Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

ஹைட்ராலிக் ஃப்ராக்சரிங்கால் நிலநடுக்கம்...மிரளும் கனடாவும், மிரளப்போகும் இந்தியாவும்!

னடாவின் வடக்கு திசையில் அமைந்துள்ளது அல்பெர்ட்டா பகுதி. 2013-ம் ஆண்டுக்கு முன்னர் வரைக்கும் அங்கு நிலநடுக்கம் பெரிதாக ஏற்படவில்லை. 2013-ம் ஆண்டிலிருந்து இதுவரைக்கும் பலநூறுக்கும் மேற்பட்ட நிலஅதிர்வுகள் மற்றும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இவ்வாறு ஏற்படும் நிலநடுக்கங்களுக்கான காரணத்தை நியூ அல்பர்ட்டா புவியியல் ஆய்வு மையம் மற்றும் யுஅல்பேர்ட்டா ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்டிருக்கிறது. அதில் 'நிலநடுக்கத்திற்கு முக்கியமான காரணம் அல்பெர்ட்டாவில் உள்ள எண்ணெய் கிணறுகளில் பயன்படுத்தப்படும் ஹைட்ராலிக் ஃப்ராக்சரிங் தொழில்நுட்பம்தான்." என்பது தெரியவந்துள்ளது.

ஹைட்ராலிக் ஃப்ராக்சரிங் தொழில்நுட்பம்

அதிகமான நீருடன், மணல் அல்லது சேறு மற்றும் சில ரசாயனங்களைக் கலந்து பூமிக்கு அடியில் செலுத்தப்படும். அக்கலவை நிலத்தடியில் இருக்கும் பாறைகளை வெடிக்க அல்லது பிளவுறச் செய்யும். பாறைவெடிப்பின் காரணமாக உருவாகும் பிளவு வழியாக வாயுக்கள் எடுக்கப்படும். இந்த முறைக்குத்தான் ஹைட்ராலிக் ஃப்ராக்சரிங் என்று பெயர். இந்தத் தொழில்நுட்பத்தைத்தான் அல்பெர்ட்டா பகுதியில் உள்ள எண்ணெய் கிணறுகளில் உபயோகிக்கிறார்கள். 

ஹைட்ராலிக் ஃப்ராக்சரிங்

 Photo - crainsdetroit.com

இதுவரை ஹைட்ராலிக் ஃப்ராக்சரிங்கால் நடந்தது என்ன?

    கடந்த 2016-ம் ஆண்டு கனடாவில் உள்ள ஃபாக்ஸ் கிரீக்கில் ஏற்பட்ட நில அதிர்வினால் பல வீடுகள் அதிர்ந்துள்ளன. அப்போதைய நில அதிர்வு 4.2 மற்றும் 4.8 என்ற அளவுகோலில் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. நிலநடுக்கத்திற்கான காரணம் குறித்த ஆராய்ச்சியை அல்பெர்ட்டா புவியியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த ரியான் ஷூல்ட்ஸ் என்பவர் ஃபாக்ஸ் க்ரீக், அல்பெர்ட்டா பகுதிகளில் பூகம்பங்களைப் பற்றிய ஆய்வைத் தொடங்கினார். ரியான் ஷூல்ட்ஸூம் அவரது ஊழியர்களும் நிலநடுக்கம் ஏற்பட்ட இடங்களை ஆய்வு செய்கிறார்கள். நிலநடுக்கம் ஏற்பட்ட இடங்களுக்கு அருகில் உள்ள எண்ணெய் கிணறுகளில் தவறான அல்லது அதிக அளவில் அழுத்தம் கொடுக்கப்பட்ட கிணறுகளுக்கு அருகில் உள்ள இடங்கள் என்பதைக் கண்டறிகின்றனர். மேலும், அதிக அளவில் உட்செலுத்தப்படும் அழுத்தமானது பாறைகளை உயர் அழுத்தத்தில் வெடிக்க வைக்கிறது. இதனால் பாறைகள் வெடித்து ஏற்படும் அதிர்வுகள் நிலநடுக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதையும் கண்டறிகின்றனர். இது ஓர் உந்தப்பட்ட நிலநடுக்க வகையைச் சேரும் என்பதையும் அக்குழு முன்வைத்தது. 

    இதற்காகச் சிக்கலான புள்ளியியல் கருவிகளைப் பயன்படுத்தி சுமார் 300 கிணறுகளிலிருந்து தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டது. இதன் முடிவில் மனிதனால் உந்தப்பட்ட நிலநடுக்கத்திற்கான காரணங்களை விஞ்ஞானிகள் வகைப்படுத்தினர். பாறைகளில் முறையற்ற பிளவு ஆழத்திற்கு ஏற்பட்டிருக்க வேண்டும். அப்பிளவு ஏற்படும் பகுதியில் உள்ள பாறைகள் எப்போது வேண்டுமானாலும் நகரலாம் அல்லது விழலாம் என்ற நிலையில் இருக்க வேண்டும். அந்த நிலையில்லாத பாறைகளை உந்தித்தள்ளும் ஃப்ராக்சரிங் திரவம்( நீருடன், மணல் அல்லது சேறு மற்றும் சில ரசாயனங்கள்) இருக்க வேண்டும். அந்தத் திரவத்தை உட்செலுத்தும் வழியும் மனிதனால் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என மேற்சொன்ன நான்கு காரணங்களை அல்பெர்ட்டா புவியியல் ஆய்வு மைய விஞ்ஞானிகள் முன்வைக்கின்றனர். மேற்கண்ட நான்கு காரணமும் இருந்தால் அது மனிதனால் ஏற்படுத்தப்பட்ட நிலநடுக்கம்தான். 

ஹைட்ராலிக் ஃப்ராக்சரிங்

photo - extremetech.com

ஹைட்ராலிக் ஃப்ராக்சரிங்கை தடை செய்த அமெரிக்க மாகாணங்கள்! 

2016-ம் ஆண்டு அமெரிக்காவின் கேன்ஸஸ், ஓக்லஹாமா உள்ளிட்ட பல பகுதிகள் நிலநடுக்கங்களைச் சந்தித்தன. அதற்கான காரணங்களை ஆராய்ந்த குழு, இயற்கை வாயு எடுக்க ட்ரில்லிங் செய்ததும், ஹைட்ராலிக் ஃப்ராக்சரிங் முறையும்தான் காரணம் என அறிக்கை தந்தது. அதன் அடிப்படையில் ஓக்லஹாமா மாகாணத்தில் இயங்கி வந்த 37 எண்ணெய் கிணறுகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த 37 கிணறுகளிலும் ஹைட்ராலிக் ஃப்ராக்சரிங் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளே ஹைட்ராலிக் ஃப்ராக்சரிங் முறையைத் தடை செய்திருக்கின்றன. 

இது இந்தியாவின் நிலைப்பாடு! 

 

   தமிழகத்தில் கடந்த ஆண்டு மிகப்பெரிய ஜல்லிக்கட்டுக்குப் போராட்டத்திற்குப் பின்னர் அதிகமாகப் பேசப்பட்டது பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட நெடுவாசல் ஹைட்ரோகார்பனுக்கு எதிரான போராட்டம்தான். ஹைட்ராலிக் ஃப்ராக்சரிங்கால் நீர் வளம், நில வளம் ஆகியவை பாதிக்கப்படும்; இதுதவிர, நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என்ற காரணங்களைத்தான் போராடிய மக்கள் முன்வைத்தனர். இந்திய அரசின் அமைப்பான ‘நிதி ஆயோக்’-ன் ஆலோசகர்களான அனில்குமார் ஜெயின் மற்றும் ராஜ்நாத் ராம் ஆகியோரின் அறிக்கையும் 'அதிக அளவு தண்ணீர் நுகர்வு, நிலமும் நீரும் மாசுபடுவது மற்றும் பூகம்பம்' என மூன்று பிரச்னைகளைப் பட்டியலிட்டது. இதை அனைத்தையுமே ஒதுக்கி வைத்துவிட்டு ஹைட்ரோகார்பனுக்கு சிவப்புக் கம்பளம் விரித்துக் கொடுக்கிறது, மத்திய அரசு. உலக நாடுகளில் ஹைட்ராலிக் ஃப்ராக்சரிங்கால் அதிகமான விபத்துகள் நடந்தும் மத்திய அரசு ஹைட்ரோகார்பன் விஷயத்தில் மக்களின்மீது அக்கறை காட்ட மறுக்கிறது என்பதுதான் வேதனையளிக்கும் விஷயம். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement