Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

`இப்போது சொல்லுங்கள் போக்குவரத்துத் தொழிலாளர்களின் இந்தப் போராட்டம் தேவையற்றதா?’ தொழிலாளி மகளின் ஃபேஸ்புக் பதிவு

 

போக்குவரத்துத் தொழிலாளர்கள்

மூத்தவளாகப் பிறந்த மூணாம் வருஷத்தில் அப்பாவுக்கு போக்குவரத்துத் துறையில் ஓட்டுநர் பணி கிடைத்திருந்தது. அதற்குள் தங்கையும் தம்பியும் பிறந்தார்கள். அரசுப் போக்குவரத்துத் துறையில், அப்பாவுக்குப் பணி கிடைக்கும் வரையில், கான்வென்ட் பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்தேன். வேலை கிடைத்த ஓராண்டிலேயே அரசு உதவி பெரும் தமிழ் மீடியம் பள்ளியில் கல்வி பெறக்கூடிய வசதிக்குத்தான் சம்பளம் கிடைத்தது.

அதுவரையில் சென்னைக்குள் குடியிருந்த நாங்கள் வீட்டு வாடகை தர முடியாத சூழலில், சென்னைக்கு வெளியே அப்போதிருந்த துரைப்பாக்கத்தில் குடிசை வீடொன்றுக்கு வாடகைக்கு மாறியதுகூட அப்பா போக்குவரத்து ஊழியராக வேலைக்குச் சேர்ந்த பின்னர்தான். மூன்றாம் வகுப்பு குழந்தையாக ஒரு கையில் தங்கையும், மற்றொரு கையில் தம்பியும், ஜோல்னா பையுமாக எட்டாத பல்லவன் பேருந்து படிக்கட்டில் கை வைத்து ஏறி அடையாறில் இருக்கும் அவ்வை இல்லப் பள்ளிக்கூடத்துக்கு வந்து வீட்டுக்கு அதேபோல திரும்ப வேண்டும். அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் மகனுக்கு நிரந்தர வேலை என பாட்டி, வருவோர் போவோரிடமெல்லாம் பீற்றிக் கொண்டிருக்கும்போது நாங்கள் சென்னைக்குள் குடியிருக்க வாடகைக்கு வழியில்லாமல் பாம்புகள் சூழ் சுடுகாட்டு வழிப்பாதை கடந்து இரவு 7 மணிக்கு பள்ளிக் கூடத்திலிருந்து திரும்பிக்கொண்டிருப்போம். வீடு வந்து சேரும் வரை வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருந்த அம்மாவும் அப்பாவும் சென்னைக்குள் குடியிருப்பை மாற்ற வேண்டியது தவிர்க்க முடியாதது. அதனால் வாடகையைச் சமாளிக்க, தான் வேலைக்குப் போவதாய் அம்மா முடிவெடுத்ததும் என.... அரசுப் போக்குவரத்து ஊழியனின் குடும்பம் இத்தனைச் செழிப்பாக இருப்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்...?

அரசு உதவி பெரும் பள்ளிதான் எனினும் அங்கு கட்ட வேண்டிய கல்விக் கட்டணத்துக்குப் போக்குவரத்து ஊழியரான அப்பா படும் பாட்டை பார்த்து நாங்கள் ரெண்டு பெண்களும் விடுமுறை தினங்களிலெல்லாம் குழந்தைத் தொழிலாளர் ஆக்கப்பட்டோம். 14 -15 வயசில் போட்டிருக்கும் ஆடை முழுக்க screen printing paint வழிய சாலைகளில் நிமிர்ந்து நடக்கக் கூசி குனிந்து நடந்து வீடு வந்து சேரும் நேரங்களில் எங்களின் தகப்பனார் அரசுப் பேருந்தில் தலையை நிமிர்த்தி நேர் கொண்ட பார்வையோடு தானொரு அரசுப் பேருந்து ஊழியன் என்ற பெருமிதத்தோடு லட்சக்கணக்கானோரின் பாதுகாப்பான பயணத்துக்கு உத்தரவாதம் தருபவராக நெருக்கடி மிக்க சென்னையின் சாலைகளில் வாகனத்தை செலுத்திக் கொண்டிருப்பார்.

விவரம் தெரிந்த நாள் முதல் அப்பா ஓய்வு பெற்று வரும்வரை 4,000 ரூபாய்க்கு கூடுதலான சம்பளத்தை வாங்கியதாக நினைவே இல்லை. அதற்குள் அம்மா கொஞ்சம் மிளகாய்ப் பொடி, துளியூண்டு புளி, சிறிது உப்பு... இவை கிடைத்தால் அடுப்பு கூட இல்லாமல் குழம்பு வைப்பது எப்படியென்பதை பழகியிருந்தாள். படிப்பும், பண்டிகை தினக் கொண்டாட்டங்களும், நிர்வாகம் தந்த கடன் திட்டங்களிலேயே கழிந்ததில் சம்பளம் பிடித்தம் போக உப்பு, புளி, மிளகாய்ப் பொடி வாங்குமளவுக்கு தேறும். அத்தோடு ரேஷன் அரிசியும்...

விடியற்காலை மூன்று மணி ஷிஃப்ட் முதல் எல்லா வகை ஷிஃப்ட் களிலும் மாங்கு மாங்கென்று வேலை செய்தும் கடன்கள் தவிர வேறு ஒன்றும் தேறாத துறை போக்குவரத்துத் துறை என்று உணர்ந்த நேரத்தில், நெருக்கடி மிக்க வேலை தரும் கோபத்தை வீட்டுக்குள் நுழைந்ததும் காட்டுவார் அப்பா. வீடு, வேலையென உழைத்துக் கொட்டிய அம்மாதான் அடிதாங்கியாகவும் ஆனார். 300 சதுர அடி வாடகை வீட்டில் இருந்த அளவான பொருள்களும் மூலைக்கொன்றாய் வீசியெறியப்பட்டன. அதுவரை சேர்த்து வைத்த மான அவமானங்களும்...

ஒருமுறை திடீரென சபரிமலைக்கு மாலை போட்டுக்கொண்டு வீட்டுக்கு வந்தார் அப்பா. உடன் 13 வயதான தம்பியும். தாங்கள் பிச்சையெடுத்து சாஸ்தாவின் சன்னிதானத்துக்கு வருவதாக வேண்டியிருப்பதாகச் சொன்னார் அப்பா.. வீட்டில் சண்டையில்லாமல் இருக்கும் என நாங்களும், தனக்கு விழும் அடியிலிருந்து ஒரு 48 நாளேனும் விடுதலை என அம்மாவும் சந்தோஷப் பட்டுக்கொண்டோம். ஒரு விடியற்காலை தம்பியைக் கூட்டிக்கொண்டு புறப்பட்டுப் போனவர் தெருக்களில் சாமிக்கு உண்டியல் மூலம் பிச்சை எடுத்து சேர்த்த பணத்தில் வீடு வந்து சேர்ந்தார்கள். எண்ணிப் பார்த்ததில் 3,500 தேறியது. மறுநாள் காலை உண்டியலுக்குப் பூஜை எல்லாம் முடித்து உண்டியலை உடைத்து எடுத்த பணத்தை எங்கள் மூவருக்கும் பள்ளிக் கல்வி கட்டணம் கட்ட சொல்லிப் பிரித்துக்கொடுத்தார் அப்பா.. 'அப்ப கோவிலுக்கு...' என்று கேட்ட அம்மாவிடம் 'எது முக்கியம்னு ஐயப்பனுக்குத் தெரியும்' என்றார், அப்பா என்ற அரசு சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த அரசுப் போக்குவரத்து ஊழியர்...

வேலை நிறுத்தம்

குடும்பத்தோடு சுற்றுலா செல்ல வசதியாக போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த இலவச பஸ் பாஸைப் பயன்படுத்தித்தான் சட்டக் கல்லூரி படித்த காலங்களில், மதுரை to சென்னை வந்து போக முடிந்தது. வளர்ந்து பெரியவர்களாகி ஒரு நயா பைசா கூட அப்பா கையிலிருந்து வாங்காமல் கல்யாணம் காட்சியெல்லாம் முடித்துக்கொண்டோம். இப்படியே 30 ஆண்டுகால சேவை முடித்து ஓய்வு பெற்றபோது கையில் நிர்வாகம் எழுதித் தந்த ஒரு அக்ரிமெண்ட் பேப்பரும் கையுமாக வீடு வந்து சேர்ந்ததில் இருந்து ஓரிரண்டு ஆண்டுகள் ஒழுங்காக 6,000 ரூபாய் பென்ஷன் வந்துகொண்டிருந்தது. அம்மா வேலைக்கெல்லாம் போகக்கூடாதென லட்சுமணக் கோடு கிழித்து மாதம் இவ்வளவு என நானும், தங்கையும் கொடுத்து வந்தோம். சிறு வயசிலிருந்து வாழ்க்கை கற்றுக் கொடுத்த தரை நீச்சல், பின்னர் காற்றிலேயே நீச்சலடிக்கும் அளவுக்கு எங்களை பழக்கித்தந்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திடீரென இரு கண் விழிகளில் ஒன்று மட்டும் அப்படியே அசையாமல் நிற்க, அப்பாவை அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். 'கடந்த இரண்டு ஆண்டுகளாக சரி வர தரப்படாத பென்ஷன், மீண்டுமொரு முறை சார்ந்திருக்கும் நிலைக்குத் தன்னை தள்ளிவிடுமோ என்ற அச்சம், பென்ஷன் ஆபீசுக்கும், தொழிற்சங்க அலுவலகத்துக்கும் நடந்து நடந்து தொய்வடைந்ததைக் காட்டிலும் தங்களின் பணம் 7,000 கோடியை அப்படியே அமுக்கி வாயில் போட்டுக்கொண்ட அரசாங்கம், இனி அதை திருப்பித் தரக் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும் என்ற உண்மை தெரிந்துகொண்டதும், தான் இறப்பதற்குள் அது சாத்தியமில்லை' என்ற அவநம்பிக்கையும்தான் அவரை முடக்கிப்போட்டுவிட்டது என்பது பின்னர்தான் எங்களுக்குத் தெரியவந்தது. 

பிள்ளைகளாக உடனடியாகத் தோள் கொடுத்தோம், சிகிச்சை அளித்தோம், சந்தோஷமாய் இருக்கச் சொன்னோம். ஆனாலும் அப்பாவும் சுசிலா ஆனந்த்அம்மாவும் சார்பற்று வாழும் சுயமரியாதையை மீட்டுத் தர முடியாதவர்களாகிவிட்டோம். அம்மா தன்னுடைய 65 வயதில் மீண்டும் வேலைக்குக் கிளம்பிவிட்டாள். என்ன சொன்னாலும் இது தங்களின் சுயமரியாதை என்கிறாள். எங்கள் வீட்டில் மட்டுமல்ல, ஓராயிரம் அரசுப் போக்குவரத்துத் தொழிலாளியின் குடும்பங்களில் இன்று இதுதான் நிலை.

இப்போது சொல்லுங்கள், காலமெல்லாம் உழைத்துச் சேர்த்து அரசிடம் கொடுத்த தங்கள் பணம் 7,000 கோடியை 10 ஆண்டுகளுக்கும் மேலாகக் காத்திருந்து திரும்பக் கேட்கும் இந்தப் போராட்டம் நியாயமற்றதா? தொழிலாளிகளின் மாதச் சம்பளம் 17,700 என உயர்த்தியப் பின்னரும் தொழிலாளர்கள் போராடுவதாகச் சொல்லும் அமைச்சர் சும்மாவா தந்தார்... ஒன்றல்ல இரண்டல்ல 23 முறை பேச்சுவார்த்தை. அந்தப் பேச்சு வார்த்தைக்கு அழைக்க நூற்றுக்கணக்கில் கூட்டங்கள், உள்ளிருப்புப் போராட்டங்கள்.

தொழிலாளிகளின் உழைப்பு கூலி 7,000 கோடியை 1,000 கோடிகள் வீதம் 7 ஆண்டுகளுக்குத் தருவோம் என வாய் கூசாமல் பொறுப்பற்றுப் பதில் சொல்லும் அரசுக்கும், இரண்டு மாதங்களுக்கு முன்னால் வரை வெறும் 80,000 ரூபாயாக இருந்த தங்கள் சம்பளத்தை 'போதவில்லை எனச் சொல்லி வேறு வேலைக்குச் செல்லாமல்' 2 லட்சம் ரூபாயாக உயரும் வரை எல்லாவகையான வேலையும் பார்த்து சாதித்துக்கொண்ட நீதித்துறைக்கும் எதிராக இன்று போக்குவரத்துத் தொழிலாளிகள் போராடிக் கொண்டிருப்பது பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கவா? தமிழகப் போராட்ட வரலாறுகளில் போக்குவரத்துத் தொழிலாளிகளின் போராட்டங்களுக்கு ஒரு வரலாறு உண்டு. பிரித்தாளும் சூழ்ச்சியில் போராட்டங்களை நசுக்கி குளிர் காய்ந்த அரசாங்கம் எல்லாப் போராட்டங்களையும் நர்ஸுகள் போராட்டம் போல நீதிமன்ற துணை கொண்டு நசுக்கிவிடக் கூடுமா?

இப்போது சொல்லுங்கள் போக்குவரத்துத் தொழிலாளர்களின் இந்தப் போராட்டம் தேவையற்றதா?

இப்படிக்கு 

சுசிலா ஆனந்த் (போக்குவரத்து தொழிலாளியின்  மகள்)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement