உங்களை சிகரெட் பிடிக்க வைத்தது யார்? மார்ல்பரோ உற்பத்தி நிறுத்தமும்,சில அரசியலும்!

2017-ன், டிசம்பர் கடைசியில் இங்கிலாந்தின் நாளிதழ்களில் இப்படி ஒரு விளம்பரம் வந்தது. 

                    "எங்கள் புத்தாண்டு சபதம் இதுதான்.
                  நாங்கள் சிகரெட்டை கைவிடுகிறோம்." 

"இதுல என்னப்பா ஆச்சர்யம்? அதுதான் ஒவ்வொரு வருஷமும் சபதம் எடுத்து, எடுத்து ஒண்ணுமே பண்றதில்லையே?" என்ற கேள்வி பொதுவாக எழலாம். இதை ஒரு "அ"வோ, "ஆ"வோ, "இ"யோ, "ஈ"யோ...சொல்லவில்லை. சொன்னது உலகின் ஒரு முன்னணி சிகரெட் நிறுவனம். சிகரெட்டை தூரத்திலிருந்து மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த ஒரு பெரும் மக்கள் கூட்டத்தினிரிடையே வலியப் போய் சிகரெட்டை திணித்த ஒரு நிறுவனம். சிகரெட் பிடிப்பவர்களுக்கு நன்கு பரிச்சயமான "பிராண்ட்" இந்த "மார்ல்பரோ" (Marlboro).

மார்ல்பரோ சிகரெட் உற்பத்தி நிறுத்தம்

பிலிப் மோரிஸ் இண்டர்நேஷனல் (Philip Morris International - PMI) எனும் நிறுவனம் தான் மார்ல்பரோ சிகரெட்டைத் தயாரிக்கிறது. இது 1924-ல் தொடங்கப்பட்டது. 

சிகரெட் அறிமுகப்படுத்தப்பட்டது; அது மிக அதிகளவில் தயாரிக்கப்பட்டது; விளம்பரங்களின் மூலம் லட்சக்கணக்கானவர்களை புகைக்க வைத்தது; சில விளம்பர யுத்திகளின் மூலம் பெண்களை புகைக்க வைத்தது; இப்படி சிகரெட்டின் ஒவ்வொரு நகர்வுக்குப் பின்னரும் பெரும் அரசியல் இருக்கிறது. அதையெல்லாம் பார்ப்பதற்கு முன்னர் சிகரெட்டில் அப்படி என்ன இருக்கிறது? அது ஏன் அத்தனை கேடு விளைவிக்கிறது? என்ற கேள்விகளிலிருந்து தொடங்கலாம்.

புகையிலை போடுவது, புகைப்பது என்பதற்குப் பின்னர் மிகப்பெரிய வரலாறு இருக்கிறது. ஆனால், நாம் இங்கு பேசுவது "சிகரெட்" என்பதைப் பற்றி மட்டும்தான். சிகரெட் என்றதும் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது "நிகோடின்" (Nicotine). ஆம், சிகரெட்டிலிருக்கும் மிக முக்கியமான வஸ்து இந்த நிகோடின். இது நம் மூளையைத் தூண்டிவிடும் ஒருவகையான ரசாயனம். அதாவது, "Primary Psychoactive Chemical". 

நிகோடின்

சிகரெட்டிலிருந்து வரும் அந்தப் புகை என்பது ஒரு வகையான "தூசு படலம்" (Aerosol). இந்தப் படலத்தில் நிகோடின், கார்பன் மோனாக்ஸைடு, அக்ரொலின் (Acrolein) உட்பட  நான்கு ஆயிரம் ரசாயனக் கலவைகள் இருக்கின்றன. இதில் குறிப்பாக 70-ற்கும் அதிகமான ரசாயனக் கலவைகளை "கார்சினோஜெனிக்" (Carcinogenic) என்று சொல்வார்கள். இந்த 70 ரசாயனக் கலவைகள்தான் கேன்சர் உருவாக்கும் முக்கிய காரணிகள். சிகரெட் புகையில் இந்தக் கேன்சர் காரணிகள் கலந்திருப்பதால்தான், சிகரெட் புகைப்பவர்களுக்கு மட்டுமல்லாமல், அதன் பக்கத்தில் இருப்பவர்களுக்கும்கூட பாதிப்பு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. 

சிகரெட்டைப் புகைக்கத் தொடங்கிய 6 நொடிகளில், அது நம் மூளையை உசுப்பி விட்டுவிடும். பென்ஸின் (Benzene), ஆர்செனிக் (Arsenic), பார்மால்டிஹைடு (FormalDehyde), குரோமியம் (Chromium), வினைல் குளோரைடு (Vinyl Chloride) போன்ற ரசாயனங்கள்தான் கேன்சருக்கான முக்கியக் காரணிகளாக சொல்லப்படுகின்றன. 

மார்ல்பரோவின் இந்த விளம்பரத்துக்கு ஒரு பக்கம் பாராட்டுகள் வந்தாலும், ஒரு பக்கம் எதிர்ப்புகளும் வருகின்றன. சிகரெட் உற்பத்தியை நிறுத்தினாலும், அதற்கு மாற்றாக வேறு சில புகையிலைப் பொருள்களை அவர்கள் அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். குறிப்பாக, இ-சிகரெட்களை (E - Cigarettes) அவர்கள் பெருமளவு தயாரிக்க இருக்கிறார்கள். 

மார்ல்பரோ விளம்பரம்

சிகரெட்டின் ஆரம்பமும், அந்த விளம்பரங்களும், அதன் வளர்ச்சியும் மிகவும் ஆச்சர்யமான ஒரு விஷயம். ஆரம்பக் காலங்களில் சிகரெட் கைகளால்தான் தயாரிக்கப்பட்டன. அதனால், அதன் விலை மிகவும் அதிகமாக இருந்தது. அந்தக் காலங்களில் பெரும் பணக்காரர்கள் மட்டுமே சிகெரெட் புகைத்து வந்தனர். ஆனால், ஒரு கட்டத்தில் சிகரெட் தயாரிக்கும் இயந்திரங்கள் வரவும் அதன் விலை பெருமளவு வீழ்ச்சி கண்டது. 1847-ல் மெக்ஸிகோவைச் சேர்ந்த ஜுவான் நெபுமெசினோ அடர்னோ (Juan Nepomuceno Adorno) என்பவர், தான் கண்டுபிடித்த சிகரெட் தயாரிக்கும் இயந்திரத்துக்குக் காப்புரிமைப் பெற்றார். ஆனால், அது பெரும் கவனத்தை ஈர்க்கவில்லை. ஆனால், 1800-களின் இறுதியில் ஜேம்ஸ் ஆல்பெர்ட் பான்காக் (James Albert Boncack) என்பவர் கண்டுபிடித்த இயந்திரம் இந்தத் தொழிலில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. ஒரு நாளைக்கு 40 ஆயிரம் என்ற அளவில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகள், இந்த இயந்திரங்களின் வருகையால் ஒரு நாளைக்கு 40 லட்சம் என்றளவுக்குப் போனது. 

சிகரெட்டின் விலையை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தியாகிவிட்டது. தயாரிப்பையும் பெருமளவு கூட்டியாகிவிட்டது. அடுத்து? இதை விற்பனை செய்ய பெரும் சந்தையை உருவாக்க வேண்டும். இன்று நடக்கும் பல பொருள்களின் சந்தை விரிவாக்கம் மற்றும் விளம்பர உத்திகளுக்கு வித்திட்டது அன்றைய சிகரெட் வியாபாரம் தான். 

டைம்ஸ் சதுக்க விளம்பரம்

1923-ல் நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் மிகப் பிரமாண்டமான சிகரெட் விளம்பரம் வைக்கப்பட்டது. "சிகரெட் ஆசுவாசத்தின், மகிழ்ச்சியின் அறிகுறி" என்று விளம்பரப்படுத்தப்பட்டது. முதலாம்  மற்றும் இரண்டாம் உலகப் போர் காலகட்டங்களில்  ராணுவ வீரர்களுக்கு இலவசமாக சிகரெட்கள் வழங்கப்பட்டன. இருந்தும் பெண்கள் சிகரெட் பிடிப்பதில் பெரிய ஆர்வம் காட்டவில்லை. பெண்களை எப்படியாவது கவர வேண்டும் என சிகரெட் நிறுவனங்கள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டன. 

மார்ல்பரோ புகைக்கும் பெண்கள்

ஒரு ஆவணப்படத்தில் விளம்பரப்பட இயக்குநர் எட்வர்ட் பெர்னேஸ் (Edward Bernays) இப்படியாகச் சொல்கிறார்...

"பெண்கள் சிகரெட் பிடிக்க மாட்டார்கள் என்ற நிலையை எப்படியாவது உடைக்க வேண்டும். அதற்கான திட்டங்கள் வேண்டுமென்று ஒரு சிகரெட் நிறுவனம் என்னை அணுகியது. அதற்காக சில முயற்சிகளை நாங்கள் முன்னெடுத்தோம். அதுவும் எங்களுக்குப் பெரியளவில் கைகொடுத்தன. முதலில் சில பெண்களை அழைத்து ஒரு ரிசார்ட்டில் தங்கவைத்து அவர்கள் அனைவரையும் சிகரெட் புகைக்க வைத்தோம். "இது பெண் சுதந்திரத்துக்கான அடையாளம்" என்று அவர்கள் சொல்வதுபோல் அந்த நிகழ்வை வடிவமைத்தோம். அன்றைய காலங்களில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில்கூட முதல் பக்கத்தில் இந்தச் செய்தி வெளியிடப்பட்டது. இதன் பிறகு, "பெண்களுக்கான சுதந்திரத்தின் அடையாளமாக" முன்னிறுத்தி நிறைய விளம்பரங்களைத் தயாரிக்க ஆரம்பித்தோம்." என்று சொல்கிறார். 

Camel Cigarette

ஆரம்பக் காலங்களில், சிகரெட் பிடிப்பது உடல்நலத்துக்கு எந்த தீங்கையும் விளைவிக்காது என்பதாகவே விளம்பரங்கள் செய்யப்பட்டன. இதன் பின்விளைவுகளையும், கேடுகளையும் அறியாமல் அந்தக் காலங்களில் சிகரெட்டைப் புகைத்தவர்கள் அதிகம். 1950களின் ஆரம்பத்தில் மருத்துவர்கள் சிகரெட்குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்தனர். அது சில அதிர்ச்சிகரமான முடிவுகளை அவர்களுக்குக் கொடுத்தது. குறிப்பாக, எலிகளின் மீது புகையிலை தாரை பூசி வைத்து சில ஆராய்ச்சிகளை மெற்கொண்டபோது, எலிக்கு விரைவிலேயே கேன்சர் நோய் தாக்கியது தெரியவந்தது. அப்போதுதான், முதன்முறையாக சிகரெட் கேன்சர் நோயைக் கொடுக்கும் என்ற உண்மை உறுதியானது. ஆனால், இந்த முடிவு உடனடியாக மக்கள் பார்வைக்கு வந்துவிடவில்லை.

1953-ல் அமெரிக்காவில் ஒரு ரகசிய சந்திப்பை ஏற்பாடு செய்கிறார்கள் உலக சிகரெட் கம்பெனிகள். அவர்கள் மிக ரகசியமாக சில திட்டங்களைத் தீட்டுகிறார்கள். தங்கள் பொருளை விற்கவும், தங்களுக்கான லாபத்தை உறுதி செய்துகொள்ளவும் அவர்களுக்கு இருந்த ஒரே ஆயுதம் விளம்பரம் தான்.

மார்ல்பரோ

 "பல மருத்துவர்கள் கேமல் (Camel) சிகரெட்டைப் புகைக்கிறார்கள்" என்று ஒரு விளம்பரப் பிரசாரத்தைத் தொடங்குகிறார்கள். அதாவது, மருத்துவர்களே புகைக்கிறார்கள் என்றால் இது எவ்வளவு பாதுகாப்பானது என்று நினைத்துப் பாருங்கள்? என்று சொன்னது அந்த விளம்பரம். 

மார்ல்பரோ சிகரெட் விளம்பரம்

இப்படியாகத் தொடங்கிய சிகரெட்டின் பயணம் இன்று உலகம் எங்கும் பெரும் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. இந்த விளம்பரங்களின் ஊடே பயணித்த "மார்ல்பரோ" இன்று முற்றிலும் மாறுபட்ட ஒரு விளம்பரத்தைக் கொடுத்திருக்கிறது. இது உண்மையிலேயே மக்கள் மீதான அக்கறையில் இதைச் செய்திருக்கிறதா? அல்லது இதுவும் ஒரு விளம்பர யுக்திதானா என்ற கேள்வி பல விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது. எதுவாக இருந்தாலும்...

"புகை பிடிப்பது உடல்நலத்திற்கு கேடுவிளைவிப்பதாகும்." 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!