"காங்கிரஸுக்குப் புரிந்தது... பி.ஜே.பி.க்குப் புரியவில்லை..!" சீறும் திருமுருகன் காந்தி | Thirumurugan gandhi supports Shashi Tharoor stand against sushma swaraj talks in parliament

வெளியிடப்பட்ட நேரம்: 10:55 (05/01/2018)

கடைசி தொடர்பு:21:00 (05/01/2018)

"காங்கிரஸுக்குப் புரிந்தது... பி.ஜே.பி.க்குப் புரியவில்லை..!" சீறும் திருமுருகன் காந்தி

ந்தியா முழுவதும் இந்தியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்பதற்கு மிகவும் முயற்சித்து வருகிறது மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசு. இதுநாள் வரை இந்தி மொழியை இந்தியா முழுவதும் ஆட்சி மொழியாக மாற்ற ஏற்பாடு செய்துவந்த வந்த பி.ஜே.பி.  தற்போது ஐ.நா வரை இந்தியைப் பரப்பும் முயற்சிகளை வெளிப்படையாக மேற்கொண்டு வருகிறது. அதாவது ஐ.நா சபையின் இந்திய அலுவல் மொழியாக இந்தியை கொண்டுவரும் முயற்சியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தற்போது ஆங்கிலம், பிரஞ்சு, ஸ்பானிஸ், சைனீஸ், அரபு மொழிகள் உள்ளிட்ட மொழிகள் அலுவல் மொழியாக ஐ.நா சபையில் இருந்துவருகின்றன.

நாடாளுமன்றத்தில் பி.ஜே.பி காங்கிரஸ்

 

ஐ.நா சபையில் ஒரு மொழி அதிகாரபூர்வ மொழியாக வேண்டுமானால் அதற்கு மூன்றில் இரண்டு பங்கு நாடுகளின் பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அதாவது... ஐ.நா சபையில் மொத்தமுள்ள 193 உறுப்பினர்களில் குறைந்தபட்சம் 129 உறுப்பினர்கள் ஆதரவு அளித்தால் மட்டுமே ஒரு மொழியானது ஐ.நா அலுவலக மொழியாக ஏற்றுக்கொள்ளப்படும். இந்த நிலையில், 'ஐ.நா சபையில் அலுவலக மொழியாக இந்தியை கொண்டுவருவதற்கு பி.ஜே.பி அரசு முயற்சி எடுத்துவருகிறது. இந்தியர்கள் அதிகளவில் வாழும் நாடுகளான ஃபிஜி, மொரீஷியஸ் மற்றும் சுரிநாம் உள்ளிட்ட நாடுகளின் ஆதரவை பெறுவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்காக 40 கோடியல்ல...400 கோடிகள் செலவானாலும் அதை இந்திய அரசு செய்யும்' என்று கடந்த 3-ம் தேதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பரபரப்பை ஏற்படுத்தினார். 

 

 

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் எம்.பியும், ஐ.நா சபையின் முன்னாள் துணைப் பொதுச்செயலாளருமான சசி தரூர் பேசியுள்ளார். அதாவது "இந்திக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டிய அவசியம் என்ன?. இந்தி என்பது தேசிய மொழி அல்ல... இந்தியாவின் அலுவல் மொழி அவ்வளவுதான். இந்த நேரத்தில் ஐ.நா. வில் அலுவல் மொழியாக இந்தியைக் கொண்டுவருவதற்கான அவசியம் என்னவிருக்கிறது. எதிர்காலத்தில் ஒரு தமிழர் பிரதமர் ஆனாலோ அல்லது வெளியுறவுத்துறை அமைச்சர் ஆனாலோ? அவர்களை இந்தி பேசவேண்டிய சூழலுக்கு இது நிர்பந்திக்குமே. அவர்களை ஏன் அப்படியான சூழலுக்கு ஆளாக்க வேண்டும்?" என்று சுஷ்மா ஸ்வராஜின் பேச்சுக்கு சசி தரூர் பதிலடி கொடுத்தார்.

 

திருமுருகன் காந்திஐ.நா.வுக்கான அலுவல் மொழியாக இந்தியைக் கொண்டுவருவதற்கு பி.ஜே.பி. அரசு எடுத்துவரும் முயற்சி பற்றியும், அதற்கு சசி தரூரின் எதிர்ப்பு பற்றியும் மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியிடம் கேட்டபோது "இந்தியா என்பது ஒரு ஒற்றை தேசம் கிடையாது. பல மொழிகளைப் பேசும், பல தேசிய இனங்களின் கூட்டமைப்பு அவ்வளவே. இதில் ஒரு மொழியை மட்டும் அதாவது இந்தியை மட்டுமே முன்னிறுத்துவது என்பது பிற மொழிகளை அழிக்கக் கூடிய செயலாகும். அவ்வளவு ஏன்?... இந்தி என்பது இந்தியாவில் மட்டும்தான் ஆட்சி மொழியாக இருக்கிறது. ஆனால், தமிழ் மொழி பல நாடுகளில் ஆட்சி மொழியாக இருந்து வருகிறது. ஏன் அவர்கள் தமிழ் மொழியை முன்னிறுத்தவில்லை. அதுவும் இல்லையென்றால் இந்தியாவில் இருக்கும் பழைமையான மற்றும் சிறப்பு வாய்ந்த தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற செம்மொழி அதிகாரம் பெற்ற மொழியை ஐ.நா.வின் அலுவல் மொழியாக மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியது தானே. இங்கே அலுவல் மொழியாக இருக்கிறது என்கிற ஒரே காரணத்துக்காக இந்தியை ஐ.நா.வின் அலுவல் மொழியாக மாற்றுவதற்கு முயற்சி எடுத்துக்கொண்டு வருகிறார்கள். இன்று இந்தியைக் கொண்டு வரவேண்டும் என்பார்கள்.. நாளை எங்கிருந்தோ வந்த சமஸ்கிருதத்தையும் அலுவல் மொழியாக கொண்டுவர வேண்டும் என்பார்கள்.இன்னும் சொல்லப் போனால் இந்தியாவில் இந்தியை மட்டும் வைத்துக்கொண்டு மற்ற மொழிகளை வேரோடு அழிக்கும் முயற்சியைத் தான் தற்போது ஆட்சி செய்துவரும் பி.ஜே.பி அரசு செய்து வருகிறது. எல்லா மக்களிடமும் சமமான முறையில் வரி வசூல் செய்கிறார்கள். அப்படியென்றால் அனைத்து மக்களின் மொழியையும் சமமாக நடத்தப்பட வேண்டும். ஐ.நா சபையில் நடக்கும் உரையை எந்த மொழியிலும் மாற்ற மொழிபெயர்ப்பாளர்கள் முறையைப் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், பாராளுமன்றத்தில் நடக்கும் விவாதத்தை இந்தி தெரிந்தவர்கள் மட்டுமே விவாதிக்கவும், புரிந்துகொள்ள முடியும். ஏன் ஐ.நா. சபையில் இருக்கும் மொழிபெயர்ப்பாளர்கள் முறையை இந்தியாவில் பயன்படுத்தக்கூடாது?.இந்தியை ஐ.நா.வின் அலுவல் மொழியாக்க 400 கோடி வேண்டுமானாலும் செலவு செய்பவர்கள் மொழிபெயர்ப்பாளர்கள் முறைக்கு ஏன் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை?. இந்தியாவில் இந்தியைத் தவிர மற்ற மொழிகளெல்லாம் எக்கேடு கெட்டால் என்ன? என்பதுதான் இவர்களது நோக்கமாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிக்கு புரிந்தது கூட ஆளுங்கட்சிக்குப் புரியவில்லை என்பது வெட்கக் கேடான விஷயம்" என்று சீறினார் திருமுருகன் காந்தி.


டிரெண்டிங் @ விகடன்