“மந்திரங்களை உச்சரிப்பவர்கள் பேட்டை ரவுடி மாதிரிப் பேசக் கூடாது!” - கண்டிக்கிறார் எஸ்.வி.சேகர்

ன்மிகம் என்பது உன்னதமான ஒன்று. இந்தியாவில் மிகப் புனிதமாகக் கருதப்படும் ஒரு பெருநிலை. அப்படிப்பட்ட உயர்நிலையான ஆன்மிகத்தில் இருப்பவர்கள், மோசமான வார்த்தைகளை உச்சரிப்பதைத் தவிர்க்க வேண்டும். மந்திரங்கள் ஓதுகிறவர்கள், உடலை மட்டுமல்ல... மனதையும் எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். யார் மீதாவது கோபம் இருந்தால்கூட, `கடவுள் பார்த்துக்கொள்வார்’ என்று விட்டுவிட வேண்டும். பேட்டை ரவுடி மாதிரிப் பேசக் கூடாது. ஆசிரமத்தில் உள்ளவர்களிடம், `இப்படி எல்லாம் பேசக் கூடாது’ என்று கூப்பிட்டுச் சொன்னேன்..." கடந்த சில நாள்களாக கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராகப் பேசி, வெளியிடப்படும் வீடியோக்களுக்கு, தனது அதிருப்தியை இப்படித் தெரிவிக்கிறார் நடிகர் எஸ்.வி.சேகர்.

எஸ்.வி.சேகர்.

ஆண்டாள் குறித்த சர்ச்சை, ரஜினியின் ஆன்மிக அரசியல் போன்றவற்றைப் பற்றியும் நம்மிடம் விரிவாகப் பேசினார்...

“இதற்கு முன்னர் நித்யானந்தா ஆசிரமச் செயல்பாடுகளைப் பற்றிப் பலமுறை பாராட்டிப் பேசியிருக்கிறீர்களே..?’’

"ஆமாம். பல குழந்தைகளுக்கு `சிக்ஸ்த் சென்ஸ்’ ஓப்பன் செய்து அவர்களின் திறமைகளை மேம்படுத்தினார். கண்ணைக் கட்டிக்கொண்டு கையால் தொட்டே எழுத்துகளைப் படிக்கும் அளவுக்குப் பயிற்சி கொடுத்திருந்தார். அதற்காகப் பாராட்டினேன். இப்போது, இந்தப் பெண்கள் பேசுவதைப் பார்க்கும்போது, சிக்ஸ்த் சென்ஸை ஓப்பன் செய்துவிட்டு, பேசிக் சென்ஸை காலி செய்துவிட்டார் என்றே தோன்றுகிறது. ஆசிரமத்துப் பெண்கள் இப்படிப் பேசுவதற்கான முழுப் பொறுப்பையும் நித்யானந்தாதான் ஏற்க வேண்டும்." 

“மன்னர்கள்தாம் அனைத்துக் கோயில்களையும் கட்டினார்கள், ஆனால், பிராமணர்களை மட்டும் எதிர்க்கிறார்கள் என்று பேசியிருக்கிறீர்களே?"

“ஆம், சேர, சோழ, பாண்டியர்கள்தாம் அனைத்துக் கோயில்களையும் கட்டினார்கள். பிராமணர்கள் யாரும் கட்டவில்லை. அந்தக் கோயில்களில் பிராமணர்கள் மட்டும் வழிபடுவதில்லை. அனைத்து இந்துக்களும்தான் வழிபடுகிறார்கள். ஆனால் இந்து மத எதிர்ப்பு என்பது பிராமணர்களை எதிர்ப்பதில் மட்டுமே இருக்கிறது."

“ஆனால் கோயில்கள் பிராமணர்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது " 

"பொய்யாகப் பரப்பப்படும் குற்றச்சாட்டு இது. வேண்டுமென்றே சிலர் திட்டமிட்டு இதைச் செய்துவருகிறார்கள். அரசாங்கம் கோயில்களைக் கைப்பற்றி ஏராளமான ஊழல்களைச் செய்துவருகிறது. அதை எதிர்த்து யாரும் கேள்வி கேட்பதில்லை. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு  கோயில்களைச் சிறப்பாக நிர்வகிக்கிறார். இங்கே இருக்கும் அரசுக்கு கோயில்களைப் பற்றிய கவலையேயில்லை."

போராட்டம்

“கோயில்களின் மீது இவ்வளவு அக்கறைகொள்ளும் நீங்கள், ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான கோயில்கள் இடிக்கப்படும்போது  போராடவில்லையே ?"

"யாரும் போராடவில்லை என்பது பொய்யான குற்றச்சாட்டு. ராமகோபாலன், அர்ஜுன் சம்பத் போன்றோர் போராடினார்கள். போர் வரும்போது இது போன்ற பிரச்னைகள் ஏற்படுவது இயல்பான ஒன்று. கோயில் என்றெல்லாம் பார்க்க மாட்டார்கள். இடிக்கத்தான் செய்வார்கள். எந்தக் கோயில் இடிக்கப்படுவதையும் நான் ஆதரிக்க மாட்டேன்.  உண்மையான பக்தன் என்பவன் எந்தக் கோயிலாக இருந்தாலும் இடிக்க மாட்டான்."

“மன்னர்கள் கட்டிய கோயில் என்கிறீர்கள்... ஆனால், கோயில்களுக்குள் மன்னர்களின் சிலைகளையே அனுமதிப்பதில்லேயே?’’ 

“அத்தனை பெரிய கோயில்களைக் கட்டிய மன்னர்களுக்கு தங்கள் சிலைகளை உள்ளேவைக்க எவ்வளவு நேரம் ஆகியிருக்கும்? அதையெல்லாம் மன்னர்கள் யாரும் விரும்பவில்லை. இதெல்லாம் பெரிய விஷயம் இல்லை.’’

 “ ‘அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம்’ என்பதை வரவேற்கிறீர்களா?’’

“கண்டிப்பாக வரவேற்கிறேன். யார் திருநீறு கொடுத்தாலும், தீர்த்தம் கொடுத்தாலும் நான் வாங்கிக்கொள்வேன். எனக்கு அதில் எந்தச் சிக்கலும் இல்லை. சந்நிதியில் கிடைக்கும் பிரசாதம் என்றுதான் அதைப் பார்ப்பேன். யார் தருகிறார்கள் என்று பார்க்க மாட்டேன்.’’

ரஜினி - கமல் பற்றி எஸ்.வி.சேகர்

“ ‘ஆண்டாளுக்காகப் போராடும் மக்கள், ஆண்டாள் விரும்பிப்போற்றிய தமிழை அனைத்துக் கோயில்களிலும் அர்ச்சனை மொழியாக்கப் போராடுவார்களா?’ என்று சிலர் கேட்கிறார்களே...’’

“ஆகம விதிப்படிதான் கோயில் நடைமுறைகள் இருக்க வேண்டும். சம்ஸ்கிருத மொழியில் உள்ள  ஒலிகளுக்குச் சக்தி இருக்கிறது. அதனால்தான் சம்ஸ்கிருதத்தில் மந்திரங்கள் ஓதப்படுகின்றன. மந்திரங்களை ஓதி முடித்ததும், தமிழில்தான் ஓதுவார்கள் பாடுகிறார்கள். சாமி கும்பிட வருபவர்கள் சம்ஸ்கிருதத்தில்தான் கும்பிட வேண்டும் என்று யாரும் சொல்வதில்லை. அவர்கள் தமிழிலேயே கும்பிடலாம். கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் யாரும் இந்த மாதிரியான கேள்விகளைக் கேட்பதில்லை.’’ 

“ரஜினியின் ஆன்மிக அரசியல் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?’’

“ஆன்மிகமும் அரசியலும் எதிர் எதிரான ஒன்று. ஆன்மிக ஆட்சி வேண்டுமானால் இருக்கலாம். ஆன்மிக அரசியல் இருக்க முடியாது. ஆட்சிக்கு வந்து ஆன்மிக ஆட்சி செய்யலாம். எம்.ஜி.ஆர் நடத்தியது ஆன்மிக ஆட்சிதான். ரஜினியும் கமலும் மாறி, மாறி வாழ்த்துத் தெரிவித்து, ஏதோ படம் எடுப்பதுபோல அரசியல் செய்துவருகிறார்கள். 

எஸ்.வி.சேகர்

“ ‘இறந்தவர்களின் ஆன்மாக்களுடன் பேசுவேன்’ என்று சொல்லியிருக்கிறீர்கள்... கடைசியாக யாருடைய ஆன்மாவுடன் பேசினீர்கள்?’’

“நான் இதுவரை என் அப்பா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சோ போன்றவர்களுடன் பேசியிருக்கிறேன். ஜெயலலிதா ஆன்மாவாக வந்து பேசியபோது ‘கட்சியில் உங்களுக்கு நடந்த எதற்கும் நான் காரணம் இல்லை, நான் பொறுப்பும் இல்லை. அதனால் தயவுசெய்து என்னை மன்னித்துவிடுங்கள் சேகர்’ என்று  சொன்னார்.” 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!