வெளியிடப்பட்ட நேரம்: 16:56 (22/01/2018)

கடைசி தொடர்பு:17:32 (22/01/2018)

வீட்டுக் குப்பைகளைக் கொட்ட ஸ்மார்ட் கார்டு அவசியம்..! புதிய திட்டம்

குப்பைகளை அகற்றுவதென்பது இந்தியா எதிர்கொண்டுள்ள சவால்களில் முக்கியமானது. தெருக்கள், அலுவலகங்கள், கோயில்கள் என எங்கு பார்த்தாலும் குப்பைகள் நிறைந்து கிடக்கின்றன.  போதிய அளவில் மக்கள் விழிப்புஉணர்வு பெறாததும் தூய்மைப்   பணியாளர்களின் எண்ணிக்கை குறைவு என்பதும் இதற்கு முக்கியக் காரணம். மாறிவரும் நவீன உலகத்திற்கேற்ப குப்பைகளும் நவீன மயமாகிவிட்டன. எலக்ரானிக் வேஸ்ட், பிளாஸ்டிக் கழிவு, மருத்துவக் கழிவுகள், அபாயகரமான கழிவுகள் என பலவகைகளில் இன்று வீசப்படும் கழிவுகளால் அபாயகரமான நோய்களை மனிதன் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இப்படி நாம் தூக்கி வீசும் கழிவுகளால் பெருத்த அளவில் சூழலியல் பாதிப்பு ஏற்படுகின்றன. நவீன யுகத்திற்கான குப்பைகளை நவீனமாக அகற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்னைகளை எதிர்கொள்ள க்யூஆர் பார்கோடு கொண்ட ஸ்மார்ட் கார்டு மூலம் குப்பையை அகற்றும் புதிய பரிசோதனை முயற்சியைச் செய்து வருகிறது தமிழக பேரூராட்சிகளின் இயக்குநரகம்.

தெருக்களில் குப்பைகள்

இதுகுறித்து பேரூராட்சிகள் இயக்குநரக இணை இயக்குநர் மலையமான் திருமுடிக்காரி அவர்களிடம் பேசினோம். “தமிழகத்தில் மொத்தம் 528 பேரூராட்சிகள் இருக்கின்றன. அதில் சில பேரூராட்சிகள் ஆன்மிகத் தளங்களாகவும் சுற்றுலாத்தலமாகவும், தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளாகவும் சிறப்பு அந்தஸ்து பெற்றிருக்கின்றன. இங்கு குடியிருப்பு பகுதிகள் அதிகமாகிக்க கொண்டிருப்பதால் குப்பைகளும் அதிக அளவில் குவிகின்றன. இது போன்ற பேரூராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பேரூராட்சி இயக்குநரகம் மூலம் ஹாண்ட் இன் ஹாண்ட் போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஆரம்பத்தில் குப்பைகளை தரம்பிரித்துக் கொடுக்க வேண்டும் என மக்களிடம்  சொன்னபோது, “பேரூராட்சியில் வரி வசூல் செய்கிறீர்கள், நாங்கள் ஏன் குப்பையை தரம் பிரித்து கொடுக்க வேண்டும்” என கேள்வி கேட்டார்கள். வெள்ளம் ஏற்பட்டதற்கு முக்கிய காரணம் பிளாஸ்டிக் என்பதை மக்கள் உணரத் தொடங்கியிருக்கிறார்கள். தற்போது மக்களிடம் ஓரளவிற்கு விழிப்புஉணர்வு வந்திருக்கிறது. இருந்த போதிலும் 60 சதவிகித குப்பைகளை மட்டுமே எங்களால் மேலாண்மை செய்ய முடிகிறது.

திடக்கழிவு மேலாண்மை திட்டம்

2016 திடக்கழிவு மேலாண்மை திட்ட விதிகளின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள பேரூராட்சி பகுதிகளில் பொது இடங்களில் குப்பை போட்டால் அபராதம் விதிக்க முடியும். ஆனால் அதற்கு முன்னதாக அவர்களுக்கு விழிப்புஉணர்வு ஏற்படுத்த வேண்டும். எந்த வீட்டில் குப்பையை கொடுப்பதில்லையோ அந்த வீட்டிற்கு பணியாளர்கள் சென்று விழிப்புஉணர்வு ஏற்படுத்துவார்கள். குப்பையை தரம் பிரிப்பது எப்படி என்பதும் விளக்குவார்கள். அதையும் மீறி குப்பை போடுபவர்களுக்கு அபராதம் விதிக்கவுள்ளோம்.

குப்பை சேகரிப்பு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி பேரூராட்சியில் 12 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். சுமார் ஒரு லட்சம் சுற்றுலாப்பயணிகள் தினமும் அங்கு வருகிறார்கள். சிவன் தெரு, காந்தி நகர் தெரு, செட்டி தெரு ஆகிய மூன்று வார்டுகளிலும் க்யூஆர் பார்கோடு கொண்ட கார்டுகளைப் பயன்படுத்தி குப்பைகளை வாங்குகிறார்கள். அங்கு ‘அம்ருத்’ திட்டத்தின் கீழ் சோதனை முறையில் க்யூஆர் கார்டு பயன்படுத்தி குப்பைகளை சேகரிக்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம். இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு க்யூஆர் பார்கோடு கொண்ட கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. சுமார் 150 வீட்டிற்கு ஒரு முதன்மைச் சேகரிப்பாளர் இருப்பார். அவர்கள் வீடுவீடாக சென்று குப்பைகளை வாங்கிச் செல்லுவார்கள். அவர்களிடம் மட்கும் குப்பை, மட்காத குப்பை என இரண்டு வகையாக குப்பைகளை தரம் பிரித்துக் கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்காவிட்டாலும் பணியாளர்கள் தங்கள் கொண்டுவந்த பைகளில், நான்கு விதமாக குப்பைகளை பிரித்துக் கொள்வார்கள். குப்பைகளை வாங்கும் போது, வீட்டு உரிமையாளர் கொடுக்கும் அந்த ஸ்மார்ட் கார்டு மூலம் பணியாளர்கள் தங்கள் ஸ்மார்ட்போன் மொபைலில் ஸ்கேன் செய்து பதிவு செய்துகொள்வார்கள். முதலில் ஒரு பேப்பரில் குப்பை எப்படி கொடுக்கிறார்கள் என டிக் அடிக்கும் முறையை வைத்திருந்தோம். ஆனால், அது நடைமுறைக்கு ஒத்துவரவில்லை. அதனால்தான் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். குப்பை கொடுப்பவர்கள், பணியாளர்களின் மொபைலில் ஸ்கேன் செய்தால் போதும் பேரூராட்சியில் உள்ள கணினியில் அந்த விவரங்கள் பதிவாகிவிடும். இதன் மூலம் குப்பைகளை எப்படி கொடுக்கிறார்கள் என்ற விவரங்கள் பதிவாகிவிடும்.

 ஸ்மார்ட் கார்டு மூலம் குப்பை வசூல்

சென்னையையொட்டியுள்ள பேரூராட்சிகள் குப்பைகளை அகற்றுவதில் பல சிக்கல்களை சந்தித்து வருகின்றன. மென்பொருள் நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள் என இரவுப்பணி முடித்து வரும் பணியாளர்கள், தங்கள் காலை உணவை ஹோட்டலில் வாங்கி வந்துவிடுகிறார்கள். பேரூராட்சி பணியாளர்கள் சுத்தம் செய்த பிறகு, அவர்கள் போடும் குப்பைகளால் மீண்டும் தெருக்களில் குப்பைகள் வந்துவிடுகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 17 பேரூராட்சிகள் இருக்கின்றன.

வேளாங்கண்ணி பேரூராட்சி, குப்பைகள்

அதில் எட்டு பேரூராட்சிகளில் குப்பையைக் கொட்டுவதற்கான இடம் இல்லை. வேறு பகுதியில் குப்பைகளைக் கொட்ட முற்படும்போது, அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அந்தந்த வார்டுகளுக்கான குப்பைகளை அந்த வார்டுகளிலேயே சுத்தம் செய்ய ஏற்பாடு செய்து வருகிறோம். அங்கு சேகரிக்கும் குப்பைகளை இயற்கை உரமாகவும், மண்புழு உரமாகவும் மாற்றம் செய்கிறோம். வேளாங்கண்ணியில் ஸ்மார்ட் கார்டு திட்டம் வெற்றியடைந்தால், தமிழகம் முழுவதும் உள்ள பேரூராட்சிகளில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.” என்கிறார்.

தூய்மையான சுற்றுப்புறம் அமைய மக்களும் மனது வைக்க வேண்டும்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்