”ஜெயலலிதாவின் பாணியில் சுற்றுப்பயணம்...தேர்தலுக்குத் தயாராகும் தினகரன்!” | Dinakaran gets ready for upcoming election

வெளியிடப்பட்ட நேரம்: 20:37 (06/02/2018)

கடைசி தொடர்பு:20:37 (06/02/2018)

”ஜெயலலிதாவின் பாணியில் சுற்றுப்பயணம்...தேர்தலுக்குத் தயாராகும் தினகரன்!”

தமிழகத்தைச் சீர்தூக்கிட நடிகர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் களமிறங்கி, விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவுள்ள நிலையில், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க் கட்சிகளும் மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்பதில் கவனம் செலுத்திவருகின்றன. இது, தேர்தலுக்கான முன்னோட்டமாகவும் இருப்பதால், டி.டி.வி.தினகரனும் தன்னுடைய 'மக்கள் சந்திப்புப் புரட்சிப் பயண'த்தைத் தொடங்கியுள்ளார். அவரது பயணம், ஜெயலலிதா பாணியில் பரபரப்பை கிளப்பி வருகிறது.

டி.டி.வி.தினகரன்

தஞ்சை வடக்கு மாவட்டத்தில் உள்ள திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து கடந்த 2- ம் தேதி, 'மக்கள் சந்திப்புப் புரட்சிப் பயணம்' தொடங்கினார் டி.டி.வி.தினகரன். ஜெயலலிதா சுற்றுப்பயணம் எப்படி இருக்குமோ... அதுபோல, மக்களை திரட்டிக் காட்டுகிறார்கள். பூத்தூவுதல், ஆரத்தி எடுத்தல், பூரணகும்ப மரியாதை என்று ஒவ்வொரு பகுதிகளிலும் வரவேற்பு களை கட்டுகிறது. ஏற்கெனவே, திட்டமிடப்பட்ட இடங்களைத் தவிர, பொதுமக்கள் திரண்டு நிற்கும் இடங்களில் அவர்களிடம் பேசிக் குறைகளைக் கேட்கிறார் டி.டி.வி.தினகரன். பொதுக்கூட்டங்கள் நடத்த போலீஸ் அனுமதி மறுக்கும் நிலையில், இந்த மக்கள் சந்திப்புப் பயணம் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகக் கட்சி நிர்வாகிகள் சொல்கிறார்கள். அதுவும் மிகவும் குறைந்த செலவில் எழுச்சியுடன் கூட்டத்தைக் கூட்டமுடிகிறது என்கிறார்கள்.

கடந்த மூன்று நாள் பயணத்தில், ஒவ்வோர் இடத்தில் பேசியபோதும் உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலை முன்வைத்தே டி.டி.வி.தினகரன் பேசினார். அவரது பேச்சுக்குப் பொதுமக்களிடையே எத்தகைய ரியாக்‌ஷன் இருக்கிறது என்பதையும் ஒரு டீம் கவனித்துக் குறிப்பெடுக்கிறது. எந்தெந்த விஷயங்களைப் பேசும்போது பொதுமக்கள் ஆர்வத்துடன் வரவேற்றுக் கைதட்டுகிறார்கள் என்பதையும் அந்த டீம் உன்னிப்பாகக் கவனிக்கிறது. அதற்கு ஏற்றாற்போல ஒவ்வோர் இடத்திலும் டி.டி.வி.தினகரன் பேச்சில் நிறைய மாற்றங்கள் இருக்கின்றன. குறிப்பாக அவர் பயணம் தொடங்கியிருப்பது தஞ்சை மாவட்டம் என்பதால், காவிரி டெல்டா மக்களின் பிரச்னைகளை முன்வைத்துப் பேசினார். ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 9 இடங்கள் என்று, பேசுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

டி.டி.வி.தினகரன்

ஒவ்வொரு நாளும் மாலை 5 மணிக்குத் தொடங்கும் பிரசாரம் இரவு 11:30 மணிவரை நீடித்தது. கரகாட்டம், சினிமா டான்ஸ், ஒயிலாட்டம் என்று ஒவ்வோர் இடத்திலும் கொண்டாட்டங்கள் நிரம்பிவழிந்தன. இந்தச் சுற்றுப்பயணம் குறித்து அவரோடு பயணம் செல்லும் மூத்த நிர்வாகிகள் கூறுகையில், ''அம்மா சுற்றுப்பயணம்போலவே இந்தப் பயணத்தையும் திட்டமிட்டுள்ளோம். தேர்தல் முன்னோட்டமாகவே தமிழகம் முழுவதும் இந்தப் பயணத்தைக் கொண்டுசெல்கிறோம். இது எங்களுக்கு நல்ல அனுபவம். கட்சி நிர்வாகிகளும் கட்சிப் பணிகளைச் செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது என்ற உற்சாகத்தில் பிரசார வேலைகளைச் செய்கிறார்கள். ஆளும்கட்சி தரப்பில் மாவட்ட நிர்வாகங்கள் சோர்ந்து கிடக்கும் நிலையில் எங்களது பயணம், கட்சி நிர்வாகிகளுக்குப் புது உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதை எதிர்கொள்ள இந்தப் பயணம் எங்களுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க இப்போதே நாங்கள் தயாராகிவிட்டோம். சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் தூள் கிளப்பிவிடுவோம்'' என்றனர் மகிழ்ச்சியுடன்.

கட்சி நிர்வாகிகள் சொல்வதுபோலவே டி.டி.வி.தினகரன் பேச்சிலும் தேர்தலை முன்வைத்தே சில விஷயங்களைச் சொல்லி வருகிறார். ''தஞ்சாவூரைப் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக உருவாக்குவோம். தஞ்சாவூரில் நிதிப் பற்றாக்குறை என்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்க எடுப்போம். உங்கள் ஆதரவோடு அம்மா ஆட்சியை அமைத்து உதவித்தொகை பெற்ற முதியோர்கள் அனைவருக்கும் மீண்டும் உதவித்தொகை வழங்கப்படும். மீண்டும், அம்மாவின் ஆட்சியை அமைத்து எய்ம்ஸ் மருத்துவமனையைக் கொண்டுவருவோம்'' என்று பேசியுள்ளார். இப்படி, டி.டி.வி.தினகரன் பேச்சில் தமிழகத் தேர்தலை முன்வைத்தே பல்வேறு பிரச்னைகளை முன்னிலைப்படுத்தித் தனது புரட்சிப் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். தஞ்சை வடக்கு மாவட்டத்திலிருந்து மக்கள் சந்திப்புப் புரட்சிப் பயணத்தை தொடங்கியிருக்கும் டி.டி.வி.தினகரன், தஞ்சையில் தங்கியிருந்தே 4 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துள்ளார். 

நாஞ்சில் சம்பத்இந்தப் பயணம் குறித்து நாஞ்சில் சம்பத் கூறுகையில், ''தமிழகத்தில் புதிய அரசியலை எதிர்பார்க்கலாம். டி.டி.வி.தினகரனின் அரசியல் பயணம், அதற்கேற்றாற்போல் அமைந்துகொண்டிருக்கிறது. இப்போது அவர் மேற்கொண்டுள்ள மக்கள் சந்திப்புப் புரட்சிப் பயணத்தில் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த இளைஞர்களும் அவர் கரம் பற்றி உற்சாகமடைவதைக் கண்டேன். திராவிட இயக்கத்தை அதன்வழி நின்று மீட்கும் பயணத்தில் ஸ்டாலின் வெற்றிபெறுகிறாரோ.... இல்லையோ... நிச்சயம் டி.டி.வி.தினகரன் வெற்றிபெறுவார். திரை உலக அரசியலும் திரைமறைவு அரசியலும் இனி எடுபடாது. எதிர்வரும் காலத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் அது சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும், உள்ளாட்சித் தேர்தலாக இருந்தாலும், நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் டி.டி.வி.தினகரனே வெற்றிபெறுவார். அவரின் தலைமையை ஏற்றுக்கொண்டவர்கள் வரும் தேர்தல்களில் வாகை சூடுவார்கள்'' என்றார் நம்பிக்கையுடன்.

டி.டி.வி.தினகரனின் புரட்சிப் பயணம் வரும் தேர்தலில் புதிய மாற்றத்தைத் தருமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்