Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

“வைரக்கல் நகைகளும்..நட்சத்திர விடுதி கும்மாளமும்.!” -மோசடி நடிகை பற்றிய 'திடுக்' வாக்குமூலம்

Coimbatore: 

திருமணம் செய்துகொள்கிறேன் என்று  ஐ.டி இளைஞர்கள் பலரை  ஏமாற்றி பலலட்ச ரூபாய்கள் சுருட்டிய  நடிகை ஸ்ருதியும் அவர் குடும்பத்தினரும் கொடுத்துள்ள வாக்குமூலம் திடுக்கிட வைத்திருக்கிறது.

ஜெர்மனியில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்துவரும் சேலத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர்  கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை சைபர் க்ரைமில் கொடுத்த புகார் போலீஸாரையே  புருவம் உயர்த்த வைத்தது,   அதில், “ஆடி போனா ஆவணி, சோழவம்சம் உள்ளிட்ட வெளிவராத இரண்டு திரைப்படங்களில் நடித்ததாகச் சொல்லப்படும் நடிகை ஸ்ருதி,  மேட்ரிமோனியல் வெப்சைட் மூலமாக  திருமணத்திற்கு பெண் தேடிக் கொண்டிருந்த என்னை தொடர்பு கொண்டு மைதிலி என்ற பெயரில்  பேசினார். அவர் மட்டுமல்லாது அவருடைய அம்மா சித்திராவும், அப்பா பிரசன்ன வெங்கடேஷும், பேசினார்கள். என்னைப் பிடித்திருப்பதாகவும். ஜாதகப் பொறுத்தம் சரியாக இருப்பதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ளலாம் என்றும் ஸ்ருதியின் குடும்பமே சேர்ந்து சொன்னது. என் பெற்றோர்களிடமும் திருமணம் சம்பந்தமாக போனில் பேசினார்கள். நிச்சயதார்த்தம் நெருங்கி வரும் சமயத்தில் திடீரென்று ஒரு நாள் போன் செய்து தனது அம்மாவுக்கு மூளையில் கட்டி ஏற்பட்டு மோசமான நிலையில்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக சொல்லி அழுதார் மைதிலி( ஸ்ருதி).

 தன் அம்மாவைக் காப்பாற்ற உடனடியாக லட்சக்கணக்கில் பணம் தேவைப்படுவதாகவும் கையில் தற்போதைக்கு அவ்வளவு பணம் இல்லையென்று கதறிய  மைதிலி(ஸ்ருதி),  வருங்கால கணவன் என்கிற முறையில் என்னிடம் உதவி கேட்டார்.   நானும் நம்பி 41 லட்சம் ரூபாயை அவர் சொன்ன அக்கவுண்டுக்கு அனுப்பினேன். பணம் அவர்கள் கைக்குப் போய் சேர்ந்த பிறகு என்னுடைய தொடர்பை துண்டித்து விட்டார்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நடந்ததையெல்லாம் என் நண்பன் ஒருவனிடம் விவரித்தபோதுதான்,  அந்தப் பெண்ணின்  உண்மையான பெயர்  ஸ்ருதி என்பதும் அவர் ஏற்கனவே பல ஐ.டி இளைஞர்களை இதேபோல, திருமணம் செய்துகொள்கிறேன் என்கிற பெயரில் ஏமாற்றி பணம் பறித்திருக்கும் அதிர்ச்சிகரமான தகவலும் தெரியவந்தது. எனது பணத்தை மீட்டுக்கொடுப்பதோடு மட்டுமல்லாமல், வேறு யாரையும் ஏமாற்றிவிடாமல் தடுக்கவும்” என்கிற பாலமுருகனின்  இந்த புகாரைப் பார்த்ததும் கோவை போலீஸ் அதிர்ச்சியில் உறைந்தது.

கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது..

ஸ்ருதியின் மீது 2016-ம் ஆண்டே இதேபோல ஒருவர் கொடுத்த புகாரை தூசிதட்டி எடுத்தது போலீஸ். அந்த வழக்கில் முன்ஜாமின் வாங்கிக்கொண்டு ஸ்ருதியும் அவரது குடும்பத்தாரும் கைதாகாமல்  தப்பித்ததை நோட் செய்த போலீஸ். இந்தமுறை அப்படி ஆகிவிடக்கூடாது என்று முன்ஜாக்கிரதையாக இருந்தது. கோவை நவ இந்தியாவுக்கு அடுத்து உள்ள ஓர் அடுக்கு மாடி குடியிருப்பில் ஸ்ருதியும், அவர் குடும்பத்தாரும் இருப்பதை செல்போன் மூலம் ட்ராக் செய்த போலீஸ். மஃப்டியில் அங்கு விரைந்தது. ஸ்ருதி, ஸ்ருதியின் அம்மா சித்ரா, அப்பா பிரசன்ன வெங்கடேஷ், தம்பி, சுபாஷ் ஆகியோர் கூண்டோடு கடந்த 11ம்தேதி, கைது செய்யப்பட்டனர். அன்றே அவர்களிடம் இருந்த, நான்கு ஆப்பிள் போன்கள், ஐந்து ஆண்ட்ராய்டு போன்கள் மற்றும் ஆப்பிள் ஐபேடு, ஆப்பிள் லேப்டாப் மற்றும் 38 பவுன் வைர மற்றும் ரூபி கற்கள் பதித்த நகைகளை பறிமுதல் செய்தனர்.  அன்றே அவர்கள் அனைவரும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டதால் மேற்கொண்டு தகவல்கள் தெரியாமல் இருந்தன. குறிப்பாக பல இளைஞர்களிடம் பறித்த பல லட்சம் ரூபாய்களை  அவர்கள் என்ன செய்தார்கள் என்பது புரியாத புதிராகவே இருந்தது. அதை விசாரிப்பதற்காக ஸ்ருதி மற்றும் அவரது குடும்பத்தாரை கடந்த  19-ம் தேதி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஒருவாரம் போலீஸ் காவலில்  எடுத்து விசாரித்து முடித்துள்ளனர்.

நடிகை ஸ்ருதி

விசாரணையில்  ஸ்ருதியும், அவரது குடும்பத்தாரும் என்ன சொன்னார்கள் என்று போலீஸ் தரப்பில் கேட்டோம், “ ஸ்ருதியின் உண்மையான  தந்தை ஹரிக்குமார்  அவர் விபத்தில் இறந்துவிட்டார். பத்தாம் வகுப்பு வரை பாண்டிச்சேரியில் படித்துவிட்டு 11ம்வகுப்புக்கு கோவைக்கு வந்திருக்கிறார் ஸ்ருதி.  12ம் வகுப்பை  பூர்த்தி செய்யாமலேயே படிப்பை நிறுத்தியுள்ளார்.  அதுமட்டுமல்லாது, பள்ளி சான்றிதழ்களில்   தந்தையின் பெயர் பிரசன்ன வெங்கடேஷ் என்று போலியாக கொடுத்துள்ளார்கள்.  பிரசன்ன வெங்கடேஷ்... சித்ராவின் இரண்டாவது கணவர், ஸ்ருதி  மற்றும் சுபாஷுக்கு வளர்ப்பு தந்தை. ஒட்டுமொத்த குடும்பத்தின் ஒரே டார்கெட் பணம்.. பணம்.  ஐ.டி இளைஞர்களிடம் ஏமாற்றி பறித்த  பணத்தில்,  ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில்  foundation certificate in science படிப்பிற்காக 10 லட்சமும். B.sc. physics with astro physics என்ற படிப்பிற்காக 35 லட்சமும் செலுத்தியுள்ளனர்.  மற்ற பணத்தில் வைர மற்றும் ரூபி கற்கள் பதித்த நகைகள் வாங்கிக் குவித்துள்ளனர். அவற்றில் பெரும்பாலானவை அடகுக்கடைகளில் அடமானத்தில் வைத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது, வெளிநாட்டுகளுக்கு சென்று ஊர் சுற்றுவது, நட்சத்திர விடுதிகளில் கும்மாளமிடுவது என்று சுருட்டிய பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள். 18,79,062 ரூபாயை வெளிநாட்டு வங்கிக்கணக்கில் செலுத்தியிருக்கிறார்கள். ” என்கிறார்கள்.

இதுகுறித்து கோவை போலீஸ் கமிஷனர் பெரியய்யாவிடம் கேட்டோம், “ ஸ்ருதிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தண்டனை வாங்கிகொடுப்பதற்காக போராடிக் கொண்டிருக்கிறோம். இன்றைய அதிவேக இண்டர்நெட் உலகம் எல்லைகள் இல்லாதது. அடுத்த நொடியில் அமெரிக்காவில் இருப்பவரோடு உங்களால் பழக முடியும். இதில் நன்மைகளும் இருக்கிறது தீமைகளும் இருக்கிறது.  நேரில்  பாத்துக்கொள்ளாமலேயே  ப்ரொஃபைல் பிக்சரைப்  பார்த்து லவ் செய்யும் காலமாக இருக்கிறது.  பிள்ளைகளும், பெற்றோர்களும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு திருமணம் செய்யும்போது தீர விசாரிக்க வேண்டும்.  திருமணம் என்பது  ஆன்லைனில் பீட்சா ஆர்டர் பண்ணும் சமாச்சாரம் கிடையாது. ‘ஆயிரம் காலத்துப் பயிர்’ என்று முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். புகார்கள் வந்த பிறகு, குற்றம் செய்தவனை கைது பண்ணலாம். தண்டனை வாங்கிக் கொடுக்கலாம். ஆனால், பாதிக்கப்பட்டவருக்கு என்ன உபயோகம். ஒரு குற்றம் நடப்பதற்கு முன்பே தடுக்கப்பட வேண்டும். அதற்கு மக்கள் மிகவும் விழிப்புஉணர்வோடு  இருக்க வேண்டியது அவசியம்” என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement