மின்சாரத் துறையில் ரூ.3,000 கோடி ஊழல்... முன்னாள் அமைச்சருக்குத் தொடர்பா? #VikatanExclusive

தமிழக மின்சாரத் துறை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து பயன்படுத்திய வார்த்தை, ``தமிழகம் மின்சாரத் துறையில் தன்னிறைவு பெற்றுத் திகழ்கிறது" என்பதுதான். ``ஒரு மாநிலம் மின்வெட்டு இல்லாத மாநிலமாக இருக்குமானால், மின்சாரத் துறையில் தன்னிறைவுபெற்ற மாநிலம் என்றாகிவிடுமா?" இப்படியான கேள்வி எழாமல் இல்லை. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மின்துறை அமைச்சராக நத்தம் விசுவநாதன் பதவி வகித்தபோது, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின்சாரம் கொள்முதல் செய்ததில், சுமார் 96,000 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அந்த ஊழல் என்பது முறையற்ற மின்திட்டங்களைத் தீட்டியதால் ஏற்பட்ட நஷ்டமா... அப்படியானால், எதற்காக அந்தத் திட்டம் தீட்டப்பட்டது... அதற்குப் பின்னால் உள்ள அரசியல் என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுடன் உரிய ஆவணங்கள் மூலம், மின்சாரத் துறையில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தைத் தன்னுடைய ஆவணப்படத்தின் மூலம் அம்பலப்படுத்தியிருந்தார் பொறியாளர் காந்தி.

இந்த நிலையில், மின்சாரத் துறையில் நடந்துள்ள 3,000 கோடி ரூபாய்  ஊழலை அதிரடியாக அம்பலப்படுத்தியுள்ளது அறப்போர் இயக்கம். இந்த ஊழலில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதனுக்கு முக்கியப் பங்கு இருப்பதாக அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார்.

``இந்தோனேஷியா நிலக்கரி நிறுவனத்துடன் நடந்த ஒப்பந்தத்தில் இந்த ஊழல் நடந்துள்ளது. நிலக்கரி இறக்குமதி திட்ட மதிப்பீடு மொத்தம் ஜெயராம் வெங்கடேசன் சுமார் 12,500 கோடி ரூபாய். மார்க்கெட் மதிப்பைவிட அதிக தொகைக்கு இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதில்தான் 3,000 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இதில், அதிகமான ஒப்பந்தங்கள் அதானி நிறுவனத்துக்கு முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் கொடுத்துள்ளார். நத்தம் விசுவநாதன் மற்றும் முன்னாள் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் ஆகியோர் கூட்டுச்சதி செய்து இந்த ஊழலை அரங்கேற்றம் செய்துள்ளனர்.   

2014-ல் வருவாய்த் துறை புலனாய்வு அமைப்பு, நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டிருந்தது. ஆனால், அந்த அறிக்கைமீது சி.பி.ஐ. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில்தான், 'நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளது' என மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் வழக்குத் தொடர்ந்திருந்தார். அவர் தொடர்ந்த அந்த வழக்கில், 'சிறப்பு விசாரணை வேண்டும்' எனக் கோரியிருந்தார். அந்த வழக்கில்தான், 3,000 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதற்கான ஆதாரங்களைச் சமர்பிக்க உள்ளோம். இதில், பாரபட்சம் இல்லாத விசாரணை வேண்டும் என நீதிமன்றத்தில் கேட்க உள்ளோம். அதானி போன்ற முக்கியப்  புள்ளிகளுக்குத் தொடர்பு இருப்பதால், சிறப்புப் புலனாய்வு விசாரணை அவசியம். இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்குப் போனால் அது எந்தப் பயனும் இல்லாத நீர்த்துப்போன ஒன்றாகிவிடும். அதன் காரணமாகவே தற்போது சிறப்புப் புலனாய்வு விசாரணையைக் கோருகிறோம்'' என்றார் மிகத் தெளிவாக.

''மின்சாரத் துறை நஷ்டத்தில் இயங்குவதற்கு முன்னாள் அமைச்சர் வேண்டுமென்றால் பொறுப்பேற்காமல் இருக்கலாம். ஆனால், மார்க்கெட் மதிப்பைவிட அதிகப் பணம் கொடுத்து வாங்க யார்  காரணம்... அதற்கு யார் பொறுப்பு என்பதற்கு அவர்தான் பதில் சொல்ல வேண்டும்'' என்கிறார்கள் நடுநிலையாளர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!