட்டார்கள். கோயிலில் செய்ய வேண்டிய சிலையை, வேறெங்கோ செய்து எடுத்துவந்து வைத்திருக்கிறார்கள். அந்த விவரங்கள்கூட யாருக்கும் தெரியப்படுத்தப்படவில்லை.

 

 

ஏலவார் குழலி சிலை

 

 

இந்து அறநிலையத்துறை ஆணையர் குறிப்பிட்டுள்ளதுபோல், புதிய சிலைத் தயாரிப்பில், 5 விழுக்காடு தங்கத்தைக் கலந்துள்ளார்களா என்பது குறித்தும் சரியான பதில் அளிக்கவில்லை. புதிய சிலையை பதிவேட்டில் பதிவும் செய்யவில்லை. இந்து அறநிலையத்துறை சார்பாக  ஆபரணங்களைப் பரிசோதிக்கும் அலுவலரும், அந்தச் சிலையை இதுவரை பரிசோதிக்கவில்லை. இதனால் இந்து அறநிலையத்துறை சார்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தோம். இந்தப் பிரச்னைகள் நடந்து கொண்டிருக்கும்போதே ஏலவார்குழலி உற்சவர் சிலையையும் புதிதாக மாற்றக்கோரி அனுமதியும் வாங்கி வந்தார்கள். சுவாமியின் பஞ்சலோக திருவாச்சிக்குப் பதிலாக வெள்ளி திருவாச்சிதான் கோயிலில் இருக்கிறது. பழைய திருவாச்சி எங்கே இருக்கின்றது என்ற தகவலும் இல்லை. பைரவர், விநாயகர், முருகர் ஆகிய சிலைகளில் பஞ்சலோக திருவாச்சி எங்கே இருக்கின்றது என்பதும் தெரியவில்லை.

 

ஏகாம்பரநாதர் கோயில் காஞ்சிபுரம்

 

புதிய சிலைகள் தயாரிப்பில், 5.750 கிலோ தங்கம் கலந்திருப்பதாகச் சொல்கிறார்கள். இரண்டு கோடி ரூபாய்க்குத் தங்கம் நன்கொடையாகப் பெறப்பட்டுள்ளது என்று சொன்னால், யார் யார் நன்கொடையாகத் தங்கம் கொடுத்திருக்கிறார்கள் என்ற லிஸ்ட் இருக்க வேண்டும். 

இதுவரையிலும் ஆயிரம் சிலைகளுக்கு மேல் சோதனை செய்துள்ள விஞ்ஞானிகள், 'உலோக சிலைகளில் 3 விழுக்காட்டுக்கும் குறைவாகத்தான் தங்கம் கலந்திருக்கும்' எனச் சொல்கிறார்கள். ஆனால், சோமாஸ் கந்தர் சிலையிலோ 5 விழுக்காடு தங்கம் கலந்திருப்பதாக அறநிலையத் துறை சொல்கிறது. அது எப்படி?

 

இவ்விவகாரம் குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுக்கும்போது, 'இது பெரிய இடத்து விவகாரம்' எனச்சொல்லி வழக்குப் பதியவே மறுத்தார்கள். அதனால்தான் காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். விரிவான விசாரணை நடத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்ட பிறகும்கூட, வழக்கினைப் பதிவு செய்யாமலேயே காவல்துறையினர் காலதாமதம் செய்தனர். 

 

அடுத்ததாக, கோயில் வளாகத்தில்தான் புதிய சிலை செய்யப்பட வேண்டும். ஆனால், இவர்களோ வெளியில் எங்கேயோ சிலையைச் செய்துகொண்டு வந்திருக்கிறார்கள். ஆகம விதிப்படி இந்தச் சிலையைச் செய்யவில்லை. கோபுரம் உள்ளிட்ட சிற்ப வேலைப்பாடு இருக்கும் இடங்களில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றாமல், அப்படியே மரமாக வளர விட்டுள்ளார்கள். பிறகு அதனைச் சரிசெய்ய வேண்டும் என அனுமதி வாங்கிக்கொண்டு அவற்றைச் சரிசெய்யும்போது கல்வெட்டுகள், சிற்பங்கள் உள்ள பழைமையான கற்களை எடுத்துவிட்டு, புதிய கற்களை வைக்கின்றார்கள். இப்படி எடுக்கப்படும் பழைமையான கற்களை வெளிச்சந்தையில் விற்றுவிடுகிறார்கள். இந்த முறைகேடுகள் குறித்துக் கேட்டால், எங்களை மிரட்டுகிறார்கள். இந்த நிலையில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்மாணிக்க வேல், காஞ்சிபுரம் சிவ காஞ்சி காவல்நிலையத்தில் நேரடியாக விசாரணை நடத்தி முதல் தகவல் அறிக்கை பதிய வைத்திருக்கிறார். தற்போது செய்த ஆய்வில், முறைகேடு நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயிலில் முறைகேடு செய்தவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்.” என்கின்றனர் வேதனையாக.

 

இவ்விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய முன்னாள் அறங்காவலர் ரகு,“சோமாஸ் கந்தர் சிலையின் ஜடைக்குப் பின்பகுதியில் உள்ள சிரசு சக்கரம் உடைந்திருந்தது. அதை எடுத்து வைத்திருப்பதாகக் கோவில் தரப்பில் சொன்னார்கள். ஆனால், அந்தச் சிரசு சக்கரம் இருக்கும் இடமே தெரியவில்லை. இதனைத் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டபோது, உற்சவர் மண்டப முறைக்காரர் வசம் உள்ளதாகப் பதில் அளித்தார்கள். 'முறைக்காரரிடம் பழைமையான பொருள்கள் இருக்கிறது என்கிறார்கள். அதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். பின்னர் சிரசு சக்கரத்தை சுவாமிக்கேப் பொருத்த வேண்டும். இல்லையெனில் ஆவணக் காப்பகத்தில் அதனை வைக்க வேண்டும்' என்று கோரி அதிகாரிகளுக்குப் பதிவுத் தபாலில் கடிதம் அனுப்பினேன். அதற்கு எந்தப் பதிலும் இதுவரை வரவில்லை. பின்பு பொன்மாணிக்கவேலிடம் புகார் கொடுத்தேன். இதையடுத்து வேறொரு பித்தளைச் சக்கரத்தைக் காண்பித்து இதுதான் அந்தச் சக்கரம் என்று இந்து அறநிலையத்துறை சார்பாக பதில் அளித்துள்ளார்கள். மேலும், 'கோவில் விவகாரங்கள் குறித்து யாரேனும் தவறான தகவல்களைக் கொடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்' எனவும் இந்துஅறநிலையத்துறையினர் மிரட்டுகிறார்கள். 

மன்னர்கள் காலத்தில் செய்யப்பட்ட தங்க நகைகள், வைரங்கள் கோயிலில் இருக்கின்றன. கோயிலில் உள்ள ஆபரணங்கள் பட்டியல் சரிபார்க்கப்பட வேண்டும். அவற்றின் உண்மை தன்மை குறித்தும் ஆய்வு செய்யவேண்டும்” என்றார்.

 

ஏகாம்பரநாதர் கோயில் செயல் அலுவலர் முருகேசன், “வழக்கு பதியப்பட்ட ஒன்பது பேரில் நானும் ஒருவன். அதோடு அரசு ஊழியர். அந்த வழக்கில் நான் இருப்பதால், இது சம்பந்தமாக எதுவும் தெரிவிக்கக் கூடாது.” எனக்கூறி நம்மிடம் பேசுவதைத் தவிர்த்துக் கொண்டார்.

 

ஜனவரி இரண்டாம் தேதி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் கோயிலில் உள்ள சிலைகளில் தங்கம் கலக்கப்பட்டுள்ளது குறித்து ஆய்வு செய்தனர். அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பி.எம்.ஐ (positive metal Identification) என்ற எலக்ட்ரானிக் கருவி மூலம் உற்சவர் சிலைகளைப் பரிசோதனை செய்தனர். பரிசோதனையின் முடிவில் புதிய சோமாஸ் கந்தர் சிலை, புதிய ஏலவார்குழலி சிலை, பழைய சோமாஸ்கந்தர் சிலை என எதிலும் எள்ளளவுகூட தங்கம் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் உத்தரவுப்படி இந்த இரு சிலைகளிலும் தங்கம் கலக்கப்படவில்லை. எனவே, ஸ்தபதி முத்தையா  சொன்னது பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

பழைய சோமாஸ் கந்தர் சிலை 1,300 வருடங்கள் பழைமை வாய்ந்தது. 115 கிலோ எடையுள்ள அந்தச் சிலையில் 87 கிலோ வரையிலுமாகத் தங்கம் கலந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதிலும் எள்ளளவுகூடத் தங்கம் இல்லை எனத் தெரியவந்துள்ளது. இதையடுத்து பழைய சிலையும் மாற்றப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. இதனால், சிலைகளின் தொன்மை குறித்து தொல்லியல் துறையினர் விரைவில் ஆய்வு செய்ய உள்ளனர். ஆய்வில் முறைகேடுகள் உறுதிப்படுத்தப்படும் நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கைது நடவடிக்கை இருக்கலாம் என்று காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். சிலை தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க சிலைகடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்மாணிக்கவேல் அதிரடி காட்டுகிறார். முறைகேடுகள் தொடர்பாக இன்னும் சிலர் மீது வழக்குப் பதியப்படலாம் எனத் தகவல் வெளியாகிவருகிறது.

 

தெய்வம் நின்று கொல்லும்!


டிரெண்டிங் @ விகடன்