Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

சர்வதேச சாம்ராஜ்ஜியம் ஒரு அறிமுகம் - ட்வின் டவர் முதல் ட்ரம்ப் வரை...! - பகுதி 1

ட்ரம்ப்

உலகின் கிழக்குப் பகுதியில் உள்ள நாடுகளைக் கண்டறியும் நோக்கில், கொலம்பஸ் கிளம்பி வழி தவறிச்சென்று செவ்விந்தியர்கள் வாழும் பகுதியைக் கண்டறிந்தார். அதுதான் அமெரிக்கா. உலகின் மிகப்பெரிய வல்லரசு, ஒரு பெண் அதிபரைக்கூடத் தேர்ந்தெடுக்காத நாடு, துப்பாக்கிச் சூடு அதிகம் நடக்கும் நாடு... இப்படித்தான் பெரும்பாலும் அமெரிக்கா எனும் நாடு அறிமுகமாகியிருக்கிறது.

அமெரிக்கா, வெளியில் இருந்து பார்ப்பவர்களின் சொர்க்கம். அமெரிக்காவைக் கொஞ்சம் நெருக்கமாக அணுகினால், அதன் நுண்ணரசியலும், போர் யுக்திகளும் மற்றவர்களை மிரட்சியடையச் செய்யும். ஜார்ஜ் வாஷிங்டன் தொடங்கி டொனால்ட் ட்ரம்ப் வரை 45 அதிபர்களைக் கடந்துவந்துள்ளது அமெரிக்கா. உலக நாடுகளின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் ஆயுதமாக டாலர் மாறிப்போனது. மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய் அரசியலுக்கும் மாற்று வழி கண்டறிந்து, கச்சா எண்ணெயைக் கட்டுக்குள் கொண்டுவரத் தெரிந்த சாணக்கிய தேசம் அமெரிக்கா. 

இந்தத் தேசத்தின் இஸ்லாமிய பகையை அணையாமல் பார்த்துக்கொள்ள அனைத்து விஷயங்களும் அமெரிக்காவுக்குள் வலை பின்னப்படுகின்றன. இந்த நூற்றாண்டில் அமெரிக்காவின் மிக மோசமான நிகழ்வாகப் பதிவானது செப்டம்பர் 11 உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரம் இடிக்கப்பட்ட நிகழ்வு. இதற்குமுன் வரை உலக அரங்கில் அமெரிக்கா வலுவான சக்தியாக இருந்ததைச் சற்றே அசைத்துப்பார்த்தது இரட்டைக் கோபுரத் தாக்குதல். 

ட்ரம்ப்

இத்தனை ஆண்டுகளால் எண்ணற்ற போர்களில் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டே இருக்கிறது, போர் புரியாத அமெரிக்க அதிபர்களே இல்லை என்னுமளவுக்குப் போர் புரிந்து வந்திருக்கிறது. இந்தப் போர்களை எல்லாம் ஒரு நாட்டைப் பிடிக்கும் சண்டை என்று உலகம் எண்ணிக்கொண்டிருந்தால், அவர்கள் அமெரிக்காவின் பார்வையிலிருந்து வேறுபட்டு இருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம். அமெரிக்கா எந்தப் போரையும் வணிக நோக்கமில்லாமல் நடத்தாது. அதன்பின் ஏதாவது ஓர் யுக்தி கண்டிப்பாக இருக்கும். 

ஆர்தர் காலத்து சிவில் போரில் 1861-லேயே 3 லட்சம் பேர் கொன்று குவிக்கப்பட்டனர். ட்ரூமென் தொடங்கி நிக்சன் வரை நடத்திய வியட்நாம் போரோ... பேர்ல் ஹார்பர் தாக்குதலோ... 9/11-க்கு பழிவாங்கிய ஆப்கான் போரோ... பின்னணியும், அரசியலும், சர்ச்சையும் இல்லாமல் அமெரிக்கா செயல்பட்டதே இல்லை. இன்று ட்ரம்ப், 'கொரியாவைத் தாக்குவேன்' என்பதும் இதன் தொடர்ச்சிதான். ஜனநாயகக் கட்சியோ, குடியரசுக் கட்சியோ... அது அமெரிக்கக் கட்சி, அமெரிக்கர்களின் மனநிலை வேறு, உலகின் மனநிலை வேறு என்பதை அமெரிக்கா எல்லா நிகழ்வுகளிலும் நிரூபித்துக்கொண்டே இருக்கும். அதற்கு மிகச்சிறந்த உதாரணம், அமைதியற்ற சூழல் நிலவும் பாகிஸ்தானே ஒரு பெண் அதிபரைத் தேர்ந்தெடுத்துவிட்டது. இன்னமும் அமெரிக்காவால் அது முடியவில்லை. 

அமெரிக்க மாப்பிள்ளையாக இருந்தால் சிறப்பு என்றவர்களை, 'அமெரிக்காவா.... கொஞ்சம் ரிஸ்க்காமே? எல்லா இடத்துலயும் துப்பாக்கிச்சூடு நடக்குதாமே' என்னுமளவுக்கு இந்தியர்களின் அமெரிக்கக் கனவுக்கு அச்சுறுத்தலாகிவிட்டது. ஐடி வேலைக்குச் செல்பவர்களின் கனவுக்குடிலாக இருந்த அமெரிக்காதான், இன்று சிலிக்கான் வேலி சி.இ.ஓ-க்களைப் புலம்பவைத்துள்ளது. இங்கு இப்படியென்றால், ஹாலிவுட் உலகம் நிறவெறி இருப்பதைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது. ஒவ்வொரு விருது மேடைகளிலும் அதிபரை விமர்சித்து வருகிறது.

ட்ரம்ப்

9/11 தாக்குதல், ஆப்கான் போர், ஒசாமாவைக் கொன்றது, எண்ணெய் அரசியல், பொருளாதாரம், ரஷ்யாவுக்குத் தடை, ரஷ்யாவின் அதிபர் தேர்தல் குறுக்கீடு, ஹிலாரி மெயில், ட்ரம்ப் ஆட்சி எனத் தொடர்ந்து அமெரிக்கா தன்னைக் கடந்த 17 வருடங்களாகப் பரபரப்பாக வைத்துள்ளது. 9/11 தாக்குதலுக்குப் பின் அமெரிக்கா பின்னடைவைச் சந்தித்துள்ளதா... ஆசிய நாடுகளின் எழுச்சி அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளுகிறதா... நிறவெறி, ஊரோடு ஒன்றிவாழாத மனநிலை, தன்னை ஒற்றை ஆளுமையாகப் பகல் கனவு காண்பது என அமெரிக்கா இருப்பது சரியா... சரிகிறதா இந்தச் சர்வதேச சாம்ராஜ்ஜியம் என்பதைத்தான் இந்தத் தொடர் முழுவதும் பார்க்கவுள்ளோம்.

புஷ்... ஒபாமா... ட்ரம்ப்... இந்த மூன்று அதிபர்களின் காலத்தில் அமெரிக்காவின் நிறம் மாறி இருக்கிறது. இதற்கான அடித்தளம்தான் 9/11 தாக்குதல். தீவிரவாதம் தலைதூக்குகிறது என்றால், அதற்குக் காரணம் என்ன? அமெரிக்கா ஏன் போர்களை நடத்துகிறது? டாலர், சர்வதேச சந்தையின் மையப்பொருளாகிவிட்டதா... இந்தியர்களை அமெரிக்கா எப்படிப் பார்க்கிறது? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் தேடுவோம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement