வெளியிடப்பட்ட நேரம்: 09:46 (29/01/2018)

கடைசி தொடர்பு:10:49 (29/01/2018)

3,000 கோடி ரூபாய் நிலக்கரி ஊழல்! - விளக்கம் கொடுத்து அரசே சிக்கிக்கொண்டதா?

தமிழ்நாடு மின்வாரியம்

மிழ்நாடு மின்வாரியம் நிலக்கரி வாங்கியதில் 3,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டியிருந்தது அறப்போர் இயக்கம். இந்த ஊழலானது தொழில்நுட்பரீதியில் நடைபெற்றுள்ளது என்று பகிரங்கக் குற்றச்சாட்டை வைத்திருந்தது. 

3,000 கோடி ரூபாய் ஊழல் 

இதுகுறித்து, கடந்த வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், ``இந்தோனேஷியாவிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்ய போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. 2012 முதல் 2016-ம் ஆண்டுவரை நிலக்கரி வாங்குவதற்காக தமிழ்நாடு மின்வாரியம் உலகளாவிய டெண்டர் கோரியது. அதில், அதானி குளோபல் பிரைவேட் லிமிடெட், நாலேஜ் இன்டர்நேஷனல் ஸ்ட்ரடஜி சிஸ்டம் பிரைவேட் லிமிடெட், செட்டிநாடு லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட், எம்.எம்.டி.சி லிமிடெட், எம்.எஸ்.டி.சி லிமிடெட் ஆகிய ஐந்து நிறுவனங்களிடமிருந்து ரூ.12,250 கோடிக்கு நிலக்கரி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.1,730 முதல் ரூ.3,025 கோடி வரை ஊழல் நடந்துள்ளது. இந்த ஊழல் குறிப்பாக தொழில்நுட்பரீதியில் நடந்துள்ளது.

நத்தம் விஸ்வநாதன் -ஞானதேசிகன் இந்தோனேஷியாவிலிருந்து வாங்கிய நிலக்கரியின் மொத்த கலோரிஃபிக் மதிப்பு (Gross calorific value -as received) 5,500 தான். (5,500 Kcal/Kg). ஆனால், மொத்த கலோரிஃபிக் மதிப்பை 6,000 என அதிகமாக மதிப்பீடு செய்து கணக்கு காட்டியிருப்பது தெரியவந்துள்ளது. இதனால், ஒரு மெட்ரிக் டன்னுக்கு எட்டு டாலர் முதல் 10 டாலர்கள் வரை வித்தியாசம் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதனுக்கும், தமிழ்நாடு மின்வாரியத்தின் அப்போதைய தலைவரான ஞானதேசிகனுக்கும் முக்கியப் பங்கு இருப்பது தெளிவாகிறது. நத்தம் விசுவநாதன், ஞானதேசிகன், தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் இணைந்துதான் தொழில்நுட்பரீதியாக இந்த முறைகேட்டைச் செய்துள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது" எனக் குற்றம் சாட்டியிருந்தார்.

"ஊழல் நடக்கவில்லை" - தமிழக அரசு!

இந்த நிலையில், அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்து தமிழ்நாடு மின்வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், நிலக்கரி இறக்குமதி செய்யும்போது, பதினைந்து தொழில்நுட்ப அளவுகளை வரையறுக்கிறது. அதிலும் முக்கியமாக மொத்த வெப்பத்திறன் மதிப்பு 6,000 (gcv- air dried basis), மொத்த ஈரப்பதம் (ADB) 15 சதவிகிதம், சாம்பல் (ADB) சதவிகிதம் மற்றும் கந்தகம் 0.6 சதவிகிதம் ஆகிய அளவீடுகளின் அடிப்படையில்தான் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. செய்தித்தாள்களில் குறிப்பிட்டது போல அளவிடுகள் அதிகரித்துக் காண்பிக்கப்படவில்லை. 

அதேபோன்று தரமில்லாத நிலக்கரிக்கு அதிகமான குறியீடும் பயன்படுத்தவில்லை. செய்திதாள்களில் 5,500 மொத்த கலோரிஃபிக் மதிப்புக்கு  நிலக்கரியை வாங்காமல் 6,000 மொத்த கலோரிஃபிக் மதிப்புக்கு வாங்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்பட்டுள்ள தகவல் தவறானது. 5,500 மொத்த கலோரிஃபிக் மதிப்பாக இந்தோனிஷிய குறியீடாக இல்லாதபோது 6,000 மொத்த கலோரிஃபிக் குறியீட்டு மதிப்பில் வாங்கப்பட்டுள்ளது. எனவே, செய்தித்தாள்களில் வந்துள்ள தகவல்களில் உண்மையில்லை" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அரசே சிக்கிக் கொண்டது...!

அரசின் அறிக்கைகுறித்து அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசனிடம் பேசியபோது, ``தேவையில்லாமல்ஜெயராம் வெங்கடேசன் அறப்போர் இயக்கம் அரசாங்கமே அறிக்கை வெளியிட்டு சிக்கிக்கொண்டுள்ளது. 5,500 மொத்த கலோரிஃபிக் குறியீடு அளவுக்கு நிலக்கரி வாங்க வேண்டியதை 6,000 மொத்த கலோரிஃபிக் (Gross As Received) வாங்கியிருப்பதாக நாங்கள் அம்பலபடுத்தி இருந்தோம்.

ஆனால், இந்தோனேஷிய குறியீடு (6,000 - 5,604) மட்டுமே இருப்பதாக அரசே தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அப்படியென்றால், 5,604 மொத்த கலோரிஃபிக் நிலக்கரியை வாங்கி இருக்கலாமே; ஏன் 6,000 மொத்த கலோரிஃபிக் ஒப்பந்தம் எடுத்தனர்? அப்படி 5,604 மொத்த கலோரிஃபிக் அளவில் கணக்கிட்டாலே ஒரு டன்னுக்கு 10 முதல் 15 டாலர்வரை கூடுதலாக கிடைக்கிறது. அப்படி, கூடுதலாக கொடுக்கப்பட்ட பணம் எங்கே என்பதுதான் எங்களுடைய கேள்வி. மேலும், இதுதொடர்பாக, அரசாங்கம் செய்துள்ள தவறை மீண்டும் ஊடகங்கள் முன்பு விரிவாக எடுத்துவைக்க உள்ளோம். நாங்கள் வைத்த ஊழல் குற்றச்சாட்டுக்கு விளக்கம் கொடுத்து அரசாங்கமே சிக்கிக் கொண்டது" என்றார். 


டிரெண்டிங் @ விகடன்