Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

''ஒரு குடும்பம்...ஒரு பதவி...'' - கள ஆய்வு கூட்டத்தில் ஒலித்த குரல்கள்!

"தமிழகத்தில் எந்த நேரத்திலும் சட்டமன்றத் தேர்தல் வரலாம்" என்று பொதுக்கூட்ட மேடைகளில் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் சொல்லி வருகிறார். அதேநேரத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் அடுத்த ஆண்டு (2019) நடைபெற இருக்கிறது. அதற்கு முன்பாக தமிழக உள்ளாட்சித் தேர்தல், வரும் மே மாதம் நடைபெறலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தல்களுக்கு தி.மு.க-வைத் தயார்படுத்தும் வகையில், ஃபிப்ரவரி 1-ம் தேதியன்று கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுடன் கள ஆய்வுப் பணியை ஸ்டாலின் தொடங்கியுள்ளார். இந்த ஆய்வுக் கூட்டம், மார்ச் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. 

ஸ்டாலின்

தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன், முதன்மைச் செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா ஆகியோர் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர்.  அதன்பிறகு,  ஸ்டாலின் மட்டும் தொடர்ந்து மேடையிலிருந்து, கட்சியின் பல்வேறு மாவட்ட நிர்வாகிகளைச் சந்தித்து அவர்களுடன் கள ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மு.க. ஸ்டாலின் பேசுகையில், ''இந்த ஆய்வின் மூலம் தமிழகத்தைப் படுபாதாளத்திற்கு  - படுகுழிக்கு இழுத்துச் சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி தலைமையிலான  ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்டவேண்டும். இந்த அரசுக்கு டெல்லி பி.ஜே.பி.-யின் ஆதரவுக்கரம் இருந்தாலும் இழிவான இந்த ஆட்சியினைத் தமிழகத்தில் இருந்து கிள்ளியெறிய வேண்டும்; அகற்றிட வேண்டும். இந்த 'குதிரை பேர' ஆட்சியை அகற்றி, தமிழகத்தினை, தமிழக மக்களை அவர்களிடமிருந்து காப்பாற்றிட தி.மு.க-வினர் சிறப்பான களப்பணி ஆற்றிட வேண்டும். அதற்கான களம்தான் இது'' என்று கேட்டுக்கொண்டார். 

கூட்டத்தில் கலந்துகொள்வோர் பட்டியலை, ஸ்டாலின் வைத்திருந்தார். அதில், குறிப்பிட்டுள்ள வரிசைப்படி அல்லாமல், ஸ்டாலின் அவரது விருப்பப்படி, நிர்வாகிகளை கருத்துச் சொல்ல அழைத்தார். 'இந்த கருத்துக்களம் வெளிப்படையாக இருந்தது' என்று கூட்டத்தை நிறைவுசெய்து வெளியே வந்த நிர்வாகிகள் பேசிக்கொண்டனர்.  கூட்டத்திற்கு அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டும், அங்கு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் புகார் மனுக்களைப் போட்டனர். ஆய்வுக்கூட்டத்திற்கு அனுமதி கிடைக்காத சிலரும் தங்களுக்கு வேண்டப்பட்டவர்கள் மூலம் புகார் மனுக்களை கொடுத்தனுப்பி இருந்தனர். அந்த மனுக்களும் பெட்டியில் போடப்பட்டிருக்கின்றன. முதல்நாள் கள ஆய்வுக் கூட்டத்தில் மிகவும் உற்சாகமாக கோவை, நீலகிரி மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கட்சி நிர்வாகிகளோடு ஸ்டாலின் மதிய உணவைச் சாப்பிட்டார். கூட்டம் முடிந்த பிறகு வெளியே வந்த நிர்வாகிகளோடு பேச்சுக் கொடுத்தோம். அவர்களிடம் பேசியதில் இருந்து...

திமுக புகார் பெட்டி

 

" *2016 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின்னர், கட்சியைச் சீரமைக்க குழு அமைத்து, மாவட்ட நிர்வாகம் பிரிக்கப்பட்டது. அது வெறும் கண்துடைப்பாக முடிந்துவிட்டது. எனவே, தீவிரமாகக் கட்சி உள்கட்டமைப்பை மறு சீரமைப்பு செய்ய வேண்டும்.

* இளைஞர்களுக்கு கட்சியில் வாய்ப்புக் கொடுக்க வேண்டும். கட்சியில் அவர்களுக்கு அரசியல் எதிர்காலம் உண்டு என்ற நம்பிக்கையை உருவாக்க வேண்டும்.

* தந்தை, மகன், மனைவி, மகள் என்று மன்னர் ஆட்சிபோல வாரிசுரிமை அடிப்படையில் கட்சிப் பதவி மற்றும் அரசியல் பதவிகளைக்  கொடுக்கக் கூடாது. 

* கட்சிப் பதவிகளில் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை மட்டுமே அழைத்துப் பேசுவதால், உள்கட்சிப் பிரச்னைகள் எப்படி வெளிவரும்? மாஜி நிர்வாகிகளுக்கும்  வாய்ப்புத் தர வேண்டும். சென்னையில் கட்சித் தலைமையைச் சுற்றி இருக்கும் சில தலைவர்களால் புதியவர்களுக்கு அரசியல் எதிர்காலம் இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது.

* மாவட்டங்களில் முக்கியப் பொறுப்புகளில் இருக்கும் நிர்வாகிகள் வசதி வாய்ப்புகளுடன் இருக்கிறார்கள். அதிகாரத்தோடு வலம் வருகிறார்கள். கட்சிக்காரர்களை அவர்கள் மதிப்பதே இல்லை. குறுநில மன்னர்போல செயல்படுகிறார்கள்.

* 'ஒரு குடும்பம் ஒரு பதவி', 'ஒருவருக்கு ஒரு பதவி' என்று கொண்டு வாருங்கள். மாவட்ட அளவில் உள்ள வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும். 20 ஆண்டுகளாகத் தி.மு.க-வுக்கு இளைஞர்களே வரவில்லை என்ற பழிச்சொல்லைப் போக்க நடவடிக்கை உடனடித்தேவை.

* ஒவ்வொரு தேர்தலின்போதும் கட்சி மேலிடம் கொடுக்கும் பணம், கீழ்மட்டம்வரை வருவதே இல்லை. மற்ற கட்சிகள் பணம் கொடுக்கும்போது நீங்கள் கொடுக்கும் பணம் எங்கே போகிறது?

* உள்ளாட்சித் தேர்தலில் ஆண்கள் வார்டு என்றால் கட்சியின் முக்கிய நிர்வாகி  கைப்பற்றி விடுகிறார்கள். அதுவே பெண்களுக்கு ஒதுக்கப்பட்டால், நிர்வாகியின்  மனைவி அல்லது மகள் அந்தப் பதவிக்கு நிற்கிறார்கள். கட்சிப் பதவியையும் ஆட்சிப் பதவிகளையும் அந்தக் குடும்பத்தைவிட்டு வெளியே வருவதில்லை. 

* தேர்தல்களில் தொகுதி மாறி நிற்பதற்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது.

*உள்ளூர் அளவில் சாதி அரசியல் நடக்கிறது. மாவட்டச் செயலாளர்களும், மாநில நிர்வாகிகளும் உள்ளூர்களில் தங்கள் சாதியை முன்வைத்தே அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள்.

* கல்வி நிறுவன அதிபர்கள், தொழிலதிபர்களாக இருக்கும் கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள், ஆளும் கட்சியின் அதிகார பலத்திற்குப் பயந்து, உள்ளூரில் எதிர்ப்பு அரசியலைக் கைவிட்டுள்ளனர். இவை கட்சிக்கு மிகப்பெரும் பின்னடைவு.

* முக்கிய நிர்வாகிகளின் செயல்பாடுகளால் கட்சித் தொண்டர்கள் சோர்ந்துபோய் கிடக்கிறார்கள். கிளை, சிற்றூர், பேரூர், நகராட்சி என்று ஒரே குடும்பமாக இருந்த கட்சி நிர்வாகிகள், இப்போது எவ்விதத் தொடர்பும் இல்லாமல் பிரிந்து கிடக்கிறார்கள். நிர்வாகிகளைப்போல, கட்சித் தொண்டர்களும் பிரிந்தே கிடக்கிறார்கள்.

* கடந்த சட்டமன்றத் தேர்தலில் நாம் ஆட்சியைப் பிடிக்காமல் போனதற்கு முக்கியக் காரணம் கூட்டணிதான். தேர்தலில் சீட் கொடுக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். 234 தொகுதிகளிலும் தி.மு.க. நிற்பதுபோல இப்போதே கட்சியினரைத் தயார்படுத்த வேண்டும். கூட்டணிக் கட்சியின் செல்வாக்கை நன்கு யோசித்து சீட் கொடுக்க வேண்டும். தலைவர்கள் எண்ணிக்கை ஓட்டுக்களாக மாறாது."

ஸ்டாலின்

இப்படி அடுக்கடுக்காக கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்துக் கள ஆய்வுக்கூட்டத்தில் கலந்துகொண்டோர்  நம்மிடம்  பேசினார்கள். அவர்கள், கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த புகார் பெட்டியிலும் மனுக்களைப் போட்டனர். அந்தப் புகார்க் கடிதங்களை ஆய்வு செய்ய, ஸ்டாலின் நேரடிக் கட்டுப்பாட்டில் குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  ''பொதுத்தேர்தலின்போது வாக்குப்பெட்டியில் சேரும் வாக்குகள் எப்படித் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கின்றனவோ அதுபோல, அந்தப் பெட்டியில் போடப்படும் கடிதங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கும் கருத்துகளின் அடிப்படையில், கழகத்தின் வளர்ச்சிக்குத் தேவையான ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளையும், அவசியமாகச் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சை முறைகளையும் நிச்சயம் மேற்கொள்வேன்'' என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தீர்வு காணும்  பெட்டி, திருப்பத்தை ஏற்படுத்துமா..?   கள ஆய்வுக்குப் பின்னர் தி.மு.க. புத்துணர்வு பெற்றால் சரி...!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement