Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

உண்மையிலேயே சசிகலா குடும்பத்தின் பிடியில் இருந்ததா அ.தி.மு.க? அதிர்ச்சியில் தொண்டர்கள்!

தினகரன்

அ.தி.மு.க-வைத் தோற்றுவித்த எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்தநாள், தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆனால், முன்னெப்போதும் இல்லாத ஒரு பெருமை அவரின் இந்தப் பிறந்தநாளுக்கு உண்டு. 

மாவட்டந்தோறும் தமிழக அரசின் சார்பில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டுவிழா கொண்டாடப்பட்டது. எடப்பாடி முதல்வராக இருந்து எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் ஓ.பி.எஸ்ஸை விமர்சித்து வந்தார். ஜெயலலிதாவைப் பின்பற்றி குட்டிக்கதையெல்லாம் சொல்லி வந்த நிலையில்தான், மத்திய அரசின் மத்தியஸ்தத்துடன் எடப்பாடி - ஓ.பி.எஸ். அணிகள் இணைப்பு அரங்கேறியது. தினகரன் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தினர் ஓரங்கட்டப்பட்ட பின்னர் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழாவில், துணை முதல்வராக ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிசாமியுடன் ஒரே மேடையில் பங்கேற்றதுதான் வேடிக்கையான விந்தை. தமிழகத்தில் கிராமங்கள்தோறும் அடிமட்ட அளவில், குறைந்த வருவாய் பிரிவினரிடையேயும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்ற இருபெரும் தலைவர்களின் பிம்பங்கள், கோலோச்சிய நிலைமாறி, தற்போது ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் இருவரையும் வேறுவழியில்லாமல் ஆதரிக்க வேண்டிய பரிதாபநிலை ஏற்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர் பக்தர்களுக்கு இதைவிட சோதனைக்காலம் வேறிருக்க முடியாது. 

எடப்பாடியும், ஓ.பி.எஸ்ஸூம் ஆட்சி அதிகாரத்தில் உள்ள காரணத்தினால், அரசின் செலவில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவைக் கொண்டாடித் தீர்த்தனர். ஆனால், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவுவிழா மிகப் பிரமாண்டமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், அதுபோன்ற எந்தவொரு சுவடும் இல்லாமல், மாநிலம் முழுவதும் பல்வேறு குழுக்களாக எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்தநாளை  கொண்டாடினர்.

அ.தி.மு.க-வினர் பல அணிகளாகப் பிரிந்து காணப்படும் நிலை, எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்தநாளில் கண்கூடாக வெளிப்பட்டது. அ.தி.மு.க-வில் தற்போது என்ன நடக்கிறது என்பதை சாமான்ய தொண்டர்களால்கூட புரிந்துகொள்ள முடியாதநிலைதான் நீடிக்கிறது.

தினகரன் - அ.தி.மு.க.இது ஒருபுறமிருக்க, கோத்தகிரியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் டி.டி.வி. தினகரன். அப்போது, "தமிழகத்தில் பொதுத்தேர்தல் நடைபெற்றால் நாங்கள் வெற்றிபெற்று ஆட்சியமைப்போம்; அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் ஊழல் செய்து சேர்த்த சொத்துகள் பறிமுதல் செய்யப்படும். 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை  எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கில், விரைவில் தீர்ப்பு வெளியாகி, தமிழகத்தில் தற்போதுள்ள ஆட்சி கவிழும். அப்போது, 'ஸ்லீப்பர் செல்கள்' யார்-யார் என்பது தெரியவரும். தேர்தல் ஆணையத்தின் முடிவு தற்காலிகமானதுதான். அதை எதிர்த்து நாங்கள் வழக்குத் தொடர்ந்துள்ளோம். எடப்பாடியும், ஓ.பி.எஸ்ஸூம் பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பதற்காக, மத்திய பி.ஜே.பி-யுடன் இணக்கமாக உள்ளனர். தற்போது அ.தி.மு.க-வில் நிலவும் குழப்பங்களுக்கு பி.ஜே.பி-யே காரணம்" என்றார்.

ஆட்சி அதிகாரத்தில் உள்ள எடப்பாடி தரப்பினரிடம் கட்சியின் பெயரும், கொடியும் உள்ளது. ஆர்.கே.நகர் தேர்தலுக்கு முன் தேர்தல் ஆணையம், 'அ.தி.மு.க. பெயர், சின்னம் மற்றும் கொடியை எடப்பாடி அணியினர் பயன்படுத்திக் கொள்ளலாம்' என்று தெரிவித்தனர். ஆனாலும், தினகரனை, 'கழக துணைப் பொதுச் செயலாளர்' என்றும், சசிகலாவை 'தியாகத் தலைவி பொதுச்செயலாளர்' என்றும் அவர்களின் குடும்பத் தொலைக்காட்சியில் வெளியாகும் செய்தியில் தொடர்ந்து குறிப்பிடுகிறார்கள். அ.தி.மு.க. இல்லாமல் எந்தக் கட்சிக்குப் பொதுச்செயலாளர், துணைப் பொதுச்செயலாளர் என்பது அவர்களுக்கே வெளிச்சம். இந்நிலையில், "அ.தி.மு.க-வை மீட்க, புதிய கட்சி தொடங்குவது பற்றி பரிசீலிக்கப்படும்" என்கிறார் தினகரன்.

தினகரனால் தற்போது ஊழல் புகார் வாசிக்கப்படும் அமைச்சர்கள் மற்றும் பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லோருமே சசிகலா குடும்பத்தினருக்கு 'கப்பம்' கட்டி சீட் வாங்கியவர்கள் என்பது எத்தனைபேருக்குத் தெரியும்? மேலும், ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த காலங்களில் சசிகலா, தினகரன் மற்றும் அவர்களின் குடும்ப உறவுகள் சேர்த்த சொத்துகளின் மதிப்பு எவ்வளவு? ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை, சசிகலா குடும்பத்திற்கு அடிமையாக இருந்தவர்கள்தான் இப்போதுள்ள பெரும்பாலான அமைச்சர்கள். சசிகலா குடும்பத்தினரால் அமைச்சர்களானவர்களைத்தான் தற்போது ஊழல்வாதிகள் என்று தினகரன் விமர்சிக்கிறார். 

"நான் ஒன்றும் காந்தி பேரன் அல்ல" என்று செய்தியாளர்களிடம் தெரிவித்த தினகரன்தான், தற்போது அமைச்சர்களின் ஊழல் பற்றிப் பேசுகிறார். 2017 பிப்ரவரி மாதம் ஓ.பி.எஸ். தியானம் இருந்ததும், கூவத்தூர் விடுதியில் அமைச்சர்கள் எம்.எல்.ஏ-க்களைத் தங்கவைத்து அவர்களுக்கு 'வேண்டியதை' கவனித்தது வரை நடந்தது என்ன? என்பதை தினகரன் வெளிப்படையாகச் சொல்வாரா?. எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியில் அமரவைக்கும்வரை, அவரின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர்கள் ஊழல் செய்தது தினகரன் மற்றும் சசிகலா குடும்பத்தினருக்குத் தெரியவரவில்லையா?

நடராஜன்சசிகலாவின் கணவர் நடராஜனோ, ஒருபடி மேலே போய், "எடப்பாடியும், பன்னீர்செல்வமும் எந்தெந்த நாடுகளில் சொத்துகள் வாங்கிக் குவித்துள்ளனர் என்ற விவரத்தை என்னால் தெரிவிக்க முடியும். மேலும் ஜெயலலிதா சிகிச்சை வீடியோ வெளியிடப்பட்டதில் தவறில்லை. அது ஒரு ஆவணப்படம்" என்கிறார். அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை எம்.ஜி.ஆருக்குப் பிறகு கட்டிக்காத்த ஜெயலலிதா என்ற பிம்பம் மறையும்வரை, அவர் மீது மரியாதை வைத்திருந்ததாகவும், தெய்வமாக மதித்ததாலேயே அப்போலோவில் சிகிச்சையை வெளியிடவில்லை என்றும் சசிகலா குடும்பத்தினர் தெரிவித்தனர். 

அப்படியானால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக, வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள், ஜெயலலிதா சிகிச்சை பெறுவதுபோன்ற வீடியோவை வெளியிடவேண்டிய அவசியம் என்ன? ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் இல்லம் கோயில் என்றால், அதில் வாழ்ந்த ஜெயலலிதாவின் வீடியோவை எப்படி வெளியிட முடிந்தது? ஒட்டுமொத்த தமிழகமே ஜெயலலிதாவுக்கு என்ன நேர்ந்தது என்ற கலக்கத்தில், சோகத்தில் 75 நாள்கள் தவித்தபோதெல்லாம், ஒரு புகைப்படத்தைக்கூட வெளியிடாமல் இருந்த சசிகலா குடும்பத்தினர், ஆர்.கே. நகர் தேர்தலின்போது எப்படி வெளியிட்டனர்? என்பனபோன்ற கேள்விகள் மக்கள் மத்தியில் எழுகின்றன.

அ.தி.மு.க என்ற மக்கள் இயக்கத்தை, ஜெயலலிதாவை முன்னிறுத்தி சசிகலா குடும்பத்தினர் தங்களின் பிடியில் வைத்திருந்ததை நடராஜனும், தினகரனும் தற்போது ஒப்புக்கொள்ளும்விதமாகவே அவர்களின் பேட்டிகள் அமைந்துள்ளன.

மொத்தத்தில் தமிழ்நாட்டு மக்களையும், அ.தி.மு.க. தொண்டர்களையும், ஆளும் எடப்பாடி தரப்பினரும், தினகரன் மற்றும் சசிகலா குடும்பத்தினரும் பைத்தியக்காரர்களாக்கி வருகிறார்கள் என்பது தெளிவாகிறது. இதுபோன்ற நிகழ்வுகளுக்கு எல்லாம் தீர்வாக எதிர்வரும் காலத்தில் பொதுத்தேர்தலின்போதாவது உண்மையான ஜனநாயகம் மலர வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement