Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

”கிராமப்புற மக்களுக்கு பலனளிக்குமா இந்த பட்ஜெட்?” - என்ன சொல்கின்றன விவசாய சங்கங்கள்!

அருண்ஜெட்லி - விவசாயிகள் நலன் தருமா பட்ஜெட்

இந்தியாவில், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 60 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாகக் கலிபோர்னியா பல்கலைக்கழகம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. பருவநிலை மாற்றம் குறித்து ஆய்வை மேற்கொண்ட அந்தப் பல்கலைக்கழகம், விவசாயத் தற்கொலைகளை ஒப்பீடுசெய்து அந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. கலிபோர்னியா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள விவசாயத் தற்கொலைகள் குறித்த புள்ளிவிவரத்தை உறுதிசெய்வதற்கு, தேசியக் குற்ற ஆவணக் காப்பகப் பட்டியலை எடுத்துப் பார்த்தால், அதில் 2015 வரை உள்ள விவரம்  மட்டுமே பதிவாகியுள்ளது. விவசாயிகள் தற்கொலைகள் குறித்து இதுவரை எந்த முழுமையான தகவலும் தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் பதிவு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அப்படியான சூழலில் கலிபோர்னியா பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வறிக்கைளை இங்கே சுட்டிக்காட்ட வேண்டியது அவசியமாகிறது.  

இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கில் தற்கொலைகள் என்றால், தமிழகத்தில் கடந்த 2016 -17-ம் ஆண்டுகளில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள்  தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வெளியாகி இருந்தது. இதன் காரணமாகத் தமிழகத்தில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்தது. கடந்த ஒரு வருடமாகப் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், தலைநகர் டெல்லியில் நடைபெற்ற போராட்டம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. விவசாயிகளின் இந்த வாழ்வாதாரப் போராட்டம் பிரதமர் கோட்டையை அதிரவைத்த நிலையிலும், மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் விவசாயத் தற்கொலைகளைத் தடுத்து நிறுத்த மத்திய அரசு தவறிவிட்டது என்ற அதிருப்தி மக்களிடயே நிலவிவந்தது. இந்தச் சூழலில் 2018-19-ம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்துள்ளார். அதில், விவசாயிகளுக்குப் புதிய திட்டங்களையும், புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார். 

குறிப்பாக, 2018 -19-ம் ஆண்டின் நிதியாண்டில் 11 லட்சம்  கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு, 2,000 கோடி ரூபாயில் கிராமப்புற சந்தைகளுக்கான நிதியம் அமைக்க முடிவு, கிராமப்புற வீடுகளுக்குக் கட்டணமில்லா மின்சார இணைப்பு உள்ளிட்டத் திட்டங்களை அருண் ஜெட்லி அறிவித்துள்ளார். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது கிராமப்புற மக்களை கவரும்வகையில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகப் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். நிதி அமைச்சரின் இந்த அறிவிப்பு விவசாயத் தற்கொலைகளைத் தடுத்து நிறுத்துமா... அறிவிக்கப்பட்ட திட்டங்களால் விவசாயிகளுக்கு நன்மை விளையுமா போன்ற கேள்விகளோடு விவசாயச் சங்கப் பிரதிநிதிகளிடம் பேசினோம்.

பி ஆர் பாண்டியன் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், ''விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடனை 11 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளனர். ஆனால், விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி என்ற எந்த அறிவிப்பும், இந்த பட்ஜெட்டில் இல்லை. கடன் வாங்க முடியாத நிலையில் விவசாயிகளின் சூழ்நிலை இருக்கும் வேளையில், அவர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையை அதிகரித்திருப்பது பெரும் முதலாளிகளை ஊக்கப்படுத்தவே எடுக்கப்பட்ட நடவடிக்கை. எனவே, ஏற்கெனவே உள்ள விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்து,மறு உற்பத்தி செய்வதற்கான கடனை வழங்க வேண்டும். 

நபார்டு வங்கியில் ஒதுக்கப்படுகிற 70 முதல் 80 சதவிகிதம் வரை உள்ள நிதியை மாற்றுத் திட்டங்களுக்குப் பயன்படுத்துகிறது மத்திய அரசு. குறிப்பாக, கிராமப்புறச் சாலைகள் என்று கூறிவிட்டுப் பாலங்கள் உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலைப் பணிகளுக்கு அந்த நிதியைப் பயன்படுத்துகிறது. அதன்பின்பு, விவசாய மக்களுக்குப் பயன்படுத்தியதாகக் கணக்குக் காட்டுகிறது. எனவே, நபார்டு வங்கிக்கு ஒதுக்கப்படும் நிதியை முறையாக விவசாயிகளுக்குச் செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 'நதிகள் தேசிய மயமாக்கப்பட வேண்டும்' என விவசாயச் சங்கங்கள் கோரிக்கை வைத்திருந்தன. ஆனால், அவ்வாறான கொள்கை முடிவு எதுவும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. எனவே, இந்த பட்ஜெட் விவசாயிகளை ஏமாற்றுகிற பட்ஜெட்" என்றார்.

கீழ்பவானி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் நல்லசாமி, " 'விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக்கப்படும்' என்று குடியரசுத் தலைவர் உரையில் குறிப்பிட்டிருந்தார். ஆனால், பட்ஜெட்டில், '2022 -க்குள் விவசாயிகள் வருவாய் இரட்டிப்பாக்கப்படும்' எனக் குறிப்பிடுகிறார் அமைச்சர். அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் வரப்போகிறது. அந்தத் தேர்தலில் இதே பி.ஜே.பி தலைமையிலான அரசு அமைந்தால், அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என நம்பலாம். அவர்கள் ஆட்சிக்கு வருவார்களா என்பதே தெரியாதபோது 2022-க்குள் விவசாயிகளின் வருவாயைப் பெருக்கத் திட்டம் எனக் கூறுகிறார்கள். இதைவிட விவசாயிகளை ஏமாற்றுகிற வேலை என்னவாக இருக்க முடியும் .? 

ஆரம்பத்தில் இருந்தே எவ்வாறு சம்பளக் கமிஷன் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துகிறதோ... அதேபோன்று விவசாயக் கமிஷன் பரிந்துரையை ஏற்றுச் செயல்படுத்தினால் மட்டுமே வருவாய் இரட்டிப்பாகும். அதனை நடைமுறைப்படுத்துங்கள் எனக் கூறி வருகிறோம். இதுகுறித்த எந்த அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.மேலும், நிலத்தடி நீர்ப்பாசன மேம்பாட்டுக்காக 2,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. நதிகளை இணைக்காமல் நிலத்தடிநீர் மேம்பாட்டுத் திட்டத்துக்கு நிதியை ஏன் ஒதுக்க வேண்டும்? 

விவசாயிகளை மேம்படுத்த வேண்டும் என்று இந்த அரசாங்கம் நினைத்திருந்தால், முதலில் விவசாயக் கமிஷனை நடைமுறைப்படுத்தியிருக்கும் அல்லவா? அந்தக் கமிஷனை நடைமுறைப்படுத்தாமல், திட்டங்கள் எதற்கு? கமிஷனை நடைமுறைப்படுத்தி விளைகிற பொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டியதுதானே? அதைத் தவிர்த்துவிட்டு கடன் தொகையை உயர்த்துவதாக அறிவிக்கிறார்கள். அந்தத் தொகையை உயர்த்துவதால் விவசாயிகள் பிரச்னை தீர்ந்துவிடுமா? அதனால், மேலும் கடனை வாங்கிவிட்டு அவற்றைக் கட்டமுடியாமல் தூக்கில் தொங்குங்கள் என்கிறது இந்த பட்ஜெட்" என்றார் மிக வேகமாக. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement